Thursday, November 24, 2016

புத்தி உள்ள மனிதன் எவனும்

புத்தி உள்ள மனிதன் எவனும் வட்டிக்கு வாங்குவதில்லை
வட்டி நிறைய கட்டும் மனிதன் புத்திசாலி இல்லை

பணம் இருக்கும் மனிதனிடம் கடன் இருப்பதில்லை
கடன் இருக்கும் மனிதனிடம் பணமும் சேர்வதில்லை
கடமை என்ற பெயரினிலே கடனை வாங்கிக் குவிப்பான்
கௌரவத்தின் பெயரினிலே மானத்தையே இழப்பான்

அவசரத்தில் வாங்கும் கடனை அவசியமாய் நினைப்பான்
அலட்சியத்தால் அதிக வட்டிப் புதைகுழியில் நடப்பான்
ராப்பகலாய் அவன் உழைப்பான் வியர்வையிலே குளிப்பான்
ஆப்படித்து வால் நுழைத்த குரங்கைப் போல முழிப்பான்

நல்லவர்கள் கொடுக்கும் கடனை நாமம் போட நினைப்பான்
பொறுக்கியிடம் வாங்கும் கடனைப் பொறுப்புடனே அடைப்பான்
கருப்புப்பண முதலைக்குத்தான் கறிசோறு படைப்பான்
கழுத்தை நீட்டி வந்தவளைப் பட்டினி போட்டுப் படுப்பான்

Friday, November 18, 2016

பருவ மழை வேண்டுதல்

சஞ்சீவி மலை சுமந்த அனுமனே
எம் ஜீவன் பிழைக்கவும் நீர் அருள்வீர்
மலை போன்ற மேகங்கள் - உம் தந்தை
வாயுவிடம் தந்தனுப்புங்கள்

பள்ளி கொண்ட பெருமானே
கொள்ளி பற்றுமோ எம் பயிர்களை?
கடலினைக் கடைந்தெடுத்து
அமிர்த மழை தாருங்கள்

ஈசனே நீல கண்டரே
பாசம் வைப்பீர் பரமனே
கரியமில நஞ்செல்லாம்
காற்றினிலே நீக்கிவிட்டு
துரிதமாய்த் தாருங்கள்
பருவ மழை மேகங்கள்

ஏழை விவசாயியும் சிலுவையில் மரிப்பதோ?
செந்நீர் சிந்திய பரம பிதாவே உமது
பரிசுத்த ஆவியால் நன்னீர் மேகங்கள் நல்குவீரே

கடனுக்கு வட்டி பாவம் என்ற நபிகளே
பயிர் செய்யக் கடன் வாங்கி
உயிர் மாய்ப்பதா ஒரு விவசாயி?
அல்லாவின் கருணையால்
எல்லோர்க்கும் பெய்யட்டும் மழை

ஆசையினால் துன்பமென்றீர் ஐயா
வயிற்றுப் பசி ஆசையா துன்பமா?
புத்தம் புது மேகங்கள் தாருங்கள் புத்தரே

சாய் பாபா விவசாயி பாபா

கீதாஞ்சலி பாரதி பாணியில் - பாடல் 23

சந்தம் : ஆசை முகம் மறந்து போச்சே

மருகி மருளும் அந்த வானம் - புயல்
திரளும் இரவில் உந்தன் பயணம்
உருகும் எனக்கும் இல்லை உறக்கம் - இருள்
திறந்து திறந்து கண்கள் தேடும்
உருவம் எதுவும் இல்லை அங்கே - உந்தன்
வழியும் தெரியவில்லை எங்கே?
கரிய நதிக்கரையின் வழியோ? - அடர்
வனத்தின் விளிம்பின் வழி தானோ?
இனம் புரியா இருட்டு வழியோ - என்னைக்
காண நீ வரும் வழி ஏதோ?

Tagore's English version:

Art thou abroad on this stormy night on thy journey of love, my friend? The sky groans like one in despair.
I have no sleep tonight. Ever and again I open my door and look out on the darkness, my friend!
I can see nothing before me. I wonder where lies thy path!
By what dim shore of the ink-black river, by what far edge of the frowning forest,
through what mazy depth of gloom art thou threading thy course to come to me, my friend?

Friday, November 4, 2016

அம்மாவைப் பார்த்தீங்களா?

நம் முதல்வர் அவர்களின் உடல்நிலை குறித்த உண்மைகளை அறிய தமிழகமே காத்திருக்கிறது. அவர் நலம்பெற எத்தனையோ வேண்டுதல்கள்.

முதல்வரின் உடல்நிலை பற்றி எண்ணும் போதெல்லாம் "அம்மாவைப் பார்த்தீங்களா?" என்று அன்னக்கிளி பாடலின் மெட்டில் சில வரிகள் என் மனதினுள் ஓடும்.

"அம்மாவைப் பார்த்தீங்களா? அப்போலோ ஆஸ்பிடல்ல
நர்ஸக்கா நீயும் பார்த்தாக்கா சொல்லு - அம்மா
சாப்பிட்டாங்களா தெரியலியே - கண்ணு
முழிச்சாங்களா தெரியலியே

அஞ்சாறு வாரம் ஆனாக்கா என்ன?
அம்மா உடம்பு நல்லானா போதும்
அஞ்சாறு வாரம் ஆனாக்கா என்ன?
அம்மா உடம்பு நல்லானா போதும்
புது ரத்தத்தோடு புது வேகத்தோடு
அம்மாவும் வந்து
தமிழ்நாட்டை ஆள்க
தமிழ்நாட்டை ஆள்க "

தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் ஒரு நாள் பணியாற்ற இயவில்லை என்றாலும் அது எவ்வளவு பெரிய இழப்பு? எத்தனை நலத்திட்டங்கள் எத்தனை முடிவுகள் தேங்கி நிற்கும் என்று எண்ணினால் பெரும் வருத்தத்தைத் தருகிறது. முதல்வர் விரைவில் குணமடைய முருகப் பெருமானை வேண்டி வணங்குகிறேன்.

சில நாட்களுக்கு முன் ஒரு கடைமுன்னால் நின்று கொண்டிருந்தபோது ஒரு மூதாட்டி என்னிடம் ஐந்து ரூபாய் கேட்டார். நான் எடுத்துக் கொடுத்தேன். என் மனைவியும் அவர் பையிலிருந்து பணத்தை எடுக்க முற்படும்போது அந்த மூதாட்டி "ஐந்து ரூபாய் போதுமம்மா நான் அம்மா உணவகத்தில் சாப்பிட்டுக் கொள்வேன்" என்றார்.

தர்மம் தலை காக்கட்டும்.

Wednesday, November 2, 2016

ஒத்த ரூபா தாரேன்

மாநகரப் பேருந்தில் வந்துகொண்டிருந்தேன்.
ஒரு பயணி 11 ரூபாய் சீட்டுக்கு 10 ரூபாய் கொடுத்துவிட்டு கூட்டமாய் இருந்ததால் முன்னே நகர்ந்து சென்றார்.

நிறைய நேரம் ஆகியும் அந்தப் பயணி மீதி பணம் ஒரு ரூபாய் தராததால் நடத்துனர் கடுப்பாகி "ஏம்பா எங்க முன்னாடி போயிட்டே.. இன்னும் ஒரு ரூபாய் கொடு..." என்றார். அந்தப் பயணி "இதோ தரேன்" என்று பையில் துழாவிவிட்டு "பத்து ரூபாயா இருக்கு பரவாயில்லையா?" என்றார். "நீ நூறு ரூபாய் நோட்டாயிருந்தாலும் கொடு. மீதி தருகிறேன்" என்றார் மீண்டும் கடுப்பாக.

பயணி ஒருவழியாய் ஒரு பத்து ரூபாய் தாளை வழியில் நிற்பவர்களிடம் கொடுத்தனுப்பினார்.

பணம் கையில் சேர்ந்ததும் நடத்துனர் சொன்னார்..........
"மீதியை இறங்குறப்போ வாங்கிக்கோ !!!!!"

#நடத்து(னர்)டா!