Friday, October 9, 2015

என்னிலே பாதியில்லை

"வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ..." என்று பாடிக் கொண்டிருந்த என்னை, 'காதலிக்கு பதில் மனைவியின் பிரிவாற்றாமையில் பாடும் பாடலாக இதைப் பாடக்கூடாதா?' என்று ஒருவர் கேட்டுவிட்டார். 

நமக்குதான் ரீமிக்ஸ் செய்வது அல்வா சாப்பிடுவது ஆயிற்றே... 
மனித குலத்தின் பாதியான மனைவி குலத்திற்கு இந்தப் பாடலைச் சமர்ப்பிக்றேன்

-------------------------------------------------------------------------------------------------------
வண்ணம் கொண்ட வெண்ணிலவே, வானம் விட்டு வாராயோ
என்னிலே பாதியில்லை. உன்னைத்தொட ஏணியில்லை

பக்கத்தில் நீயும் இல்லை. பால் பழங்கள் இனிக்கவில்லை
சொந்தமாய் சமைக்கவில்லை.. சாதமும் மீதமில்லை.. 
HSB -யில் ருசியுமில்லை சங்கீதாவில் சுவையுமில்லை
அன்னை அரவிந்தரிலும் உன் கையின் மணம் காணவில்லை
நீயும் வந்து சேர்ந்துவிட்டால் உப்பு காரம் குறைவதில்லை

நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திரப் பூப்பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை நட்சத்திரம் வாடுதடி
அம்மா வீடு சென்றுவிட்டால் ஏம்மா என்னை நினைப்பதில்லை?
சும்மாவாச்சும் என்னையழைத்து பேசவுமா நேரமில்லை?
வீடு வந்து சேர்ந்த பின்னே வைய மட்டும் மறப்பதில்லை 

வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ
என்னிலே பாதியில்லை உன்னைத்தொட ஏணியில்லை
----------------------------------------------------------------------------------------------- 

பி.கு:தனது பாடலை இப்படி உட்டாலக்கடி செய்து எழுதிய எனக்கு கவிஞர் வைரமுத்து அவர்கள் ஏதேனும் பரிசு கொடுப்பாரா என்று யாரவது கேட்டுச் சொல்லுங்கள்!

Thursday, October 1, 2015

களிகொண்டு நிறைவாக

வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் “தமிழ்நாடு அரசுதமிழ் இணையக் கல்விக் கழகம்“ ...இணைந்து நடத்தும்...உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டியில் வகை-(5) மரபுக்கவிதைப் போட்டி : இளைய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் வீறார்ந்த எளிய மரபுக் கவிதை எழுதி வெளியிட நேரம் நிறைவடைந்துவிட்டாலும் வருத்தமில்லாமல் விருத்தமொன்று எழுதினேன்.. நேரம் கிடைக்கையில் இதை விரித்தும் எழுத உத்தேசம்!

ஈரெட்டு வயதினில் இளமையின் திறனோடு 
     நீர்விட்டு வளர்த்திடும் பயிராக   
நேரென்று நிமிர்ந்திடு நிலைமைகள் மாற்றிடு    
     நேற்றோடு குனிந்திடும் குணம்நீங்க 
வேரென்று பரவிடும் வீரத்தை விளைத்திடு 
     யாருக்கும் எதிர்நிற்கும் துணிவாக  
பாரெட்டிப் பரவிடும் பாராட்டிப் புகழ்வரும்  
     நீபெற்ற பெயர்மாறும் உயர்வாக 

ஏகட்டும் வீணது இணையட்டும் இனியது 
      நீயெட்டும் தொலைவின்று அருகாக 
பூகட்டும் நாரது பரமன்தோள் ஏறுது 
      நீசுற்றும் சுற்றங்கள் நனிதாக 
போகட்டும் போனது ஆகட்டும் ஆனது
      நீசெல்லும் வழியென்றும் புதிதாக  
 நீகட்டும் கொடியுயர் வான்முட்டிப் பறக்கட்டும்
      கைகொட்டி களிகொண்டு நிறைவாக