Friday, March 23, 2012

கர்ணன் - படம் பார்த்த அனுபவம்

கர்ணன் கதை தெரியாதவர்கள் யாருமில்லை என்பதால் நானொன்றும் பெரிய விளக்கமோ விமர்சனமோ சொல்லப்போவதில்லை. இது அனுபவப் பகிர்தல் மட்டுமே.
முகம் தெரியாத காவிய நாயகர்கள் பலருக்கு முகம் கொடுத்தவர் சிவாஜி. கர்ணனும் அவர்களில் ஒருவன். பாரதத்தில் கர்ணனின் பாத்திரம் எத்தனை உணர்வுகளின் சங்கமமோ -  கொடை, நட்பு, நன்றி, வீரம், கர்வம், பாசம், ஏக்கம், அவமானம், பெருந்தன்மை - அத்தனையும் அருமையாய் வெளிப்படுத்துகிறார் நடிகர் திலகம்.

வள வளக்காமல் பள பளக்கின்றன சக்தி கிருஷ்ணசாமி அவர்களின் வசனங்கள்.

மெல்லிசை மன்னர்களின் இசையில் இனிய பாடல்கள். பாடல்களைப் பொதுவாக இடைவேளைகளாகக் கருதும் இக்கால ரசிகர்களையும் இருக்கையிலேயே அமர வைத்திருந்ததைக் கவனித்தேன்.

சிவாஜியின் அபரிமிதமான நடிப்புடன் போட்டி போடுகிறது ராமாராவ் அவர்களின் மிதமான நடிப்பு. அவரின் ஒவ்வொரு காட்சியிலும் இழைந்தோடும் நகைச்சுவை அருமையிலும் அருமை.

டிஜிடல் தொழில் நுட்பத்தில் மேருகேற்றியிருப்பதாய்ச் சொல்கிறார்கள். ஆனாலும் நான் அதிகமாய் எதிர்பார்த்துவிட்டேன் போலும். தேய்ந்த காட்சிகள் பலவற்றை ஓரளவுக்குமேல் சரிசெய்ய முடியவில்லை என்று தெரிகிறது.


வார நாட்களிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாய் ஓடுவது நம் மக்களின் திரை ஆர்வத்தைப் பறை சாற்றுகிறது.

அடுத்ததாக திருவிளையாடல் படத்தை வெளியிடுவார்களா பார்ப்போம்.

Bottomline: அனைவரும் அவசியம் பார்த்துவிடவும்.

படம் பார்க்கும் போது ஏதோ ஒரு நீளவசனம் முடிந்து சின்ன மௌனம் அமைந்தது.. அப்போது திரையரங்கில் ஒரு பையன் அவன் அப்பாவிடம் கேட்டது எல்லோருக்குமே கேட்டது... "ஏம்பா படத்துல எல்லோரும் தமிழிலேயே பேசுறாங்க?" இதற்கும் கரகோஷமிட்டனர் நம் மக்கள்!
 

4 comments:

ஸ்ரீராம். said...

நல்ல படம். கூட்டம் வருகிறது என்று கேட்க சந்தோஷமாக இருக்கிறது.

Swami Durai Velu said...

Dialogues for Karnan were written by Shakthi Krishnasamy who also wrote dialogues for Veerapandiya Kattabomman,Thanga Surangam,etc

மோ.சி. பாலன் said...

சாமி துரை வேலு அவர்களுக்கு நன்றி. பிழையைத் திருத்திவிட்டேன்.

கௌதமன் said...

சமீபத்தில் குரோம்பேட்டை வந்திருந்தபோது, ரயில்வே கிராசிங் சுவர் அருகில் கர்ணன் பட போஸ்டரை ரசித்துப் பார்த்தேன். படம் பார்க்க நேரம் இல்லை. ஆனால் சென்ற டிசம்பர் சீசனில், சங்கீத சி டி / டி வி டி வாங்கிய கடையில், கர்ணன் பட டி வி டி வாங்கி, அதை இந்த மூன்று மாதங்களுக்குள் ஓரிரு முறைகள் பார்த்தாயிற்று!