Friday, March 20, 2015

சின்னச் சின்னச் சின்ன சிட்டு சிட்டு

சின்னச் சின்னச் சின்ன சிட்டு சிட்டு
சிறகை விரித்துத் தட்டு தட்டு
கிடைக்கும் புது மெட்டு மெட்டு
பாட்டுப் பாடு வட்டம் இட்டு

வீட்டின் உள்ளே சுற்று சுற்று
விசிறி இருக்கு பார்த்து பார்த்து
அரிசி இருக்கு கொத்து கொத்து
சாதம் இருக்கு பாப்பாவுக்கு

கண்ணாடி முன் நின்றுகொண்டு
சிங்காரமும் செய்துகொண்டு
உனக்கு நீயே முத்தமிட்டு
உல்லாசமாய் வாழ்ந்துவிடு

எதிரி எவரும் வீட்டில் இல்லை
குஞ்சைத் திருட யாரும் இல்லை
பல்கிப் பெருகி முன்பு போலே
கண்கள் நிறைய காட்சி கொடு

சின்னச் சின்னச் சின்ன சிட்டு சிட்டு
சிறகை விரித்துத் தட்டு தட்டு
கிடைக்கும் புது மெட்டு மெட்டு
பாட்டுப் பாடு வட்டம் இட்டு

#சிட்டுக்குருவிகள்தினம்

Tuesday, March 17, 2015

அழகோவியம்

கொண்டை குலுங்கிடக் குதித்துக் குளம்பொலி
        செண்டை அடித்திடும் புரவிகள் பூட்டி
கெண்டை சிலம்பெனச் சிலும்பிட அலைஎழும்
        பொன்னி நதிக்கரைப் புழுதியை மாற்றி
அண்டம் நிறைத்து அழகோவியம் தீட்டிடும்
        பெண்ணின் விழிச்சுடர் சோதியும் போற்றி
கண்டு வியந்தனர் அரண்மனை நான்வர
        என்னெழில் ரதிமகள் ரதத்தில் ஏற்றி

Saturday, March 14, 2015

கூடையைக் குடுத்துவுடு

சந்தைக்குப் போனீங்கன்னா மாமா
சாமந்திப் பூ வாங்கி வாங்க

சாமந்திப் பூவெதுக்கு மானே
செண்டு மல்லி வாங்கி வாரேன்

செண்டு மல்லிய வைக்க மாமா
கொண்டை ஊசி வாங்கி வாங்க

கொண்டை ஊசியோட கண்ணே
கண்டாங்கியும் வாங்கி வாரேன்

கண்டாங்கி எனக்கு மாமா
துண்டு வேட்டி உங்களுக்கு

சுருக்கா போயிவாரேன்
சுருக்குப் பைய அவுத்து
சில்லறைய நீயும் குடு

வாங்கப் போற பொருளை எல்லாம்
உள்ளத்துல கொண்டு போலாம்
வாங்குன பொருளை எல்லாம்
உள்ளங்கையிலா கொண்டு வருவீங்க?

குத்திப் பேசாத புள்ள கூடையைக் குடுத்துவுடு

வலக்கையின் விருப்பம்


மூன்று முடிச்சு போட்டு
பின்புறமாய்ச் சுற்றி
எட்டி உனது நெற்றியில்
பொட்டுவைக்க விருப்பமடி
என் வலக்கரத்திற்கு…
இன்னும் கூடி வரவில்லை
அதற்கான நேரம்

துப்பட்டாவைப் போல்
உன் தோள்மீது மெதுவாய்த்
தொட்டுப் படரவும்
காலம் வரவில்லை
என் கரத்திற்கு…

இப்போது அதன் சிறுவிருப்பம்
என்னவென்றால்
உனது இடக்கையின்
இடைவெளியில் இழுத்து
மடிமீது அழுத்தி நீ பிடித்திருக்கும்
புடவை முந்தானையைப்போல்
உன் கரம் பற்றியிருப்பதே..

Thursday, March 5, 2015

சீக்கிரமா வந்துவிடு

இங்கிட்டு நான் இருக்க
அங்கிட்டு நீ இருக்க
பொங்கிட்டு வரும் ஆசையைத்தான்
எங்கிட்டு நான் பங்கு வைக்க?

குளத்தங்கரைப் படிக்கட்டில்
சிலையாட்டம் குந்திவிட்டேன்
சில வார்த்தை உன்கிட்ட
சிரிச்சி நான் பேசினாத்தான்
உசுரு இருக்குதுன்னு என்
உடம்புகூட நம்பும்
உடனடியா வந்துவிடு

உன் நெத்தியிலே வச்சி விட
பொத்திவச்ச திருநீறு
உள்ளங்கையில் ஊறிப்
பசையாட்டம் ஒட்டிடிச்சி.
அசையாம வச்ச கையி
வெளங்காமப் போயிடும்னு
வெசனமா இருக்குதய்யா
வெரசா நீ வந்துவிடு

சாயங்காலம் ஆயிடிச்சி
சொர்ணக்கிளி காணமின்னு
சிறுக்கி ஆத்தா
சித்தப்பனை ஏவுமுன்னே
சீக்கிரமா வந்துவிடு
சிரிச்ச முகம் காட்டுறேன்.