Thursday, August 30, 2018

உனக்கென்று ஒரு மழைச்செய்தி


பறவைகளைப் போல் உதறிவிடமுடியாமல்
மழையில் ஊறிக்கிடக்கிறது மனது..
கண்ணாடி மூடிய பேருந்தில்
எனக்கு என் ஆடைகளும்
என் ஆடைகளுக்கு நானும்
கதகதப்பு அளித்துக்கொண்டு செல்கிறோம்..
குளித்து மகிழும் கொழுந்துகளுக்கு வேண்டுமென
மேலும் கொஞ்சம் நீருறிஞ்சிக் கொள்கின்றன செடிகள்-
பாலூட்டும் அன்னை ஒரு கவளம்
அதிகம் உண்பது போல்.

வர்ணனைக்கே வார்த்தையெல்லாம்
வழி நெடுகே தீர்ந்துவிட
உனக்கென்று ஒரு மழைச்செய்தி
மறைத்தனுப்பத் தேடுகிறேன்
காலைவணக்க வாழ்த்துமடல்களை.

Thursday, April 19, 2018

குறுங்கவிதை - கிழிசல்

அங்கங்கே கிழித்த ஜீன்ஸ்
போட்டவனுக்கு இருப்பதில்லை
கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்

Wednesday, April 18, 2018

குறுங்கவிதை - மரணதண்டனை


சாலை மறியல் செய்ததால்
மரண தண்டனை கிடைத்தது-
ஆலமரத்திற்கும் அதில் வாழ்ந்த
ஆயிரம் கிளிகளுக்கும்

Sunday, January 14, 2018

சர்க்கரைப் பொங்கல்

பொங்கலுக்கு விடுப்பு இல்லாததால் ஒரு நாள் பயணமாக அப்பா அம்மாவைப் பார்த்துவிட்டு வர அதிகாலையில் ஊருக்குக் கிளம்பினோம்.

வழியில், 108 திவ்விய தேசங்களில் ஒன்றான திருப்புட்குழியில் விஜயராகவப் பெருமானை தரிசிக்கலாம் என்று வண்டியை நிறுத்தினோம். வண்டிக்கு டோக்கன் போட்ட பெரியவரிடம் பக்கத்தில் ஏதாவது தேநீர்க்கடை உள்ளதா என்று கேட்டோம். இல்லை என்றதால் டோக்கன் போட்டுவிட்டு கோயிலுக்குச் சென்றோம். கோயிலில் பராமரிப்புப் பணி நடப்பதால் மூலவர் சன்னதி மூடப்பட்டிருந்தது. உற்சவரை தரிசித்துவிட்டு வரும்போதுதான் தாயார் சன்னதி திறந்திருப்பதைக் கண்டோம். தாயாரிடம் பெருமாளின் விண்ணப்பத்தைச் சேர்த்துவிட்டுப் புறப்பட்டோம்.

வண்டியை எடுக்கும்போது டோக்கன் போட்ட பெரியவர் ஓடி வந்தார். ஐயா முன்னாடியே பணம் கொடுத்திட்டேனே என்பதற்குள் "இந்தாங்க பிரசாதம். பார்த்து வண்டி ஓட்டுங்கள்" என்று ஒரு பையைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.

கிட்டத்தட்ட இரண்டு அல்லது மூன்று தொன்னைகளில் நிரம்பும் அளவிற்கு சூடான சர்க்கரைப் பொங்கல் அதில் இருந்தது. கோயில் பணியாளர் என்பதால் அவர் பங்காகப் பெற்ற காலைப் பிரசாதம்தான் அது என்று எண்ணுகிறேன். டீக்கடை இல்லை என்று சொல்லிவிட்டோமே இதையாவது சாப்பிடட்டும் என்ற மனித நேயத்தால் தன் பங்கைக் கொடுத்தாரோ என்று நெகிழ்ந்தோம்.

மனித நேயம் தவிர்த்து ஆன்மிக நோக்கில் இதைப் பார்த்தால் பசியோடு வந்து தம்மைத் தரிசித்த பிள்ளைகளுக்குத் தாயாரின் கருணையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. இல்லை தனது சன்னதி மூடியிருந்ததால் தரிசனம் கிடைக்காமல் வருந்தியிருப்போமோ என்று விஜயராகவப் பெருமாள் தான் ஆறுதல் செய்தாரோ? இல்லை நேற்று மார்கழி முடிகிறதே என்று அவசரமாய் திருப்பாவை முப்பது பாக்களையும் படித்ததற்கு ஆண்டாளின் பரிசுதானோ?

எப்படியோ, நெய் சொட்டச் சொட்டச் சூடான சர்க்கரைப் பொங்கல் அதிகாலை முதல் அன்னமாக இந்த பொங்கல் நன்னாளில் எங்களுக்கு வாய்த்ததில் மனம் நிறைந்தது.

அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

Thursday, January 11, 2018

முந்திவிரித்த பாடல்


முந்தி விரித்த செம்பட்டுக் கம்பளத்தில்
சேற்றுக் கறை பூசி நீ செருக்காகப் போனாயோ?

முந்தி விரித்த நம் முன்னோரின் வாய்ச்சொற்கள்
சிந்தி விழும் உன் செவியில் சேர்க்காமல் போனாயோ?

முந்தி விரித்த கொடும் கருநாகப் படம்போல
சீறி விழும் வார்த்தைகளில் விஷம் கக்கிப் போனாயோ?

முந்தி விரித்த துண்டில் வந்து விழும் காசெல்லாம்
சிதறாமல் சேகரித்து சீட்டியடித்துப் போனாயோ?

முந்தி விரிந்த சபை சேர்ந்திருந்த சான்றோரை
மந்திகள் என்று நீ மதி மயங்கிப் போனாயோ?

முந்தி விரிந்த உன் வான விதானம்விட்டு
மஞ்சள் போர்வையின் கீழ் வாடகைக்குப் போனாயோ?

அடிக்கரும்பு

மங்கி கேப்பை மாட்டிக்கிட்டு
மங்கலிலே கோலமிட்டு
பொங்கி வச்ச பொங்கலைப் போல்
பல்லைக் காட்டி இளிக்குறேனே
மச்சான்,
கல்லுளி மங்கனைப் போல்
கண்டுக்காம நிக்குறியே..

அடியே,
உறங்கி நான் நிக்கவில்லை
கெறங்கிப் போய் கவுந்துப் புட்டேன்....
அரும்புபோல பல்ல வச்சி
இரும்புபோல கரும்புக் கழி
எப்படி நீ கடிப்பேன்னு
ரோசனை நான் செய்யுறேன்டி

அடிக்கரும்பு வேரெல்லாம்
ஆசை மச்சான் மீசையின்னு
கடி கடின்னு கடிச்சிடுவேன்
கலங்காதே ராசாவே

சால்சாப்பு சொல்லாதே
சட்டுபுட்டுனு உரிச்சுத் தாரேன்
சாறெல்லாம் உறிஞ்சிப்புட்டு
சக்கரையா சுத்தி வாடி

Saturday, October 7, 2017

சபாபதி சார்!


அமரர் டி வி ஆர் நினைவு சிறுகதைப் போட்டி2017-ல் இரண்டாம் பரிசு வென்ற எனது சிறுகதை - இன்றைய
(08 10 2017) தினமலர் வாரமலரில் வெளியாகியுள்ளது.
http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=39466&ncat=2

--------------------------------------------------------------
ரிலிருந்து மாமனாரும், மாமியாரும் வந்தாலே, கண்மணிக்கு மனதில் பதற்றம் தொற்றிக் கொள்ளும். காரணம், பிரச்னை அவளுக்கும், அவர்களுக்கும் அல்ல; அவள் கணவன் கண்ணனுக்கும், மாமனார் சபாபதிக்கும் தான். அப்பாவும், பிள்ளையும் ஏதாவது வாக்குவாதம் செய்வதும், மாமியாரும், மருமகளும் அவர்களைச் சமாதானப்படுத்துவதும், அவர்கள் இங்கு வரும் போதெல்லாம் நடப்பது, வாடிக்கை.
வழக்கமான, மருத்துவ சோதனைக்காக, ஊரிலிருந்து அவர்கள் வந்து இறங்கியதுமே, ஒரு வாக்குவாதம் ஆரம்பித்துவிட்டது; அது முடிந்து, மருத்துவமனைக்குச் சென்று வந்த பின், இப்போது, மாலையில் தான், ஒருவாறு வீட்டில் அமைதியான சூழல் நிலவுகிறது.

ந்த நேரம் பார்த்து, வீட்டுக்கு வந்த பழம் விற்பவரை, உட்கார வைத்து பேசிக் கொண்டிருந்தார், மாமனார்...
''உன் பெயர் என்னப்பா?''
''ஏழுமலை சார்...''
''ஊர்...''
''திருப்பத்தூர் பக்கம்...'' என்று ஒரு கிராமத்தின் பெயரைச் சொன்னார்.
''அட நம்ம ஊர் பக்கம் தான்... நான், உங்க பக்கத்து ஊர்ல தான் ஹையர் செகண்டரி ஸ்கூல்ல, கணக்கு வாத்தியாரா இருந்தேன்; சபாபதி வாத்தியார்ன்னா எல்லாருக்கும் நல்லா தெரியும்...'' என்றார்.
அவர்கள் பேசுவதை பார்த்து, கடுப்பானான், கண்ணன். மீண்டும் ஏதாவது பிரச்னை வெடிக்குமோ என்று பயந்த கண்மணி, கண்ணனை, உள் அறைக்கு அழைத்து, ''அவங்க ஏதாவது பேசிக்கிறாங்க; நீங்க இங்கேயே இருங்க...'' என்றாள்.
''பழம் விற்பவர உட்கார வைச்சு, குசலம் விசாரிக்கணுமா...''
''பெரியவங்க அப்படித்தான் இருப்பாங்க... இத்தனை நாள் பழம் வாங்குறோமே... என்னைக்காவது அவரோட பேரை கேட்கணும்ன்னு நமக்கு தோணிச்சா...'' என்றதும், ''அது சரி...'' என்று பம்மினான்.
''கண்மணி... எனக்கும், ஏழுமலைக்கும் டீ கொண்டாம்மா...'' என்று குரல் கொடுத்த சபாபதி, ஏழுமலையிடம், ''என் மருமக போடும் டீ அருமையா இருக்கும்...'' என்றார்.
''சரி மாமா...'' என்று எழுந்தவளின் பின், கண்ணனும் அடுக்களைக்குள் நுழைந்தான். வழியில், அப்பாவிடம், ''ஏம்பா, அம்மா கோவிலுக்குப் போகணும்ன்னு சொன்னாங்களே... கிளம்பலயா...'' என்றான், அப்போதாவது பேச்சை முடித்து, பழம் விற்பவரை வெளியே அனுப்பட்டுமே என்று!
''அம்மா அசதியா தூங்குறாளேடா... அவ எழுந்துக்கட்டும்,'' என்றவர், ஏழுமலையிடம் பேச்சை தொடர்ந்தார்.
டீ போடுகையில், காதில் விழுந்த மாமனாரின் பேச்சு, மீண்டும் கண்மணிக்கு பயத்தைக் கிளப்பியது.
''பையனோட காலேஜ் பீஸ் கட்டுறதுக்கு ஏம்பா தண்டல்காரன் கிட்ட கடன் வாங்குற.. வட்டியக் கணக்குப் போட்டுப் பார்த்தால், மாதம் ஐயாயிரம் ரூபாய் வருமே... நீ, சம்பாதிக்கிறதுல பாதிக்கு மேல் வட்டி கட்டினா, குடும்பத்தை எப்படி சமாளிப்பே, அசலை எப்படி கட்டுவே...'' என்றார்.
''என்ன செய்றது சார்... அவசரத்துக்குப் பணம் வேணும்ன்னா, நாம இருக்கிற இடத்துக்கு வந்தே குடுத்துட்டுப் போறாங்க; தினம் அவங்களே வந்து தண்டல் வசூல் செய்துக்குறாங்க. அதனால, வட்டி கணக்கெல்லாம் பாக்குறதில்ல...'' என்றார்.
''கணக்கு பாத்து தான் கடன் வாங்கணும்; பேங்குல குறைவான வட்டிக்கு கடன் தராங்க; பேங்குல வாங்கலாமில்ல...''
''நான், பழம் வாங்க போறதா, வியாபாரத்துக்கு போறதா... இல்ல பேங்குல போயி நிக்கிறதா... பேங்குக்காரன், ஒத்த ரூபாய் கொடுக்கணும்ன்னா கூட, அதுக்கு, சொத்து மதிப்பு, அத்தாட்சின்னு கேட்பான். ஆனா, எந்த அத்தாட்சியும் இல்லாம, நம்ம இடத்துக்கு வந்து கடன் தரான், தண்டல்காரன். இது தான் சார் நமக்கு வசதி... இப்படியே பழகிப் போச்சு...'' என்றான்.
''யாராவது தெரிஞ்சவங்ககிட்ட கம்மி வட்டிக்கு வாங்கலாம் இல்லன்னா வட்டியில்லாம கடன் தர்ற நல்லவங்க இருப்பாங்க; அவங்ககிட்ட கேட்கலாமே...'' என்று இழுத்தார்.
அடுத்து, அவர் ஏதாவது பேசுவதற்குள், டீயைக் கொடுத்து, பேச்சை மாற்றினாள், கண்மணி.
டீயைக் குடித்து, கிளம்பினார், பழம் விற்பவர். தூங்கி எழுந்து, தயாராக வந்த மனைவியுடன் கோவிலுக்கு கிளம்பினார், சபாபதி!

நிம்மதி பெருமூச்சு விட்ட கண்ணனை பார்த்து, ''என்ன பெருமூச்சு விடுறீங்க... பழம் விற்பவருக்கு மாமா பணம் கொடுத்துடுவாருன்னு பயந்துட்டீங்களா...'' என்று சீண்டினாள், கண்மணி.
''கொடுப்பாரு...கொடுப்பாரு...'' என்று உறுமினான், கண்ணன். காலையில் நடந்த வாக்குவாதம் அவளுக்கு நினைவுக்கு வந்தது.

காரிலிருந்து இறங்கிய மாமியாரைப் பார்த்ததும், 'என்னங்க அத்தை... 'கவரிங்' வளையல போட்டிருக்கிறீங்க...' என்று கேட்டாள், கண்மணி.
'பேசாம இரு' என்பது போல், கண் ஜாடை காண்பித்த பின்தான், கேள்வியின் விபரீதம் புரிந்தது கண்மணிக்கு!
எதிர்பார்த்தது போலவே விசாரணையை ஆரம்பித்தான் கண்ணன்...
'ஏம்மா... உன் வளையல் என்ன ஆச்சு?'
'அது வந்துடா...' என்பதற்குள், 'டேய்... எல்லாத்துக்கும் உனக்கு விளக்கம் வேணுமா... எந்த வளையல் போட்டா என்னடா...' என்று எகிறினார், சபாபதி.
'சும்மா குதிக்காதீங்கப்பா... அம்மா வளையல் எங்க...' என்று பதிலுக்கு கோபமானான், கண்ணன்.
'பேங்கில அடகு வச்சுருக்கு...' என்றார்.
'அதுக்கு என்ன அவசியம் வந்தது... ஏன் என்கிட்ட சொல்லல...'
'எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லணுமா... போய் வேலையப் பாரு...'
இருவரையும் சமாதானப்படுத்த முயற்சித்த அம்மா, 'இல்லடா கண்ணா... நான் தான் குடுத்தேன்; பரசுராம மாமாவுக்கு வீட்டிற்கு தளம் போட அவசரமா பணம் தேவைப்பட்டது. அதிக வட்டிக்கு ஏன் வெளியில கடன் வாங்கணும்... பேங்குல வச்சு குடுக்கலாம்ன்னு கொடுத்தோம்...' என்றாள்.
'கொடுத்தோம்ன்னு சொல்லாத... சார் கொடுத்தார்ன்னு சொல்லு. மாமாவாம் மாமா... பால்காரர் எனக்கு மாமாவா... அக்கம் பக்கத்துல இருக்குறவங்கள எல்லாம் உறவு சொல்லி அழைச்சா, இப்படித்தான் பணம் கேட்பாங்க... உதவி செய்ய வேண்டியது தான் அதுக்குன்னு ஒரு அளவு இல்ல... யாரோ வீடு கட்ட, எங்க அம்மா, 'கவரிங்' வளையல் போடணுமா...'
'டேய்... அது என்ன நீ செஞ்சு போட்ட வளையலா... நான் சம்பாதிச்சு, என் பொண்டாட்டிக்கு வாங்கிப் போட்டது...' என்ற சபாபதி, மனைவியை பார்த்து, 'அப்பவே சொன்னேன்... ஊர்ல இருக்குற டாக்டரை பாத்தா போதும்ன்னு கேட்டியா... உசத்தியான டாக்டரை பார்த்து, எதுக்கு உயிரை புடிச்சு வைச்சுக்கிட்டு இருக்கணும்...' என்றார், கோபத்துடன்!
'டென்ஷன் ஆகாதீங்க... பிரஷர் ஜாஸ்தியா ஆகிடும்...' என்று, அவரைச் சமாதானப் படுத்த முயற்சித்தாள், அம்மா.
'உண்மைய சொன்னா கோபம் பொத்துக்கிட்டு வருதோ... நீங்க சம்பாதிச்ச நகையா இருந்தா கேள்வி கேட்க எனக்கு உரிமை இல்லயா... போறவன் வர்றவனுக்கு எல்லாம் எங்க அம்மா நகையில உரிமை இருக்கு; நான் கேட்கக்கூடாதா...' என்ற கண்ணனை, இழுத்துச் சென்றாள் கண்மணி.
சாதாரணமாய் தான் கேட்ட கேள்வி, இப்படி சண்டையை உருவாக்கி விட்டதே என்று வருத்தப்பட்டவள், 'என்னங்க... டாக்டர், 'செக் - அப்'க்கு நேரம் ஆகுது; நீங்க, ஏதோ ஆபீஸ் வேலை இருக்குன்னு சொன்னீங்களே... அதை, செய்யுங்க... நான், அத்தை, மாமாவை, 'செக் - அப்'க்கு கூட்டிப் போறேன்...' என்று கிளம்பிச் சென்றாள்.

கோவிலிலிருந்து திரும்பிய தன் பெற்றோரிடம், இப்போது, சமாதானமாக பேசினான், கண்ணன்.
''அப்பா... நான் பணம் தர்றேன்; முதல்ல அம்மாவோட வளையல மீட்டுப் போடுங்க,'' என்றான்.
சபாபதி, ''சரிடா...'' என்று சொல்லவும், ''எதுக்குடா, வேணாம்...'' என்று மகனிடம் சொல்லியபடியே, மருமகளை பார்த்தார், மாமியார்.
''பரவாயில்ல அத்தை...'' என்றாள் கண்மணி.
இப்படி, முதலில் முட்டிக் கொள்வதும், பின் ஒட்டிக் கொள்வதுமாக, ஒரு வாரத்திற்கு பின், ஊருக்கு திரும்பினர், சபாபதி தம்பதியர்.

லுவலகத்திலிருந்து வீடு திரும்பிய கண்ணன், ஷூவைக் கழற்றும் போது, ''சார்...'' என்றபடி உள்ளே நுழைந்தார், ஏழுமலை.
''வாங்க ஏழுமலை...'' என்று, பழம் விற்பவரை, கண்ணன் பேர் சொல்லி அழைத்தது, அவர்கள் இருவருக்குமே வித்தியாசமாக இருந்தது.
''இந்தாங்க சார் பேயன் பழம்; நீங்க ஆபீஸ் விட்டு வர்றத பாத்தேன்; அதுதான் உடனே கொடுத்துடலாம்... இல்லன்னா வேறு யாராவது கேட்டு வந்துருவாங்கன்னு கொண்டு வந்தேன்...'' என்றார்.
''நேத்து தானே வாழைப் பழம் கொடுத்தீங்க...'' என்றபடி ஹாலுக்கு வந்தாள், கண்மணி.
''இல்லீங்கம்மா... ரெண்டு நாளைக்கு முன், சாரோட அப்பா, பேயன் பழம் கிடைச்சா, உங்களுக்கு கொண்டு வந்து கொடுக்கச் சொன்னார். வெயிலுக்கு நல்லது; அம்மை வந்தவங்க கூட உடல் குளிர்ச்சிக்கு சாப்பிடுவாங்க; இப்பத் தான் கிடைச்சது... அதான் கொண்டு வந்தேன்,'' என்றார்.
''எவ்வளவு ரூபா...'' என்று கேட்டான், கண்ணன்.
''பணம் வேணாம் சார்... எப்பவும் என்கிட்டத்தான் பழம் வாங்குறீங்க... இது, உங்கப்பா சொன்ன மரியாதைக்காக,'' என்று சொல்லி, திருப்பியவரை, கூப்பிட்டு, ''அன்னைக்கு பையனோட காலேஜ் பீஸ் கட்டணும்ன்னு அப்பாகிட்ட பேசிட்டு இருந்தீங்களே... கட்டிட்டிங்களா...'' என்று கேட்டான்.
''இன்னும் இல்ல சார்... தண்டல்ல சொல்லியிருக்கேன்...''
ஒரு வினாடி யோசித்தவன், ''தண்டல் வேணாம்; வட்டியில்லாம நான் தர்றேன். அப்பப்போ உங்களால எவ்ளோ முடியுமோ, கொடுத்து அடைச்சிடுங்க,'' என்றான்.
''ரொம்ப நன்றி சார்... பையன வந்து உங்கள பாக்கச் சொல்றேன்,'' என்று கிளம்பினார், ஏழுமலை.
தன் செய்கையை தானே நம்ப முடியாமல், கண்மணியை எப்படி எதிர்கொள்வது என்று புரியாமல், கழற்றி வைத்த ஷூவையே பார்த்தான், கண்ணன்.
லேசாகத் தொண்டையை செருமினாள், கண்மணி. அவன் நிமிர்ந்து பார்க்க, அவனை குறுப்பாக பார்த்து சிரித்தாள், கண்மணி.

Wednesday, August 30, 2017

அமைதிச்சோலை அகிலமாக

மிருக மனதை மிருதுவாக்கும்
மதங்கள் யாவும் புனிதமே
மனித மனதில் மனிதம் வளர்க்கும்
வரிகள் யாவும் வேதமே

தேசம் யாவும் கூடிவாழ
நேசபூமி உதயமே
கடவுள் யாவும் கூடிப்பேச
மதங்கள் யாவும் சொந்தமே

தெய்வ சிந்தை செய்யும் யாரும்
மனித சிந்தை மறப்பதோ?
தெய்வ நிந்தை செய்யும் யாரும்
மனித நிந்தை புரிவதோ?

பகைமை உணர்வு மறையும்போது
கரைகள் இரண்டும் பசுமையே
அமைதிச்சோலை அகிலமாக
மதங்கள் நதிகள் ஆகுமே

Tuesday, August 8, 2017

சபரியின் ஆலயமே

சபரியின் ஆலயமே என்றும்
சாமிகள் சரணாலயம்
சரணங்கள் ஆயிரமே எங்கள்
நாவினில் பாராயணம்
ஹரிஹர புத்திரனே எங்கள்
விழிகளில் அருணோதயம்
அரணெனக் காத்திடுவான் ஐயன்
அருள் தரும் கருணாமிர்தம்

நோன்புகள் நாமிருந்தோம் ஐயன்
மாண்பினைப் பாடிவந்தோம்
தேனடை ஈக்களென ஐயன்
கோயிலை நாடி வந்தோம்
வானுயர் ஜோதி கண்டோம் நெஞ்சில்
காரிருள் நீங்கக் கண்டோம்
கானுறை கோயிலிலே எங்கள்
ஊனுறை உயிரும் கண்டோம்

Wednesday, July 12, 2017

பாய் போட்ட கார்மேகம்



மயிற்றோகை விரித்தாட மதுவூறும் மலராட
எழில்மேகம் விரைந்தோடி வழியெங்கும் நடமாட
மரமெங்கும் இலைதோறும் மழைச்சோறு பரிமாற
காய்ச்சீரும் கனிச்சீரும் வரும்நாளில் வரவாக
கரையெங்கும் அலைமோதி வயல்நீரும் தடுமாற
களச்சேற்றில் விவசாயி இளநாற்றை அடியூன்ற
பாய்போட்ட கார்மேகம் கனவாகக் கரைந்தாலும்
தாய்மாட்டின் மடிபோலப் பாலாகப் பொழியாதோ?
தாய்நாட்டின் தாகத்தைத் தண்ணீரால் தீர்க்காதோ?