Friday, September 9, 2016

பேருந்து பயணக்குறிப்பு


முந்தாநாள் மாலை அடித்து பிடித்து 5.45 பேருந்தைப் பிடித்துவிட்டேன். எட்டு மணிக்கு குழந்தையை வகுப்பொன்றுக்கு கூட்டிச் செல்லவேண்டும்.

ஏதாவது படித்துக்கொண்டோ பாடல் கேட்டுக்கொண்டோ பயணம் செய்வது என் வழக்கம். பல நேரங்களில் தூங்கிவிடுவதும் உண்டு. ஆனால் அன்று விழித்துக்கொண்டே சும்மா உட்கார்ந்து வர நேர்ந்துவிட்டது. சும்மா இருந்தாலும் நம் குரங்கு மனம் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்தது.

இடது பக்கம் முன் வரிசையில் ஒரு பெண் மொபைலில் படம் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் ஹெட் போன் மாட்டியிருக்கவில்லை. சப் டைட்டில்களைப் பார்ப்பதைப் புரிந்துகொண்டேன். இன்னும் கொஞ்சம் கவனித்த பிறகுதான் தெரிந்தது அது ஒரு கொரியன் படமென்று. புரியாத வசனங்களுடன் படம் பார்ப்பதை விட சப் டைட்டில்களுடன் ஊமைப் படம் பார்ப்பதே நன்றாக இருக்குமோ என்று ஒரு ஐடியா கிடைத்தது.

OMR-ல் எழுந்து கொண்டிருக்கும் கட்டடங்களை கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டு வந்தேன். கஷ்டப்பட்டு சம்பாதித்து இப்படி கட்டடங்களுக்காக கடன் வாங்கி அஞ்சி அஞ்சி வாழும் IT சமுதாயத்தின் மேல் கழிவிரக்கம் வந்தது.

அரை மணி நேரத்திலேயே இரண்டு ஆம்புலன்ஸ் வண்டிகள் கடந்து செல்வதைக் கவனித்தேன். உடம்புக்கு ஏதாவது வந்தால் இந்த மாதிரி ஆபீஸ் விடும் டிராஃபிக் சமயங்களிலோ அல்லது மருத்துவர்கள் இல்லாத நள்ளிரவுகளிலோ வரக்கூடாதடா சாமி.

பாவம் நாங்கள் எல்லாம் தூங்குவோம் என்ற எண்ணத்தில் வழக்கமாய் பஸ் டிரைவர் பாடல் எதுவும் போடாமல் அமைதியாய் ஓட்டி வருவார். கிண்டி தாண்டிய பிறகே பாடல்களை அலறவிட்டு எங்களை எழுப்புவார். அன்று என்னவோ OMR-லேயே பாட்டு போட ஆரம்பித்துவிட்டார். TMS பாடல்கள். 'நான் மலரோடு' 'லில்லி மலருக்கு கொண்டாட்டம்' 'பூவைத்த பூவைக்குப் பூக்கள் சொந்தமா' என்று பூ போட்ட பாடல்களை ரசித்து வந்தேன்.

ஆலந்தூர் வந்தவுடன் சோகப்பாடல்களாக ஓட ஆரம்பித்துவிட்டன. 'பச்சைக்கிளி முத்துச் சரம்' என்று பாடிவந்த TMS 'பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி' என்று கிளியை கிழி கிழி என்று பலவித மாடுலேஷன்களில் கிழித்துவிட்டார். 'போனால் போகட்டும் போடா' என்ற பாடுகையில் நல்லவேளை எந்த ஆம்புலன்ஸும் செல்லவில்லை. சென்றால் மனது வலிக்கும்.

ஈக்காட்டுத்தாங்கலில் ஒரு பெரிய பிள்ளையார் பந்தல் பார்த்தேன். பிள்ளையாருக்குப் பின்னால் அவரைவிடப் பெரிய விஷ்ணு சிலை இருந்தது. பிள்ளையாரின் இரு பக்கமும் பிரம்மா சிவன் இருவரின் சிலைகளும் சிறியதாய் இருந்தன. நாம் பார்த்த பல பிள்ளையார்களில் இது வித்தியாசமாய் இருந்தது. இன்று அந்தப்பக்கமாய் நீங்கள் செல்வதாய் இருந்தால் பார்க்கவும். நாளை கடலில் கரைந்து விடுவார். (ஹில்டன் ஹோட்டலுக்கும் பேருந்து நிறுத்தத்திற்கும் இடையில் உள்ளது இந்தப் பந்தல்.)

வண்டி நத்தை போல் ஊர்ந்து காசி தியேட்டரைக் கடந்து மெதுவாய் உதயம் பக்கம் திரும்பியது. மகளிடமிருந்து போன்.
'எங்கப்பா இருக்கீங்க?'
'அசோக் பில்லர்லமா ..'
'அசோக் பில்லர்ல எங்கப்பா?'
சில நேரங்களில் அசோக் பில்லரிலிருந்து வடபழனி வரவே அரை மணிநேரம் ஆகிவிடும் என்பதை அறிந்த மகளின் தவிப்பு அது.
'உதயம் தாண்டிட்டேன்மா..' என்றேன்.

வடபழனி சிக்னலில் 'வீடு வரை உறவு' பாடல் ஓடியது. நம் குறுக்கு புத்தி கவிஞர் ஏன் முதலில் 'கட்டிலுக்குக் கன்னி' என்று எழுதிவிட்டு 'பட்டினிக்குத் தீனி' என்று வரிசைப்படுத்தினார் என்று ஒரு கேள்வி கேட்டுவைத்தது.

இந்தப் பாடல் முடிவதற்குள் எனது நிறுத்தம் வந்துவிடும் என்று எழுந்தேன். அதற்குள் அடுத்த பாடல் வந்துவிட்டது 'உன்னைச் சொல்லிக் குற்றமில்லை .. என்னைச் சொல்லி குற்றமில்லை.....'. முன் வரிசைப் பெண் ஹெட் போன் இல்லாமல் இன்னமும் அந்த ஊமைப் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். 'காலம் செய்த கோலமம்மா.. கொரியன் செய்த குற்றமம்மா' என்று மனதுக்குள் பாடியபடி நிறுத்தத்தில் இறங்கினேன்.

4 comments:

ஸ்ரீராம். said...

கலவையான எண்ண ஓட்டம்!

மோ.சி. பாலன் said...

நன்றி ஸ்ரீராம்

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு பயணப் பகிர்வு.....

மோ.சி. பாலன் said...

நன்றி வெங்கட்