Friday, December 2, 2016

டேக் இட் ஈஸி பாலிசி

A R ரஹ்மானின் கீழ்க்கண்ட Face Book பதிவிற்கு எனது முயற்சி :
Dear friends, I'm trying to rearrange 'Take it Easy Urvasi' for a performance and wish to update the Charanams.
Feel free to contribute.. Ofcourse please do leave out and avoid any reference to Hilary Clinton, Donald Trump or the currency situation for now and try to come up with something interesting & humorous in the same scaling of the original Tamil version..
------------------------------
(சிறிய மழலைகள்)
Fridge-ல் வைத்த தாய்ப்பால் கிடைத்தால் டேக் இட் ஈஸி பாலிசி
பிஞ்சு உடம்பில் Flu shots கொடுத்தால் டேக் இட் ஈஸி பாலிசி

(பள்ளி மாணவர்)
Geometry Box-ஐ அண்ணனும் கேட்டால் டேக் இட் ஈஸி பாலிசி
Zoology teacher long leave போனால் டேக் இட் ஈஸி பாலிசி

(கல்லூரி இளைஞர்)
அடிக்கடி வீட்டில் உப்புமா செஞ்சா டேக் இட் ஈஸி பாலிசி
Arrears clear பண்ண அப்பாம்மா கேட்டால் டேக் இட் ஈஸி பாலிசி

(அலுவலகத்தில்)
ஜிம்முக்குப் போயி நண்பனும் இளைத்தால் டேக் இட் ஈஸி பாலிசி
ஜம்முன்னு ஆன்சைட் எனிமியும் போனால் டேக் இட் ஈஸி பாலிசி

(NRI)
Statue போல் Beauty - Break up சொன்னால் டேக் இட் ஈஸி பாலிசி
Statue of Liberty Torch Light கொடுத்தால் டேக் இட் ஈஸி பாலிசி

(முதியவர்கள்)
Skype-ல் பேசப் பேத்தியும் மறுத்தால் டேக் இட் ஈஸி பாலிசி
Wife பேச்சைப் பையனும் கேட்டால் டேக் இட் ஈஸி பாலிசி

Thursday, November 24, 2016

புத்தி உள்ள மனிதன் எவனும்

புத்தி உள்ள மனிதன் எவனும் வட்டிக்கு வாங்குவதில்லை
வட்டி நிறைய கட்டும் மனிதன் புத்திசாலி இல்லை

பணம் இருக்கும் மனிதனிடம் கடன் இருப்பதில்லை
கடன் இருக்கும் மனிதனிடம் பணமும் சேர்வதில்லை
கடமை என்ற பெயரினிலே கடனை வாங்கிக் குவிப்பான்
கௌரவத்தின் பெயரினிலே மானத்தையே இழப்பான்

அவசரத்தில் வாங்கும் கடனை அவசியமாய் நினைப்பான்
அலட்சியத்தால் அதிக வட்டிப் புதைகுழியில் நடப்பான்
ராப்பகலாய் அவன் உழைப்பான் வியர்வையிலே குளிப்பான்
ஆப்படித்து வால் நுழைத்த குரங்கைப் போல முழிப்பான்

நல்லவர்கள் கொடுக்கும் கடனை நாமம் போட நினைப்பான்
பொறுக்கியிடம் வாங்கும் கடனைப் பொறுப்புடனே அடைப்பான்
கருப்புப்பண முதலைக்குத்தான் கறிசோறு படைப்பான்
கழுத்தை நீட்டி வந்தவளைப் பட்டினி போட்டுப் படுப்பான்

Friday, November 18, 2016

பருவ மழை வேண்டுதல்

சஞ்சீவி மலை சுமந்த அனுமனே
எம் ஜீவன் பிழைக்கவும் நீர் அருள்வீர்
மலை போன்ற மேகங்கள் - உம் தந்தை
வாயுவிடம் தந்தனுப்புங்கள்

பள்ளி கொண்ட பெருமானே
கொள்ளி பற்றுமோ எம் பயிர்களை?
கடலினைக் கடைந்தெடுத்து
அமிர்த மழை தாருங்கள்

ஈசனே நீல கண்டரே
பாசம் வைப்பீர் பரமனே
கரியமில நஞ்செல்லாம்
காற்றினிலே நீக்கிவிட்டு
துரிதமாய்த் தாருங்கள்
பருவ மழை மேகங்கள்

ஏழை விவசாயியும் சிலுவையில் மரிப்பதோ?
செந்நீர் சிந்திய பரம பிதாவே உமது
பரிசுத்த ஆவியால் நன்னீர் மேகங்கள் நல்குவீரே

கடனுக்கு வட்டி பாவம் என்ற நபிகளே
பயிர் செய்யக் கடன் வாங்கி
உயிர் மாய்ப்பதா ஒரு விவசாயி?
அல்லாவின் கருணையால்
எல்லோர்க்கும் பெய்யட்டும் மழை

ஆசையினால் துன்பமென்றீர் ஐயா
வயிற்றுப் பசி ஆசையா துன்பமா?
புத்தம் புது மேகங்கள் தாருங்கள் புத்தரே

சாய் பாபா விவசாயி பாபா

கீதாஞ்சலி பாரதி பாணியில் - பாடல் 23

சந்தம் : ஆசை முகம் மறந்து போச்சே

மருகி மருளும் அந்த வானம் - புயல்
திரளும் இரவில் உந்தன் பயணம்
உருகும் எனக்கும் இல்லை உறக்கம் - இருள்
திறந்து திறந்து கண்கள் தேடும்
உருவம் எதுவும் இல்லை அங்கே - உந்தன்
வழியும் தெரியவில்லை எங்கே?
கரிய நதிக்கரையின் வழியோ? - அடர்
வனத்தின் விளிம்பின் வழி தானோ?
இனம் புரியா இருட்டு வழியோ - என்னைக்
காண நீ வரும் வழி ஏதோ?

Tagore's English version:

Art thou abroad on this stormy night on thy journey of love, my friend? The sky groans like one in despair.
I have no sleep tonight. Ever and again I open my door and look out on the darkness, my friend!
I can see nothing before me. I wonder where lies thy path!
By what dim shore of the ink-black river, by what far edge of the frowning forest,
through what mazy depth of gloom art thou threading thy course to come to me, my friend?

Friday, November 4, 2016

அம்மாவைப் பார்த்தீங்களா?

நம் முதல்வர் அவர்களின் உடல்நிலை குறித்த உண்மைகளை அறிய தமிழகமே காத்திருக்கிறது. அவர் நலம்பெற எத்தனையோ வேண்டுதல்கள்.

முதல்வரின் உடல்நிலை பற்றி எண்ணும் போதெல்லாம் "அம்மாவைப் பார்த்தீங்களா?" என்று அன்னக்கிளி பாடலின் மெட்டில் சில வரிகள் என் மனதினுள் ஓடும்.

"அம்மாவைப் பார்த்தீங்களா? அப்போலோ ஆஸ்பிடல்ல
நர்ஸக்கா நீயும் பார்த்தாக்கா சொல்லு - அம்மா
சாப்பிட்டாங்களா தெரியலியே - கண்ணு
முழிச்சாங்களா தெரியலியே

அஞ்சாறு வாரம் ஆனாக்கா என்ன?
அம்மா உடம்பு நல்லானா போதும்
அஞ்சாறு வாரம் ஆனாக்கா என்ன?
அம்மா உடம்பு நல்லானா போதும்
புது ரத்தத்தோடு புது வேகத்தோடு
அம்மாவும் வந்து
தமிழ்நாட்டை ஆள்க
தமிழ்நாட்டை ஆள்க "

தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் ஒரு நாள் பணியாற்ற இயவில்லை என்றாலும் அது எவ்வளவு பெரிய இழப்பு? எத்தனை நலத்திட்டங்கள் எத்தனை முடிவுகள் தேங்கி நிற்கும் என்று எண்ணினால் பெரும் வருத்தத்தைத் தருகிறது. முதல்வர் விரைவில் குணமடைய முருகப் பெருமானை வேண்டி வணங்குகிறேன்.

சில நாட்களுக்கு முன் ஒரு கடைமுன்னால் நின்று கொண்டிருந்தபோது ஒரு மூதாட்டி என்னிடம் ஐந்து ரூபாய் கேட்டார். நான் எடுத்துக் கொடுத்தேன். என் மனைவியும் அவர் பையிலிருந்து பணத்தை எடுக்க முற்படும்போது அந்த மூதாட்டி "ஐந்து ரூபாய் போதுமம்மா நான் அம்மா உணவகத்தில் சாப்பிட்டுக் கொள்வேன்" என்றார்.

தர்மம் தலை காக்கட்டும்.

Wednesday, November 2, 2016

ஒத்த ரூபா தாரேன்

மாநகரப் பேருந்தில் வந்துகொண்டிருந்தேன்.
ஒரு பயணி 11 ரூபாய் சீட்டுக்கு 10 ரூபாய் கொடுத்துவிட்டு கூட்டமாய் இருந்ததால் முன்னே நகர்ந்து சென்றார்.

நிறைய நேரம் ஆகியும் அந்தப் பயணி மீதி பணம் ஒரு ரூபாய் தராததால் நடத்துனர் கடுப்பாகி "ஏம்பா எங்க முன்னாடி போயிட்டே.. இன்னும் ஒரு ரூபாய் கொடு..." என்றார். அந்தப் பயணி "இதோ தரேன்" என்று பையில் துழாவிவிட்டு "பத்து ரூபாயா இருக்கு பரவாயில்லையா?" என்றார். "நீ நூறு ரூபாய் நோட்டாயிருந்தாலும் கொடு. மீதி தருகிறேன்" என்றார் மீண்டும் கடுப்பாக.

பயணி ஒருவழியாய் ஒரு பத்து ரூபாய் தாளை வழியில் நிற்பவர்களிடம் கொடுத்தனுப்பினார்.

பணம் கையில் சேர்ந்ததும் நடத்துனர் சொன்னார்..........
"மீதியை இறங்குறப்போ வாங்கிக்கோ !!!!!"

#நடத்து(னர்)டா!

Sunday, October 23, 2016

கீதாஞ்சலி - பாரதி பாணியில் பாடல்-21

(சந்தம் : ஆசை முகம் மறந்து போச்சே)

காலம் கரைந்து செல்லலாச்சே எந்தன்
கலத்தினைச் செலுத்திட வேண்டும்
வாச மலர்கள் செய்யும் வசந்தம் அந்த
வசந்தம் கரைந்து செல்லலாச்சே

ஆடிடும் அலை தீண்டும் கரையில் இங்கு
வாடிய மலர் சுமந்து நின்றேன்
மூடிய நிழற்பாதை எங்கும் இலை
காய்ந்து உதிர்ந்து விழலாச்சே

ஏதுமில்லா வெளி கண்டே நீயும்
வெறுமையை உணர்வதும் ஏனோ?
தூரக் கரையின் இசை தீண்டி உந்தன்
மேனி சிலிர்த்து அதிராதோ?

Tagore's English version:

I must launch out my boat. The languid hours pass by on the shore—Alas for me!
The spring has done its flowering and taken leave. And now with the burden of faded futile flowers I wait and linger.
The waves have become clamorous, and upon the bank in the shady lane the yellow leaves flutter and fall.
What emptiness do you gaze upon! Do you not feel a thrill passing through the air with the notes of the far-away song floating from the other shore?

Sunday, September 18, 2016

கீதாஞ்சலி - பாரதி பாணியில் பாடல்-20

குளமெங்கும் குமுதங்கள் பூக்கும் அதை
அலைபாயும் எனதுள்ளம் அறியாது போகும்
மலரின்றி பூக்கூடை ஏங்கும் ஒரு
கரமேதும் பறிக்காத மலர்க்கூட்டம் தூங்கும்

கனவோடு துயில்நீங்கும் பொழுதில் புது
மணமொன்று தென்றலில் இதமாகத் தோன்றும்
விவரிக்க முடியாத உணர்வும் - வெப்பம்
தணிக்கின்ற தென்றலின் ஆர்வத்தைக் காட்டும்

அருகிலோ தூரமோ அறியேன் இதுவும்
என்னவோ என்னதோ எதுவுமே அறியேன்
என்றும் உணராத ஏகாந்தம் நெஞ்சில்
ஏதோவோர் ஆழத்தில் எழிலாக மலரும்

Tagore's English version:

On the day when the lotus bloomed, alas, my mind was straying, and I knew it not.
My basket was empty and the flower remained unheeded.
Only now and again a sadness fell upon me, and I started up from my dream and felt a sweet trace of a strange fragrance in the south wind.
That vague sweetness made my heart ache with longing and it seemed to me that is was the eager breath of the summer seeking for its completion.
I knew not then that it was so near, that it was mine,
and that this perfect sweetness had blossomed in the depth of my own heart.

Sunday, September 11, 2016

கீதாஞ்சலி - பாரதி பாணியில் - பாடல் 17

காதல் உன் கைத்தலத்தில் கொண்டு சேர்க்கவே மிகத்
தாமதமும் ஆனதென்று காத்திருக்கிறேன்
என்னைச் சிறைப்பிடிக்க யாவரும் வந்தார் எனில்
ஏய்த்துமே விலகி வந்தேன் எந்தன் இறைவா

என்னைப் பழிகள் சொல்லி ஏளனம் செய்வார் அவை
யாவையுமே ஏற்றுக் கொள்வேன் எந்தன் இறைவா
சந்தைக் கடையடைத்து யாவரும் சென்றார் எந்தைக்கு
ஈந்திடக் காதல் வரக் காத்திருக்கிறேன்

(சந்தம் : கண்ணன் மனநிலையைக்)

Tagore's English version:

I am only waiting for love to give myself up at last into his hands. That is why it is so late and why I have been guilty of such omissions.
They come with their laws and their codes to bind me fast; but I evade them ever, for I am only waiting for love to give myself up at last into his hands.
People blame me and call me heedless; I doubt not they are right in their blame.
The market day is over and work is all done for the busy. Those who came to call me in vain have gone back in anger.
I am only waiting for love to give myself up at last into his hands.

கீதாஞ்சலி - பாரதி பாணியில் - பாடல் 18

கூடிக் குவியுது மேகம் - இருள்
கவ்விக் கவ்வி மறைத்திடும் நேரம்
வாடி வெளியினில் நின்றேன் - அன்பே
மூடிக் கிடக்கும் நின் வாசலின் ஓரம்

பட்டப் பகலெனும் நேரம் - பலர்
சூழக் கடக்கும் என் பணியினில் காலம்
எட்டி இரவிங்கு வந்தால் - எனைச்
சூழ்ந்து பிடிக்கும் உன் நினைவெனும் மோகம்

அன்பு முகமும் காட்டாது - என்னை
அங்கொரு புறமாய்த் தள்ளியும் வைத்தால்
எங்ஙனம் தான் எதிர்கொள்வேன் - இங்கு
நீண்டு வளர்ந்திடும் குளிர் மழைக்காலம்?

வானில் இருள்வெளி கண்டேன் - எந்தன்
வாழ்வில் புயலொன்று வீசிடக் கண்டேன்
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

Tagore's English version:

Clouds heap upon clouds and it darkens. Ah, love, why dost thou let me wait outside at the door all alone?
In the busy moments of the noontide work I am with the crowd, but on this dark lonely day it is only for thee that I hope.
If thou showest me not thy face, if thou leavest me wholly aside, I know not how I am to pass these long, rainy hours.
I keep gazing on the far-away gloom of the sky, and my heart wanders wailing with the restless wind.

கீதாஞ்சலி - பாரதி பாணியில் - பாடல் 19

பேசவும் மறுத்துவிட்டால்
எந்தன் மனதில் உன் மௌனத்தை நிறைத்திடுவேன்
மௌனமும் நிறைந்ததனால்
எழும் வெறுமையின் வேதனை பொறுத்திடுவேன்
வானத்தில் மீன்களெல்லாம்
தலை குனிந்துமே விடிந்திடக் காத்திடல்போல்
நானும் என் உணர்வழிந்தே
நிச்சலனத்தில் நீள்நிசி விழித்திருப்பேன்
நீள்நிசி விழித்திருப்பேன்

காலையில் விடிந்தவுடன்
காரிருளுடன் இரவும் மறைந்துவிடும்
காலைச் செங்கதிர்களுடன்
உன் கீதமும் வானின்று பெருகி வரும்
கானகப் பறவைகளும்
செய்யும் ஒலியில் உன் கீதங்கள் சிறகு பெறும்
கானக மலர்களெல்லாம்
மெல்ல மலர்ந்திட உன் கானங்கள் உதிர்ந்துவிடும்
(ராகம்: தீர்த்தக்கரை தனிலே)

Tagore's English version:

If thou speakest not I will fill my heart with thy silence and endure it.
I will keep still and wait like the night with starry vigil and its head bent low with patience.
The morning will surely come, the darkness will vanish,
and thy voice pour down in golden streams breaking through the sky.
Then thy words will take wing in songs from every one of my birds’ nests,
and thy melodies will break forth in flowers in all my forest groves.

Friday, September 9, 2016

பேருந்து பயணக்குறிப்பு


முந்தாநாள் மாலை அடித்து பிடித்து 5.45 பேருந்தைப் பிடித்துவிட்டேன். எட்டு மணிக்கு குழந்தையை வகுப்பொன்றுக்கு கூட்டிச் செல்லவேண்டும்.

ஏதாவது படித்துக்கொண்டோ பாடல் கேட்டுக்கொண்டோ பயணம் செய்வது என் வழக்கம். பல நேரங்களில் தூங்கிவிடுவதும் உண்டு. ஆனால் அன்று விழித்துக்கொண்டே சும்மா உட்கார்ந்து வர நேர்ந்துவிட்டது. சும்மா இருந்தாலும் நம் குரங்கு மனம் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்தது.

இடது பக்கம் முன் வரிசையில் ஒரு பெண் மொபைலில் படம் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் ஹெட் போன் மாட்டியிருக்கவில்லை. சப் டைட்டில்களைப் பார்ப்பதைப் புரிந்துகொண்டேன். இன்னும் கொஞ்சம் கவனித்த பிறகுதான் தெரிந்தது அது ஒரு கொரியன் படமென்று. புரியாத வசனங்களுடன் படம் பார்ப்பதை விட சப் டைட்டில்களுடன் ஊமைப் படம் பார்ப்பதே நன்றாக இருக்குமோ என்று ஒரு ஐடியா கிடைத்தது.

OMR-ல் எழுந்து கொண்டிருக்கும் கட்டடங்களை கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டு வந்தேன். கஷ்டப்பட்டு சம்பாதித்து இப்படி கட்டடங்களுக்காக கடன் வாங்கி அஞ்சி அஞ்சி வாழும் IT சமுதாயத்தின் மேல் கழிவிரக்கம் வந்தது.

அரை மணி நேரத்திலேயே இரண்டு ஆம்புலன்ஸ் வண்டிகள் கடந்து செல்வதைக் கவனித்தேன். உடம்புக்கு ஏதாவது வந்தால் இந்த மாதிரி ஆபீஸ் விடும் டிராஃபிக் சமயங்களிலோ அல்லது மருத்துவர்கள் இல்லாத நள்ளிரவுகளிலோ வரக்கூடாதடா சாமி.

பாவம் நாங்கள் எல்லாம் தூங்குவோம் என்ற எண்ணத்தில் வழக்கமாய் பஸ் டிரைவர் பாடல் எதுவும் போடாமல் அமைதியாய் ஓட்டி வருவார். கிண்டி தாண்டிய பிறகே பாடல்களை அலறவிட்டு எங்களை எழுப்புவார். அன்று என்னவோ OMR-லேயே பாட்டு போட ஆரம்பித்துவிட்டார். TMS பாடல்கள். 'நான் மலரோடு' 'லில்லி மலருக்கு கொண்டாட்டம்' 'பூவைத்த பூவைக்குப் பூக்கள் சொந்தமா' என்று பூ போட்ட பாடல்களை ரசித்து வந்தேன்.

ஆலந்தூர் வந்தவுடன் சோகப்பாடல்களாக ஓட ஆரம்பித்துவிட்டன. 'பச்சைக்கிளி முத்துச் சரம்' என்று பாடிவந்த TMS 'பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி' என்று கிளியை கிழி கிழி என்று பலவித மாடுலேஷன்களில் கிழித்துவிட்டார். 'போனால் போகட்டும் போடா' என்ற பாடுகையில் நல்லவேளை எந்த ஆம்புலன்ஸும் செல்லவில்லை. சென்றால் மனது வலிக்கும்.

ஈக்காட்டுத்தாங்கலில் ஒரு பெரிய பிள்ளையார் பந்தல் பார்த்தேன். பிள்ளையாருக்குப் பின்னால் அவரைவிடப் பெரிய விஷ்ணு சிலை இருந்தது. பிள்ளையாரின் இரு பக்கமும் பிரம்மா சிவன் இருவரின் சிலைகளும் சிறியதாய் இருந்தன. நாம் பார்த்த பல பிள்ளையார்களில் இது வித்தியாசமாய் இருந்தது. இன்று அந்தப்பக்கமாய் நீங்கள் செல்வதாய் இருந்தால் பார்க்கவும். நாளை கடலில் கரைந்து விடுவார். (ஹில்டன் ஹோட்டலுக்கும் பேருந்து நிறுத்தத்திற்கும் இடையில் உள்ளது இந்தப் பந்தல்.)

வண்டி நத்தை போல் ஊர்ந்து காசி தியேட்டரைக் கடந்து மெதுவாய் உதயம் பக்கம் திரும்பியது. மகளிடமிருந்து போன்.
'எங்கப்பா இருக்கீங்க?'
'அசோக் பில்லர்லமா ..'
'அசோக் பில்லர்ல எங்கப்பா?'
சில நேரங்களில் அசோக் பில்லரிலிருந்து வடபழனி வரவே அரை மணிநேரம் ஆகிவிடும் என்பதை அறிந்த மகளின் தவிப்பு அது.
'உதயம் தாண்டிட்டேன்மா..' என்றேன்.

வடபழனி சிக்னலில் 'வீடு வரை உறவு' பாடல் ஓடியது. நம் குறுக்கு புத்தி கவிஞர் ஏன் முதலில் 'கட்டிலுக்குக் கன்னி' என்று எழுதிவிட்டு 'பட்டினிக்குத் தீனி' என்று வரிசைப்படுத்தினார் என்று ஒரு கேள்வி கேட்டுவைத்தது.

இந்தப் பாடல் முடிவதற்குள் எனது நிறுத்தம் வந்துவிடும் என்று எழுந்தேன். அதற்குள் அடுத்த பாடல் வந்துவிட்டது 'உன்னைச் சொல்லிக் குற்றமில்லை .. என்னைச் சொல்லி குற்றமில்லை.....'. முன் வரிசைப் பெண் ஹெட் போன் இல்லாமல் இன்னமும் அந்த ஊமைப் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். 'காலம் செய்த கோலமம்மா.. கொரியன் செய்த குற்றமம்மா' என்று மனதுக்குள் பாடியபடி நிறுத்தத்தில் இறங்கினேன்.

Friday, August 5, 2016

கீதாஞ்சலி - பாரதி பாணியில் - பாடல்கள் 15,16

(15)
கோயிலின் ஓரிடத்தே ஒரு ஓரத்தில் நானின்று அமர்ந்திருந்தேன்
பாயிரம் பலவாக உனைப் பாடியே போற்றிடக் காத்திருந்தேன்
பாத்திரம் ஏதுமில்லை உந்தன் உலகில் எனக்கொரு பணியுமில்லை
பயனற்ற வாழ்வினிலே எழும் இசையினில் யாதொரு நலமுமில்லை ஆ ஆ ஆ யாதொரு நலமுமில்லை

மௌன இருளினிலே நின் மாடத்தில் நடுநிசி பூசையிலே
நான் உன்முன் பாடிடவே என் இறைவா நீ என்னைப் பணித்துவிடு
காலைச் செங்கதிரினிலே யாழிசைத்திட நீ என்னை அழைத்துவிடு
காலைச் செங்கதிரினிலே யாழிசைத்திடும் பெருமையை அளித்துவிடு ஆ ஆ ஆ பெருமையை அளித்துவிடு

(சந்தம்: தீர்த்தக் கரைதனிலே )

Tagore's English version:
I am here to sing thee songs. In this hall of thine I have a corner seat.
In thy world I have no work to do; my useless life can only break out in tunes without a purpose.
When the hour strikes for thy silent worship at the dark temple of midnight, command me, my master, to stand before thee to sing.
When in the morning air the golden harp is tuned, honour me, commanding my presence

(16)
மண்ணில் விழாவென்றே என்னை அழைத்து வந்தாய்
மாண்புற வாழவைத்தாய் இறைவா வாழ்வெனும் வரமும் தந்தாய்
கண்டதைக் களித்திருந்தேன் கேட்டதில் லயித்திருந்தேன்
மண்ணிலோர் விழாவினிலே இறைவா மண்ணிலோர் விழாவினிலே

இன்கிவ்விழாவினில் என் பங்குக்கு இசைத்துவிட்டேன்
இயன்றதைச் செய்துவிட்டேன் இறைவா முயன்றதைச் செய்துவிட்டேன்
வந்து உன் வதனம் நோக்கி வந்தித்து வாழ்த்திடவும்
வந்ததோ நேரம் இன்றே இறைவா வந்ததோ நேரம் இன்றே?
(சந்தம் : நெஞ்சில் உரமும் இன்றி)

Tagore's English version:
I have had my invitation to this world’s festival, and thus my life has been blessed. My eyes have seen and my ears have heard.
It was my part at this feast to play upon my instrument, and I have done all I could.
Now, I ask, has the time come at last when I may go in and see thy face and offer thee my silent salutation?

Saturday, July 30, 2016

கீதாஞ்சலி - பாரதி பாணியில் - பாடல்கள் 11-14


(11)
பாடலை நிறுத்திவிடு நெஞ்சே ஜெப மாலையைத் தவிர்த்துவிடு
கோயிலை அடைத்தபின்னும் ஏனோ இந்த தரிசனம் நிறுத்திவிடு
கண்களைத் திறந்துவிடு எங்கே அந்தக் கடவுளைத் தேடிவிடு

பயிர்செய்ய உழுகின்றவர் பாதை செய்யப் பாறையைப் பிளக்கின்றவர்
பாருய்ய உழைக்கின்றவர் பக்கம் அந்தப் பரமனைப் பார்த்துவிடு
மண்ணுண்ட உடைதரிப்பான் மெய்யோருடன் அடைமழை வெயிலிருப்பான்

விடுதலை உனக்கெதற்கு பெம்மானுமே படைப்பதில் பிணைந்தில்லையோ?
தீட்சையைத் துறந்துவிடு பெம்மானுடன் புழுதியுள் இறங்கிவிடு
தியானங்கள் தவிர்த்துவிடு நல்வாசனை மலர்களும் மறந்துவிடு
வியர்வைகள் சிந்திவிடு பெம்மானுடன் உழைப்பினில் கலந்துவிடு

(சந்தம்: மோகத்தைக் கொன்றுவிடு)

Leave this chanting and singing and telling of beads! Whom dost thou worship in this lonely dark corner of a temple with doors all shut?
Open thine eyes and see thy God is not before thee!
He is there where the tiller is tilling the hard ground and where the pathmaker is breaking stones.
He is with them in sun and in shower, and his garment is covered with dust.
Put of thy holy mantle and even like him come down on the dusty soil!
Deliverance? Where is this deliverance to be found? Our master himself has joyfully taken upon him the bonds of creation;
he is bound with us all for ever.
Come out of thy meditations and leave aside thy flowers and incense!
What harm is there if thy clothes become tattered and stained? Meet him and stand by him in toil and in sweat of thy brow.

(12)
தோன்றி ஒளிவரவே என் தேரினில் ஏறியே நான் விரைந்தேன்
நீண்ட நெடு வழியில் நானும் மிக நீண்டதோர் பயணம் கொண்டேன்
தாண்டி உலகமெல்லாம் வான் வெளியினில் தடங்களைப் பதித்துவந்தேன்
வேண்டும் உன் அருகுணர எம் இறைவா நெடுவழிப் பயணம் என்ற
உண்மையை மெல்லிசையாய் உணர்ந்தேன் நுண்ணிய பயிற்சியிலே

ஆலயக் கதவுகள்தான் பல்லாயிரம் தேடியும் ஓய்ந்த பின்னே
ஞாலங்கள் காணாத ஓராலயம் நெஞ்சினுள் தெரிகிறதே
தொலைவினில் அருகிலென்றே அலையும் விழிகளை மூடிவிட்டேன்
உலகமும் மூழ்கிடுமோ நீ எங்கென எழுகின்ற கண்ணீரில்
அலையென ஆர்ப்பரித்தேன் என் இறைவா இமைகளின் உள்ளே நீ

(சந்தம்: சுட்டும் விழிச்சுடர்)

The time that my journey takes is long and the way of it long.
I came out on the chariot of the first gleam of light, and pursued my voyage through the wildernesses of worlds leaving my track on many a star and planet.
It is the most distant course that comes nearest to thyself, and that training is the most intricate which leads to the utter simplicity of a tune.
The traveller has to knock at every alien door to come to his own, and one has to wander through all the outer worlds to reach the innermost shrine at the end.
My eyes strayed far and wide before I shut them and said `Here art thou!’
The question and the cry `Oh, where?’ melt into tears of a thousand streams and deluge the world with the flood of the assurance `I am!’

(13)
நல்லதோர் கீதம் செய்தேன் அதை இசைத்திட இதுவரை இயலவில்லை
நாளெல்லாம் நரம்புகளை நல்ல வீணையில் பொருத்தியும் பிரித்தும் நின்றேன்

நேரமும் வரவில்லையே நல்ல வரிகளும் நாவினில் எழவில்லையே
வேதனை விஞ்சியதே எந்தன் இதயத்தில் ஆவலும் எஞ்சியதே

அரும்பிங்கு மலரவில்லை அதை வருடியே தென்றலும் தீண்டிடினும்
காணேன் கேட்டறியேன் அவன் காலடி மட்டும்தான் கேட்கிறதே

நேரமும் கடந்திடுதே நல்ல விரிப்பினை தரையினில் அமைப்பதற்கே
தீபமும் ஏற்றவில்லை எந்தன் இறைவனை அழைக்கவும் முடியவில்லை

வாழ்விங்கு கரைகிறதே எந்தன் இறைவனை நான் இங்கு காண்பதற்கே
நாளையும் கூடிடுமோ எந்தன் நம்பிக்கை மட்டுமே குறைவில்லை

(சந்தம்: நல்லதோர் வீணை செய்தே)

The song that I came to sing remains unsung to this day.
I have spent my days in stringing and in unstringing my instrument.
The time has not come true, the words have not been rightly set; only there is the agony of wishing in my heart.
The blossom has not opened; only the wind is sighing by.
I have not seen his face, nor have I listened to his voice; only I have heard his gentle footsteps from the road before my house.
The livelong day has passed in spreading his seat on the floor; but the lamp has not been lit and I cannot ask him into my house.
I live in the hope of meeting with him; but this meeting is not yet.

(14)
ஆசை மிக அதிகமாச்சே எந்தன் அழுகையும் அணை மீறிப் போச்சே
ஏதும் வழங்கவில்லை நீயும் என்னை மறுத்து மறுத்து என்னைக் காத்தாய்

மீண்டும் மீண்டும் மிக்க கருணை மிக எளிய பரிசுகளின் மேன்மை
நானும் கேளாமல் தந்தாய் அந்த தகுதியைத் தந்து என்னைக் காத்தாய்

வானம் வெளிச்சம் நீயும் தந்தாய் உடல் உயிரும் மனமும் நீயே தந்தாய்
ஈனப் பேராசை கொன்றே என்னை இழிந்த அழிவினின்று காத்தாய்

அமைதி கொண்ட பல கணங்கள் மனதில் கடமைகள் சூழ்ந்த பல கணங்கள்
தினங்கள் எனைத்தின்ன விட்டாய் வெகு திடமாய் உனை மறைத்துக் கொண்டாய்

வேண்ட வேண்ட மிக வருத்தம் தரும் வேண்டிடாத எந்தன் விருப்பம்
மீண்டும் மீண்டும் அவை மறுத்தே என்னை ஆட்கொண்டருள் புரியும் தேவா

(சந்தம் : ஆசை முகம் மறந்து போச்சே )

My desires are many and my cry is pitiful, but ever didst thou save me by hard refusals; and this strong mercy has been wrought into my life through and through.
Day by day thou art making me worthy of the simple, great gifts that thou gavest to me unasked—this sky and the light, this body and the life and the mind—saving me from perils of overmuch desire.
There are times when I languidly linger and times when I awaken and hurry in search of my goal; but cruelly thou hidest thyself from before me.
Day by day thou art making me worthy of thy full acceptance by refusing me ever and anon, saving me from perils of weak, uncertain desire.

Thursday, July 28, 2016

கீதாஞ்சலி - பாரதி பாணியில் - பாடல்கள் 6-10

(6)
நல்லதோர் மலரிதுவே வாடி வதங்கியே புழுதியில் விழுந்திடுமோ
மெல்லவே பறித்துவிடு இது உதிர்ந்திடும் என நான் அஞ்சுகிறேன்
தொடுத்திடும் மாலையிலே நான் கொடுத்திட அதற்கொரு இடமுமில்லை
எடுத்திடுவாய் இறைவா உந்தன் கரம் படும் வரம் மட்டும் கிடைக்கட்டுமே

நாளின்று முடிகிறதே உன்னைத் தொழுதிடும் வேளையும் கடந்திடுமோ
வண்ணத்தில் குறைந்தாலும் அதன் வாசத்திலே கொஞ்சம் மறைந்தாலும்
வேளையில் பறித்துவிடு உந்தன் சேவையில் மலரினைச் சேர்த்துவிடு
வேளையில் பறித்துவிடு உந்தன் சேவையில் மலரினைச் சேர்த்துவிடு
(சந்தம்: நல்லதோர்வீணை)

Tagore's English version:
Pluck this little flower and take it, delay not! I fear lest it droop and drop into the dust.
I may not find a place in thy garland, but honour it with a touch of pain from thy hand and pluck it.
I fear lest the day end before I am aware, and the time of offering go by.
Though its colour be not deep and its smell be faint, use this flower in thy service and pluck it while there is time.

(7)
மின்னும் அணிகலன்கள் என் கவிமகள் மேனியில் அணிவதுண்டோ?
வண்ணத் துணிமணிகள் அவளது பெருமிதம் ஆவதுண்டோ?
பொன்னும் மணிகளெல்லாம் இனி நாம் பொருந்திடத் தடைகளன்றோ - அவை
பண்ணும் ஒலிகளெல்லாம் இறை உந்தன் கன்னல் மொழி மறைக்குமன்றோ?

ஆணவம் அழிகிறதே உன்முன்னால் நாணமும் மிகுகிறதே
மாணவன் பணிவோடு பெரும்புலவன் உன் காலடி அமர்ந்திடுவேன்
நாணலின் குழல்போல எளிதாய் வாழ்வினை அமைத்திடுவேன்
கானங்கள் இசைத்துவிடு இக்குழலினுள் நல்லிசை செலுத்திவிடு
(சந்தம்: சுட்டும் விழிச்சுடர்தான்)

Tagore's English version:
My song has put off her adornments. She has no pride of dress and decoration.
Ornaments would mar our union; they would come between thee and me; their jingling would drown thy whispers.
My poet’s vanity dies in shame before thy sight. O master poet, I have sat down at thy feet.
Only let me make my life simple and straight, like a flute of reed for thee to fill with music.

(8)
ஓடி விளையாடும் பாப்பா- நகை
சூடிடல் ஆகாது அம்மா
ராஜ அலங்காரம் செய்தே அவன்
ஆட்டத்தில் தடை போடலாமா?

புழுதிக் கறைகள் வந்து படுமோ என்ற
பயம் கொண்ட பதங்களும் எழுமோ?
மண்ணின் மடியில் பிள்ளை தவழ பெரும்
மமதை தடையாகலாமோ?
(சந்தம்: ஓடிவிளையாடுபாப்பா)

Tagore's English version:
The child who is decked with prince’s robes and who has jewelled chains round his neck loses all pleasure in his play;
his dress hampers him at every step.
In fear that it may be frayed, or stained with dust he keeps himself from the world, and is afraid even to move.
Mother, it is no gain, thy bondage of finery, if it keep one shut off from the healthful dust of the earth,
if it rob one of the right of entrance to the great fair of common human life.

(9)
விந்தை நிகழ்ந்து விடுமோ? விந்தை நிகழ்ந்து விடுமோ? சொந்த
உடலினைத் தோள்களில் சுமந்திடவே எண்ணும் சிந்தை செயலும் பெறுமோ?
தருமம் கேட்டு வருவாய் நீயும் உன்வீதி உன்வீட்டின் வாசலுக்கே
ஆசைகள் பலவும் கொள்வாய் பெரு மூச்சினிலே விளக்கின் சுடர் அணைப்பாய்
அருள்வதை ஏற்றுக் கொள்வாய் துளி அசுத்தமில்லாத அவன் கரம் தரவே
அவன்வசம் துயர்விடுவாய் அவன் சுமந்திடுவான் நீயும் சுகப்படுவாய்
(சந்தம்: நெஞ்சு பொறுக்குதில்லையே)

Tagore's English version:
O Fool, try to carry thyself upon thy own shoulders! O beggar, to come beg at thy own door!
Leave all thy burdens on his hands who can bear all, and never look behind in regret.
Thy desire at once puts out the light from the lamp it touches with its breath. It is unholy—take not thy gifts through its unclean hands.
Accept only what is offered by sacred love.

(10)
உந்தன் பதங்கள் எங்கே இறைவா
உந்தன் பதங்கள் எங்கே?
ஏழை எளியவர் எதுவும் இல்லாதவர்
ஏழை எளியவர் எதுவும் இல்லாதவர்
மேவிடும் ஓரிடம் அவ்விடம் பாவிடும்

நின்னைப் பணிந்தேத்த இயலவில்லை
இயலவில்லை இயலவில்லை
இன்னும் சிரம் தாழ்த்த முடியவில்லை
முடியவில்லை முடியவில்லை
ஏழைகள் எளியவர் எதுவும் இல்லாதவர்
மேவிடும் ஓரிடம் உறைந்திடும் இறைவா

உன்னை நெருங்கிடவும் இயலவில்லை
இயலவில்லை இயவில்லை
கர்வம் எனைவிட்டு விலகவில்லை
விலகவில்லை விலகவில்லை
ஏழைகள் எளியவர் எதுவும் இல்லாதவர்
போலொரு தோற்றத்தில் உலவிடும் இறைவா

உன்னைத் துணைசேர முடியவில்லை
முடியவில்லை முடியவில்லை
இதயம் வழிகாண இயலவில்லை
இயலவில்லை இயவில்லை
ஏழைகள் எளியவர் எதுவும் இல்லாதவர்
துணையொன்றிலாதவர் துணை வரும் இறைவா
(சந்தம்: நின்னைச்சரண்புகுந்தேன்)

Tagore's English version:
Here is thy footstool and there rest thy feet where live the poorest, and lowliest, and lost.
When I try to bow to thee, my obeisance cannot reach down to the depth where thy feet rest among the poorest, and lowliest, and lost.
Pride can never approach to where thou walkest in the clothes of the humble among the poorest, and lowliest, and lost.
My heart can never find its way to where thou keepest company with the companionless among the poorest, the lowliest, and the lost.

கீதாஞ்சலி - பாரதி பாணியில் - பாடல் 5

கணப்பொழுது வேண்டும் உந்தன் அருகினில் அமர்ந்து நான் அமைதிபெற
கைவசம் உள்ள பணி அது காத்திருக்காதோ முழுமைபெற?
கரையிலாத கடலாய் என்னைக் கடமைகள் ஓய்வின்றி விரட்டிடுமோ?
கனிந்த நின் பார்வையின்றி உள்ளம் அழன்றே அனுதினம் உழன்றிடுமோ?

வசந்தமும் வந்ததிங்கே வண்ண மலர்களும் சோலையில் பூத்ததிங்கே
இசையுடன் நடனங்களும் சின்ன வண்டுகள் களிப்புடன் ஆடுதிங்கே
முகத்துடன் முகம் பார்த்து பொங்கும் அமைதியில் அருகிகினில் நானமர்ந்து
அகத்தெழும் பாடலொன்று உன்முன் பணிவுடன் சமர்ப்பிக்கும் தருணமிதே
(சந்தம் : நல்லதோர்வீணை)

Tagore's English version:

I ask for a moment’s indulgence to sit by thy side. The works that I have in hand I will finish afterwards.
Away from the sight of thy face my heart knows no rest nor respite, and my work becomes an endless toil in a shoreless sea of toil.
Today the summer has come at my window with its sighs and murmurs; and the bees are plying their minstrelsy at the court of the flowering grove.
Now it is time to sit quite, face to face with thee, and to sing dedication of life in this silent and overflowing leisure.

கீதாஞ்சலி - பாரதி பாணியில் - பாடல் 4

என்னுயிரின் உயிர் என் இறைவா
எந்தன் அங்கம் முழுதிலும் நீ உறைவாய்எனும்
உண்மையை நானும் அறிந்ததனால்
என்றும் என்னுடல் தூய்மையைக் காத்திடுவேன்

சிந்தையில் மெய்யொளி நீ கொடுத்தாய்
அங்கு பொய்கள் புகவும் விடுவேனோ?
எந்தன் உள்மன பீடத்தில் நீ அமர்ந்தாய்
அங்கு தீமைகள் தங்க விடுவேனோ?

சக்தியெல்லாம் என்னில் யார் கொடுத்தார் எனில்
சத்தியமாய் அது நீ கொடுத்தாய் - எனில்
என் செயல் யாவிலும் நீ இருப்பாய்- என்றும்
என் செயல் யாவிலும் நீ தெரிவாய்
(சந்தம் : செந்தமிழ் நாடெனும்)

Tagore's English version:
Life of my life, I shall ever try to keep my body pure, knowing that thy living touch is upon all my limbs.
I shall ever try to keep all untruths out from my thoughts, knowing that thou art that truth which has kindled the light of reason in my mind.
I shall ever try to drive all evils away from my heart and keep my love in flower, knowing that thou hast thy seat in the inmost shrine of my heart.
And it shall be my endeavour to reveal thee in my actions, knowing it is thy power gives me strength to act.

Friday, July 15, 2016

கீதாஞ்சலி - பாரதி பாணியில் - பாடல் 3

எவ்விதம்தான் நீயும் பாடுகின்றாய்? என்று
எண்ணியே சிந்தையில் ஆழ்ந்துவிட்டேன்.
உந்தன் இன்னிசையால் ஒளி ஏற்றுகின்றாய்
இந்த வையம் பயனுறப் பண்ணுகின்றாய்

வானின்று வான் உயிர் மூச்சிசைத்தாய் தூய
கான நதிவழித் தடை தகர்த்தாய் நானும்
உன்னுடன் பாடிட ஏங்குகிறேன் ஒலி
உள்ளுறைந்தே என்னுள் தேங்குகிறேன்

வாய் திறந்தேன் இசை தோன்றவில்லை
எந்தன் பேச்சிங்கு பாடலாய் மாறவில்லை - வலைப்
பின்னலென்றே கட்டும் உன்னிசைக்குள்
எந்தன் உள்ளம் சரண்புகச் செய்துவிட்டாய்

(சந்தம் : செந்தமிழ் நாடெனும்)

Tagore's English version:

I know not how thou singest, my master! I ever listen in silent amazement.
The light of thy music illumines the world. The life breath of thy music runs from sky to sky.
The holy stream of thy music breaks through all stony obstacles and rushes on.
My heart longs to join in thy song, but vainly struggles for a voice. I would speak,
but speech breaks not into song, and I cry out baffled.
Ah, thou hast made my heart captive in the endless meshes of thy music, my master!

Wednesday, July 13, 2016

கீதாஞ்சலி - பாரதி பாணியில் - பாடல் 2

என்னைப் பாடிட நீ சொல்லும் போதிலே
உள்ளம் கர்வத்தினால் எல்லை மீறுதே
உந்தன் பொன்முகம் பார்த்திடும் போதிலே
எந்தன் கண்களில் நீர்த்துளி மேவுதே

துன்ப துயரமெல்லாம் உருமாறியே
புகழ் கீதமாய் நீள்கடல் தாண்டுதே
வேறு எவ்விதமாகவும் கூடுமோ?
உந்தன் பொற்பதங்கள் தொட்டுத் தீண்டவே

எந்தன் பாடலும் உன் விழைவாகுதே
என்னைப் பாடகனாய் நீயும் ஏற்கவே
பாடும் களிமிகவே என்னுள் ஏறியே
தொழும் தேவனைத் தோழனாய் மாற்றுதே

(சந்தம் : காற்றுவெளியிடை)

Tagore's English version:

When thou commandest me to sing it seems that my heart would break with pride; and I look to thy face, and tears come to my eyes.
All that is harsh and dissonant in my life melts into one sweet harmony—and my adoration spreads wings like a glad bird on its flight across the sea.
I know thou takest pleasure in my singing. I know that only as a singer I come before thy presence.
I touch by the edge of the far-spreading wing of my song thy feet which I could never aspire to reach.
Drunk with the joy of singing I forget myself and call thee friend who art my lord.

Friday, July 8, 2016

கீதாஞ்சலி - பாரதி பாணியில் - பாடல் 1


எல்லை இல்லாதெனை மாற்றிவிட்டாய்
என்னில் என்றென்றும் நல்லுயிர் ஊற்றிவிட்டாய் - மிக
நல்ல புல்லாங்குழல் நானெனவே
என்னை என்றென்றும் நல்லிசை பாடவைத்தாய்

என்விரல் நீதொடும் போதினிலே
எந்தன் உள்ளமும் எல்லைகள் மீறிடுதே - ஏதும்
சொல்ல வாயிலொரு வார்த்தையின்றி
எண்ணம் பல்விதமாய் என்னுள் ஊறிடுதே

சின்னஞ்சிறிய என் கைகளிலே
நீயும் அள்ளித்தந்த அருள் கொஞ்சமில்லை - தினம்
அள்ளி அள்ளி நீ தந்தாலும்
எந்தன் சின்னஞ் சிறுகைகள் நிறைவதில்லை

(சந்தம் : செந்தமிழ் நாடெனும்)

Tagore's English version:

Thou hast made me endless, such is thy pleasure.
This frail vessel thou emptiest again and again, and fillest it ever with fresh life.
This little flute of a reed thou hast carried over hills and dales, and hast breathed through it melodies eternally new.
At the immortal touch of thy hands my little heart loses its limits in joy and gives birth to utterance ineffable.
Thy infinite gifts come to me only on these very small hands of mine.
Ages pass, and still thou pourest, and still there is room to fill.

Tuesday, July 5, 2016

அடே ஆடவா

எச்சில் தொட்டு எண்ணிப்பார்க்க
பெண் என்ன நோட்டுக்கட்டா?
சேரவில்லை என்று கிழித்தெறிய
பெண் என்ன சீட்டுக்கட்டா?

என் மதம் உயர்வென்பவனை
உன்மத்தன் என்றும்
என் இனம் உயர்வென்பவனை
உருப்படாதவன் என்றும்
கருதுகின்ற காலமடா இது..
பெண்ணை மட்டும் துச்சமென்று
அச்சமற்றுப் போவாயோ?

அன்றொரு பெண்ணின் உடை பறித்தான் துச்சாதனன்
இன்றொரு பெண்ணின் உயிர் பறிக்கவும் துணிந்துவிட்டாய் நீ
அவள் உன் தாயினம் என்பதை ஏனடா மறந்துவிட்டாய்?

கோழைக்குப் பால் கொடுத்த கொங்கைகள் அரிந்தவள்
சங்கத் தமிழ்ப் பெண்ணென்பதை மறந்தாயா நீ?
உன்னைவிட கத்திகள் அதிகம் எடுத்தவள்
உன்னைவிட உதிரம்அதிகம் சிந்தியவள்
பெண்ணென்று தெரியாதா உனக்கு?
உன்னைக் கிள்ளியெறிய எத்தனை நேரம்?
உனக்குக் கள்ளிப்பால் தர எத்தனை நொடி?
அவள் செய்யமாட்டாள்.
ஈன்று புறம் தருதல் என் தலைக்கடனென்று
நாட்டுக்குப் போர் புரியப் பிள்ளைகள் பெற்றுத்தந்தவள்..
இனியும் ஈன்று புறம் தருவாள்
அதில் சில கொலையாளிகள் இருக்கக்கூடும் என்றாலும்

#RIPSwathi

Wednesday, June 15, 2016

கடலை முத்து

கடல் முத்தா என்னயுந்தான்
பொத்திப் பெத்து வளர்த்தவளே
கடலை முத்தா நானும் இப்போ
கசங்கிப் போயி நிக்குறேனே

ஒடச்ச தோலா உன்னையுந்தான்
ஓரத்துல தள்ளிவிட்டு
எண்ணெயைப் போல்
என்னைப் பிழிஞ்சி
யார் யார்க்கோ வார்த்துவிட்டு
புண்ணாக்கா நிக்குறேனே

பெத்த வயித்தை ஒருநாளும்
பசியாத்தி விட்டதில்ல
பால் குடிச்ச மார்மேல
சேலை வாங்கிப் போர்த்தவில்ல
சோறு போட்ட கையக் கொஞ்சம்
சுளுக்கெடுத்தும் விட்டதில்ல

சாரயத்தக் குடிச்சிப்புட்டு
தோராயமா வீடு வந்தா
செருப்பெடுத்து அடிக்காம
சோறாக்கிப் போடுறியே

Wednesday, May 4, 2016

செய்வோமடி காதல்

என்னோடு நீ சேர்ந்து
உன்னோடு நான் சேர்ந்து
ஒன்றாக நாம் சேர்ந்து
செய்வோமடி காதல்

இன்றைக்கா நாளைக்கா
யாருக்கும் தெரியாது
என்றைக்கும் நாம் சேர்ந்து
செய்வோமடி காதல்

மெய்யென்று பொய்யென்று
ஆராய்ச்சி செய்யாமல்
கையோடு கை சேர்த்து
செய்வோமடி காதல்

போதையா பாதையா
மேதைகள் சொல்லட்டும்
பேதைபோல் நாம்சேர்ந்து
செய்வோமடி காதல்

பிசாசோ பூதமோ
மந்திரிச்சி விட்டாலும்
தந்திரமாய் நாம் சேர்ந்து
செய்வோமடி காதல்

விசாவோ மிசாவோ
தடையாக வந்தாலும்
உசாராய் நாம் சேர்ந்து
செய்வோமடி காதல்

சாமிக்கும் சாதிக்கும்
பலியாகிப் போகாமல்
பூமிக்குப் பரிசாக
செய்வோமடி காதல்

Wednesday, April 27, 2016

ஓட்டுக்காகக் காசு வாங்கக் கூசுதையா உடம்பு

ஓட்டுக்காகக் காசு வாங்கக் கூசுதையா உடம்பு
விலகிடாத ஊழல் நம்ம நாட்டைப் பிடிச்ச உடும்பு

ஓட்டுக்குக்காக நோட்டை வாங்கித்
தோட்டம் போட முடியுமா? அந்த
அற்பக்காசில் அஞ்சு வருஷம்
அடுப்பெரிக்க முடியுமா?

ஓட்டுக்காசில் நோட்டு வாங்கிப்
புள்ளைங்களும் படிக்குமா? அந்தப்
பாவப் பணத்தில் புதுத்துணியும்
வாங்கி உடுத்தத் தோணுமா?

சாமிக்குமே காணிக்கையை
சேமிச்சிதான் கொட்டுறோம்
நாட்டுக்காக வரிப்பணத்தை
உழைச்சிதானே கட்டுறோம்?

இது அதுன்னு இலவசங்கள்
எதுக்கு ஐயா நமக்கு?
இனிப்பில் மறைஞ்ச துளிவிஷமாய்
நெனச்சி அதை ஒதுக்கு

நல்ல வீட்டை நாளும் நாளும்
செல்லரிக்க விடுவமா? ஐயா
நம்ம தமிழ்நாட்டை நாமும்
சீரழிய விடுவமா?

ஓட்டுக்காகக் காசு வாங்கக் கூசுதையா உடம்பு
நியாயத்துக்கு வாக்களிச்சா நிமிரும் முதுகு எலும்பு

-பாலா சிவசங்கரன்

Tuesday, March 8, 2016

மங்கையர் தின நல்வாழ்த்துக்கள்

"தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்"
வள்ளுவன் அன்று சொன்னது இன்றைக்கும் எவ்வளவு பொருந்துகிறது பாருங்கள்!

"தன்னைக் காத்துக்கொண்டு தான் அன்புகொண்ட அனைவரையும் காத்து, தனக்கு வாய்த்த நற்பெயரைக்காத்து(அ)சொன்ன சொல்லைக் காத்து சோர்வில்லாதவளே பெண்"
பழமை பண்பாட்டுப் போர்வைகளை நீக்கி இக்குறளின் பொருள் புரிந்துகொள்ளவேண்டும்.

குறிப்பாய் இக்குறளின் முதலிலும் கடைசியிலும் உள்ள கருத்துகளை இந்த மங்கையர்தினத்தில் நமது தோழியருக்கு நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

*** தன்னைக் காத்தல் என்பது மிகவும் அவசியம். தியாகம் என்ற பெயரில் தம்மை வருத்திக்கொள்ளாமல் தங்களின் உடல் நலம், உள்ள நலம், பணி நலம், பண நலம் அனைத்திலும் பெண்கள் அக்கறை செலுத்த வேண்டும் ***

*** சோர்வில்லாதிருத்தல் என்று வள்ளுவன் சொல்வது உடற்சோர்வு கொள்ளாமல் உழைத்துக்கொட்டவேண்டும் என்பதல்ல. மகளிர் மனச்சோர்வு கொள்ளாமல் மகிழ்வுடன் இருக்கவேண்டும் என்பதே அவர் சொல்வது ***

எத்துயர் வரினும் எடுத்தெறிந்துவிட்டு இன்று பூத்த பூவென என்றும் புத்துணர்வுடன் பூவுலகில் நம் தோழியர் வாழ்கென வாழ்த்துகிறேன்.

Monday, February 29, 2016

கன்னி பேக்கும் காட்டன் பெட்டியும்

"செக்குருட்டி அண்ணா கன்னி பேக் ஏதாவது இருக்குதா பாருங்க...."
பல சரக்குக் கடை ஒன்றில் (super market) நடைவண்டியில் பொருட்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்தபோது கல்லாப்பெட்டியிலிருந்த பெண் இப்படிச் சத்தம் போடுவதைக் கவனித்தேன்.

வயதான தம்பதியினர் நிறைய பொருட்களை வாங்கிவிட்டு எடுத்துச் செல்லப் பைகள் இல்லாமல் காத்திருந்தனர். நெகிழிப் பைகள் பயன்பாட்டைக் குறைக்கவேண்டும் என்பதற்காக பைகளை காசுகொடுத்துத்தான் வாங்கவேண்டும் அந்தக் கடையில். ஆனால் அந்தத் தம்பதியினரோ அந்தப் பெண்ணிடம் "மற்ற கடைகளில் இலவசமா பைகள் தரும்போது நீங்கள் மட்டும் ஏன் காசு கேட்கிறீர்கள்?" என்று வாதிட்டுக்கொண்டிருந்தனர். இதுபோன்ற வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் சரக்குகளைப் பிரித்துப்போட்ட ஏதாவது சாக்குப்பைகளைக்(gunny bag) கொடுப்பார்கள் போலும்.
gunny bag-ஐ கன்னி பேக் என்று கன்னித்தமிழில் ஒரு கன்னிப்பெண் சொன்னதை உங்களிடம் பகிராமல் எப்படி இருப்பது? அதனால்தான் இந்தப் பதிவு. (Kerosene கிருஷ்ணாயில் ஆனது போலத்தானே இதுவும்? )

இதில் சிந்திக்க வேண்டியது என்னவென்றால் நமது தமிழ்மக்கள் ஆங்கிலம் சரியாகத் தெரியாதபோதும் கூச்சப்படாமல் இப்படி பேசிப்பேசி ஆங்கிலம் வளர்ப்பதுபோல் நாமும் தமிழில் பிறமொழி வார்த்தைகளுக்கு இணைச்சொற்களைக் கூச்சப்படாமல் பேசிப்பேசித் தமிழை ஏன் வளர்க்கக்கூடாது என்பது தான். இது பற்றிய உங்கள் கருத்தென்ன?

கதையின் இரண்டாம் பாதி மிகவும் சிறியது. கன்னி பேக் இல்லை என்பதால் அந்தப் பெண் காட்டன் பெட்டி இருக்கிறதா என்று கேட்டார். காட்டன் பெட்டி என்றால் carton என்று ஒருவாறு ஊகித்தேன். சரிதானே?

அதை செக்குருட்டி கொடுத்தாரா என்பது கதைக்குத் தேவையற்றது. இருங்கள் .. இருங்கள்.. செக்குருட்டி என்ற வார்த்தையும் கொஞ்சம் ஆராய்ந்துவிடுவோம். செக்குபோல் அங்கேயே சுற்றிச் சுற்றி வருவதால் செக்குருட்டி ஆகிவிட்டாரோ?!

Sunday, February 21, 2016

தாய்மொழிதினம்‬

தாய்மொழி தினம் பற்றி என் மகனிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

ஆங்கில வார்த்தைகளுக்கு இணைச்சொற்கள் தமிழில் உருவாக்காமல் இருப்பது, தமிழ்ச் சொற்களை விடுத்து ஆங்கில வார்த்தைகளை தமிழில் கலந்து பேசுவது இரண்டுமே நமது மொழிவளத்தை பாதிக்கின்றன என்று உணர்ந்தோம்.

சில நாட்களுக்கு முன் ஒரு குறும்பதிவில் ஷவர் என்பதற்கு "நீர்த்தூவி" என்ற சொல்லை நான் பயன்படுத்தினேன் என்று கூறி நீ இதற்கு வேறொரு இணைச்சொல் யோசித்துச் சொல் என்றேன்.. "அருவிகருவி" என்றான்!

‪#‎தாய்மொழிதினம்‬

Friday, February 19, 2016

தோற்றுப்போகிறேன்

"ஏய்" என்றவனிடம்
"ஏய்" என்று வீரம் காட்டிவிடுகிறேன்
சிறு குழந்தையின் முன்
மண்டியிட்டு மழலையாகிறேன்-
லுல்லு லுல்லு பேசி.
இறைவனிடம் கூட
படைப்பதிலும் காப்பதிலும்
நானும் நீயும் ஒன்றென்று
சொல்லிவிடமுடிகிறது.
ஆனால்
எதைச்செய்தும்
உனது மென்காதலின்
முன்நிற்க முடியாமல்
தோற்றுப்போகிறேன்
செஞ்சாந்தாய்க் குழைந்தும்
சிறு கீற்று நிலவிடம்
தோற்றொளியும்
அந்திச் சூரியனைப்போல்
‪#‎காதல்_மாதம்‬

Friday, February 12, 2016

சிரிப்பதுபோல் ஒரு செல்ஃபி

பார்க்கவேண்டும் போலிருக்கு
படம் ஒன்று அனுப்பி வையேன்...
அம்மா அப்பாவுடன் நிற்கும் அந்த
அமைதிப்படம் வேண்டாம்.
தோழிகளுடன் அரட்டைக்கச்சேரி?
அம்மா, தாயே, அவர்கள் எனக்கு அலர்ஜி!
அண்ணனின் பிள்ளைகளுடன்
அவர்களைப் போல் நீயும்
வண்டுக்கண் காட்டும்
வண்ணப்படம் அழகுதான்.
ஆனாலும் அது வேண்டாம்.
ம்ம்ம்...
இவைகளை நான் தள்ளியதால்
உனது தனிப்படம் கேட்பதாய் எண்ணி அந்த
ஹால்டிக்கட் போட்டோவை அனுப்பிவிடாதே!
தேர்வு பயம் தொற்றிக்கொள்ளும் எனக்கும்!
சிரிப்பதுபோல் ஒரு செல்ஃபி எடுத்தனுப்பு.
நான் உன்னைப் பார்க்கும்போது
நீ என்னைப் பார்ப்பாயே
அந்த முகபாவம் முக்கியம்!

பேரமைதி

பள்ளியறையில் உன் நினைப்பைப்
பித்தமென்று தள்ளினேன்
பூசையறையிலும் தொடர்ந்த
உன் நினைப்பைப்
பக்தியென்று புரிந்துகொண்டேன்
நீ விலகிச் சென்ற நாள்முதல்
எனக்குப்
பாலைவன தாகமடி....
துயர் அழுத்தும் மூச்சடைப்பில்
உன் நினைப்பே
என் உயிர்ப்பிடிப்பு...
அருகில் நீ வரும் நாளில்
துடிப்புகள் அடங்கி
சவமென நான் உணர்வழிப்பேன்
அன்று நான் கொள்வேன்
பேரமைதி

Thursday, January 14, 2016

அருண மகராசா


படியளந்த பூமியிலே
பஞ்சம் பசி இருக்குதான்னு
பரிவோடு நம்மகிட்ட
பகலவரும் கேட்குறாரு

புத்தம்புதுப் பானையிலே
பச்சரிசிப் பொங்கல்வைத்து
அன்றாடம் பொங்குறத
அவருகிட்ட காட்டிடுவோம்

வெறும் சாதம் போதுமோ
வேறு சுவை ஏதும் உண்டோ?
வெளக்கமாக சொல்லும்படி
வெளக்குசாமி கேட்குறாரு

காய்கறிகள் கிழங்குவகை
பழங்களெல்லாம் படையல் போட்டு
கரும்பு ரெண்டு வெட்டி வச்சி
கதிரவனுக்கு காட்டிடுவோம்

சுவையாக உண்டுறங்கி
சோம்பலும்தான் ஏறிடுமோ?
ஆதங்கத்தோடு அந்த
ஆதவரும் கேட்குறாரு

ஜல்லிக்கட்டு காளையோடு
மல்லுக்கட்டி ஜெயிச்சிடுவோம்
வீரமுள்ள ஜனங்களுன்னு
வெளையாடிக் காட்டிடுவோம்

மனுஷனுக்கு மட்டும்தான்
மகிழ்ச்சியான வாழ்க்கையோ?
கரிசனத்தோடு அந்த
கதிரவரும் கேட்குறாரு

கொம்புசீவி மணிகள் கட்டி
மாடு கன்னை மந்தையிலே
மாலை மயங்குமுன்னே
மகிழ்ச்சியோடு கூட்டிடுவோம்

வேறு ஏதும் குறைகளுண்டோ
வேதனைகள் எதுவும் உண்டோ?
சூசகமாக அந்த
சூரியனார் கேட்குறாரு

வள்ளலுக்கு வள்ளல் அந்த
கர்ண மகராசா அந்த
கர்ணனுக்கே தகப்பன் நீங்க
அருண மகராசா
நீங்க ஆதரிக்கும் வரைக்கும்
இங்கு அல்லல் ஏதும் இல்லையின்னு
ஆர்ப்பரிச்சிக் கூவிடுவோம்
பொங்கலோ பொங்கல்

Wednesday, January 13, 2016

தொழில் தர்மம் - சிறுகதை

'பரமசிவம் அரிசிக்கடை'. அப்பாவின் பெயரில் கடை வைத்ததில் ரொம்பவே மகிழ்ச்சி முருகனுக்கு. அதுவும் சேட்டுக் கடைக்குப் பக்கத்தில் தனது கடை அமைந்ததில் மிகவும் பெருமிதம்.

இந்த சேட்டிடம்தான் அப்பா எவ்வளவு கடன் வாங்கியிருப்பார்? அசலைவிட பல மடங்கு அதிகமாய் எவ்வளவு வட்டி கட்டியிருப்பார்? பணம்போனது ஒரு பக்கம் இருக்க, அம்மாவின் தாமரைச் செயின் கடனைத் திருப்பமுடியாமல் மூழ்கிவிட்டதை ஒருபோதும் மறக்கமுடியாது அவனால். "எங்க அம்மாவுக்கு அவங்க அம்மா போட்ட செயின்..." என்று அம்மா அடிக்கடி புலம்புவதும், "ஏய்.. உங்க அம்மாவும் போயிட்டாங்க.. அவங்க அம்மாவும் போயிட்டாங்க.. செயின் போனா என்ன? போடீ.. " என்று அப்பா அடக்குவதும் முருகன் வீட்டில் வாடிக்கை.

பரமசிவமும் சேட்டிடம் கேட்டுப்பார்த்தார் "பணம் வேணா கூடப்போட்டுத் தாரேன்.. அந்த நகை கெடைக்குமா பாருங்க சேட்டு..." "பரமசிவம் உனக்குத் தெரியாதா எங்க தொழில்.?. மூழ்கின பொருள உடனே உருக்க அனுப்பிச்சிடுவோம்.. இருந்தா தரமாட்டானா?"

தாத்தா காலத்துலயும்தான் பயிர் வெச்சாங்க. வீட்டுலேயே விதை இருக்கும். மாட்டு ஏர். சாணி உரம். போதுமான மகசூல். நிம்மதியா வாழ்ந்தாங்க. இந்தக்காலத்துல பசுமைப் புரட்சி அதிக மகசூல் என்று சொன்னவங்க உரம் மருந்துன்னு அதிக செலவாகும்னு சொல்லலையே. சேட்டுகிட்ட கடன்வாங்கி வியாபாரிகிட்ட பணம்கொடுத்து விவசாயிக்கு மிஞ்சுவதுதான் என்ன?

முருகன் பெரியவனாகி அப்பாவுக்குத் தோள்கொடுத்து உழைத்தபிறகே குடும்பம் மீண்டும் தலைதூக்கியது. விவசாயத்தோடு வண்டி லோடு அடிப்பது அரிசி தயார்பண்ணி கடையில் போடுவது என்று கொஞ்சம் கொஞ்சமாய் கடன்களை அடைத்தான்.

ஒரு சமயம் அப்பாவுடன் கடைவீதியில் முருகன் சென்றபோது "என்னாப்பா பரமசிவம் கடைபக்கமே காண முடியல" என்று சேட்டு கேட்டபோதுதான் அவர் கடைபக்கத்திலேயே சொந்தமாய் கடைபோட வேண்டும் என்ற எண்ணம் முருகனுக்கு உதித்தது. உங்க கடைப்பக்கம் கடன்வாங்க வந்த காலம் போச்சு சேட்டு. இப்போ நெனச்சா சொந்தமா கடையே போடமுடியும் என்று நினைத்தவன் அதை நிறைவேற்றியும் விட்டான். அதுமட்டும் அல்ல. சேட்டு வீட்டுக்கு அவன்தான் இப்போது அரிசி சப்ளை செய்கிறான்.

கல்லாவில் அமர்ந்தபடி பழைய எண்ணங்களில் முருகன் மூழ்கியிருந்தபோது, தொப்பையைத் தூக்கிக்கொண்டு சேட்டு அவன் கடைக்குள் நுழைந்தார். வழக்கமாய் வேலைசெய்யும் பையனிடம் அரிசிக்குப் பணம் கொடுத்து அனுப்புபவர் இப்போது அவரே வந்திருந்தார்.

"என்னப்பா முருகா வழக்கமா ஒரு மூட்டை அரிசிக்கு சீட்டு அனுப்புவ. இப்ப ரெண்டு மூட்டைன்னு எழுதியிருக்க?"

"போன வாரம் உங்க வீட்ல அஞ்சி கிலோ அரிசி கேட்டிருந்தாங்க அனுப்பிவிட்டேன். அஞ்சி நாள் அதிகமாச்சுனா ஒரு மாசத்து வட்டி கேட்பீங்க இல்ல? அதேபோல அஞ்சி கிலோவுக்கு ஒரு மூட்டைன்னு எழுதினேன்"

"முருகா... அது எங்க தொழில் தர்மம். நீ அரிசி எடைக்கு ஏத்த காசு வாங்கிக்க.."

"ஹ ஹ ஹ.. இதச் சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தேன் சேட்டு. வெளையாட்டுக்குத்தான் அப்படி எழுதினேன். ஒரு மூட்டைக்கு காசு கொடுங்க! "

"அப்போ அந்த அஞ்சி கிலோ?"

"சேட்டு, நான் வியாபாரம் பண்ணாலும் விவசாயிதான். இதான் எங்க தர்மம். அஞ்சி கிலோவ தள்ளி விடுங்க"

Friday, January 8, 2016

பசுவும் மனிதனும்

கன்று மறந்து கறந்தோர்க்கு பால்தரும்
தின்று செரிக்காத புல்லை அசைபோடும்
துஞ்சிடும் போதிலும் கொம்பின் சுமையோடு
நெஞ்சில் பசுந்தாள் நினைப்பு





விளக்கம்:
1 கடமை மறந்து அடங்கி உழைக்கும்
2 அற்ப நினைவுகளை(புல்லை) அசைபோடும்
3 உறங்கும்போதும் உறவின்(கொம்பு) சுமை
4 உறங்கும்போதும் பசுந்தாள்(புல்/பணத்தாள்) நினைப்பு