Saturday, November 21, 2009

மாடு

குப்பன் வீட்டில் ஒரு மாடு இருக்கிறது
அப்பன் வீட்டில் கன்றாயிருந்தபோது
துள்ளி விளையாடியது.


பெரியதானதும் மூக்கணாங்கயிறு போட்டு
வண்டியில் பூட்டிவிட்டனர்.
புல்லோ, பழையதோ, புண்ணாக்கோ
எதைப் போட்டாலும் தின்னும்


மாட்டுப் பொங்கலுக்கு மட்டும்
நல்ல உபசரிப்பு.


கொம்புகளுக்குக் கூட வண்ணமடிப்பார்கள்
அதுவும் குப்பனுக்குப் பிடித்த கட்சியின் வண்ணம்.
 கொட்டிலில் கட்டும் போதும்
கால்வாயில் குளிப்பாட்டும் போதும்
குப்பன் அதைக் கொஞ்சுவான்


மற்ற நேரங்களில் சாட்டையடிதான்
மாட்டுக்கு இரண்டுமே பழகிப் போயிற்று

பசித்த பிள்ளைகளுக்கு சாப்பாடு போட்டு தூங்கவைத்து
முடித்த கூந்தலை அவிழ்த்துப் பின்னி, அவிழ்த்துப் பின்னி
'குடித்தனம்' நடத்தும் குப்பன் வருகைக்காகக்
காத்திருப்பாள் அவன் மனைவி

அந்த வீட்டின் மாட்டுப்பெண்.

Friday, November 20, 2009

சாமி எறும்பு

அய்யப்ப சாமிக்கு ஆசாரமாய்ப் படைத்து
அம்மா சாமி தந்த
ஆவின் பாலில்
மிதந்தது -
"சர்க்கரை நோயால்" செத்த எறும்பு.
எதுத்துப் போட்டுவிட்டுக் குடித்து விட்டேன்.
சைவமா? அசைவமா?
சாமியே சரணம் ஐயப்பா.

Friday, November 13, 2009

பாலம்

நதியின் கரையில்
நடந்து கொண்டிருந்தோம் நீயும் நானும்
குறுக்குப் பாலம் தூரத்தில் தெரிந்தது - சிறியதாய்
    
எங்கேயோ வேகவேகமாய்ச் செல்வதாய்ப் 
பாசாங்கு   செய்த நதி
நாமிருவர் பேசுவதை ஒட்டுக் கேட்டுக் கொண்டே வந்தது


நடந்து கொண்டிருந்தோம் நீயும் நானும் -
குளிர்க்காற்றை நம் சுவாசங்களால் சூடாக்கி.
 நடந்து கொண்டிருந்தோம் நீயும் நானும்.

எடைகளுடன் நம் எண்ணங்களையும் சுமக்கவோ என்னவோ 
குறுக்குப் பாலம் பெரிதாகிக் கொண்டே வந்தது

நதியில்  ரகசியங்கள் தொலைத்து
கரையில் சிரிப்பொலிகள் தொலைத்து  
நிலவில் பகல் தொலைத்து - நாம் விடைபெறும் நேரம் 
பற்றிய உன்கரம் காற்றில் தொலைத்து -
     
கடந்து போனது ஞாபகமிருக்கிறது 
-பாலம்-
உடைந்துமா போனது நாம் கடந்ததும் ?

Thursday, November 12, 2009

ஹைக்கூ: புறமுதுகு

 நான் புறமுதுகு காட்டினேன்
என்றான் என்னை

முதுகில் குத்தியவன்  

Wednesday, November 11, 2009

காலை

எம்மைப் பாடுகபாடுக எனச்சோலை எல்லாம்
      புதுப்பூக்கள் சூட்டித்தம்மை அலங் கரிக்கும்
 பொருள் தேடுகதேடுக எனப்புள் ளினமும்            
      பொதுக்கூட்டம் கூட்டியங்கு தமர்க்கு உரைக்கும்
எம்மை விடுகவிடுக எனச்சேலை போர்த்தி
       தம்மைவாட்டும் துணைவனைத் தள்ளி வைக்கும்  
இருள் ஓடுகஓடுக எனஒளி எடுத்து
       திசைஎட்டும் கதிர் வழங்கும் காலையாகும்

Saturday, November 7, 2009

THANGLISH பாடல்: ஜிஞ்சர் கார்லிக்

( சமையல் தெரியாத கணவனுக்கு  / மனைவி  அல்லது மனைவிக்கு  / கணவன் பாடும் பாடல்  
" தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ" 
-- என்ற பாடலின் ராகத்தில் அமைந்தது   ... )

ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட்-ஐப் போட்டு
வதக்க வேணும்மா காய்கறி 
பெப்பருடன் சால்ட்டும் சேர்த்துக் 
கொதிக்க  வேணும்மா கோழிக்கறி  

டேஸ்ட்டு ஏதும் இல்லையின்னா 
நீயும் கொஞ்சம் சால்டைப் போடு 
சால்ட்டு ரொம்ப ஜாஸ்தியானா
மேலும் கொஞ்சம் வாட்டர் போடு   

உண்மை அம்மா குக்கிங் ரொம்ப ஈசி அம்மா 
சமைப்பது சுலபமம்மா !!   ( ஜிஞ்சர் கார்லிக் ... )     

சுகரும் இல்லையின்னா டீ-யிலே   கருப்பட்டி போடலாம்
பாலும் இல்லாமலே வெந்நீரில் கருப்பு டீ போடலாம்

சாதம் இல்லையின்னா நூல் போன்ற நூடுல்சும் செய்யலாம்
பச்சைக்  காய்களையே கட் பண்ணி ரொட்டியில் வைக்கலாம்
இப்படி விதமா விதம் விதமா சமைத்திடலாம் என் கண்ணம்மா !!  ( ஜிஞ்சர் கார்லிக் ... )

ஆற்றில் நிற்கும் கொக்கே

ஆற்றில் நிற்கும் கொக்கே
சேற்றில் நிற்கும் கொக்கே
குளத்தில் நிற்கும் கொக்கே ... கொக்கே

ஏ .. கொக்கே ஏ .. கொக்கே
மீன் மக்கே.... உன் luck-ஏ
 

பறந்து திரியும் கிளியே
பழங்கள் தின்னும் கிளியே
பழுத்த மூக்குக் கிளியே ... கிளியே


ஏ.. கிளியே .. வெகுளியே
பஞ்சு பழுத்தால் பழம் இல்லையே ..


ஆற்றில் நிற்கும் கொக்கே
பாலாற்றில் நிற்கும் கொக்கே
பால் வண்ண மேனிக் கொக்கே .... கொக்கே

பால் எங்கே? ஆறெங்கே?
மீன் எங்கே? மணல் எங்கே?

RHYMES - தமிழாக்கம்Mary Had a Little Lamb
____________________


மேரியோட குட்டி ஆடு
குட்டி ஆடு குட்டி ஆடு
மேரியோட குட்டி ஆடு
அதன் முடி ரொம்ப வெள்ளை

மேரி எங்கே போனாலும்
போனாலும் போனாலும்
மேரி எங்கே போனாலும்
அந்த ஆடும் போகுமே !Twinkle Twinkle Little Star
_____________________

மின்னும் வண்ண விண்மீன் பார்
உன்னை என்ன என்பேன் நான்
வானின் மீது உயரத்தில்
வைரம் போலே மின்னுகிறாய்

மின்னும் வண்ண விண்மீன் பார்
உன்னை என்ன என்பேன் நான்
Ba Ba Black Sheep
______________


மா மா மாடே பால்இருக்கா ?
ஆமாம் மூணு லிட்டர் பால் இருக்கு

ஒரு லிட்டர் வாத்தியாருக்கு
ஒரு லிட்டர் டீச்சருக்கு
ஒரு லிட்டர் எங்க வீட்டுக் குழந்தைக்கு !

மா மா மாடே பால்இருக்கா ?
ஆமாம் மூணு லிட்டர் பால் இருக்கு
I hear Thunder .. I hear Thunder
_________________________

வெடிச் சத்தம் போலவே
இடிச் சத்தம் கேட்டதே
மழை வந்ததே
மழை வந்ததே

குட்டி குட்டி மழைத்துளி
குட்டி குட்டி மழைத்துளி

குடை திறந்ததே
என் குடை திறந்ததே

( பி. கு : குடை திறந்ததே என்ற வரி என் மகன் கௌதமன் பரிந்துரைத்தது )Rain Rain Go Away
_______________


வெயிலே வெயிலே போய்விடு
வற்றல் போட அப்புறம் வா

வெளியில் சென்று விளையாட வேண்டும்
வெயிலே வெயிலே போய்விடு !Johnny Johnny Yes Papa
_____________________

ஜானி ... ஜானி ....
என்னப்பா ?


சீனி சாப்பிட்டாயா?
இல்லையப்பா


பொய் சொல்கிறாயா ?
இல்லையப்பா


வாயைக் காட்டு..
அடப்போங்கப்பா  !Pussy Cat Pussy Cat Where Have you been ?
________________________________

சேவலே சேவலே சென்றது எங்கே?
சென்னைக்கு நானும் சென்று வந்தேன்...

சேவலே சென்னையில் செய்தது என்ன?
சின்னஞ் சிறார்களை எழுப்பி விட்டேன்...

சேவலே சிறார்க்கு சொன்னது என்ன?
கொக்கர கோ கோ
school-க்குப்போ !