Sunday, December 25, 2011

தேவாலயம் செல்வோம்

தேவாலயம் செல்வோம்
நித்தம் ஜெயம் தரும் தேவனைச் ஜெபித்திடவே - தினம்
வேதாகமம் சொல்வோம் (தேவாலயம்)

ஆலயம் ஆண்டவர் அன்பின் வீடு
அன்பர்கள் யாவரும் கூடிடும் கூடு
கூடியே தேவனைப் பாடியே மகிழ்வோம்
பாடியே ஏசுவின் மகிமையைப் புகழ்வோம் (தேவாலயம்)

தீபத்தின் ஒளியினில் சுடர்விடும் தூய்மை
தேவனின் கருணையில் துளிர்விடும் தாய்மை
தூயவள் மரியின் தாய்மையில் மலர்ந்த
பாலனின் புகழைப் பாலர்கள் பாடிட (தேவாலயம்)

ஞானத்தைத் தேடி வருபவர் கோடி
நியாயத்தைத் வேண்டி அழுபவர் கோடி
நன்மைகள் கோரி தொழுபவர் கோடி
நன்றிகள் கூறி மகிழ்பவர் கோடி (தேவாலயம்)

கலங்கரை விளக்கென வழி தரும் சிலுவை
கவலைகள் விலகிட நிழல் தரும் சிலுவை
இருகரம் விரித்தே வருகென அழைக்கும்
வருகிற யாவர்க்கும் கதவுகள் திறக்கும் (தேவாலயம்)
__________________________________________________________

அனைவருக்கும் கிருத்துமஸ் நல்வாழ்த்துக்கள்  


Thursday, May 26, 2011

அன்பருள் அமர்ந்தான்

கூப்பிய கரங்கள் கோபுரமாக
கும்பிடும் மனமே கோயிலுமாக
கூப்பிடும் குரலும் குறையின்றிக் கேட்க
அன்பருள் அமர்ந்தான் சங்கரன் மகனே
ஐங்கரன் இளையோன் பன்னிரு கரனே

( உள்ளத்தில் கோயில் கொண்ட
அழகு முருகன் பாடல் பாடி
தினமும் அவனின் பாதம் பணிவோம்
வேலாயுதா முருகா வினை தீர்க்கும் திருமுருகா )

காதினில் என்றும் கனிமொழி ஒலிக்க
நாவினில் என்றும் நல்லதே பிறக்க
தாயினைப் போல பரிந்துணவூட்ட
நோயினை நீக்கும் மருந்தொன்று காட்ட
அன்பருள் அமர்ந்தான் சங்கரன் மகனே

நானிலம் எங்கும் நன்மைகள் கூட்ட
மானிட தருமங்கள் தடையின்றி ஆற்ற
மாலையில் நிலவினில் விழிமலர் மூட
காலையில் கதிரொளி கண்களில் காட்ட
அன்பருள் அமர்ந்தான் சங்கரன் மகனே

 சாற்றிய மாலைகள் மார்பினில் ஆட
போற்றிடும் தாயவர் இருபுறம் கூட
வேலும் மயிலும் விரைந்திடத் துடிக்க
சேவலின் கொடியுடன் செங்கோல் நடத்த
அன்பருள் அமர்ந்தான் சங்கரன் மகனே

Thursday, May 19, 2011

காவடிகள் ஆடி வருகுதே

ஆடி மாதம் காவடிகள் ஆடி வருகுதே
ஆடிப் பாடிப் பரவசமாய் ஓடி வருகுதே
கோடி கோடிக் கால்கள் கோயில் தேடி வருகுதே - குமரன்
பக்தர் கூட்டம் குடும்பமாகக் கூடி வருகுதே
வேலனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
வேல் வேல் முருகனுக்கு அரகரோகரா
(ஆடி மாதம்)

பசும்பாலெடுத்துப் பழமெடுத்துப் படை நடக்குதே
திருநீறெடுத்து மேலுடுத்தி நடை நடக்குதே
பன்னீரோடு பூக்கள் பாலன் உடையுமாகுதே - பக்தர்
பாடல் கூட பாலனுக்குப் படையலாகுதே
வேலனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
வேல் வேல் முருகனுக்கு அரகரோகரா
(ஆடி மாதம்)

முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
சிங்கார வேலா செந்தூரின் பாலா
வண்ண வண்ணக் காவடிகள் ஆடுதப்பா
என்னப்பனே என் ஐயனே உனைக் கண்டாலே
பரவசமும் ஆக்குதப்பா

குருபராவென குவியும் கூட்டத்தில் குன்றும் மறையுதே
அரகராவென அழைக்கும் சத்தத்தில் அமைதி பிறக்குதே
அச்சம் பீதி பயங்கள் யாவும் விடைகொடுக்குதே - இனி
மிச்ச வாழ்வும் மகிழ்ச்சியாக விடை கிடைக்குதே
வேலனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
வேல் வேல் முருகனுக்கு அரகரோகரா
(ஆடி மாதம்)

Tuesday, April 26, 2011

மயிலேறி வருவான் குகன்

மயிலேறி வருவான் குகன் -கயிலை
மலையாளும் மன்னன் மகன் - மடல்விரி (மயிலேறி)

காலையில் கதிராக
மாலையில் மதியாக
வேலனவன் கோல எழில்
ஞாலத்தின் ஒளியாக
எந்தன் மன இருளது விலகிட
கந்தன் அவன் சுடர்விழி அருள்தர
பொங்கும் செங்கதிரென விடிந்திட (மயிலேறி)

பாடிடும் பொருளாக
பாடலின் பொருளாக
பார்முழுதும் பக்தர் உள்ளம்
நாடிடும் பொருளாக
இன்பம் அவன் அடியவர் வசமுற
இன்னல் பனித்துளியென விலகிட
மின்னல் அவன் விரைவென வழிவிட (மயிலேறி)

கோயிலில் சிலையாக
ஆழியில் அலையாக
நாடி வரும் சீடர் உயிர்
நாடியில் நிலையாக
கொஞ்சும் அருந்தமிழென சுவையுற
கொஞ்சம் அருமருந்தென பிணியற
நெஞ்சம் அதில் நினைவென நிலைபெற (மயிலேறி)

Friday, April 8, 2011

உனையன்றி யாரறிவார்

உனையன்றி யாரறிவார் என் துயரங்கள்
உனையன்றி யார் துடைப்பார்?
ஐங்கரன் தோழன் சிவ நேசன் உமை பாலன் எனதையன்.. (உனையன்றி)

குறையாத பெருஞ்செல்வம் தேடி… என்றும்
கலையாத கலைஞானம் நாடி
விலகாத உயிர் என்றும் வேண்டி என்
உடலிங்கு படும் பாடும் ஏனோ?
ஒரு- கனிக்காக உலகத்தை வலம் வந்த உமைபாலா
உனையன்றி யாரறிவார் என் உயர்விங்கு
உனையன்றி யார் அருள்வார்?

சினம் கொண்ட இனம் என்னைச் சூழ... எந்தன்
குணத்தாலும் பிறர் உள்ளம் வாட
பகையென்றும் பழியென்றும் வாழ்வில்
அடர் புகையாக இடர் சூழ்தல் ஏனோ?
வெகு- சினத்தாலே மலையேறி தனி நின்ற சிவபாலா
உனையன்றி யாரறிவார் என் சினமிங்கு
உனையன்றி யாரறுப்பார்??

மகவென்றும் மனையென்றும் வாழ்ந்து..
முக-நகும் நட்பில் நெடுங்காலம் தோய்ந்து
ஆசைகள் நிலையான மண்ணில் - மனம்
அன்புக்கு அலைபாய்தல் ஏனோ?
வள்ளி- மணம் கொள்ள மத யானை துணைகொண்ட மணவாளா
உனையன்றி யாரறிவார் என் துணையிங்கு
உனையன்றி யார் வருவார்?

Tuesday, March 15, 2011

அம்மா என்றேன்... முருகா என்றேன்

அம்மா என்றேன்... முருகா என்றேன்
அன்னையும் முருகனும் ஒன்றே
எனதையா என்றேன்… கந்தா என்றேன்
கந்தனும் தந்தையும் ஒன்றே...
புகழிலும் பழியிலும் உடன் வரும் ஒருபொருள்
அழகா உனதருள் ஒன்றே (அம்மா என்றேன்)

வேலனவன் குண-சீலனவன்
திரு-மாலவனின் மருகன் - சுவாமிமலை முருகன்
உயர்விலும் சரிவிலும் உடன் வந்து காப்பது
குருபரன் கருணைவேல் ஒன்றே (அம்மா என்றேன்)

சூரர் படை அழித்த வீரனவன்
நக்கீரர் படை புகழும் வேந்தனவன்
இரவிலும் பகலிலும் வழித்துணை வருவது
குமரனின் கதிர்வேல் ஒன்றே (அம்மா என்றேன்)

ஆண்டியின் கோலம் கொண்ட அரசனவன்
அலங்காரங்கள் ஏதுமற்ற அழகனவன் குமரன்
பொலிவிலும் நலிவிலும் புகலிடமாவது
பழனியின் மலையடி ஒன்றே (அம்மா என்றேன்)

கந்தா சரணம் முருகா சரணம்
கந்தா முருகா சரணம் சரணம்


Wednesday, March 9, 2011

மேதினியின் மேய்ப்பர்

மேதினியின் மேய்ப்பரே
மெய்ப்பொருள் நீரே
பாமரரின் பிதாவும் நீரே
சோதரரின் சகாயம் நீரே
ஊழியர்க்கோர் உபாயம் நீரே
ஊழ்வினைக்கோர் அபாயம் நீரே (மேதினியின்)

விரலில் இயங்கும் விசையாவீர்
குரலில் மயங்கும் இசையாவீர்
திசையின் இருளில் ஒளியாவீர்
அசையும் பொருளில்  உயிராவீர்
விசையும் இசையும் தேய்ந்தாலும்
ஒளியும் உயிரும் ஓய்ந்தாலும்
ஜெபமே என்றும் ஓயாது எம்
ஜெபமே என்றும் ஓயாது (மேதினியின்)

முள்ளின் மகுடம் அணிந்தீரே
செந்நீர் மழையில் நனைந்தீரே
சிலுவை பளுவைச் சுமந்தீரே
சிதைவும் வதையும் சகித்தீரே
செந்நீர் மண்ணில் விழுந்தாலும்
கண்ணீர் விழியில் வழியாமல்
கருணை மழையைப் பொழிந்தீரே என்றும்
கருணை மழையைப் பொழிந்தீரே (மேதினியின்)
(சமீபத்தில் இறைவனடி சேர்ந்த நண்பன் சேவியர் நினைவில் எழுதிய இறை துதி)