முடக்குவதற்கல்ல முட்டையில் இட்டது
அடைப்பதற்கல்ல அடைகாத்து வந்தது
உடைத்து வா வெளியே
நீ பறக்கப் பிறந்தாய்-
உன்னால் நான் பெற்றேன் -
பருந்தை விரட்டும் வீரம்;
உன்னால் நான் பெற்றேன் -
அதிகம் பறக்கும் தூரம்.
அலகு நிறைத்து வருவேன்.
வாய் திற.
வள்ளுவன் பாடட்டும்-
அமிழ்தினும் ஆற்ற இனிதே அன்னையின்
அலகு அளாவிய அரிசி.
இருளில் தான் வாழ்ந்து வந்தேன்-
இருக்கட்டும் நீ வைத்துக்கொள் இதோ
மின்மினி விளக்கு...
தூரத்து மாமரத்தின் குயிலிசை கேட்கிறதா?
இன்று உறங்கிவிடு-
நாளை ஒன்று செய் -
பெற்ற பொழுதிற் பெரிதுவப்பேன்
கூடுவிட்டு எழும் உன் முதல் சிறகசைப்பில்-
பிறகு என் இறகுகள் உதிர்ந்தால் என்ன?
மனிதன் உதிர்த்தால் என்ன?
1 comment:
நல்லா இருக்கு...
Post a Comment