படியளந்த பூமியிலே
பஞ்சம் பசி இருக்குதான்னு
பரிவோடு நம்மகிட்ட
பகலவரும் கேட்குறாரு
புத்தம்புதுப் பானையிலே
பச்சரிசிப் பொங்கல்வைத்து
அன்றாடம் பொங்குறத
அவருகிட்ட காட்டிடுவோம்
வெறும் சாதம் போதுமோ
வேறு சுவை ஏதும் உண்டோ?
வெளக்கமாக சொல்லும்படி
வெளக்குசாமி கேட்குறாரு
காய்கறிகள் கிழங்குவகை
பழங்களெல்லாம் படையல் போட்டு
கரும்பு ரெண்டு வெட்டி வச்சி
கதிரவனுக்கு காட்டிடுவோம்
சுவையாக உண்டுறங்கி
சோம்பலும்தான் ஏறிடுமோ?
ஆதங்கத்தோடு அந்த
ஆதவரும் கேட்குறாரு
ஜல்லிக்கட்டு காளையோடு
மல்லுக்கட்டி ஜெயிச்சிடுவோம்
வீரமுள்ள ஜனங்களுன்னு
வெளையாடிக் காட்டிடுவோம்
மனுஷனுக்கு மட்டும்தான்
மகிழ்ச்சியான வாழ்க்கையோ?
கரிசனத்தோடு அந்த
கதிரவரும் கேட்குறாரு
கொம்புசீவி மணிகள் கட்டி
மாடு கன்னை மந்தையிலே
மாலை மயங்குமுன்னே
மகிழ்ச்சியோடு கூட்டிடுவோம்
வேறு ஏதும் குறைகளுண்டோ
வேதனைகள் எதுவும் உண்டோ?
சூசகமாக அந்த
சூரியனார் கேட்குறாரு
வள்ளலுக்கு வள்ளல் அந்த
கர்ண மகராசா அந்த
கர்ணனுக்கே தகப்பன் நீங்க
அருண மகராசா
நீங்க ஆதரிக்கும் வரைக்கும்
இங்கு அல்லல் ஏதும் இல்லையின்னு
ஆர்ப்பரிச்சிக் கூவிடுவோம்
பொங்கலோ பொங்கல்
2 comments:
இனிய தமிழர் தின நல்வாழ்த்துகள்...
nandri Dhanabalan. thangalukkum emathu vaazhthugal
Post a Comment