Thursday, August 27, 2009

மன(ண)மாறுமோ

- "என்னடி உங்கள் மன்னன்?
இரக்கம் என்பதை அறிவனா அவன்?"
பொய்யாய் வினவுவேன் பாங்கியரிடம்.

"ஏதடி உரைத்திட்டாய்? எங்கள் வேந்தனைப்போல் வள்ளல்
வேறெங்கும் கண்டதுண்டோ?
அவன்போல் வீரன் உண்டோ?
விவேகம் தான் வேற்றிடம் உண்டோ?"
என்று பலவாய் அவர் போற்றிட மிக மகிழ்வேன்.
மகிழ்ச்சியை வெளியில் துளியும் காட்டேன்

கனவில் மன்னன் அவன். மகா ராணி நான்!

-வெகுதூரத்தில் அவன் வரும்பொழுதே
விரைந்தோடி உரைசெய்ய மனம் விரும்பும்.

சற்று அருகில் நெருங்கிவிட்டால்

என் கால்கள் விலகிடும் வேறுதிசையில்.

விலகினால் ஈர்த்து நெருங்கினால்

விலக்கும் இஃதென்ன விந்தைக் காந்தமோ !


ஓரிரு வார்த்தைகள் தான் பேசிடுவேன்


அதில் உளறலே மிகுந்திருக்கும்.



- காய்ச்சலில் நான் படுத்தாலும்

கனவில் காதலன் வந்து தேற்றிடுவான்

தோளில் சாய்த்திடுவான்.

இந்தக் காய்ச்சலின் சுகம் கண்டவர்க்கே புரியும்.

மாறாய் என் மன்னனுக்கு

சிறு விக்கலென்றாலும் மனம் விம்மி விம்மி வெடிக்கும்



- சிறு குழந்தை ஒரு முத்தம் தந்தாலும்

அந்தக் கள்வன் கொடுப்பதாய் நாணம் வரும்



- என் விழிப்பில் அவன் நினைவு

உறக்கத்தில் அவன் கனவு



- இக்கனவு நனவாகுமோ ?

நனவானால் என் நினைப்பினைப்போல் இனிக்குமோ?

வெறும் சோற்றினைப்போல் சப்பென்றிருக்குமோ ?



- நனவாகாமல் போனால் எனக்கு

மணமாகாமலே போகுமோ? இல்லை... என்

மன(ண)மாறிப்போகுமோ?

No comments: