Sunday, August 30, 2009

பிள்ளையார் பாட்டு

ஆதியந்தம் ஏதுமில்லா அரும்பெரும

ஆனைமுகா நின்துதியே காப்பெனக்கு

தீதிதென்று ஓதொருவர் கேட்டிடின்

தீயரென்று தானவரைத் தள்ளாமல்

நீதிஎனில் நெஞ்சமிது திருந்த

நீயுமருள் நேர்மாறாய் ஆங்கதனில்

சூதிருந்தால் அதைமறந்து மன்னிக்கும்

சீர்பொறையும் சேர்ப்பாய் இங்கு



நாளைஎன்றே நாளும் கூறியிங்கு

நாட்கடத்தி நலிந்து நம்போதா

வேளையென்றே வீணிற் புலம்பாமல்

வேழமுகா காலம்கருதக் கற்பி

ஆளையழி அவநம்பிக்கை அழித்து

ஆகுமிது நம்மால் என்றிக்

காளை மனதில்திட நம்பிக்கைக்

கூட்டியருள் தும்பிக்கைக் கணேசா



சிற்றெறும்பிற்கற்பித்தாய் நெறிகள்பல

சீரியவாய் - உறைவிடத் திருந்தே

நற்பலன் நல்குமிடம் நனிதாய்

நுகர்ந் தறிந்து ஆங்கடையக்

கற்றோர்தம் வழிபற்றி வரிசையில்

கட்டுப்பட்டுக் கடிது ஊர்ந்து

மற்றோர் தடைவரின் மாற்றறிந்து

மடைகடந்து தூக்கிச் சுமக்கும்



எடையளந்து வழிமீண்டு சேர்த்த

எவற்றிற்கும் சேதாரம் இல்லாது

அடைகாக்கும் இடமறிந்து சேமித்து

அழகாய்ப் பாடுபட்டு ஆங்கொருநாள்

அடைமழை பெய்யுங்கால் ஆனந்தமாய்

அல்லலின்றி வாழ்கின்ற இவைபோல்

எடையாயிரம் எமக்குப் படைத்திட்டாய்

எலிவாகனா திறன்நூறேனும் கொடு








No comments: