Monday, November 12, 2012

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

எஞ்சியிருந்த எம் மரத்துக் காகங்கள்
அஞ்சியிருந்து எம்மரத்தில் உறங்கியனவோ...
வாலாட்டும் தெரு நாய்கள்
காலிடுக்கில் வாலொடுக்கி
எங்கோடி ஒளிந்தனவோ...
பட்டாசுகள் வெடித்து
மனிதர் நாம் மகிழ்கையில்..

வெளிப்புகை ஒவ்வாமல்
வீட்டில் அடங்கிய கொசுக்களுடன்
தீபாவளி கொண்டாடி மகிழ்வோமாக.

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Tuesday, October 30, 2012

மழைத்துளி

மழைத்துளி...
வீழத்திய மலர் இதழ்
படகாய் மிதந்திட
படகுச் சவாரி செய்யும்
மழைத்துளி...

__________________________________

ஒவ்வொரு அலைவட்டத்தின்
மையப்புள்ளியிலும்
குறி தவறாமல் விழும்
மழைத்துளி...


Saturday, September 15, 2012

இயற்கையின் வெற்றி


நிகழ்ச்சியின் பெயர் திருமண வரவேற்பு.
நிகழ்ந்தது என்னவோ பெண்களின் அழகுப் போட்டி.
கணவர்களின் பொருளீட்டும் திறனைப்
பறைசாற்றும் நவநாகரிக நகைகள் ஒருபுறம்.
பிறந்தவீட்டின் பெருமையைப் போற்றும்
பாரம்பரிய நகைகள் ஒருபுறம்.
பரஸ்பர விசாரிப்புப் பேட்டிகளில்
ஒளிந்திருந்தன போட்டிகள்.
பட்டுப் புடவைகளில் நடந்தது - பார்டர் போர்.
ஜாக்கெட்டுகளிலும் ஜன்னல் போர்.
செயற்கைப் போர்களின் இறுதியில்
வென்றது என்னவோ இயற்கையே-
பெண்களின் கூந்தலில் சீருடையாய் மல்லிகை.

Tuesday, September 4, 2012

எலி உசுரு

எங்கள் ப்ளாக்-ல் கீழ்க்கண்ட பதிவில் வரும் குறும்படத்திற்கு நான் எழுதிய பாடல் வரிகள் இவை. பத்து நிமிடம் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பிறகு பாடலைப் படிக்கவும்
http://engalblog.blogspot.in/2012/06/blog-post_11.html
சந்தம்:
தன்னன்னான தானனன்னா
தானனன்னா தானனன்னா
தன்னன்னான தானனன்னா
தனனனான தானனன்னா

(வெயிலில் கால் மாற்றி நிற்கும் போது)
ஒத்தக்காலு கொக்கைப்போல
வெத்துக் காலில் காத்திருக்கேன்
பத்து ஊரு போறவரே
பசியும் ஆற வாருமையா

(இளைஞர்கள் போட்ட பாட்டிலிலிருந்து தண்ணீர் கீழே கொட்டும்போது)
என்னப்போல தள்ளாடித்தான்
தண்ணியெல்லாம் சிந்திப் போச்சோ
ரெண்டு சொட்டு நான் குடிக்க
தண்ணிக்குந்தான் தாகம் போச்சோ?

(உணவுப் பொட்டலம் எடுத்துகொண்டு வீட்டுக்கு நடந்து போகும்போது)
காத்துலயும் உசுர வச்சான்
சோத்துலயும் உசுர வச்சான்
கால்நடையா போகும் என்னை
மனுசனாக படைச்ச சாமி

(பூனைக்கு சாதம் வைக்கும் போது)
புருஷன் வெச்ச சோத்தினிலே
பூனைக்குந்தான் பங்கு வெச்சா
எங்க உசுரு பொழச்சதுபோல்
எலி உசுரும் பொழச்சதையா

Thursday, August 9, 2012

வள்ளல்

தடம் படர்ந்த முல்லைக்குப்
பரி நீக்கித் தேர் தந்த பாரி;
பனி படர்ந்த மயிலுக்கு
ஜரி வைத்த போர்வை தந்த பேகன்;
மாயவனின் மர்மம் அறிந்தும்
தர்ம பலன் தர்மம் செய்த கர்ணன்;
ஆடவரில் வள்ளல்கள் இவர்போல் பலருண்டு.

பார்வையில் உறவு தந்து,
ஸ்பரிசத்தில் உரிமை தந்து,
உள் வளரும் குழந்தைக்கு
உடலோடு உயிரும் தந்து,
மார் கசியப் பால் ஊட்டி,
வெறும் காம்பில் அன்பூட்டும்
பெண்களில்
வள்ளல் என்று தனியாய் யாருமில்லை.

Saturday, June 9, 2012

ஒரு பையின் பயணக் குறிப்பு

முதலில் யுவான் சுவாங் என்று இந்தப் பதிவிற்குப் பெயர் வைத்திருந்தேன். 
சரி. இங்கிருக்கிற விசாகப் பட்டினம் சென்று வந்ததற்கு இந்த பில்ட் அப் 
எதற்கு என்று பெயரை மாற்றிவிட்டேன். 
இருவழி ரயில் பயணங்களையும் சேர்த்து மொத்தம் ஐந்து நாள் பயணம். மூன்று நாட்கள் சுற்றிப் பார்க்க. முதல் நாள் விசாகப்பட்டினத்தைச் சுற்றிப் பார்த்தோம். முதலில் சிம்மாசலம் கோயில் சென்றோம். வழக்கமாக சந்தனக் காப்பிட்டு முகம் மூடிய நிலையில் இருக்கும் பெருமாளை சிலநேரங்களில் தான் முழுதாய்ப் பார்க்கமுடியும். எங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.
அடுத்ததாக பாலச்சந்தர் படங்களில் வரும் அழகிய கடற்கரையில் கால் நனைத்ததில் மகிழ்ச்சி. சிறு பாறைகள் கடற்கரைக்கு அழகூட்டுகின்றன.
ramkrishna-beach-vizag
 கடற்கரையில் விளையாடி மகிழ்ந்த நண்டுக் கால்களையும் வாழைத்தண்டுக் கால்களையும் கண்டு மகிழ்ந்தோம் - வழக்கப்படி. டால்பின் மூக்கு வடிவ மலைமேல் கலங்கரை விளக்கம் நாங்கள் சென்றபோது மூடியிருந்தது. அருகிலேயே  தர்க்கா ஒன்று உள்ளது. தர்க்காவில் 11 சுற்று சுற்றி அல்லாவை வேண்டிக்கொண்டு அங்குள்ள அழகிய ஆலமரத்தடியில் இளைப்பாறினோம்.
கைலாஷ் கிரி பூங்கா அழகாக உள்ளது. பெரிய சிவன் பார்வதி சிலையைச் சுற்றி குட்டி ரயில் பயணம். மலையின் கீழிருந்து மேலே வர கேபிள் கார் வசதியும் உள்ளது. நாமும் சென்னையில் பரங்கிமலையை இப்படி ஒரு சுற்றுலாத் தலமாக ஏன் மாற்றக் கூடாது என்ற எண்ணம் தோன்றியது.
மறுநாள் அரக்கு/அருக்கு பள்ளத்தாக்கு பயணம். விசாகப்பட்டினத்திலிருந்து 120 கி. மீ. தொலைவில். மலைப்பயணம் மிகவும் ரம்மியமாக இருந்தது. பழங்குடிகள் அருங்காட்சியகம் கண்டோம். பழங்குடிப் பெண்களின் நடன நிகழ்ச்சியும் கண்டு மகிழ்ந்தோம். இந்தப் பயணத்தில் சிறப்பான விஷயம் போரா(Borra Caves) குகைகள் தான். பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாள் தோன்றிய இக்குகைகளுக்குள் படிக்கட்டுகள் அமைத்து விளக்குகள் அமைத்து பார்த்து வியப்புற அற்புதமாக வழி செய்துள்ளனர். விசாகப்பட்டினம் செல்பவர்கள் ஒரு நாள் ஒதுக்கி இக்குகைகளைக் கட்டாயம் பார்த்து விடவும்.
ஆன்மிகப் பயணத்தைக் கூட சிலர் உல்லாசப் பயணமாக மாற்றிவிடும் கதைகளை நீங்கள் அறிவீர்கள். நாங்களோ உல்லாசப் பயணத்தையும் ஆன்மிகப் பயணமாக மாற்றிவிட்டோம். முதல் நாள் சிம்மாசலம், கைலாஷ் கிரி மற்றும் தர்க்கா. இரண்டாம் நாள் போரா குகையிலும் இறை வழிபாடு. மூன்றாம் நாள் முழுக்க முழுக்க ஆன்மிகம் தான். விசாகப்பட்டினத்திலிருந்து 120? கி. மீ தொலைவில் உள்ளது ஸ்ரீகாகுளம். இதை மையமாய் வைத்து அமைந்துள்ள கோயில் தலங்களை தரிசித்தோம். முதலில் ஸ்ரீகாகுளம் சிவன் கோயில். அழகிய பெரிய நந்தியை உடையது. பலராமர் சிவ பூசை புரிய நீர் வேண்டி தனது ஏர் கொண்டு கீற உருவான நாகவலி நதிக்கரையில் அமைந்துள்ளது. அடுத்தது சூரிய நாராயணா  கோயில். கோனார்க் சூரியன் கோயில் போல் வடிவமைக்கப் பட்டுள்ளது இக்கோயில். மேலும் விவரங்கள் அறிய http://www.arasavallisungod.org/ பார்க்கவும். அடுத்தது ஸ்ரீ கூர்மம். கூர்ம வடிவில் மூலவர் அமைந்திருக்கும் கோயில் உலகிலேயே இது ஒன்று தான் என்று கூறினார்கள். ராமானுஜர் தரிசித்த தலம். புராதனக் கோயில்கள் தரிசிக்கும் போது ஏற்படும் பரிபூரண உணர்வு இவ்வாலய தரிசனத்திலும் கிட்டுகிறது. அடுத்தது ஸ்ரீமுகலிங்கம் கோயில். ஒரிய கட்டிட அமைப்பில் அமைந்துள்ள இக்கோயிலில் சிவலிங்கம் முக வடிவில் அமைந்துள்ளதே இதன் பெயர்க்காரணம்.


வெற்றிகரமாக சுற்றுப்பயணம் முடித்து சென்னை திரும்பினோம். வேறு எதுவும் சுவாரசியம் இல்லையா இப்பயணத்தில் என்று கேட்கலாம். பல உண்டு. உதாரணத்துக்கு ஒன்று. திரும்பிவர டாட்டா அல்லிபி எக்ஸ்பிரஸ் ரயிலில் பதிவு செய்திருந்தோம். எங்கள் டிக்கட்டில் இருந்த ரயில் எண் வேறு. நாங்கள் ஏறிய ரயில் எண் வேறு. ரயில் எண் தான் தகராறு என்றால் பெட்டி எண்ணிலும் குழப்பம். S2 பெட்டியில் தேடினால் எங்கள் பெயர்களைக் காணவில்லை. டிக்கட்டில் உற்று நோக்க பெட்டி எண் ST2 என்று இருந்தது. ரயில் கிளம்ப மூன்று நிமிடங்களே இருந்தது. அலறி அடித்து ரயிலின் மறு கோடியில் இருந்த பெட்டிக்கு ஓடி ஏறுவதற்குள் உயிர் போய்  உயிர் வந்தது. இக்குழப்பங்களுக்கு காரணம் எழுத தனி பதிவு வேண்டும். அல்லது விவரமறிந்த நண்பர்கள் பின்னூட்டத்தில் எழுதட்டும். S2-ல்  இருந்து ST2 க்கு ஓடும்போது ஒரு பொறுப்பான குடும்பத்தலைவன் என்ற வகையில் இருப்பதிலேயே பெரிய மற்றும் கனமான பையான எனது மாமியாரின் பையைத் தூக்கி ஓடிவந்தேன். பெட்டியில் ஏறியதும் என் மாமியார் சொன்னார்கள் - இந்தப் பையில் wheels இருக்கிறதே,.. இழுத்து வந்திருக்கலாம் என்று!

Monday, April 30, 2012

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்எட்டாத உயரத்தில்
   எட்டான கால் கொண்டு
       பட்டான நூல் கொண்டு
           கட்டிய வலை வீட்டில் விழும்
              விட்டில் உண்டு மகிழும்
                 எட்டுக்கால் பூச்சி நான்
கட்டாந் தரையிலும் 
   நெட்டான சுவரிலும்
       கட்டாக நடந்து 
           கிட்டாமல் கிட்டியதை  
               கட்டாகக் கட்டி 
                  பொட்டாகச் சுமந்து
                      பெட்டியில் வைத்துண்ணும்
                         குட்டிக்கால் எறும்பு நான்
தட்டான கணினியை
   பட் பட் பட்டென்று
      தட்டித் தட்டித் தட்டி
         நெட்டெல்லாம் தேடி  
            நைட்டெல்லாம் கண் விழித்து
                கட்டுக் கட்டாய்  
                   நோட்டு எண்ணி
                       தட்டுத் தட்டாய்த் தின்று
செரிமானம் இல்லையென்றோ
    சரி மனம் இல்லையென்றோ
        மருத்துவரை நாடாமல்
           உண்ண உழைக்காமல் எம்போல்
              உழைத்து உண்க வென்று
                 உழைப்பாளர் தினத்தன்று 
                    வாழ்த்துரை கூறுகின்றோம்.
                         வாழ்க வளமுடன்.
                              


   
     

Wednesday, April 25, 2012

கோடை மழை - அரசு அதிகாரி

முரசாய் இடித்து மின்னலாய் வெட்டி
பரபரத் தாலும் துளிநனை யாமல்
வரவேற்பு நாடியே வேனில் வருவர்
அரசதி காரி மழை

Friday, April 20, 2012

பாதை

உப்பு மடச் சந்தியில் ( http://santhyilnaam.blogspot.com/2012/04/blog-post.html  )
ஹேமா அவர்கள் கீழ்க்கண்ட படத்தை வெளியிட்டு நமக்குத் தோன்றும்
எண்ணங்களை கவிதையாக எழுதச் சொன்னார்கள்.


அதற்கு அங்கு எழுதிய கவிதையை  இங்கும் வெளியிடுகிறேன்-
படத்திற்கும் எழுதத் தூண்டியதற்கும் ஹேமாவுக்கு நன்றிகள்.
______________________________________________________

வருவோர் போவோரை வேடிக்கைப் பார்க்க
நின்றுவிட்ட மரங்கள்..

யார்வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது கல்?

இப்படிப்பார்த்தால் பிரிகின்ற (உ)பாதை
அப்படிப்பார்த்தால் சேர்கின்ற பாதை
எப்படிப்பார்த்தாலும் இரு தூரப்புள்ளிககளை
எப்போதுமே இணைத்திருக்கும் பாதை.

Monday, April 16, 2012

பாடிப் பறக்கும் பறவைகள்

பகல் நேரத் தாரகைகளே;
மரங்களிலிருந்து வானில் தூவிய
மகரந்தம் பூசி மலர்ந்த மலர்களே;
இன்னிசையின் சிகரங்களே
இல்லை இல்லை...
இசையின் அகரங்களே

உம்மிடம் கற்றோம் - பாடிப் பறக்க.
மேலும் கற்றோம் மேலும் பலப் பல.

உம்போல்-
ஓருடையாக சீருடை அணிந்தோம்.
வண்ணக் கொண்டைகள், தொப்பிகள் அணிந்தோம்.
கூடிப் பறந்தோம் பிரிந்தும் பறந்தோம்
தேடிப் பகிர்ந்தோம்

காகத்தின் கூட்டில் வளரும் குயில் போல்
பாட்டி வீட்டில் பிள்ளை வளர்த்தோம்

மண்ணாசை மறந்து - தன்னினம் காக்க
ஆயிரம் மைல்கள் ஆண்டாண்டு பறக்கும்
உம்போல் எமக்கும்
யாதும் ஊரே யாவரும் கேளிர்

அலகுகள் ஒடிந்து சிறகுகள் ஓயும்வரை
உம்போல் யாமும்
பாடிப் பறப்போம்

Saturday, April 7, 2012

மனிதனும் பாம்பும் - சிலேடை

பண்ணிசை நாடும் படமெடுத்து ஆடிடும்
கொண்டவுடை மாற்றும் - புறமுதுகு பாராது
எண்ணிய தன்இணை இன்முகம் பார்த்துடல்
பின்னும் அரவாம் நரன்

Wednesday, March 28, 2012

நான் அறியாத நாள்

செல்லமே....

என் நினைவுச் சுவர் முழுதும்
ஆணிகளால் அறைந்து
உன் முதல் நிகழ்வுகள் அனைத்தையும்
மாட்டி வைத்திருக்கிறேன்.

உனது முதல் ஸ்பரிசம் கிடைத்தது-
என் உள் வயிற்றில் நீ உதைத்த நாள்.
முதன்முதலில் வாய் திறந்து
அம்மா என்றழைக்காமல் நீ
"அ.....ப்ப்பப்ப்ப்பா" என்றழைத்த
அந்த நாளை மறப்பேனா?

நீ கவிழ்ந்த நாள், தவழ்ந்த நாள்
தப்படிகள் வைத்துப் பத்தடி நடந்த நாள்
அத்தனை நாட்களும் என் விரல் நுனிகளில்-
விரல் நுனியில் ஒட்டிய தேங்காய்த் துருவலாய்
உனக்குப் பல் முளைத்த நாள் உட்பட.

சொல்ல வெட்கம்தான்......
சிறுகுழந்தை என்பதால் சொல்கிறேன்.
உன்னைச் சூல் கொண்ட அந்த அடைமழை நாளும்
அழியாமல் என் நினைவில்.

நான் அறியாத நாளென்றால், அது
உனக்கு வால் முளைத்த நாள்.

Saturday, March 24, 2012

பதவி

பதவி வரும்போது-
பணிவு வரவேண்டும்; துணிவு வரவேண்டும்.
நிறுத்தடா....
பதவி வரும்போது உதவி வரவேண்டும்.

வந்த வேலையை விட்டு சொந்த வேலையா?
பணத்தைப் பொட்டில்* வைத்துப்
பல்லக்கில் ஏறாதே...
பிணமே.

வணக்கமா? உனக்கா?
அடப்போடா...
எருதில் ஏறியவனெல்லாம் சிவனில்லை
எருமை ஏறியவன் எமனுமில்லை.
________________________________________________

* - பொட்டில்/நினைவில்/குறிக்கோள்

Friday, March 23, 2012

அத்தான்

வெட்டிங் டே கொண்டாடும் அழகு அத்தான்
வெட்டிங் டிரஸ் போடும் வழக்கம் வைத்தான்
         இழுக்கும் கை பலம் தான் குறைந்து போச்சோ
         இஸ்த்திரி போட்டதனால் நகர்ந்து போச்சோ
எட்டவில்லையே கோட்டு பொத்தான்.

கர்ணன் - படம் பார்த்த அனுபவம்

கர்ணன் கதை தெரியாதவர்கள் யாருமில்லை என்பதால் நானொன்றும் பெரிய விளக்கமோ விமர்சனமோ சொல்லப்போவதில்லை. இது அனுபவப் பகிர்தல் மட்டுமே.
முகம் தெரியாத காவிய நாயகர்கள் பலருக்கு முகம் கொடுத்தவர் சிவாஜி. கர்ணனும் அவர்களில் ஒருவன். பாரதத்தில் கர்ணனின் பாத்திரம் எத்தனை உணர்வுகளின் சங்கமமோ -  கொடை, நட்பு, நன்றி, வீரம், கர்வம், பாசம், ஏக்கம், அவமானம், பெருந்தன்மை - அத்தனையும் அருமையாய் வெளிப்படுத்துகிறார் நடிகர் திலகம்.

வள வளக்காமல் பள பளக்கின்றன சக்தி கிருஷ்ணசாமி அவர்களின் வசனங்கள்.

மெல்லிசை மன்னர்களின் இசையில் இனிய பாடல்கள். பாடல்களைப் பொதுவாக இடைவேளைகளாகக் கருதும் இக்கால ரசிகர்களையும் இருக்கையிலேயே அமர வைத்திருந்ததைக் கவனித்தேன்.

சிவாஜியின் அபரிமிதமான நடிப்புடன் போட்டி போடுகிறது ராமாராவ் அவர்களின் மிதமான நடிப்பு. அவரின் ஒவ்வொரு காட்சியிலும் இழைந்தோடும் நகைச்சுவை அருமையிலும் அருமை.

டிஜிடல் தொழில் நுட்பத்தில் மேருகேற்றியிருப்பதாய்ச் சொல்கிறார்கள். ஆனாலும் நான் அதிகமாய் எதிர்பார்த்துவிட்டேன் போலும். தேய்ந்த காட்சிகள் பலவற்றை ஓரளவுக்குமேல் சரிசெய்ய முடியவில்லை என்று தெரிகிறது.


வார நாட்களிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாய் ஓடுவது நம் மக்களின் திரை ஆர்வத்தைப் பறை சாற்றுகிறது.

அடுத்ததாக திருவிளையாடல் படத்தை வெளியிடுவார்களா பார்ப்போம்.

Bottomline: அனைவரும் அவசியம் பார்த்துவிடவும்.

படம் பார்க்கும் போது ஏதோ ஒரு நீளவசனம் முடிந்து சின்ன மௌனம் அமைந்தது.. அப்போது திரையரங்கில் ஒரு பையன் அவன் அப்பாவிடம் கேட்டது எல்லோருக்குமே கேட்டது... "ஏம்பா படத்துல எல்லோரும் தமிழிலேயே பேசுறாங்க?" இதற்கும் கரகோஷமிட்டனர் நம் மக்கள்!
 

Monday, March 19, 2012

நாலணா

பேரனுடன் அமர்ந்து
வீடியோ கேமில் எதிரிகளைச்
சரமாரியாக சுட்டுத் தள்ளிக்கொண்டிருந்தார்-


உடல் தேர்வுக்குமுன்
வாழைப்பழம் சாப்பிடவைத்திருந்த
நாலணாவைச் சேமித்ததால்
எடை குறைவென்று ராணுவத்தில்
தேர்வுபெறாத தாத்தா

Saturday, March 17, 2012

சிறைச்சாலை

சமீபத்தில் தொலைக்காட்சியில் அந்தமான் சிறைச்சாலை பற்றிய நிகழ்ச்சி ஒன்று பார்த்தேன். (நிழல்கள் ரவி நடத்தும் நம்பினால் நம்புங்கள் நிகழ்ச்சி)இந்திய விடுதலைக்காக எத்தனை பேர் எவ்வளவு கொடுமைகளை அனுபவித்துள்ளனர் என்பதை அறியும் போது மிகவும் வேதனையாக இருந்தது. 
அதைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள விக்கிபீடியாவைப் புரட்டிக்கொண்டிருந்தபோது என் மனைவி சமையலறையிலிருந்து  "அப்பா என்ன செய்கிறார் பார்" என்று மகனிடம் கேட்டார்.


ஹாலிலிருந்து ஓடிவந்த மகன் computer screen-ல் மேற்கண்ட படத்தைப் பார்த்துவிட்டு, "அம்மா - நம்ம புதுசா அபார்ட்மென்ட் தேடிக்கிட்டிருக்கோமே - அதான் அப்பா ஏதோ லே அவுட் பார்த்துக்கிட்டிருக்கார்" என்றான்.

Thursday, March 15, 2012

REMIX: முன்பே வா என் அன்பே வா

situation: திருமணத்துக்கு முன்பாகவே விசா எடுக்கவேண்டிய காரணத்தால் - பதிவுத்திருமணம் செய்துகொள்ளவிருக்கும் ஆண் பெண் பாடுவது. விரிவான பின்னணியை என் முந்தைய பதிவான "மண(&மன) உறுதி"-யில் படித்து அறிந்துகொள்ளவும்.

REMIX செய்யப்படுவது  'சில்லுனு ஒரு காதல்' படத்தில் வரும் பாடல்.
_______________________________________________________________

ஆண் : முன்பே வா என் அன்பே வா
               முன்னுரையும் முறைதான் வா
              
பெண்: முன்பே வா என் அன்பே வா
               உன்பேர் தான் என் பேர் தா...
               நான் இனி நானா-இல்லை
               உன்னில்  பாதி நானா?
              
ஆண்:   நாம் வாழும் தேசம்- இனி
               காதல் தேசம் தானா?                 ( முன்பே வா)

பெண்: பூந்தேரினில் நீ எனை வைத்தாய்
              புது ஊர்வலம் நான் வர வைத்தாய்
              நான் ஏற்றிடும் தீபத்தைத் தூரத்தில் நீ வைத்தால் தகுமோ?

ஆண்: சேரும் -  நலம் பல நூறும் -
              புலம் பெயர்ந்தே நாம்
              பறந்திட .. வா..                      ( முன்பே வா)                 
மண(&மன) உறுதி

ஒரு காலத்தில் கல்யாண நாள் வரை மணமக்கள் ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருந்ததாகப் பெரியவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்தக் காலத்தில் பிள்ளைகள் சொன்னால்தான் பெற்றோர்களுக்கு அவர்களின் திருமணம் பற்றித் தெரியவருகிறது என்று மிகைப்படுத்திச் சொன்னாலும் - இக்காலத்திலும் பெரும்பாலும் பெற்றோர்கள் பார்த்துத் திருமணம் செய்து வைக்கும் வழக்கம் தொடர்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை.

இன்று மதியம் நண்பர்கள் யாரும் உடன் வராததால் நான் மட்டும் தனியாக எங்கள் அலுவலக உணவகம் சென்றேன். நான் அமர்ந்த மேசையில் இன்னொரு ஓரத்தில் இரண்டு இளம்பெண்கள் வந்து அமர்ந்தனர். அமர்ந்த அடுத்த நிமிடமே பேச ஆரம்பித்துவிட்டனர். நானும் நாகரிகம் கருதி அவர்கள் பேசுவது எதுவும் கேட்காமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். காதைப் பொத்திவைத்தாலும் காதைப் பொத்துக்கொண்டு சில செய்திகள் நம் காதில் விழுமல்லவா, அது தான் நடந்தது. ஒரு பெண் தன் திருமணத்தைப் பற்றி வெட்கமும் குதூகலமும் கலந்து பேசும்போது அதைக் கேட்காமல் எப்படி இருப்பது...?

நிச்சயதார்த்தம் (மண உறுதி விழா) சமீபத்தில் தான் நடந்ததாம்.
இது உறவினர்கள் மட்டும் கலந்துகொண்ட சிறிய விழா என்பதால் நண்பர்களை அழைக்கமுடியவில்லை என்று வருந்தினாள் அந்தப் பெண். கல்யாணத்துக்கு இன்னும் ஆறு மாதம் இருக்கிறது.
அழைப்பிதழ் வைக்கிறேன் கட்டாயம் வந்துவிடவேண்டும் என்றாள். அவள் தோழி ஆமோதிக்க, நானும் சம்பந்தா சம்பந்தமின்றி தலையை ஆட்டிவைத்தேன். பேச்சு தொடர்ந்தது. அந்தப் பெண்ணின் வருங்காலக் கணவர் வேலை செய்யும் நிறுவனத்தில் அவர் வெளிநாடு செல்ல வாய்ப்புக்
கிடைத்திருப்பதாகவும் திருமணம் முடிந்தவுடன் செல்லவேண்டும் என்றும் கூறினாள்.

இதுவரை ஒரு வழக்கமான கதையாக ஓடிக்கொண்டிருந்த இந்த உரையாடலில் ஒரு சுவாரசியமான திருப்பம் இப்போது வந்தது. கல்யாணத்துக்கு ஆறு மாதம் இருந்தபோதும் -விசா எடுக்க நாளாகும்
என்பதாலும் கல்யாணம் ஆன உடனே புறப்படவேண்டும் என்பதாலும் - அடுத்த வாரம் அவள் கல்யாணத்தைப் பதிவு செய்துகொள்ளப்போவதாகக்
கூறினாள். இச்செய்தி அவள் தோழியைப் போலவே எனக்கும் ஆச்சரியம் அளித்தது. இருந்தாலும் தோழி சமாளித்துக் கொண்டு 'அப்போ ஆறு மாசம் ஜாலி தான்னு சொல்லு' என்று கிண்டல் செய்தாள். 'அடப் போப்பா - போன்ல மட்டும் தான் பேசிக்குவோம் அவ்வளவுதான்' என்றாள் வெட்கத்துடன்.

என் தட்டில் தயிர்சாதமும் காலியாகிவிட்டதால் -அத்துடன் நடையைக் கட்டினேன். உரையாடல் கேட்காவிட்டாலும் கற்பனை மட்டும் எனக்கு தொடர்ந்து கொண்டிருந்தது. திருமணப் பதிவு நாளன்று அவன் என்ன பரிசு கொடுப்பான்? அவனும் நம்மைப் போல் பாரதி பக்தனாக இருப்பானோ?
"ஆத்திரம் கொண்டவர்க்கு கண்ணம்மா சாத்திரம் உண்டோடி?
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடி இதுபார் - கைஎழுத்திட்டுவிடு" என்று card எழுதிக் கொடுப்பானோ? என்ன சார் இந்த மாதிரி situation கௌதம் மேனன் படத்தில் தான் வரும் இதற்குப் போய் பாரதியார் பாட்டு எழுதுகிறீர்களே என்று இளைஞர்களாகிய நீங்கள் கேட்கலாம். எனவே ஒரு re-mix பாடலும் எழுதி அதையும் உடனே வெளியிடுகிறேன். ஒரு வேளை இந்த பாடல் பொருத்தமாக இருந்தால் கௌதம் மேனன் அடுத்த படமான 'நீ தானே எந்தன் பொன் வசந்தம்' படத்தில் பயன்படுத்திக் கொள்ளட்டும். ( என்ன ஒரு பேராசை என்று கேட்கிறீர்களா? கேட்காதீர்கள். அதற்குப்பதில் உங்களுக்கு கெளதமையோ அல்லது இசைஞானியையோ தெரியுமென்றால் அவர்களுக்கு என் பாடலைக் காட்டி புண்ணியம் சேர்த்துக் கொள்ளுங்கள்!)

மீண்டும் கதைக்கு வருவோம்.

திருமணத்துக்கு முன்பாகவே இப்படிப் பதிவு செய்து கொண்டால் அதில் என்னென்ன பிரச்சினைகள் வரக் கூடும்? இது எந்த விதமான ஒரு நம்பிக்கை..? நம்பினார் கெடுவதில்லை. இது நான்கு மறைத் தீர்ப்பல்லவா?

சிறு வயதிலேயே - இவன் உனக்குத்தான் - இவள் உனக்குத்தான் என்று காட்டி-காதல் வளர்த்த நம் தமிழ்ப் பண்பாடு - இந்த இரு உள்ளங்களுக்கும் காதல் வளர்ப்பதன்றி நல்வழியும் காட்டி நலமுடன் வாழவைக்கட்டும் என வாழ்த்துவோம்.

Sunday, March 11, 2012

தூண்டில்-2

மாட்டிய மீன்,
தூண்டில்காரன்,
வேடிக்கைப் பார்ப்பவர்-
இவர்கள் மட்டுமா?
தண்ணீரும் துடித்தது
........ தக்கை மூழ்கியதும்.
புழுவைத் தவிர.

Friday, March 9, 2012

தூண்டில்

முள்ளை முள்ளால் எடுக்கலாம்

Thursday, March 8, 2012

தத்துவமும் பித்துவமும்

 தத்துவம் பிறந்த காலம் முதலே பித்துவமும் உலகில் உலவிவருகிறது என்பது என் கருத்து. தத்துவத்தை மதிக்கும் நாம் பித்துவத்தை அவ்வளவாக மதிப்பதில்லை. திருக்குறளைப் போற்றும் நாம் தெருக்குறளையும் போற்ற வேண்டும் என்கிற மேலான கருத்தை வலியுறுத்தி இந்தப் பதிவு.  

'யாகவாராயினும் நாகாக்க காவாக்கால் யாராவார் யாகவா முனிவர்?" பெரிய ஞானிகளும் முனிகளுமே தத்துவத்துடன் பித்துவம் கலந்து தருவதை நாம் காலம் காலமாகக் கண்டுவருகிறோம். "மேனியைக் கொல்வாய்.. மேனியைக் கொல்வாய்.." என்ற கீதா உபதேசம் முதற்கொண்டு இதற்கு உதாரணங்கள் பல சொல்லலாம். ஆனால் 'அச்சம் என்பது தமிழர் உடமையடா' ( திராவிடர் என்று சொன்னாலும் வம்பு) என்கிற காரணத்தால் கிருஷ்ண பக்தர்களின் உதைகளிலிருந்து தப்பித்து வேறு உதாரணங்களுக்கு மாறிவிடுவோம்.


உதாரணங்களுக்கு முன்பாகப் பித்துவம் என்றால் என்னவென்று பார்ப்போம். தொல்'copy'யனின் விதிகள் சில:
1. பித்துவம் என்பது தத்துவத்தின் தழுவலாய் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.
2. தத்துவ ஞானிகள் ஒதுக்கிவிடும் தத்துவங்களும் பித்துவமாகலாம்.
3. பித்துப் பிடித்தவர்தான் பித்துவம் சொல்லவேண்டும் என்றில்லை. ஆனால் பித்துவத்தில் கொஞ்சம் பித்துத்தனம் இருக்க வேண்டும்.
4. யாரையும் குத்தும் தனம் கூடவே கூடாது.
5. பாசம் காட்டலாம் ஆபாசம் கூடாது.
ஆகமொத்தத்தில் பித்துவம் என்பது ஒரு பின் நவீனத் தத்துவமாக இருக்க வேண்டும்!


கல்வி என்பது அழியாதது என்ற கருத்தைப் பித்துவமாய் இப்படிக் கூறலாம். 'ஒருவனின் பல் சொத்தை பிடுங்கலாம், பல சொத்தையும் பிடுங்கலாம் ஆனால் அவன் வித்த சொத்தை யாரும் பிடுங்கமுடியாது.'
(இங்கு 'வித்த' என்பதை வித்தை என்று எடுத்தாலும் விற்ற என்று எடுத்தாலும் - இந்தப் பித்துவம் பிழையாகாது.)


தேர்வுகளின் தொல்லையால் தூக்கம் தொலைக்கும் மாணவர்கள் முதல்மரியாதை படப் பாடலான "மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கல" பாடலைப் பாடினால் அது தத்துவம். இந்தப் பாடலை வைத்தே சில பித்துவங்களும் பாடலாம். செமஸ்டர் தேர்வில் மார்க் குறைந்துவிட்டால் "book-ஐ வாங்கினேன் mark ஏதும் வாங்கல" என்று பாடலாம். அதுவே கப்(அரியர்) வாங்கிவிட்டால் "கப் வாங்கினேன் மெடலு வாங்கல" என்று சைக்கிள் பெடல் சுத்தலாம்.  அடடா நான் பாடுவது என்பாட்டிக்குக் கேட்டுவிட்டது. அவரும் பாட ஆரம்பித்து விட்டார், "பிளாஸ்கு வாங்கினேன் காபியைக் காணல.."  இப்போது என் மனைவி பாடுகிறார்.."பர்ஸ் வாங்கினேன்..காசொன்னும் காணல..." பித்துவ மழையில் நனைந்துவிட்டேன்.


"காதல் ஒன்றும் சுத்த பத்தம் பார்ப்பதில்லையே எச்சில் கூடப் புனிதமாகுமே" என்றார் உதித் நாராயணன்.( கவிப்பேரரசிடம் வாதிட முடியுமா? அதான் உதித்...ஹி ஹி!) அதுபோல் பித்துவத்துக்கும் இடம் பொருள் ஏவல் கிடையாது. பெரும்பாலான பித்துவங்கள் குளியலறையின் ஷவரில் இருந்துதான் கொட்டும். மேலைக் கலாச்சாரத்தில் ஊறிஇருந்தாலும் பாத்ரூமில் பேப்பர் படிப்பதை சாமி குத்தமாகக் கருதவதால் எனது பாத்ரூம் நிமிடங்கள் பொதுவாய் அமைதியாகவே கழி-யும். இந்த அமைதியில் பிறக்கும் பித்துவங்கள் பல உண்டு. ஒரு நாள் யோசித்தேன் பாத்ரூம் டைல்ஸ் எல்லாம் மாற்றியிருக்கிறோம் ஒரு அழகான படம் மாட்டினால் என்ன? கதவில் ஏதாவது வாசகம் எழுதலாமா என்றும் யோசித்த போது ஒரு பாடல் நினைவுக்கு வந்தது ..... "போனால் போகட்டும் போடா.."!  இன்னொரு பாடல் கூட நினைவுக்கு வருகிறது. விதி எண் 5 -ஐ மீற விருப்பமில்லை!


தத்துவத்தின் தழுவலே பித்துவம் என்பதற்கு ஒரு உதாரணம் பார்ப்போம். "அட மீன் செத்தாக் கருவாடு நீ செத்தா வெறுங்கூடு - கண்ணதாசன் சொன்னதுங்க" என்று பாதி சரணத்தில் கண்ணதாசனை மேற்கோள் காட்டி "பசு இருந்தாலும் பாலாகும் செத்தாலும் தோலாகும்" என்று மீதி சரணத்தை வைரமுத்து எழுதியிருப்பார். இதே உத்தியைப் பயன்படுத்தி நாமும் பித்துவம் பாடலாம். "பசு இருந்தாலும் புல்-ஆகும்* செத்தாலும் புல்லாகும்"(*ஆகும் - தீர்ந்துவிடும்) ..... புல்லரிக்கிறதா இல்லையா சொல்லுங்கள்? 

வெறும் நகைச்சுவைக்கு மட்டுமா பித்துவம்? தீய வழியில் செல்லும் இளைஞர்களையும் பன்ச் சொல்லித் திருத்தலாம். "கண்ணா நீ இன்னைக்கு தம் கட்டி தம் கட்டி தம் அடிச்சா..நாளைக்கு தம்-கட்டி தம்-கட்டி உன்னை அடிச்சிடும்" (தம்-கட்டி = lung cancer).

"பார்ல ஏறிட்டு கார்ல ஏறாதே..பிளாட் ஆகி பிளாட் வெளியில் படுக்காதே.." இப்படி எவ்வளவோ விஷயங்கள் சொல்லலாம்.

பித்தார்க்குப் பித்தான பித்தாக்கிப் பித்தார்க்குப் பத்தாகும் பிழை.. ! 
 
அன்பு நண்பர்களே, தத்துவ ஞானிகளிடமிருந்து தப்பித்து நமக்கு நாமே பித்துவம் வகுத்துக்கொண்டு வளமுடன் வாழ்வோம்  என உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
 
உங்கள் பித்துவ ஞானத்தை வைத்து எனக்கு உதவ முடியுமா? அடம் பிடிக்கும் குழந்தைகளை அடக்குவது எப்படி? ("மடப் பசுவாய் அடங்குமா அடம் பிடிக்கும் சிசு?" )

Monday, March 5, 2012

கண்ணால் காண்பது பொய்யா?

காதலில் சொதப்புவது எப்படி? படம் பார்த்து விட்டீர்களா? மற்றவர்கள் சொதப்புவதைப் பார்ப்பதில் நமக்கு ஒரு மகிழ்ச்சி என்றுமே உண்டு. ஆனால் நாம் சொதப்பிய விஷயங்களை நினைவுபடுத்திப் பார்ப்பது சிரமமான விஷயம்.

ஆபீஸில் பாஸுக்கு தவறான டேட்டா கொடுத்துவிட்டு அதைத் தானாகவே சொல்லிவிடுவது நல்லதா இல்லை அவராகக் கண்டுபிடிக்கட்டும் என்று விட்டுவிடலாமா என்று நண்பர்களிடம் அட்வைஸ் கேட்டுப் பட்டி மன்றம் நடத்தும் நண்பர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன். நண்பர்கள் என்றால் நானும் ஒரு நண்பன் என்பது நான் சொல்லியா உங்களுக்குப் புரிய வேண்டும்?!

ஒரு காலத்தில், அப்பா டியுஷன் எடுக்கும் போது, சின்ன கிளாஸ் பசங்களுக்கு சில நேரம் என்னைச் சொல்லிக்கொடுக்கச் சொல்வார். அப்படி சில சமயங்களில் எதையாவது தப்பாகச் சொல்லிவிட்டு டியுஷன் முடிந்ததும் அந்தத் தப்பை உணர்வதுண்டு. மறுநாள் அதைச் சரியாகச் சொல்லிப் பசங்களைத் திருத்தும் வரை ஒரு குற்ற உணர்வு வாட்டிக் கொண்டே இருக்கும். இந்த அனுபவத்தின் காரணமாக, இப்போதெல்லாம் என் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கும்போது மிகவும் கவனமாக இருப்பேன். இருந்தாலும் ஒருமுறை நான் சொல்லிக்கொடுத்ததால் ஒரு பதில் தவறாகி ஒரு மார்க்கில் 'ஓ' கிரேடு போய்விட்டது என்று என் மகன் என் மனைவியிடம் சொல்லிவிட்டான். 'உன்னால் தான் ஓ கிரேடு போய்விட்டது' என்ற பஞ்ச் டயலாக்கை என் மனைவியிடமிருந்து இப்போது அடிக்கடி கேட்க நேர்வது முற்காலத்தில் டியுஷன் பசங்களுக்கு நான் செய்த பாவத்தின் சம்பளம் தான் என்பதை முற்றிலும் உணர்கிறேன்.
 
இதுபோல் சமீபத்திலும் ஒன்று நிகழ்ந்தது.
 
செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரத்திற்குப் பேருந்தில் சென்றுகொண்டிருந்தேன். இரு சிறு குழந்தைகளுடன் ஒரு பெண் பஸ்ஸில் ஏறினார். பஸ்ஸில் உட்கார இடம் இல்லாததால் ஒரு பையனை மனித நேயத்தின் பொருட்டு(?) என் மடியில் உட்கார வைத்துக்கொண்டேன். உடனே 'அங்கிள், அங்கிள்' என்று பேச ஆரம்பித்து விட்டான். அவன் பெயர் மோகனகிருஷ்ணன் என்றும் அவன் ஒன்றாம் வகுப்பு படிப்பது முதல் அவன் மிஸ்களின் பெயர்கள் எல்லாம் கூட சொல்லிவிட்டான். அதானே, மிஸ் பெயர் எல்லாம் எதற்கு என்னிடம் சொல்லவேண்டும்? சரி அது கிடக்கட்டும். இந்த வழியாகச் சென்றவர்களுக்குத் தெரியும் - இந்தப் பாதை நெடுகப் பாலாற்றின் கரையிலேயே செல்லும் என்று. பாலாற்றின் கரையில் செல்வதாலேயே இந்தப் பாதையில் செல்வது ஒரு சுகானுபவம். ஒரு திருப்பத்தில் வண்டி திரும்பும்போது மோகனகிருஷ்ணன் பரந்து விரிந்து கிடந்த பாலாற்றைப் பார்த்து 'அங்கிள் இது என்ன பாலைவனமா?' என்று கேட்டான். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. இந்தக் குழந்தைக்கு எப்படிச் சொல்லி புரியவைப்பது - இது ஒரு காலத்தில் பால் போல் பொங்கி ஓடிய ஆறு என்று? 'பாலை வனம்' என்று தமிழில் சொன்னானே என்பதில் மகிழ்ச்சி ஒரு புறம். கொஞ்சம் யோசித்துவிட்டு அது ஒரு ஆறு தான் என்பதை ஒருவாறாக அவனுக்கு விளக்கிவிட்டேன். 

இது நடந்து பத்து நாட்கள் ஆன பிறகு என் மனம் என்னைக் கேட்கிறது டியுஷன் பசங்களுக்கு சொன்னதுபோல் இதுவும் தவறான பதிலோ என்று. தோற்றத்தில் இது பாலைவனம் என்று நிதர்சனமாக ஒரு குழந்தைக்குத் தெரிகிறது.  இதை ஆறு என்று நான் ஏன் கூறவேண்டும்? கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாய் ஓடாத பாலாறு இனி ஓட வாய்ப்புள்ளதா? அண்டை மாநிலங்களில் அணைகள் உடையுமா? இல்லை காஞ்சிபுரம் வேலூர் மாவட்டங்களின் கழிவு நீர் அனைத்தையும் இதில் செலுத்தி கூவம் நதிபோல் வற்றாத ஜீவநதியாக இதை மாற்ற முடியுமா?
உங்கள் மடியில் மோகனகிருஷ்ணன் அமர்ந்திருந்தால் நீங்கள் என்ன பதில் கூறியிருப்பீர்கள்?

பி.கு. இந்த அனுபத்தில் உருவானதே பாலாறு என்ற என் கவிதை. ஆனால் அது ஒரு பரிமாணத்தை மட்டுமே காட்டுவதால் - முழு அனுபவத்தினையும் கட்டுரையாக இங்கு பதிந்துள்ளேன்.

Friday, March 2, 2012

கிலுகிலுப்பை

மாமாவிடம் பேசிக்கொண்டிருந்தேன் ஹாலில்.
மகளை அழைத்தார்..
"ஏம்மா... உன் மாமன் வந்திருக்கான் காபி போடு......."

நான் திரும்பிப் பார்ப்பதற்குள் முதுகின் பின்னால்
மல்லிகைவாசம் தூவிவிட்டு சமையலறைக்குள்
சலசலத்து நுழைந்தன கொலுசுகள்.
கையின் கீழிருந்து மேல் இறங்கிய
வளையல் சத்தம் உணர்த்தியது-
அலமாரியில் அவள் காபி பொடி எடுப்பதை.

மீண்டும் சிணுங்கிய வளையல்கள் சொல்லின-
சர்க்கரை... சர்க்கரை...கலப்பதை.
"காபி நுரையில் ஒளிந்த வளையல் சத்தம்"
என்று கவிதைக்குள் கவிதை எழுதிக் காத்திருந்தேன்-
அவள் அழகு முகம் தாங்கி வரும் கொலுசொலிக்காக.

"ஒரு கிலுகிலுப்பை கூட வாங்கித்தராத கஞ்சனடா உன் மாமன்"
சிறு வயதில் அம்மா சொன்னது
அபத்தமாய்த் தோன்றியது இப்போது!

Statutory Warning: நெருங்கிய உறவுக்குள் திருமணம் செய்வது மருத்துவ ரீதியாக உகந்ததல்ல.

Thursday, February 23, 2012

பாலாறு

எனது பாட்டன் காலத்திலும் 
பாலாற்றின் கரையில்தான் 
எங்கள் ஊர் சுடுகாடு.

என் காலத்தில்,
எங்கள் ஊர் சுடுகாட்டின் அருகில்
செத்துக் கிடக்கிறது பாலாறு.

வட்டமிட்டு, வட்டமிட்டு,
பிணந்தின்னும் கழுகுகளாய்
மணல் லாரிகள்.

Tuesday, February 7, 2012

மானிட இலக்கணம்

சூடான சோறும் ஆறிய சொற்களும் படைப்பவரே அன்னை; மனைவி
கொஞ்சம் பணமும் கொஞ்சும் மனமும் கொண்டவரே தகப்பன்; கணவன்
இருப்பதைச் சொல்லி இல்லாததைக் கொடுப்பவரே குரு
தன்னை உணரத் தன்னை உணர்த்துவதே தெய்வம்
அறியும் விழிகளும் ஆற்றும் விரல்களும் வளர்ப்பவரே வளரும் பிள்ளைகள்
அழைக்காமல் வந்து பழிக்காமல் செல்பவரே உறவும் நட்பும்
மனிதனாய் வாழ்ந்து மிருகத்தையும் நேசிப்பவரே மனிதர்Thursday, January 12, 2012

"New York நகரம்" - remix

"New York நகரம்" பாடல் ஏ ஆர் ரகுமான் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதை remix செய்யும் முயற்சி இங்கே. திரு. வாலி அவர்கள் மன்னிப்பாராக!
_______________________________________________________

ரோஜாப் பூவும் பனியில் நனைந்து இதழ்கள் திறந்ததே...
அழைப்பிதழும் விடுத்ததே...
முட்கள் மீதிலும்... பனியின் முத்தம் படிந்ததே
நானும் கைநீட்டித் தழுவிடும் போது தொலைவில் மறைந்ததே...
நொடியில் கனவும் கலைந்ததே.. (ரோஜாப் பூவும்)

பார்த்திருந்த பாவை முகமும்
விழித்திரையில் படர்ந்த படம் தானோ
நீர்த்தெரித்து விழியும் மூட அணை
உடைக்கும் நினைவும் ஏனோ...ஓ ..ஓ ..ஓ ..?
வாழ்கின்ற காலமெல்லாம் உன்னை
என்னுள் வைத்து முழுவதும் நிறைத்த காதல் தேனோ?
நான்சென்ற தூரமெல்லாம் உந்தன் எண்ணங்களும்
எந்தன் நெஞ்சில் சுமைகள் ஆனதேனோ...ஓ ..ஓ ..ஓ ..? (ரோஜாப் பூவும்)

நான் கடக்கும் பால நிழலில் நீர் நின்று…. போவதே இல்லை
நீர் சுழித்து நடந்த பிறகும் நதி நின்று-போவதில்லை
நாள் இங்கே நீரைப்போலே நித்தம் என்னை விட்டுக்
கண்ணை விட்டுக் கடந்து தூரம் போகும்
வாழ்விங்கே நதியைப் போலே உந்தன் நினைவினில்
தளும்பிடத் தொடர்ந்து தேடி ஓடும்.. ஓ ..ஓ ..ஓ (ரோஜாப் பூவும்)