Friday, November 27, 2015

Thanksgiving Sale

நமது அமெரிக்க நண்பர்கள் Thanksgiving Sale-ஆன இன்றைய பொழுதில் தள்ளுபடி விலையில் பொருட்களைத் தேடி எப்படி ஓடியிருப்பார்கள் என்றொரு கற்பனை.... சரி, சரி, ஒப்புக்கொள்கிறேன்.. நான் அமெரிக்காவில் இருந்தபோது ஓடிய அனுபவமும்தான்!
(மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன மெட்டில்)

அலைந்தலைந்தே தேடும் பொருட்கள் எங்கே?
இங்கு விலை குறைவா? அங்கு விலை குறைவா? - என்று
அலைந்தலைந்தே தேடும் பொருட்கள் எங்கே?

எங்கிருந்தாலும் உன்னை நானறிவேன்
உன்னை என்னைப்போலே நூறு பேரறிவார்
எங்கிருந்தாலும் உன்னை நானறிவேன்
உன்னை என்னைப்போலே நூறு பேரறிவார்
பாரு என் முகம் பாரு பாவமாய்
பாரு என் முகம் பாரு பாவமாய்
எந்தன் cartக்குள் நீ ஏற வேண்டாமா?
எந்தன் cartக்குள் நீ ஏற வேண்டாமா?
நாடவா தேடவா ஓடவா வெறும் cart-ஐ ஓட்டவா?

அலைந்தலைந்தே தேடும் பொருட்கள் எங்கே?
இங்கு விலை குறைவா? அங்கு விலை குறைவா? - என்று
அலைந்தலைந்தே தேடும் பொருட்கள் எங்கே?

Target-டிலே உந்தன் விலை கேட்டேன் பின்பு
Walmart-டிலே உந்தன் நிலை கேட்டேன்
Target-டிலே உந்தன் விலை கேட்டேன் பின்பு
Walmart-டிலே உந்தன் நிலை கேட்டேன்
Aisle Aisle-ஆய் என்னை சுற்றவிட்டு
Aisle Aisle-ஆய் என்னை சுற்றவிட்டு
ஒரு ஓரத்திலே சென்று ஒளிந்ததென்ன?
நாடவா தேடவா ஓடவா வெறும் cart-ஐ ஓட்டவா?

அலைந்தலைந்தே தேடும் பொருட்கள் எங்கே?
இங்கு விலை குறைவா? அங்கு விலை குறைவா? - என்று
அலைந்தலைந்தே தேடும் பொருட்கள் எங்கே?

Wednesday, November 11, 2015

தவிர்க்கமுடியாத தீபாவளி

சின்னதாய் ஒரு ஸ்மைலி முதற்கொண்டு அழகிய படங்களுடனான வாழ்த்து மடல்களும் அலாரத்துடன் சேர்ந்துகொண்டு அலைபேசியை அதிகாலையிலேயே உசுப்பிவிட, உற்சாகமாவே விடிந்தது எனது தீபாவளி. மழை என்கிற காரணத்தினாலோ, தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் ஊருக்குச் செல்லவில்லை என்கிற காரணத்தினாலோ, தீபாவளி கொண்டாடுவதைத் தவிர்க்கமுடியவில்லை.

உறவினருடன் சேர்ந்து சாப்பிடுகையில் தவிர்க்க முடியாத உணவுப் பதார்த்தங்களும், அதிரசம் மற்றும் இனிப்பு வகைகளும் எனது உணவுக் கட்டுப்பாட்டை 'இன்று ஒரு நாள் மட்டும்' என்று தளர்த்திவிட்டன.

தீபாவளியன்று சூழல் மாசுபடுத்தும் வாண வெடிகளைத் தவிர்ப்பது என்ற கொள்கையுடன் இருந்த எனது மகனையும், நண்பர் ஒருவர் கொடுத்த சிவகாசி பரிசுப் பெட்டி 'இந்த ஒரு முறை' என்று தளர்த்திவிட்டது.

கம்பி மத்தாப்புகளை ஈரமண்ணில் நட்டுவைத்துக்கொளுத்தி இவைதான் நான் விடும் ராக்கெட்டுகள் என்று மகள் செய்த குறும்பையும் இங்கு பதிவு செய்துவிடுகிறேன்.

தொலைக்காட்சியை வெகுவாகத் தவிர்த்துவிட்டோம் என்றாலும் வேலை எதுவும் இல்லாத மதிய வேளையில் வேலை இல்லாப் பட்டதாரி படம் பார்த்தோம் (முன்பே பலமுறை பார்த்திருந்தாலும்). அதில் வரும் ஒரு வசனம் சிந்திக்கவைத்தது " முன்பெல்லாம், இல்லாதவங்க இருக்கிறவங்ககிட்ட திருடினாங்க.. இப்போதோ, இருக்கிறவங்க இல்லாதவங்ககிட்ட திருடறாங்க.."

இதில் நமது பங்கு ஏதாவது இருக்கிறதா தவிர்ப்பதற்கு? 

Friday, November 6, 2015

தீபாவளி நல்வாழ்த்துகள்

அதிரசம்போல் மின்னிடுமே
எண்ணெய் தேய்த்த மேனி
அடுக்கடுக்காய் முறுக்கு தட்டை
அடித்து நொறுக்கத் தீனி
தீபாவளி மருந்து சாப்பிட்டும்
விருந்து சாப்பிடலாம்
விருந்து சாப்பிட்டும்
மருந்து சாப்பிடலாம்
வெடிக்கின்ற வெடிகள்
வெற்றி முரசு கொட்டும்
வெடிக்காத வெற்று வேட்டும்
தோல்வி பழக வைக்கும்
மத்தாப்போ கம்பியோ
எதையாவது பற்றவைப்பதென்பது
யாருக்குத்தான் பிடிக்காது?!
ஏற்றிவைத்த தீபம் நமது
இல்லம் கோயிலாக்கும்
ஏற்றிவைத்த புன்னகையும்
இதழ்களை எழிலாக்கும்
புத்தாடை புதுப் படம்
குறைவிலாக் கொண்டாட்டம்
நரகாசுரன் என்பதெல்லாம்
நமுத்துப்போன காரணம்
பண்டிகைகள் வாழ்வதற்கு
கொண்டாட்டமே காரணம்
கொண்டாட்டமாய் வாழ்வதற்கு
பண்டிகைகளே காரணம்!

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்
அன்புடன் பாலா சிவசங்கரன்