Wednesday, March 28, 2012

நான் அறியாத நாள்

செல்லமே....

என் நினைவுச் சுவர் முழுதும்
ஆணிகளால் அறைந்து
உன் முதல் நிகழ்வுகள் அனைத்தையும்
மாட்டி வைத்திருக்கிறேன்.

உனது முதல் ஸ்பரிசம் கிடைத்தது-
என் உள் வயிற்றில் நீ உதைத்த நாள்.
முதன்முதலில் வாய் திறந்து
அம்மா என்றழைக்காமல் நீ
"அ.....ப்ப்பப்ப்ப்பா" என்றழைத்த
அந்த நாளை மறப்பேனா?

நீ கவிழ்ந்த நாள், தவழ்ந்த நாள்
தப்படிகள் வைத்துப் பத்தடி நடந்த நாள்
அத்தனை நாட்களும் என் விரல் நுனிகளில்-
விரல் நுனியில் ஒட்டிய தேங்காய்த் துருவலாய்
உனக்குப் பல் முளைத்த நாள் உட்பட.

சொல்ல வெட்கம்தான்......
சிறுகுழந்தை என்பதால் சொல்கிறேன்.
உன்னைச் சூல் கொண்ட அந்த அடைமழை நாளும்
அழியாமல் என் நினைவில்.

நான் அறியாத நாளென்றால், அது
உனக்கு வால் முளைத்த நாள்.

9 comments:

ஸ்ரீராம். said...

வாலா சிறகா...!

முனைவர் இரா.குணசீலன் said...

அருமையான கவிதை..
உணர்வுகளை அழகாகச் சொல்லிவிட்டீர்கள்..

ஹேமா said...

உணர்வுகளை மிஞ்சிய சந்தோஷத்தின் எல்லை!

Unknown said...

வலை வந்து வாழ்த்தினீர்
மகனே வாழ்க!

// நான் அறியாத நாளென்றால், அது
உனக்கு வால் முளைத்த நாள்.//

சத்தான கவிதை-நல்
முத்தான முடிவு
வித்தாகி முளைக்க-மனதில்
விளையாடும் களிக்க!

புலவர் சா இராமாநுசம்

முனைவர் இரா.குணசீலன் said...

உங்கள் பெயர் விளக்கம் படித்து நெகிழ்ந்தேன் அன்பரே..

தங்கள் மேலான பார்வைக்காக..

முரசுகட்டில் தூங்கியவர்.

http://gunathamizh.blogspot.in/2010/09/blog-post_16.html

என்னும் இடுகையைக் காணத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்.

மோ.சி. பாலன் said...

வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

எமது பெயர்க் குறிப்பைப் படித்துவிட்டு கீரனார் பற்றிய தனது முந்தைய பதிவினைச் சுட்டிய முனைவர் குணா அவர்களுக்கு மேலும் பல நன்றிகள்.

மகேந்திரன் said...

மகவின் வளர்ச்சி நிலை கண்டு
பெருமை கொள்ளும் ஒரு தந்தையின்
உள்ளுணர்வுகளை காட்சியை
விளக்கியமை அழகு...

அருமையான கவிதை நண்பரே.

கீதமஞ்சரி said...

மகவைப் பற்றிய தாயின் சிலாகிப்பு சிலிர்க்கவைக்கிறது. பிரமாதம். பாராட்டுகள்.

சிவகுமாரன் said...

வாவ்
அருமை.