Tuesday, November 30, 2010

மண்புழு

தார்ச் சாலையில் மண்புழு
பிட்டுக்கு மண்சுமந்தான் முக்கண்ணன் - மூவடியில்
எட்டி உலகளந்தான் மால்வண்ணன் - பூவுலகில்
துட்டுக்கு மாந்தர் அலைந்து அளந்து-கை
விட்டமண் தேடும் புழு

Friday, November 19, 2010

கார்த்திகை தீபம்

திருவாய் திறந்து மணிகள் ஒலிக்கத்
திருநாள் அறிந்து திசைகள் சொலிக்கத்
திருமகள் சூடும் மணியாகும் - தீபத்
திருவிழா சூழும் சுடர் 

அருவாய்த் தகிக்கும் தணலில் லர்ந்து
உருவாய்த் திகைக்கும் ஒளியில் மிளிர்ந்து
தருவாய்த் தழைத்துத் தரணி நிறைக்கும்
இருளில் அகலால் பகல்

கருணை மழையைப் பொழிந்திட வானில்
வருணன் கடலை அழைத்திடத் தேரில்
அருணன் வரவழி காட்டும் விளக்கே
அருணை மலையில் மலர் 

அனைவருக்கும் கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்  

Thursday, November 18, 2010

பேரா நீ நல்ல பேரா எடுடா

பேரா நீ நல்ல பேரா எடுடா

என் அப்பனுக்கும் உன் அப்பனுக்கும்
இடையேன் சொல்வதைக் கேளடா
உன் விழைவிற்கும் உன் உயர்வுக்கும்
இடையில் வருவது வியர்வையடா
உன் உறுதிக்கும் உன் உயர்வுக்கும்
தடையாய் அயர்வதைத் தள்ளடா ... ( பேரா...)

என் சோற்றிலும் உன் சோற்றிலும்
விழாது பிழைத்த நெல்லடா
மண் சேற்றிலும் பின் நாற்றிலும்
கெடாது தழைத்த நெல்லடா
சிறிது சோறுமாய் நிறைய நெல்லுமாய்
நீ வாழும் நாட்களை மாற்றடா ... ( பேரா...)
____________________________________

தாமதமான மழலையர் தின வாழ்த்துக்கள்.
என் தந்தை என் மகனுக்குச் சொல்வதாய் நான் அமைத்த பாடல்
படத்தில்: என் தந்தையும் என் மகனும்Sunday, October 31, 2010

கனவு வேலை


ஒரே கருத்து  -  இரண்டு வடிவங்களில் : 

கனவு வேலை (லிமரிக்)


மதிய இடைவேளையில் அடிப்பது அரட்டை
மற்ற இடைவெளிகளில் படிப்பது இன்டர்நெட்டை
தேடியதோ கனவு வேலை
செய்வதோ தூங்கும் வேலை
அலாரமாய் வைப்பதோ தன்னுடைய குறட்டை !!

இரு(க்)கைச் சயனம் (வெண்பா)

கயல்போல் விழிகள் இரவில் உறங்கி
அயராது மீண்டும் துயில்வதும் ஏனோ?
சயனம் செயவோ பணியில் இரு(க்)கை?
வியப்புன் குறட்டை விழிப்பு!


பயணம் புரிவதில் பாதையும் தேயப்
புயலாய்ப் புகையும் புழுதியும் மேவ
முயலென முந்தியே வந்துமேன் தூக்கம்?
உயரும் கரிகால் பதிவு! (carbon footprint)

Thursday, October 14, 2010

அன்னைப் பறவை

முடக்குவதற்கல்ல முட்டையில் இட்டது
அடைப்பதற்கல்ல அடைகாத்து  வந்தது
உடைத்து வா வெளியே
நீ பறக்கப் பிறந்தாய்-

உன்னால் நான் பெற்றேன் -
பருந்தை விரட்டும் வீரம்;
உன்னால் நான் பெற்றேன் -
அதிகம் பறக்கும் தூரம்.

அலகு நிறைத்து வருவேன்.
வாய் திற.
வள்ளுவன் பாடட்டும்-
அமிழ்தினும் ஆற்ற இனிதே அன்னையின்
அலகு அளாவிய  அரிசி.

இருளில் தான் வாழ்ந்து வந்தேன்-
இருக்கட்டும் நீ வைத்துக்கொள் இதோ
மின்மினி விளக்கு...
தூரத்து மாமரத்தின் குயிலிசை கேட்கிறதா?
இன்று உறங்கிவிடு-

நாளை ஒன்று செய் -
பெற்ற பொழுதிற் பெரிதுவப்பேன்
கூடுவிட்டு எழும் உன் முதல் சிறகசைப்பில்-

பிறகு என் இறகுகள் உதிர்ந்தால் என்ன?
மனிதன் உதிர்த்தால் என்ன?

Monday, October 11, 2010

மலையேறும் மீன்கள்

என் எழுத்துக்கள்:

தெருப்பக்கத்தில்
குழந்தை போட்ட கோலங்கள்;
அருவி நீரில் மலையேறும் மீன்கள்;
இருட்டில் தொலைத்த நாணயம் தேட
நான் பற்ற வைக்கும் தீக் குச்சிகள் ;
மரத்திலிருந்து காற்றில் உதிர்ந்தவை;
மலர்கள் பொறுக்கி மாலையாக்கிக் கொள்கிறேன்
சருகுகள்? - அடுப்பெரித்துக் கொள்கிறேன்

உங்களுக்கு எப்படி?
படித்து விட்டதால் உங்கள் வாழ்வின் பகுதியானவை;
பிடிக்காவிட்டால் ?
படித்த நேரம்  உங்கள் ஆயுள் தின்ற எமன்கள்!

Friday, October 1, 2010

இலையுதிர் காலம்


ஓவியம்: திரு. ரமேஷ்பாபு
"எங்கள்" ப்ளாக்-இல் http://engalblog.blogspot.com/2010/09/blog-post_09.html  இந்தப் படம் போட்டு இதைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது என்று கேட்க, எனக்குத் தோன்றிய வெவ்வேறு எண்ணங்கள் இதோ:

புயலில் தோன்றுமா புன்னகை?
இது இலையுதிர் காலம்:
உடை உதிர்த்த மரங்கள்.
நாணத்தால் தரையிறங்கிய பறவைகள்.
இயற்கையின் சுழற்சியைக் காண
இவர்களும் சுற்றுகின்றனர்.....
தோளில் தொங்குவது என்ன?
புகைப்படத்தில் அடங்கியதோ புகைப்படக் கருவி?
_____________________________________________________

இலைகளால் மெத்தை இடுகிறேன்.
உன் பிள்ளையின் பாதங்களும்,
என் கிளைகளின் நிழலும்
சுடு நிலத்தில் படவேண்டாம்.
_____________________________________________________

வெறும் சிலுவையாய் இருந்துவிட்டுப் போகிறேன்.
இயேசுவை விட்டு விடுங்கள்...
காகங்களே என் மீது அமராதீர்கள்.
இந்த ஆள் ஆணி வைத்திருக்கக் கூடும்.
____________________________________________________

நேற்று தர கனி இருந்தது
இன்று தர இலை இருந்தது
நாளையும் காற்று தரும் மரம்.
மகளே,
இன்று என் கரம் தந்தேன்.
நாளை என்பது உன் கரங்களில்.

Tuesday, September 28, 2010

சிட்டுக் குருவிக்கென்ன தட்டுப்பாடு?

"எங்கள் ப்ளாக்"-இன் கீழ்க்கண்ட பதிவில் சிட்டுக் குருவிகள் அழிந்து வருவது எதனால்? அதைத் தடுக்கக் கூடுகள் கட்டி எப்படிக்  காப்பாற்றலாம் என்று பதிந்துள்ளனர். அவசியம் படித்து ஒரு குருவிக் கூடு கட்ட வேண்டுகிறேன்.  http://engalblog.blogspot.com/2010/09/blog-post_27.html

வேண்டுகோளாக ஒரு மறுகலப்புப் பாடல் (remix)

பல்லவி 1
சிட்டுக் குருவிக்கென்ன தட்டுப்பாடு?
செல்லமே கூடு ஒன்று கட்டிப்போடு
பறந்து திரிந்து பசிக்கும் அதற்கு
உணவு தானியம் தட்டில் போடு

சரணம்1
தரையில் படரும் கொடியே.. உன்னை எடுத்தது யார்?
தேரில் தொடுத்தது யார்?
குளிரில் உறையும் மயிலே.. உந்தன் தோகைக்கும் மேல்
போர்வை கொடுத்தது யார்?

அன்று மனிதன் அன்பில் வாழ்ந்தான்
உயிர்கள் வாழ வள்ளலானான்
லாலா லலாலா லலாலா லலாலா லலலலலா
லாலா லலாலா லலாலா லலாலா லலலலலா

சரணம்2
சிதறி விழும் நெல் மணிகள்
பல உயிர்களுக்கும் மனிதன்
படையல் இட்டான்

பரவி எங்கும் மரங்கள்
வழியில் வீதி வைத்தான்
விலகி வீடும் வைத்தான்
உறவுக்காக வீடு செய்தோம்
குருவிக்காக கூடு செய்வோம்
லாலா லலாலா லலாலா லலாலா லலலலலா
லாலா லலாலா லலாலா லலாலா லலலலலா

பல்லவி 2
சிட்டுக் குருவிக்கென்ன தட்டுப்பாடு?
செல்லமே கூடு ஒன்று கட்டிப்போடு
உலகம் முழுதும் திரிந்து பறந்து
உறங்கவே ஒரு தொட்டில் போடு..

Friday, September 17, 2010

இளையராஜா விருது பெற்றதற்கு வாழ்த்து

பழசிராஜாவுக்கு விருது பெற்றாலும் ராஜா என்றுமே இளையராஜா தான். அவருக்கு வாழ்த்து வெண்பா இதோ:

அசைபோடும் உள்ளம் மடைவிட்ட வெள்ளம்
திசையெட்டும் தன்மெட்டில் எட்டும் - இறைவன்
இசைத்தட்டில் வைத்த இனிப்புகள் என்றும்
இசைந்திட்டோர் நெஞ்சில் நிலை

நிழல்கள் படப்பாடல் தழுவி வேறொரு வாழ்த்து இதோ:

மடை திறந்து தாவும் நதியலைதான்
மனம் திறந்து கூவும் சிறுகுயில் தான்
இசைஞானி - அவர் பாடல்கள் ஆயிரம்
இசைத்தது நிலைத்தது

ராகம் பிறந்தது ரசிகர் கண் பனித்தது
ராஜா பிறந்ததால் நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே அவர் தான் இறைவனே
இசைக்கென இசைகின்ற ரசிகர்கள்  ராஜ்ஜியம்
அவர்க்கே தான் !

Thursday, September 9, 2010

ரமலான் வாழ்த்துக்கள்

இளம்பிறையாய்த்  தோன்றும்
இறையருள்
முழு மதியாய் வளர்ந்தோங்க
ரமலான் திருநாள்
நல்வாழ்த்துக்கள்

Wednesday, September 1, 2010

காண்டீபன்

கையில் வில்லில்லாக் காண்டீபன்
கடையில் வாங்கித்தின்றான் கண்ட டிபன்
                   ராத்திரியில் அடிக்கடி கண்விழிச்சான்
                   பாத்ரூமில் பாதி இரவு கழிச்சான்
இன்னும் கொஞ்ச நாளைக்கு வெறும் "டீ, பன்"

Wednesday, August 25, 2010

குளமேறி வந்த மலரே

உளபோதும் இலதாகி நிலவேந்தும் கொடியாகி 
                அசைகின்ற சின்ன இடையே 
        இடைமீது குடமாட படிமீது பதமாட 
                 குளமேறி வந்த மலரே 
இளந்தென்றல் உடலாக இருபாதம் இறகான
                நடைக்கிங்கு என்ன பெயரே? 
         பெயரேதும் தெரியாத புதுநோயில் மனம்வாடித் 
                துடிக்கின்ற தெந்தன் உயிரே
ஒளிபொங்கும் விழியாலும் உருகாத மெழுகாக 
               அழகாக நின்ற சிலையே
     சிலைகூட   உளிகொண்டு உயிர்தொட்டு வதைசெய்யும்
               கலையுந்தன் கண்ணின் கலையே
பளிங்கான குளிர்தேகம் மணிமார்பில் மகிழ்வோடு 
                பதிமுத்தம் கொண்டு தினமே
     இருங்கூந்தல் இடையென்று உடலெங்கும் அணியாமல் 
                 இதழ்மீதில் என்ன நகையே? 

அக் 2000 -இல் forumhub-ல் எழுதிய பாடல் இது.     

அணைக்கட்டில் அடங்கு

கடலாடி விண்ணேறி

புயலோடு விளையாடி

மலை குதித்து மண்பிளந்து

காட்டாறாய்ச் சுழன்றோடி

கயல் துள்ளக் களித்திருந்தவனேவழிவந்த மங்கை

அணைக்கட்டில் அடங்கு

அப்பா-ஆலமரம்

மண்ணூன்றி மரமாய் நின்றுவிட்டேன்.

எனக்கென்று வேரும் நீரும்
கிளைகளும் இலைகளும்
பழந்தின்னும் பறவைகளும்---

ஆலமரமாய் அப்பா நாம் ஒட்டியிருந்தாலும் -
எனக்குத்தெரியும் உன்னாலாகமுடியாது
உன் கிளையில் விழுதாய் ஊஞ்சலாடிய நானாக.

Monday, July 5, 2010

குடும்பப் பெண்ணின் உள்ளத்திலே...

ஆண்:    குடும்பப் பெண்ணின் உள்ளத்திலே
                 குடியிருக்க நான் வர வேண்டும்
                 குடியிருக்க நான் வருவதென்றால்
                 வாடகை என்ன தரவேண்டும்?

பெண்:    குடும்பப் பெண்ணின் கூந்தலுக்கு
                 மல்லிகை வாங்கித் தரவேண்டும் 
                 மல்லிகைப் பூவை வாங்கிக்கொண்டு
                 மதுவின் வாசமின்றி வரவேண்டும் 

ஆண்:    கைகள் கருவியாய், வியர்வை அருவியாய்
                உயிரும் கரைய நான் உழைத்தேன்
                உடல் சோர்வு போக்க, மனம் தீர்வு கேட்க
                பணம் தீர்ந்து போக நான் குடித்தேன்

பெண்:  நாம் பள்ளி கொள்ள, உன்னை அள்ளிச் செல்ல
              தினம் தெருவில் தேடியே திரிந்தேன்
              உன் குடலைக் கெடுக்கும் குடுவைகள்
              வேண்டாம் குடிலைத் தேடி நீ வருவாய்

ஆண்: குடும்பப் பெண்ணின் உள்ளத்திலே
             குடியிருக்க நான் வர வேண்டும்
             குடியிருக்க நான் வருவதென்றால்
             வாடகை என்ன தரவேண்டும்?


பெண்: உழைப்பால் உயர்ந்த கைகளிலே
              ஊதியப் பணத்துடன் வர வேண்டும்
              நான்கு கால்களில் நடக்காமல்
              நிமிர்ந்து நடந்து நீ வர வேண்டும்

ஆண்: மாலை என்றொரு வேளை வந்ததும் 
            வேலை முடிந்து நான் வருவேன் 
            விழி மறைந்து போக வழி மறந்து போக
             பழி நண்பன் மீது தான் தருவேன்   
             நான் மில்லி கேட்க அவன் லிட்டர் கேட்க
             யார் சொல்லியும் கேட்காமல் குடிப்போம் 

பெண்: அந்தக் கெடுவார் கூட்டத்தில் கூடவேண்டாம்
              குடும்பம் தேடி நீ வருவாய்

ஆண்: குடும்பப் பெண்ணின் உள்ளத்திலே
             குடியிருக்க நான் வர வேண்டும்
             குடியிருக்க நான் வருவதென்றால்
             வாடகை என்ன தரவேண்டும்?

பெண்: குடும்பப் பெண்ணுடன் காத்திருக்கும்
             குழந்தைக்கு முத்தம் தர வேண்டும்
             குழந்தையின் சிரிப்பைப் பார்ப்பதற்கு
             குடியை முழுதுமாய் விட வேண்டும்

Saturday, January 16, 2010

தை

விதைத்து உழைத்து விளைத்த பயிர்கள்
       செழித்து தலைசாய்த் திருக்க
அறுத்து அடித்துப் புடைத்த மணிகள்
       அம்பாரம் நிறைத்து இருக்க
தைக்கத் தைக்கப் பைகள் நிரம்பிட
       நெஞ்சும் நிறைந்து இருக்க
தைதை தகிட தகிட எனத்
      தைமகள் ஆடி வந்தாள்