ஈ ஆரி எச மாரி
*****
நேற்று காரில் சென்று கொண்டிருந்த போது மனைவி மற்றும் மகளிடம், "பொன்னி நதி பாக்கணுமே" பாடலில் வரும் "ஈ ஆரி எச மாரி" பற்றி நான் படித்த விளக்கத்தைச் சொல்லிக் கொண்டு வந்தேன்.
உடனே என் மகள், "நீங்களும் கவிஞர் தானே(patted myself on my back!), மாற்று வரி சொல்லுங்கள் பார்ப்போம்" என்றார். சற்று நேரம் வண்டி அமைதியாகப் போகவே "என்ன ஆச்சு மாற்று வரி?" என்றார். யோசிக்கணுமில்ல? என்றதற்கு, "வீட்டுக்குப் போய்ச் சேர்வதற்குள் சொல்லி விட வேண்டும்" என்று உத்தரவிட்டார். வந்தியத்தேவன் குதிரையில் செல்லும் காட்சி விளக்கங்களைச் சொல்ல ஆரம்பித்தேன். "இதையெல்லாம் நீங்கள் மனதுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். வரி தோன்றியவுடன் சொல்லுங்கள்" என்று கூறி விடவே வண்டி மீண்டும் அமைதியானது.
உடனடியாக சொல்ல வேண்டுமே என்று யோசித்த போது வீராணம் ஏரியின் காட்சி நினைவில் வரவே, "வீராணப் பேராழி" என்று சொன்னேன் - ஆழி என்றால் கடல். கடல் போன்ற ஏரி. இந்த வரி பரவாயில்லையா? என்று கேட்டேன். "OK..." என்று இழுவையாகப் பதில் வந்தது. வீடும் வந்து சேர்ந்தது!
இதை இதோடு விடாமல், இரவு வீடு திரும்பிய மகனிடம் விவரித்தேன். அவரோ "வீராணம் பரவாயில்லை. பேராழி என்பது மீட்டரில் உட்கார்ந்தாலும் எச மாரி என்பது போல் ஒலிக்கவில்லையே..." என்றார். உண்மைதான்! என்று சொல்லி விட்டு உறங்கிவிட்டேன்!
இன்று பேருந்தில் ஊருக்குச் செல்லும் போது மீண்டும் யோசித்து "வீராணக் கடலோடி" என்று தீர்மானித்து வைத்திருக்கிறேன். பொன்னி நதி பாக்கணுமே - வீராணக் கடலோடி என்று link ஆகிறது. இரவு வீடு திரும்பியதும் மகனிடம் சொல்லவேண்டும்.
இதையும் பாருங்கள் இதோடு விடாமல் உங்களிடம் பகிர்ந்து விட்டேன்!
நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்களோ??
அடடா....
இப்போது பார்த்தால் "வீழாது புலிக்கொடி" என்று மேலும் ஒரு எண்ணம் தோன்றுகிறதே.... (கொடியை கொஞ்சம் இழுத்துப் பாடாக்கூடாதா என்ன? சில இடங்களில் விட்டுக் கொடுக்காதா என்ன மெட்டு?)
BTW, விடுதலைப் புலிகள் என்று எண்ணி விடுவார்களோ என்று கேட்பவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன் -
"சோழர் காலத்தில் ஏதய்யா விடுதலைப் புலி?!"
2 comments:
மகன் என்ன சொன்னார்...?
தனபாலன், இரண்டுமே வேண்டாம். ஈ ஆரி போல் உயிரெழுத்தில் ஆரம்பிக்கட்டும் என்றார். சரி, "ஆதித்தன் பேர் பாடி" என்றேன். ஆதித்தன் ok . பேர் பாடி இன்னும் கொஞ்சம் மென்மைப் படுத்துங்கள் என்றார். தூக்கம் வருகிறது என்று சொல்லி விட்டு உங்களுக்கு பதில் போடுகிறேன்!
Post a Comment