Tuesday, June 2, 2020

HAPPY BIRTHDAY RAJA SIR

(முத்தைத்தரு - திருப்புகழ் பாடல் மெட்டில் )
 
வித்தை பல கற்றுக் கலைமகள் மெச்சத்தகு புத்திக்கு அதிபதி
தித்தித்திடும் மெட்டுத் தரவல்ல இசைஞானி
எட்டுத் திசை பட்டத் தமிழரின் இட்டத்தினில் நித்தம் நிலவிடும் 
மட்டத்துயர் தட்டில் திரவியம் இசைஞானி
 
பட்டிக்கொரு கட்டிக்கரும்பென சிட்டிக்கொரு சீனிக்கழியென
எட்டுத்திசை எங்கும் இனித்திடும் இசைஞானி
பட்டப் பகல் முட்டும் குளிர்ந்திட கொட்டும் பனி மெட்டில் மகிழ்ந்திட
எட்டும் இருள் மட்டும் துணைவரும் இசைஞானி
 
கெட்டும் மனம் முற்றும் நலம்பெற ஒட்டும் உயிர் ஊனில் நிலைபெற 
கொட்டும் உயிர் மெட்டில் குருதியில் இசைஞானி 
பட்டத் துயர் எட்டிச் சிதறிட பக்தர்க்கருள் கொட்டித் தருகிற
கிட்டத்தினில் கிட்டும் இறைவனும் இசைஞானி 
 
இசைஞானிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
 
பாலா சிவசங்கரன்
02 ஜூன் 2020
=====-----=====-----=====


Thursday, May 21, 2020

பெட்டி உடுப்பெடுத்து

தண்டவாளத்தில் நடந்து உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்தப் பாடல் சமர்ப்பணம்

(உச்சி வகுந்தெடுத்து பாடல் மெட்டு)

பெட்டி உடுப்பெடுத்து
புள்ளைங்கள தோளில் வெச்சி
தண்டவாளம் மேல்நடந்து
சொந்த ஊரு போனாங்க
சொந்த ஊரு போனவங்க
போன கதி என்னாத்தா?
(பெட்டி உடுப்பெடுத்து)

உண்டி சுருங்க வெச்சு
உண்டியலில் சேத்து வெச்சு
வண்டிக்குத்தான் சீட்டெடுக்கப் போனாங்க - அட
போகும் வழி யாருக்குமே தெரியலையே - ஐயோ
போற வழி ஆபத்துன்னு புரியலையே
(பெட்டி உடுப்பெடுத்து)

துபாயி சிங்கப்பூரு
துட்டு உள்ள தூர ஊரு
ஏரோபிளேன் போனதுன்னு சொன்னாங்க - அட
இங்கருக்கு இவங்க ஊரு தெரியலையே - அட
ஏத்திச் செல்ல வண்டி ஏதும் வரவில்லையே
(பெட்டி உடுப்பெடுத்து)

பங்குச் சந்த மூடவில்ல
வங்கி வட்டி கொறையவில்ல
கூலி வேலை செய்ய மட்டும் வழியில்லை - அட
ஏழை சனம் எண்ணிக்கையில் கொறையலையே - எவர்
எண்ணத்திலும் இவங்களுக்கு எடமில்லையே

(பெட்டி உடுப்பெடுத்து)

Friday, May 15, 2020

பஞ்சபூதக் காதல்


 
காதல் என்றொரு காற்று - அது
பூமி முழுதும் நிறைந்ததடி(டா)
கண்ணில் மறைந்தே போனாலும் - அது
நம்மை விட்டுப் பிரிவதில்லை
 
காதல் என்றொரு பூமி -  அதன்
ஈர்க்கும் வலிமை குறைவதில்லை
திசைகள் மாறிப் போனாலும் - அதன்
விசைகள் என்றும் அழிவதில்லை

காதல் என்றொரு வானம் - அது
உள்ளம் முழுதும் விரிந்ததடி(டா)
தூரம் தாண்டிப் போனாலும் - அது
எல்லைக் கோட்டில் முடிவதில்லை
 
காதல் என்றொரு வெப்பம் - அது
உயிரின் உள்ளே கலந்ததடி(டா)
கூடும்போது கொதிக்குதடி - அது
குறையும் போது நடுங்குதடி
 
காதல் என்றொரு நீரில் - நம்
இருவர் உயிரும் மீன்களடி(டா)
அலைகள் என்றும் ஓய்வதில்லை - நம்
காதல் என்றும் அழிவதில்லை

பாலா சிவசங்கரன்
15 05 2020
=====-----=====-----=====

Sunday, April 26, 2020

துளி நீர்


நீர்த்துளியாக விடுபட்ட
துளி நீர்,
நீர்த்துளிக்குள் சிறைப்பட்டதாகவே தவித்துப் போகின்றது

நிலையற்ற துளிகளையே
நாம் காண்கிறோம்-
தாமரை இலை மேலும்
மழையின் ஒழுக்கிலும்
விழிகளின் ஓரத்திலும்.

சந்தர்ப்ப சாதுர்ய சதிகளின்
நிகழ்தகவில்
சங்கமித்து சுயமிழக்கின்றன துளிகள் -
சமூகத்தின் தனி மனிதர்களைப் போலவே.

பாலா சிவசங்கரன்
26 04 2020


Wednesday, March 18, 2020

நாவல் கரோனா - REMIX

நாவல் கரோனா - REMIX
(காதல் பிசாசே பாடல் மெட்டு)

நாவல் கரோனா
நாவல் கரோனா
வேணாம் வராதே பரவாயில்லை
நாவல் கரோனா
நாவல் கரோனா
போதும் அவஸ்தைகள் பரவாயில்லை
சீனாவும் சுகமாயில்லை
ஈரானும் நலமாயில்லை
இந்தியாவை விட்டுவிட்டால் பரவாயில்லை
அமெரிக்கா பரவாயில்லை
ஐரோப்பா சரியாயில்லை
எங்களை நீ விட்டுவைத்தால் பரவாயில்லை

கொஞ்சம் ஒதுங்கல் கொஞ்சம் பதுங்கல்
கற்றுக் கொடுத்தாய் நீ நீ நீ
கைகள் கழுவல் தூய்மை பழகல்
சொல்லிக் கொடுத்தாய் நீநீநீ
ஐயோ அம்மம்மா நான் யாரோடும்
பேசாத வெட்கத்தை நீயே தந்தாய்
அப்பா அப்பப்பா நான் யார் மீதும் மோதாத சங்கோஜம் நீயே தந்தாய்
இது போதும் விட்டுச் செல்லு
தாங்காது சொன்னா கேளு
மருந்தொன்று கண்டுபிடித்தால் பரவாயில்லை