Sunday, August 30, 2009

பிள்ளையார் பாட்டு

ஆதியந்தம் ஏதுமில்லா அரும்பெரும

ஆனைமுகா நின்துதியே காப்பெனக்கு

தீதிதென்று ஓதொருவர் கேட்டிடின்

தீயரென்று தானவரைத் தள்ளாமல்

நீதிஎனில் நெஞ்சமிது திருந்த

நீயுமருள் நேர்மாறாய் ஆங்கதனில்

சூதிருந்தால் அதைமறந்து மன்னிக்கும்

சீர்பொறையும் சேர்ப்பாய் இங்குநாளைஎன்றே நாளும் கூறியிங்கு

நாட்கடத்தி நலிந்து நம்போதா

வேளையென்றே வீணிற் புலம்பாமல்

வேழமுகா காலம்கருதக் கற்பி

ஆளையழி அவநம்பிக்கை அழித்து

ஆகுமிது நம்மால் என்றிக்

காளை மனதில்திட நம்பிக்கைக்

கூட்டியருள் தும்பிக்கைக் கணேசாசிற்றெறும்பிற்கற்பித்தாய் நெறிகள்பல

சீரியவாய் - உறைவிடத் திருந்தே

நற்பலன் நல்குமிடம் நனிதாய்

நுகர்ந் தறிந்து ஆங்கடையக்

கற்றோர்தம் வழிபற்றி வரிசையில்

கட்டுப்பட்டுக் கடிது ஊர்ந்து

மற்றோர் தடைவரின் மாற்றறிந்து

மடைகடந்து தூக்கிச் சுமக்கும்எடையளந்து வழிமீண்டு சேர்த்த

எவற்றிற்கும் சேதாரம் இல்லாது

அடைகாக்கும் இடமறிந்து சேமித்து

அழகாய்ப் பாடுபட்டு ஆங்கொருநாள்

அடைமழை பெய்யுங்கால் ஆனந்தமாய்

அல்லலின்றி வாழ்கின்ற இவைபோல்

எடையாயிரம் எமக்குப் படைத்திட்டாய்

எலிவாகனா திறன்நூறேனும் கொடு
எழு

மனித சமுத்திரமே
உன் அலைகள்
எழுந்து எழுந்து நின்றாலும்
விழுந்து விழுந்து போகின்றனவே
ஏன்?

கதிரவனின் ஒளிக்கரங்களில்
எத்தனை எத்தனை கயிறுகள் பார்.
பற்றி எழு.

மேகமாய் அமோகமாய் உயர்ந்து
உலகம் உய்ய மழையாய்ப் பொழி

ஆரவார அலைகளை நிறுத்தி
அமைதியாய்
எழு.

சிலேடை : சுண்ணத்தண்டு - புகைக்கோல்

வெள்ளை நிறத்துடன் கைவிரலாய் நீண்டிருக்கும்

பற்றி இழுக்க உடல்தேய்ந்து வண்ணமிடும்

உட்கொள்வார் தேகநலம் கேடுறவே செய்துவிடும்

சுண்ணத்தண்டும் புகைக் கோலாம்

உயிர் நண்பன்

நான் காற்று.

மற்றவர்கள்
என் ஆக்ஸிஜனை
மட்டும் விரும்பும் போது

நீ மட்டும் என்னை முழுதாய் .....

மூளை

எண்ணற்ற மின்னணுச் சுற்றுக்களைத்

தன்னகத்தடக்கிய கணிப்பொறி;


எனது அவயங்களை

ஆணையிடும் அதிகாரி;


கால வெள்ளத்திலும்

நினைவு மரத்தை

நிற்கச் செய்யும்

நீண்ட ஆணிவேர்;


உற்ற நேரத்தில் உதவிடும் உயிர்த்தோழன்;

உண்மையின் உறைவிடம்;

பொய்மையின் பிறப்பிடம்;

எண்ணற்ற தாஜ்மகால்களைக்

கற்பனையில் கட்டும் ஷாஜகான்;


எல்லாவற்றிற்கும் மேலாய்

எல்லோரும் என்னை

முட்டாள் எனக் கூறுவதின்

மூலகாரணி!


Thursday, August 27, 2009

மன(ண)மாறுமோ

- "என்னடி உங்கள் மன்னன்?
இரக்கம் என்பதை அறிவனா அவன்?"
பொய்யாய் வினவுவேன் பாங்கியரிடம்.

"ஏதடி உரைத்திட்டாய்? எங்கள் வேந்தனைப்போல் வள்ளல்
வேறெங்கும் கண்டதுண்டோ?
அவன்போல் வீரன் உண்டோ?
விவேகம் தான் வேற்றிடம் உண்டோ?"
என்று பலவாய் அவர் போற்றிட மிக மகிழ்வேன்.
மகிழ்ச்சியை வெளியில் துளியும் காட்டேன்

கனவில் மன்னன் அவன். மகா ராணி நான்!

-வெகுதூரத்தில் அவன் வரும்பொழுதே
விரைந்தோடி உரைசெய்ய மனம் விரும்பும்.

சற்று அருகில் நெருங்கிவிட்டால்

என் கால்கள் விலகிடும் வேறுதிசையில்.

விலகினால் ஈர்த்து நெருங்கினால்

விலக்கும் இஃதென்ன விந்தைக் காந்தமோ !


ஓரிரு வார்த்தைகள் தான் பேசிடுவேன்


அதில் உளறலே மிகுந்திருக்கும்.- காய்ச்சலில் நான் படுத்தாலும்

கனவில் காதலன் வந்து தேற்றிடுவான்

தோளில் சாய்த்திடுவான்.

இந்தக் காய்ச்சலின் சுகம் கண்டவர்க்கே புரியும்.

மாறாய் என் மன்னனுக்கு

சிறு விக்கலென்றாலும் மனம் விம்மி விம்மி வெடிக்கும்- சிறு குழந்தை ஒரு முத்தம் தந்தாலும்

அந்தக் கள்வன் கொடுப்பதாய் நாணம் வரும்- என் விழிப்பில் அவன் நினைவு

உறக்கத்தில் அவன் கனவு- இக்கனவு நனவாகுமோ ?

நனவானால் என் நினைப்பினைப்போல் இனிக்குமோ?

வெறும் சோற்றினைப்போல் சப்பென்றிருக்குமோ ?- நனவாகாமல் போனால் எனக்கு

மணமாகாமலே போகுமோ? இல்லை... என்

மன(ண)மாறிப்போகுமோ?

எனைக் கவர்ந்தது

அன்பே உனக்கு -

மதி முகம்,

மீன் விழிகள்,

அன்ன நடை ,

மின்னல் இடை ,

சிற்ப்ப்ப்ப மேனி ........

ஆயினும் கண்ணே

என்னைக் கவர்ந்ததென்னவோ

உன்

எலிவால் கூந்தல் தான் !