Thursday, August 30, 2018

உனக்கென்று ஒரு மழைச்செய்தி


பறவைகளைப் போல் உதறிவிடமுடியாமல்
மழையில் ஊறிக்கிடக்கிறது மனது..
கண்ணாடி மூடிய பேருந்தில்
எனக்கு என் ஆடைகளும்
என் ஆடைகளுக்கு நானும்
கதகதப்பு அளித்துக்கொண்டு செல்கிறோம்..
குளித்து மகிழும் கொழுந்துகளுக்கு வேண்டுமென
மேலும் கொஞ்சம் நீருறிஞ்சிக் கொள்கின்றன செடிகள்-
பாலூட்டும் அன்னை ஒரு கவளம்
அதிகம் உண்பது போல்.

வர்ணனைக்கே வார்த்தையெல்லாம்
வழி நெடுகே தீர்ந்துவிட
உனக்கென்று ஒரு மழைச்செய்தி
மறைத்தனுப்பத் தேடுகிறேன்
காலைவணக்க வாழ்த்துமடல்களை.

Thursday, April 19, 2018

குறுங்கவிதை - கிழிசல்

அங்கங்கே கிழித்த ஜீன்ஸ்
போட்டவனுக்கு இருப்பதில்லை
கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்

Wednesday, April 18, 2018

குறுங்கவிதை - மரணதண்டனை


சாலை மறியல் செய்ததால்
மரண தண்டனை கிடைத்தது-
ஆலமரத்திற்கும் அதில் வாழ்ந்த
ஆயிரம் கிளிகளுக்கும்

Sunday, January 14, 2018

சர்க்கரைப் பொங்கல்

பொங்கலுக்கு விடுப்பு இல்லாததால் ஒரு நாள் பயணமாக அப்பா அம்மாவைப் பார்த்துவிட்டு வர அதிகாலையில் ஊருக்குக் கிளம்பினோம்.

வழியில், 108 திவ்விய தேசங்களில் ஒன்றான திருப்புட்குழியில் விஜயராகவப் பெருமானை தரிசிக்கலாம் என்று வண்டியை நிறுத்தினோம். வண்டிக்கு டோக்கன் போட்ட பெரியவரிடம் பக்கத்தில் ஏதாவது தேநீர்க்கடை உள்ளதா என்று கேட்டோம். இல்லை என்றதால் டோக்கன் போட்டுவிட்டு கோயிலுக்குச் சென்றோம். கோயிலில் பராமரிப்புப் பணி நடப்பதால் மூலவர் சன்னதி மூடப்பட்டிருந்தது. உற்சவரை தரிசித்துவிட்டு வரும்போதுதான் தாயார் சன்னதி திறந்திருப்பதைக் கண்டோம். தாயாரிடம் பெருமாளின் விண்ணப்பத்தைச் சேர்த்துவிட்டுப் புறப்பட்டோம்.

வண்டியை எடுக்கும்போது டோக்கன் போட்ட பெரியவர் ஓடி வந்தார். ஐயா முன்னாடியே பணம் கொடுத்திட்டேனே என்பதற்குள் "இந்தாங்க பிரசாதம். பார்த்து வண்டி ஓட்டுங்கள்" என்று ஒரு பையைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.

கிட்டத்தட்ட இரண்டு அல்லது மூன்று தொன்னைகளில் நிரம்பும் அளவிற்கு சூடான சர்க்கரைப் பொங்கல் அதில் இருந்தது. கோயில் பணியாளர் என்பதால் அவர் பங்காகப் பெற்ற காலைப் பிரசாதம்தான் அது என்று எண்ணுகிறேன். டீக்கடை இல்லை என்று சொல்லிவிட்டோமே இதையாவது சாப்பிடட்டும் என்ற மனித நேயத்தால் தன் பங்கைக் கொடுத்தாரோ என்று நெகிழ்ந்தோம்.

மனித நேயம் தவிர்த்து ஆன்மிக நோக்கில் இதைப் பார்த்தால் பசியோடு வந்து தம்மைத் தரிசித்த பிள்ளைகளுக்குத் தாயாரின் கருணையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. இல்லை தனது சன்னதி மூடியிருந்ததால் தரிசனம் கிடைக்காமல் வருந்தியிருப்போமோ என்று விஜயராகவப் பெருமாள் தான் ஆறுதல் செய்தாரோ? இல்லை நேற்று மார்கழி முடிகிறதே என்று அவசரமாய் திருப்பாவை முப்பது பாக்களையும் படித்ததற்கு ஆண்டாளின் பரிசுதானோ?

எப்படியோ, நெய் சொட்டச் சொட்டச் சூடான சர்க்கரைப் பொங்கல் அதிகாலை முதல் அன்னமாக இந்த பொங்கல் நன்னாளில் எங்களுக்கு வாய்த்ததில் மனம் நிறைந்தது.

அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

Thursday, January 11, 2018

முந்திவிரித்த பாடல்


முந்தி விரித்த செம்பட்டுக் கம்பளத்தில்
சேற்றுக் கறை பூசி நீ செருக்காகப் போனாயோ?

முந்தி விரித்த நம் முன்னோரின் வாய்ச்சொற்கள்
சிந்தி விழும் உன் செவியில் சேர்க்காமல் போனாயோ?

முந்தி விரித்த கொடும் கருநாகப் படம்போல
சீறி விழும் வார்த்தைகளில் விஷம் கக்கிப் போனாயோ?

முந்தி விரித்த துண்டில் வந்து விழும் காசெல்லாம்
சிதறாமல் சேகரித்து சீட்டியடித்துப் போனாயோ?

முந்தி விரிந்த சபை சேர்ந்திருந்த சான்றோரை
மந்திகள் என்று நீ மதி மயங்கிப் போனாயோ?

முந்தி விரிந்த உன் வான விதானம்விட்டு
மஞ்சள் போர்வையின் கீழ் வாடகைக்குப் போனாயோ?

அடிக்கரும்பு

மங்கி கேப்பை மாட்டிக்கிட்டு
மங்கலிலே கோலமிட்டு
பொங்கி வச்ச பொங்கலைப் போல்
பல்லைக் காட்டி இளிக்குறேனே
மச்சான்,
கல்லுளி மங்கனைப் போல்
கண்டுக்காம நிக்குறியே..

அடியே,
உறங்கி நான் நிக்கவில்லை
கெறங்கிப் போய் கவுந்துப் புட்டேன்....
அரும்புபோல பல்ல வச்சி
இரும்புபோல கரும்புக் கழி
எப்படி நீ கடிப்பேன்னு
ரோசனை நான் செய்யுறேன்டி

அடிக்கரும்பு வேரெல்லாம்
ஆசை மச்சான் மீசையின்னு
கடி கடின்னு கடிச்சிடுவேன்
கலங்காதே ராசாவே

சால்சாப்பு சொல்லாதே
சட்டுபுட்டுனு உரிச்சுத் தாரேன்
சாறெல்லாம் உறிஞ்சிப்புட்டு
சக்கரையா சுத்தி வாடி