Saturday, October 7, 2017

சபாபதி சார்!


அமரர் டி வி ஆர் நினைவு சிறுகதைப் போட்டி2017-ல் இரண்டாம் பரிசு வென்ற எனது சிறுகதை - இன்றைய
(08 10 2017) தினமலர் வாரமலரில் வெளியாகியுள்ளது.
http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=39466&ncat=2

--------------------------------------------------------------
ரிலிருந்து மாமனாரும், மாமியாரும் வந்தாலே, கண்மணிக்கு மனதில் பதற்றம் தொற்றிக் கொள்ளும். காரணம், பிரச்னை அவளுக்கும், அவர்களுக்கும் அல்ல; அவள் கணவன் கண்ணனுக்கும், மாமனார் சபாபதிக்கும் தான். அப்பாவும், பிள்ளையும் ஏதாவது வாக்குவாதம் செய்வதும், மாமியாரும், மருமகளும் அவர்களைச் சமாதானப்படுத்துவதும், அவர்கள் இங்கு வரும் போதெல்லாம் நடப்பது, வாடிக்கை.
வழக்கமான, மருத்துவ சோதனைக்காக, ஊரிலிருந்து அவர்கள் வந்து இறங்கியதுமே, ஒரு வாக்குவாதம் ஆரம்பித்துவிட்டது; அது முடிந்து, மருத்துவமனைக்குச் சென்று வந்த பின், இப்போது, மாலையில் தான், ஒருவாறு வீட்டில் அமைதியான சூழல் நிலவுகிறது.

ந்த நேரம் பார்த்து, வீட்டுக்கு வந்த பழம் விற்பவரை, உட்கார வைத்து பேசிக் கொண்டிருந்தார், மாமனார்...
''உன் பெயர் என்னப்பா?''
''ஏழுமலை சார்...''
''ஊர்...''
''திருப்பத்தூர் பக்கம்...'' என்று ஒரு கிராமத்தின் பெயரைச் சொன்னார்.
''அட நம்ம ஊர் பக்கம் தான்... நான், உங்க பக்கத்து ஊர்ல தான் ஹையர் செகண்டரி ஸ்கூல்ல, கணக்கு வாத்தியாரா இருந்தேன்; சபாபதி வாத்தியார்ன்னா எல்லாருக்கும் நல்லா தெரியும்...'' என்றார்.
அவர்கள் பேசுவதை பார்த்து, கடுப்பானான், கண்ணன். மீண்டும் ஏதாவது பிரச்னை வெடிக்குமோ என்று பயந்த கண்மணி, கண்ணனை, உள் அறைக்கு அழைத்து, ''அவங்க ஏதாவது பேசிக்கிறாங்க; நீங்க இங்கேயே இருங்க...'' என்றாள்.
''பழம் விற்பவர உட்கார வைச்சு, குசலம் விசாரிக்கணுமா...''
''பெரியவங்க அப்படித்தான் இருப்பாங்க... இத்தனை நாள் பழம் வாங்குறோமே... என்னைக்காவது அவரோட பேரை கேட்கணும்ன்னு நமக்கு தோணிச்சா...'' என்றதும், ''அது சரி...'' என்று பம்மினான்.
''கண்மணி... எனக்கும், ஏழுமலைக்கும் டீ கொண்டாம்மா...'' என்று குரல் கொடுத்த சபாபதி, ஏழுமலையிடம், ''என் மருமக போடும் டீ அருமையா இருக்கும்...'' என்றார்.
''சரி மாமா...'' என்று எழுந்தவளின் பின், கண்ணனும் அடுக்களைக்குள் நுழைந்தான். வழியில், அப்பாவிடம், ''ஏம்பா, அம்மா கோவிலுக்குப் போகணும்ன்னு சொன்னாங்களே... கிளம்பலயா...'' என்றான், அப்போதாவது பேச்சை முடித்து, பழம் விற்பவரை வெளியே அனுப்பட்டுமே என்று!
''அம்மா அசதியா தூங்குறாளேடா... அவ எழுந்துக்கட்டும்,'' என்றவர், ஏழுமலையிடம் பேச்சை தொடர்ந்தார்.
டீ போடுகையில், காதில் விழுந்த மாமனாரின் பேச்சு, மீண்டும் கண்மணிக்கு பயத்தைக் கிளப்பியது.
''பையனோட காலேஜ் பீஸ் கட்டுறதுக்கு ஏம்பா தண்டல்காரன் கிட்ட கடன் வாங்குற.. வட்டியக் கணக்குப் போட்டுப் பார்த்தால், மாதம் ஐயாயிரம் ரூபாய் வருமே... நீ, சம்பாதிக்கிறதுல பாதிக்கு மேல் வட்டி கட்டினா, குடும்பத்தை எப்படி சமாளிப்பே, அசலை எப்படி கட்டுவே...'' என்றார்.
''என்ன செய்றது சார்... அவசரத்துக்குப் பணம் வேணும்ன்னா, நாம இருக்கிற இடத்துக்கு வந்தே குடுத்துட்டுப் போறாங்க; தினம் அவங்களே வந்து தண்டல் வசூல் செய்துக்குறாங்க. அதனால, வட்டி கணக்கெல்லாம் பாக்குறதில்ல...'' என்றார்.
''கணக்கு பாத்து தான் கடன் வாங்கணும்; பேங்குல குறைவான வட்டிக்கு கடன் தராங்க; பேங்குல வாங்கலாமில்ல...''
''நான், பழம் வாங்க போறதா, வியாபாரத்துக்கு போறதா... இல்ல பேங்குல போயி நிக்கிறதா... பேங்குக்காரன், ஒத்த ரூபாய் கொடுக்கணும்ன்னா கூட, அதுக்கு, சொத்து மதிப்பு, அத்தாட்சின்னு கேட்பான். ஆனா, எந்த அத்தாட்சியும் இல்லாம, நம்ம இடத்துக்கு வந்து கடன் தரான், தண்டல்காரன். இது தான் சார் நமக்கு வசதி... இப்படியே பழகிப் போச்சு...'' என்றான்.
''யாராவது தெரிஞ்சவங்ககிட்ட கம்மி வட்டிக்கு வாங்கலாம் இல்லன்னா வட்டியில்லாம கடன் தர்ற நல்லவங்க இருப்பாங்க; அவங்ககிட்ட கேட்கலாமே...'' என்று இழுத்தார்.
அடுத்து, அவர் ஏதாவது பேசுவதற்குள், டீயைக் கொடுத்து, பேச்சை மாற்றினாள், கண்மணி.
டீயைக் குடித்து, கிளம்பினார், பழம் விற்பவர். தூங்கி எழுந்து, தயாராக வந்த மனைவியுடன் கோவிலுக்கு கிளம்பினார், சபாபதி!

நிம்மதி பெருமூச்சு விட்ட கண்ணனை பார்த்து, ''என்ன பெருமூச்சு விடுறீங்க... பழம் விற்பவருக்கு மாமா பணம் கொடுத்துடுவாருன்னு பயந்துட்டீங்களா...'' என்று சீண்டினாள், கண்மணி.
''கொடுப்பாரு...கொடுப்பாரு...'' என்று உறுமினான், கண்ணன். காலையில் நடந்த வாக்குவாதம் அவளுக்கு நினைவுக்கு வந்தது.

காரிலிருந்து இறங்கிய மாமியாரைப் பார்த்ததும், 'என்னங்க அத்தை... 'கவரிங்' வளையல போட்டிருக்கிறீங்க...' என்று கேட்டாள், கண்மணி.
'பேசாம இரு' என்பது போல், கண் ஜாடை காண்பித்த பின்தான், கேள்வியின் விபரீதம் புரிந்தது கண்மணிக்கு!
எதிர்பார்த்தது போலவே விசாரணையை ஆரம்பித்தான் கண்ணன்...
'ஏம்மா... உன் வளையல் என்ன ஆச்சு?'
'அது வந்துடா...' என்பதற்குள், 'டேய்... எல்லாத்துக்கும் உனக்கு விளக்கம் வேணுமா... எந்த வளையல் போட்டா என்னடா...' என்று எகிறினார், சபாபதி.
'சும்மா குதிக்காதீங்கப்பா... அம்மா வளையல் எங்க...' என்று பதிலுக்கு கோபமானான், கண்ணன்.
'பேங்கில அடகு வச்சுருக்கு...' என்றார்.
'அதுக்கு என்ன அவசியம் வந்தது... ஏன் என்கிட்ட சொல்லல...'
'எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லணுமா... போய் வேலையப் பாரு...'
இருவரையும் சமாதானப்படுத்த முயற்சித்த அம்மா, 'இல்லடா கண்ணா... நான் தான் குடுத்தேன்; பரசுராம மாமாவுக்கு வீட்டிற்கு தளம் போட அவசரமா பணம் தேவைப்பட்டது. அதிக வட்டிக்கு ஏன் வெளியில கடன் வாங்கணும்... பேங்குல வச்சு குடுக்கலாம்ன்னு கொடுத்தோம்...' என்றாள்.
'கொடுத்தோம்ன்னு சொல்லாத... சார் கொடுத்தார்ன்னு சொல்லு. மாமாவாம் மாமா... பால்காரர் எனக்கு மாமாவா... அக்கம் பக்கத்துல இருக்குறவங்கள எல்லாம் உறவு சொல்லி அழைச்சா, இப்படித்தான் பணம் கேட்பாங்க... உதவி செய்ய வேண்டியது தான் அதுக்குன்னு ஒரு அளவு இல்ல... யாரோ வீடு கட்ட, எங்க அம்மா, 'கவரிங்' வளையல் போடணுமா...'
'டேய்... அது என்ன நீ செஞ்சு போட்ட வளையலா... நான் சம்பாதிச்சு, என் பொண்டாட்டிக்கு வாங்கிப் போட்டது...' என்ற சபாபதி, மனைவியை பார்த்து, 'அப்பவே சொன்னேன்... ஊர்ல இருக்குற டாக்டரை பாத்தா போதும்ன்னு கேட்டியா... உசத்தியான டாக்டரை பார்த்து, எதுக்கு உயிரை புடிச்சு வைச்சுக்கிட்டு இருக்கணும்...' என்றார், கோபத்துடன்!
'டென்ஷன் ஆகாதீங்க... பிரஷர் ஜாஸ்தியா ஆகிடும்...' என்று, அவரைச் சமாதானப் படுத்த முயற்சித்தாள், அம்மா.
'உண்மைய சொன்னா கோபம் பொத்துக்கிட்டு வருதோ... நீங்க சம்பாதிச்ச நகையா இருந்தா கேள்வி கேட்க எனக்கு உரிமை இல்லயா... போறவன் வர்றவனுக்கு எல்லாம் எங்க அம்மா நகையில உரிமை இருக்கு; நான் கேட்கக்கூடாதா...' என்ற கண்ணனை, இழுத்துச் சென்றாள் கண்மணி.
சாதாரணமாய் தான் கேட்ட கேள்வி, இப்படி சண்டையை உருவாக்கி விட்டதே என்று வருத்தப்பட்டவள், 'என்னங்க... டாக்டர், 'செக் - அப்'க்கு நேரம் ஆகுது; நீங்க, ஏதோ ஆபீஸ் வேலை இருக்குன்னு சொன்னீங்களே... அதை, செய்யுங்க... நான், அத்தை, மாமாவை, 'செக் - அப்'க்கு கூட்டிப் போறேன்...' என்று கிளம்பிச் சென்றாள்.

கோவிலிலிருந்து திரும்பிய தன் பெற்றோரிடம், இப்போது, சமாதானமாக பேசினான், கண்ணன்.
''அப்பா... நான் பணம் தர்றேன்; முதல்ல அம்மாவோட வளையல மீட்டுப் போடுங்க,'' என்றான்.
சபாபதி, ''சரிடா...'' என்று சொல்லவும், ''எதுக்குடா, வேணாம்...'' என்று மகனிடம் சொல்லியபடியே, மருமகளை பார்த்தார், மாமியார்.
''பரவாயில்ல அத்தை...'' என்றாள் கண்மணி.
இப்படி, முதலில் முட்டிக் கொள்வதும், பின் ஒட்டிக் கொள்வதுமாக, ஒரு வாரத்திற்கு பின், ஊருக்கு திரும்பினர், சபாபதி தம்பதியர்.

லுவலகத்திலிருந்து வீடு திரும்பிய கண்ணன், ஷூவைக் கழற்றும் போது, ''சார்...'' என்றபடி உள்ளே நுழைந்தார், ஏழுமலை.
''வாங்க ஏழுமலை...'' என்று, பழம் விற்பவரை, கண்ணன் பேர் சொல்லி அழைத்தது, அவர்கள் இருவருக்குமே வித்தியாசமாக இருந்தது.
''இந்தாங்க சார் பேயன் பழம்; நீங்க ஆபீஸ் விட்டு வர்றத பாத்தேன்; அதுதான் உடனே கொடுத்துடலாம்... இல்லன்னா வேறு யாராவது கேட்டு வந்துருவாங்கன்னு கொண்டு வந்தேன்...'' என்றார்.
''நேத்து தானே வாழைப் பழம் கொடுத்தீங்க...'' என்றபடி ஹாலுக்கு வந்தாள், கண்மணி.
''இல்லீங்கம்மா... ரெண்டு நாளைக்கு முன், சாரோட அப்பா, பேயன் பழம் கிடைச்சா, உங்களுக்கு கொண்டு வந்து கொடுக்கச் சொன்னார். வெயிலுக்கு நல்லது; அம்மை வந்தவங்க கூட உடல் குளிர்ச்சிக்கு சாப்பிடுவாங்க; இப்பத் தான் கிடைச்சது... அதான் கொண்டு வந்தேன்,'' என்றார்.
''எவ்வளவு ரூபா...'' என்று கேட்டான், கண்ணன்.
''பணம் வேணாம் சார்... எப்பவும் என்கிட்டத்தான் பழம் வாங்குறீங்க... இது, உங்கப்பா சொன்ன மரியாதைக்காக,'' என்று சொல்லி, திருப்பியவரை, கூப்பிட்டு, ''அன்னைக்கு பையனோட காலேஜ் பீஸ் கட்டணும்ன்னு அப்பாகிட்ட பேசிட்டு இருந்தீங்களே... கட்டிட்டிங்களா...'' என்று கேட்டான்.
''இன்னும் இல்ல சார்... தண்டல்ல சொல்லியிருக்கேன்...''
ஒரு வினாடி யோசித்தவன், ''தண்டல் வேணாம்; வட்டியில்லாம நான் தர்றேன். அப்பப்போ உங்களால எவ்ளோ முடியுமோ, கொடுத்து அடைச்சிடுங்க,'' என்றான்.
''ரொம்ப நன்றி சார்... பையன வந்து உங்கள பாக்கச் சொல்றேன்,'' என்று கிளம்பினார், ஏழுமலை.
தன் செய்கையை தானே நம்ப முடியாமல், கண்மணியை எப்படி எதிர்கொள்வது என்று புரியாமல், கழற்றி வைத்த ஷூவையே பார்த்தான், கண்ணன்.
லேசாகத் தொண்டையை செருமினாள், கண்மணி. அவன் நிமிர்ந்து பார்க்க, அவனை குறுப்பாக பார்த்து சிரித்தாள், கண்மணி.

Wednesday, August 30, 2017

அமைதிச்சோலை அகிலமாக

மிருக மனதை மிருதுவாக்கும்
மதங்கள் யாவும் புனிதமே
மனித மனதில் மனிதம் வளர்க்கும்
வரிகள் யாவும் வேதமே

தேசம் யாவும் கூடிவாழ
நேசபூமி உதயமே
கடவுள் யாவும் கூடிப்பேச
மதங்கள் யாவும் சொந்தமே

தெய்வ சிந்தை செய்யும் யாரும்
மனித சிந்தை மறப்பதோ?
தெய்வ நிந்தை செய்யும் யாரும்
மனித நிந்தை புரிவதோ?

பகைமை உணர்வு மறையும்போது
கரைகள் இரண்டும் பசுமையே
அமைதிச்சோலை அகிலமாக
மதங்கள் நதிகள் ஆகுமே

Tuesday, August 8, 2017

சபரியின் ஆலயமே

சபரியின் ஆலயமே என்றும்
சாமிகள் சரணாலயம்
சரணங்கள் ஆயிரமே எங்கள்
நாவினில் பாராயணம்
ஹரிஹர புத்திரனே எங்கள்
விழிகளில் அருணோதயம்
அரணெனக் காத்திடுவான் ஐயன்
அருள் தரும் கருணாமிர்தம்

நோன்புகள் நாமிருந்தோம் ஐயன்
மாண்பினைப் பாடிவந்தோம்
தேனடை ஈக்களென ஐயன்
கோயிலை நாடி வந்தோம்
வானுயர் ஜோதி கண்டோம் நெஞ்சில்
காரிருள் நீங்கக் கண்டோம்
கானுறை கோயிலிலே எங்கள்
ஊனுறை உயிரும் கண்டோம்

Wednesday, July 12, 2017

பாய் போட்ட கார்மேகம்



மயிற்றோகை விரித்தாட மதுவூறும் மலராட
எழில்மேகம் விரைந்தோடி வழியெங்கும் நடமாட
மரமெங்கும் இலைதோறும் மழைச்சோறு பரிமாற
காய்ச்சீரும் கனிச்சீரும் வரும்நாளில் வரவாக
கரையெங்கும் அலைமோதி வயல்நீரும் தடுமாற
களச்சேற்றில் விவசாயி இளநாற்றை அடியூன்ற
பாய்போட்ட கார்மேகம் கனவாகக் கரைந்தாலும்
தாய்மாட்டின் மடிபோலப் பாலாகப் பொழியாதோ?
தாய்நாட்டின் தாகத்தைத் தண்ணீரால் தீர்க்காதோ?

Monday, July 10, 2017

ஹெல்மெட் போடு


"மெட்டுப்போடு" பாடல் ராகத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பாடல்
-----------
தங்கமே தலையைக் காக்கும் கவசம் போடு
உன் தலையெழுத்தை மாற்றி எழுத சபதம் போடு
எத்தனை உயிர்கள் தந்தோம்
எத்தனை எத்தனை உடல்கள் தந்தோம்
அத்தனையும் போதும் தம்பி வெட்கக்கேடு
ஹெல்மெட் போடு ஹெல்மெட் போடு
நீ பைக் எடுத்து வெளியில் சென்றால் ஹெல்மெட் போடு
ஹெல்மெட் போடு ஹெல்மெட் போடு
ஒரு விபத்து வந்தால் உயிரைக் காக்கும் ஹெல்மெட் போடு.

இடி தாங்கிக் கொள்ள நீ மேகம் இல்லை
நீ வேகம் தாங்கும் தேகம் கொள்ளவில்லை
கட்டுக்கடங்காத காளை போலே சீறவேண்டாம்
கட்டறுந்த பட்டம் போலே விழ வேண்டாம்
இனி சாலை மேலே உன் செந்நீர் வேண்டாம்
உனைச் சார்ந்த்தோர் கண்ணில் கண்ணீர் என்றும் வேண்டாம்
கண்மூடி காற்றில் பாய்ந்து செல்ல வேண்டாம்
கண்கள் மூடி மண்ணில் சாய்ந்து மாய வேண்டாம்

நீ முந்திச்செல்ல
இது பந்தயமல்ல - உயிரைப் பணயம் வைக்கும்
பயணம் நல்லதல்ல
பத்து மாதம் சென்ற பின்பே மண்ணில் வந்தாய்
பத்து நொடியில் விண்ணை நோக்கிச் செல்லவேண்டாம்
உன் வேகம் எல்லாம் உன் தொழிலில் காட்டு
உன் ஆசையெல்லாம் அன்பரிடம் காட்டு
கொஞ்சம் நிதானத்தை சாலையிலே நீயும் காட்டு
நின்று நிலையாக நீயும் வாழ்ந்து காட்டு

- பாலா சிவசங்கரன்

Tuesday, June 20, 2017

எங்கிருந்தோ வந்த மழை

எங்கிருந்தோ வந்த மழை என் மண்ணில் வாசம் கூட்டும்
எங்கிருந்தோ வந்த மழை என் பயிரில் பாசம் காட்டும்
எங்கிருந்தோ வந்த மழை என் மரத்தில் கனிரசமாகும்
எங்கிருந்தோ வந்த மழை என் மனதைப் பரவசமாக்கும்
எங்கிருந்தோ வந்த மழை என் குளத்தில் மீன் வளர்க்கும்
எங்கிருந்தோ வந்த மழை என் மலரில் தேன் நிறைக்கும்
எங்கிருந்தோ வந்த மழை என் முதுகில் சேறடிக்கும்
எங்கிருந்தோ வந்த மழை என் அழுக்கைக் கழுவி நீக்கும்
எங்கிருந்தோ வந்த மழை என் அழுகை கரைத்து நீர்க்கும்
எங்கிருந்தோ வந்த மழை என் கவிதை வரிகள் சேர்க்கும்

Wednesday, June 7, 2017

ஏண்டியம்மா இதயத்துல மூடியிருக்கு கதவு?

ஏண்டியம்மா இதயத்துல மூடியிருக்கு கதவு?
எப்பொழுதும் நானும் வர திறந்து நீயும் உதவு

சத்திரமா இதயம் உனக்கு? போய்விடு நீ தொலைவு
சத்தியமா பிடிக்கவில்லை ஒழிஞ்சி நீயும் உதவு

பத்தியம்தான் இருந்து பார்த்தேன் தெளியவில்லை பித்து
கட்டிப்பிடி நானும் தாரேன் கன்னத்தில முத்து

முத்து தர நீயும் வந்தா நான் விடுவேன் குத்து
குத்து மதிப்பாக உனக்கு எவ்வளவிருக்கு சொத்து?

சோத்துக்கொரு குறையுமில்லை வளந்துநிக்குது நாத்து
போத்திக்கிட்டுப் படுத்து உறங்க கூரை மேல கீத்து

தின்னுவிட்டு தூங்குவதில் பெருமை என்ன இருக்கு?
சொல்லிக்கொள்ள பெருமையாக வேறு என்ன இருக்கு?

அள்ளி அள்ளி சரம் சரமா நான் படிப்பேன் பாட்டு
துள்ளித் துள்ளி குதிக்கப் போற நீயும் அதைக் கேட்டு

பாட்டுக்காரன் வாய் திறந்தா புறப்படுமே பொய்யி
வீட்டுக்காரனாக வந்தா கரையுமே என் மையி

தாலாட்டு நான் படிச்சா சொக்கிப் போகும் கண்ணு
தூங்குகிற கண்ணுல மையி கரையுமாடி கண்ணு?

நல்லாத்தான் விளக்கம் தாரே நடு வீதியில நின்னு
அத்தையைத்தான் கூட்டி வந்து வீட்டுல கேளு பொண்ணு

(...... வெட்கத்துடன் ஓடிப்போகிறாள் )

Tuesday, June 6, 2017

கீதாஞ்சலி - பாரதி பாணியில் : பாடல்கள் 39, 40



(39)
சந்தம் : ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா

இதயம் இறுகிப் பாலையாகக் காயும் போதிலே
அதனைக் கருணை மழையில் நனைக்க இறைவ நீயும் வா

நளினம் எந்தன் வாழ்வை விட்டு நீங்கும்போதிலே
பொழியும் இனிய கீதம் கொண்டு இறைவ நீயும்வா 

பணியின் சுமைகள் சூழ்ந்து ஓசை எழுப்பும் போதிலே
ததும்பும் அமைதி அரும்ப எந்தன் அருகில் நீயும் வா

குறுகி எந்தன் வறிய இதயம் முடங்கும் போதிலே
மடைகள் உடைத்து மன்னன்போல மிளிர்ந்து நீயும் வா

ஆசை எந்தன் கண்ணிரண்டை மறைக்கும் போதிலே 
இடிகள் மின்னல் எழுப்பிக்கொண்டு இறைவ நீயும் வா

Tagore’s English version: 
When the heart is hard and parched up, come upon me with a shower of mercy.
When grace is lost from life, come with a burst of song.
When tumultuous work raises its din on all sides shutting me out from beyond,
come to me, my lord of silence, with thy peace and rest.
When my beggarly heart sits crouched, shut up in a corner, break open the door, my king,
and come with the ceremony of a king.
When desire blinds the mind with delusion and dust, O thou holy one, thou wakeful,
come with thy light and thy thunder. 

(40) 

சந்தம்:  ஆசை   முகம்   மறந்து   போச்சே 

நாட்கள்   நகர்ந்து   செல்லலாச்சே   நெஞ்சம் 
பாலை   நிலம்   போல்   சுடலாச்சே 
நீண்டு   திறந்த   அடிவானம்   எங்கும் 
ஈர   முகில்கள்   ஒன்றும்   காணேன் 

வீசியடிக்கும்   புயல்   செய்தே  -  விண்ணை 
அதிரவைக்கும்   மின்னல்  தந்தே 
உயிரை   உருக்கும்   ஊமை  வேனில்  -   அதை 
விரைவில்   அகற்றிவிடு   தேவா 

கோபம்  பொழியுந்   தந்தை  முன்னே  -  அன்னை 
குனிந்த  விழி  திரளும்  நீர்  போல் 
வானிலிருந்து  அருள்  மேகம்  -  அதைத்   
தாழ்ந்து  தவழவிடு  தேவா 

Tagore’s English version: 
The rain has held back for days and days, my God, in my arid heart.
The horizon is fiercely naked—not the thinnest cover of a soft cloud,
not the vaguest hint of a distant cool shower.
Send thy angry storm, dark with death, if it is thy wish,
and with lashes of lightning startle the sky from end to end.
But call back, my lord, call back this pervading silent heat,
still and keen and cruel, burning the heart with dire despair.
Let the cloud of grace bend low from above like the tearful look of the mother on the day of the father’s wrath

Thursday, May 25, 2017

மூங்கில் தோட்டம் - English version

சும்மா ட்ரை பண்ணினேன்....
"மூங்கில் தோட்டம்" பாடல் ஆங்கிலத்தில்...
பாடிப்பார்த்து செட் ஆகுதான்னு சொல்லுங்க!

Bamboo garden
There is no warden
Beautiful silence
Bees going violent
Fragrant flowers
There we traverse
You're holding my hand
I'm holding your hand
This is enough for me
This is enough for me
This is enough for me
This is enough for me

Thamirabarani
On its journey
Bird crosses over
Time passes over
Under the water
Aiyirai fish gather
You're walking by there
I'm strolling by there
This is enough for me
This is enough for me
This is enough for me
This is enough for me

Monday, April 17, 2017

தோகை இளமயில் - remix


தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ?
வானில் வரும் முகில் கோடி மழைத்துளித் தூவி சுகம் தருமோ?
தேன் சிந்தும் நேரம் பூஞ்சோலை ஓரம்
காற்றோடு பூவாசம் சேர்கின்றதோ?

பூமி எங்கும் பூந்தோட்டம் நாம் காண வேண்டும்
புதுத்தென்றலோ பூக்களில் வசிக்கும்
ஆகாய மேகங்கள் நீறூற்ற வேண்டும்
அந்த மழையில் அருவியும் குளிக்கும்
அருவிகளோ வீரம் பெறும்
புரவிகள்போல் பாய்ந்தே வரும்
அன்னமும் குளங்களில் மிதந்துவரும்
பலவிதப் பறவைகள் வான்போகும் ஊர்கோலம்

பச்சை வண்ண வான்மேகம் நாம் காண வேண்டும்
மரநிழலில் மலர்களும் உறங்கும்
ஊரிலெங்கும் உற்சாகம் ஊற்றாக ஊறும்
வயல்வெளியில் கயல்களும் உலவும்
உழவனுக்கோர் நேரம் வரும் விளைந்திடவே யோகம் வரும்
மண்ணிலே இன்பங்கள் நிலைத்துவிடும்
மரம் நட மரம் நட மழை தரும் கார்காலம்

#மரம்நடுவோம்

நன்றி: இளையராஜா, வைரமுத்து
உங்கள் பயணங்கள் முடிவதில்லை!

Thursday, March 30, 2017

செவ்வந்தி மாலை இதோ

சாய்ந்த உன் முகம் பார்த்து
சட்டென்று தலை கவிழும்...
பாய்ந்த உன் நகை பார்த்து
பட்டென்று சிரிப்பு வரும்...

காற்றினில் பூ கட்டும்
கைவிரல் அசைவினுடன்
நீ பேசிய கதைகளெல்லாம்
நெஞ்சத்தில் கோத்துவைத்தேன்

சில பல நாட்களாக
செய்தி ஒன்றும் காணவில்லை..

செவ்வந்தி மாலை இதோ...
சீக்கிரமாய் அழைத்திடடி - உன்
செஞ்சேலைப் படம் ஒன்றை
செல்போனில் திறந்து வைத்தேன்...
கன்னத்தில் முத்தமிட்டு நீ பேச

Monday, March 20, 2017

இளைஞர்களின் கை கோருங்கள்

இளைஞர்களின் கை கோருங்கள்
அவர்கள் களைப்படைந்து ஓய்வது இல்லை
பெருமைகளைப் பேசிப் பாருங்கள் அவர்கள் புகழுரையை நாடுவதில்லை

நெல்லை மென்று தின்னும் மனம் இல்லாதவர்
நில்லாமல் பேசும் நாட்டம் துளியும் அற்றவர்
கொல்லை வழியில் நுழைந்து ஒட்டும் தன்மையற்றவர்
தொல்லையற்ற வாழ்வை விரும்பும் விரதம் ஏற்றவர்
அல்லல்படும் பெரியவரே அஞ்சாதீர்கள்
எல்லாமே அவர் அறிவார் தள்ளி நில்லுங்கள்
ஆளுகின்ற உரிமை அவர்க்குத் தந்து செல்லுங்கள்
அமைதி இந்த உலகில் திரும்பும் வந்து பாருங்கள்

(பாடல் மெட்டு: இறைவனிடம் கையேந்துங்கள்)

Friday, March 17, 2017

நிறைவேறாத கனவுகளும்
நிறைவேற்றாத கடமைகளும்
ஊஞ்சலாட்ட மகிழ்கிறேன்!

Thursday, March 16, 2017

செல்லாதே நில்லுடா கண்ணு


பச்சை நிற விளக்கு மறைந்தபின்னாலும்
பத்து வண்டி கடந்திருக்கு
பச்சை நிற விளக்கு மறைந்தபின்னாலும்
பத்து வண்டி கடந்திருக்கு
தினம் பத்து உயிர் போகுது ஒஒஒஓ
தெரு ரத்தக்கறை ஆகுது ஒஒஒஓ
பள்ளிக்கு மழலையர்
தள்ளாடும் முதியவர்
கடந்திடும் சாலையடா
விதிகளை மதித்திடடா

வராது போனா உயிரு
ஒரே உயிர் தான்டா இருக்கு
செல்லாதே நில்லுடா கண்ணு
சமிக்ஞையில் இருக்கட்டும் கண்ணு

(பாடல் மெட்டு: வராக நதிக்கரை ஓரம்)

#சாலைவிதிகளைமதிப்போம்

Thursday, March 9, 2017

வட்டிக்கு வாங்கி அட்டிகை செய்யாதே

கானா பாலா குரலில் கற்பனை செய்து எழுதினேன். தேவையான வரிகளை திரைப்படம் / குறும்படத்தில் பயன்படுத்தலாம்.

-------------

வட்டிக்கு வாங்கி அட்டிகை செய்யாதே - நீ
அட்டிகை செஞ்சி வட்டிக்கு வைக்காதே

சீட்டுக்குப் பாதி கொடுத்து
சேட்டுக்குப் பாதி கொடுத்து
வீட்டுக்குக் கொண்டு போகாதே வெறுங்கை நீ
விழுந்துடுவ ஏறாதே முருங்கை

மானியமா கொடுப்பான்?
சூனியமா கெடுப்பான்
மாட்டிக்கிட்டு முழிச்சி நிக்காதே நீ
முழிச்சிக்கடா மாட்டிக்கிடாதே

வெத்தலை பாக்கு கொடுப்பான்
பத்தலையான்னும் கேப்பான் - அப்புறம்
நடுத்தெருவில் நியாயம் பேசுவான் - உன்னையும்
நாலு பேரு முன்னாடி ஏசுவான்

எழுதப் படிக்க வேணாம்
கணக்கு மட்டும் போடு
கழுதை கூட கணக்கு போடும்டா - அதுவும்
எடையைப் பார்த்து பொதியைச் சுமக்கும்டா

மணலில் கோட்டை கட்டும்
குழந்தை கூட அறியும்
மழையில் மணலும் கரைந்து போகுமடா - பெரும்
கடனில் வரவு தொலைந்து போகுமடா

வளையல் கழட்டிக் கொடுத்தா
கம்மலைக் கழட்டிக் கொடுத்தா
மஞ்சக் கிழங்க மாட்டிட்டுக் கிடக்கா- நகைய
மொதல்ல போயி மீட்டுட்டு வாடா

Wednesday, March 8, 2017

சுட்டுப் போட்டபோதும்


படகெடுத்துப் போனான் ஐயோ விடை கொடுத்துப் போனான்
வலை எடுத்துப் போனான் ஐயோ விலை கொடுத்துப் போனான்
மீனைத் தேடிப் போனான் ஐயோ ஊனை விட்டுப் போனான்
ஊரை விட்டுப் போனான் ஐயோ உலகை விட்டுப் போனான்
கதவு எதுவும் இல்லை ஐயோ கடலில் மதிலும் இல்லை
எல்லை மீறல் என்றான் ஐயோ இலங்கைக் காரன் சுட்டான்
நமது நாட்டின் படைகள் ஐயோ நமக்குக் காவல் இல்லை
நமது மந்திரிமார்கள் ஐயோ மதியில் நாமும் இல்லை
நிம்மதியா வாழ ஐயோ தமிழர் விதியில் இல்லை
எழவு பாட்டுப் பாடி ஐயோ எதுவும் மாற வில்லை
சுட்டுப் போட்டபோதும் ஐயோ சொரணை வருவதில்லை

Tuesday, March 7, 2017

எழுவாய் எரிகின்ற நிலவாய்

We for We தன்னார்வ அமைப்பிற்காக பிரபல பின்னணிப் பாடகி அனுபமா கிருஷ்ணசாமி அவர்கள் ஆங்கிலப் பாடல் ஒன்றை இயற்றி இசையமைத்துப் பாடியுள்ளார். ( பாடலைக் கேட்க: https://soundcloud.com/chandralekhaa68/01-woman-theme-song-english )

இப்பாடலுக்குத் தமிழ் வடிவம் கொடுக்க அவர் விரும்பியபோது, தோழர் ராஜராஜன் அவர்கள் செய்த அறிமுகத்தால் கீழ்க்கண்ட வரிகளை எழுதினேன். மகளிர் தினத்தில் இவ்வரிகளை அரங்கேற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள்.

எழுவாய் எரிகின்ற நிலவாய்
மொழிவாய் அதிரட்டும் முரசாய்
பெண்ணே நீ போரிட வா
வானும் மண்ணும் வெல்ல வா
உன்னோடு மோதிடுமா எந்த மலையும்?
சிறகை விரித்து வா

பெண்ணே உன் கனவென்ன?
கைவரும் பெரு வெற்றியே
வானமும் வெகுதூரமில்லை
சிகரம் பார் உன் சிறகை விரி

வா பெண்ணே வா
வா பெண்ணே வா
வா பெண்ணே வா

மின்னல் பிறக்கும் ஒளியாய் கண்கள்
ஜன்னல் திறந்த வெளியாய் எண்ணம்
உன்னுள்ளே தேடி எடு
உன்பேரும் கேட்கும் தனியே
உள்ளதை நீயும் கொடு
எந்த நொடியும் இனிக்கும் இனிமேல்

பெண்ணே உன் கனவென்ன?
கைவரும் பெரு வெற்றியே
வானமும் வெகுதூரமில்லை
சிகரம் பார் உன் சிறகை விரி

வா பெண்ணே வா
வா பெண்ணே வா
வா பெண்ணே வா

அவளும் பயிரும்


நட்ட விரல் நழுவிவிட
வேரை மண்ணு பிடிச்சிக்கிடும்
பொட்டச்சி நட்ட நாத்து
பொல பொலன்னு வளந்து நிக்கும்

கண்ணில் பட வேணுமின்னு
களைகளெல்லாம் தல தூக்கும்
கைப்பற்றி அவ இழுக்க
கெழங்கோட கழன்று வரும்

வரப்பு மேல அவ நடந்தா
கால்களுக்கு விசிறி விடும்
அறுத்த கதிரில் கால் பட்டா
கொலுசுபோல சிலுசிலுக்கும்

நெல்லு குத்தி அவ புடைச்சா
நித்திலமா பல்லிளிக்கும்
பானையிலே வடிச்ச சோறு
பூவப்போல வாசம் வீசும்

------------

அனைவருக்கும் முன்கூட்டிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

Monday, February 27, 2017

இலவு காக்கும் தமிழா

மொழியைக் காக்க மறந்தாய் - உன்
விழியைக் காக்க மறந்தாய்
இரவு காக்கும் தமிழா - நீ
விடியல் காண மறந்தாய்

உறவு காக்க மறந்தாய் - உன்
உரிமை காக்க மறந்தாய்
நரிகள் காக்கும் தமிழா - நீ
நெறிகள் காக்க மறந்தாய்

எழில்கள் காக்க மறந்தாய் - உன்
தழல்கள் காக்க மறந்தாய்
விழல்கள் காக்கும் தமிழா - நீ
தொழில்கள் காக்க மறந்தாய்

குலத்தைக் காக்க மறந்தாய் - உன்
நிலத்தைக் காக்க மறந்தாய்
இலவு காக்கும் தமிழா - நீ
உழவு காக்க மறந்தாய்

நதிகள் காக்க மறந்தாய் - உன்
நிதிகள் காக்க மறந்தாய்
நொதிகள் காக்கும் தமிழா - நீ
விதிகள் மாற்ற மறந்தாய்

Tuesday, February 21, 2017

தாய்மொழி தினம்


தமிழ் எனது தாய்மொழியானது நான் பெற்ற வரம்.
தமிழ் எனது பேத்தி மொழியாவது நான் வேண்டும் வரம்.

#தாய்மொழிதினம்

#தினந்தினம்

Friday, February 10, 2017

கீதாஞ்சலி பாரதி பாணியில் - பாடல் 36

சந்தம்: மனதிலுறுதி வேண்டும்

மனதிலுறுதி வேண்டும்
இன்பதுன்பம் எளிதென்று ஏற்றிட
இறைவ நீயெந்தன் நெஞ்சின்
வறுமையின் வேரினை அறுத்திட வேண்டும்

ஏழைகளை விட்டு நீங்கி
மமதையுள்ளோர் முன்பு மண்டியிடாமல்
நிதமும் சேவையில் மூழ்கி
எனது அன்பும் இங்கு பயனுற வேண்டும்

நலிந்த செயல்கள் நீக்கி
பொலிந்திடவே நெஞ்சில் பலமும் வேண்டும்
பெருமைகள் விட்டு நீங்கி
நின் சரண்புக நெஞ்சினில் உரமும் வேண்டும்

Tagore's English version:

This is my prayer to thee, my lord—strike, strike at the root of penury in my heart.Give me the strength lightly to bear my joys and sorrows.Give me the strength to make my love fruitful in service.Give me the strength never to disown the poor or bend my knees before insolent might.Give me the strength to raise my mind high above daily trifles.And give me the strength to surrender my strength to thy will with love.

Thursday, February 2, 2017

அவளும் நானும்

அவளும் நானும் உமையும் சிவனும்
அவளும் நானும் விழியும் வழியும்
அவளும் நானும் உரமும் பயிரும்
அவளும் நானும் கதையும் பாட்டும்
அவளும் நானும் அறமும் பொருளும்
அவளும் நானும் காற்றும் குமிழும்
அவளும் நானும் அகமும் புறமும்
அவளும் நானும் அருகும் தொலைவும்
அவளும் நானும் சரியும் தவறும்
அவளும் நானும் சிவப்பும் கறுப்பும்

Friday, January 27, 2017

கீதாஞ்சலி பாரதி பாணியில் - பாடல் 35

சந்தம்: அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

எங்கு மனங்கள் அச்சமின்றி
தலை நிமிர்ந்து நிற்குமோ
எங்கு பணத்தின் தேவையின்றி
யார்க்கும் கல்வி கிட்டுமோ
அந்த சொர்க்க பூமியாக
எந்தன் தேசம் விழிக்கட்டும்

எங்கு பூமி பூசல் கொண்டு
பிரிந்து நிற்கவில்லையோ
எங்கு நெஞ்சின் ஆழம்கண்டு
உண்மை வார்த்தை ஆகுதோ
அந்த சொர்க்க பூமியாக
எந்தன் தேசம் விழிக்கட்டும்

எங்கு மக்கள் முயற்சி நல்ல
மாற்றம் நோக்கிச் செல்லுமோ
எங்கு தெளிந்த எண்ண ஓடை
பாலை நிலங்கள் தாண்டுமோ
அந்த சொர்க்க பூமியாக
எந்தன் தேசம் விழிக்கட்டும்

பரந்த எண்ணம் செயல்கள் எங்கு
சிந்தையைச் செலுத்துமோ
அந்த சொர்க்க பூமியாக
எந்தன் தேசம் விழிக்கட்டும்

Tagore’s English version:

Where the mind is without fear and the head is held high;
Where knowledge is free;
Where the world has not been broken up into fragments by narrow domestic walls;
Where words come out from the depth of truth;
Where tireless striving stretches its arms towards perfection;
Where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit;
Where the mind is led forward by thee into ever-widening thought and action
Into that heaven of freedom, my Father, let my country awake.

Wednesday, January 11, 2017

பழைய பாய்லர்

பொங்கலுக்கு வீட்டை சுத்தம் செய்கையில்
பரணில் பழைய பாய்லர் இருந்தது.
கரி போட்டு வெந்நீர் வைத்த
சிறுவயது நினைவுகள்
நெஞ்சினுள் புகையெழுப்பிக் கிளம்பின
போட்டுவிடலாமா என்று வீட்டில் கேட்டதற்கு
வேண்டாம் இருக்கட்டும் என்றேன்.

சிறுவயது நினைவுகளுடன்
எப்படி நம் காதல் நினைவுகள்
கலந்தன என்று தெரியவில்லை
பாய்லரைத் தொட்டு சூடு பார்த்த நினைவில்
உன் கன்னம் தொட்ட நினைவு வந்தது
குளித்துத் துடைத்த நினைப்பில்
உன் கண்ணீர் துடைத்த நினைவு வந்தது
துடைத்து பத்திரமாய்க் கட்டிவைத்தேன்.

உன் வீட்டுப் பரணிலும்
ஏதோ ஒரு பொருளில்
நம் காதல் ஒளிந்திருக்கக் கூடும்.
அதைப் போடாமல் வைத்திரு
அது இருப்பதால் ஒரு பயனும் இல்லாமல் இருக்கலாம்
அது இருக்கிறது என்ற பயனைத் தவிர

Friday, January 6, 2017

புத்தகத் திருவிழாவில் "பிள்ளைப்பா"

இந்த ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவில் "யாமறி" தமிழ்க் குழும நண்பர்கள் பலரின் முயற்சியில் உருவான "பிள்ளைப்பா" மழலையர் பாடல்கள் (புத்தகம்+ஆடியோ CD) நான்கு அரங்குகளில் கிடைக்கும்.
1. பனுவல் (அரங்கு எண் : 471, 472)
2. நூலகம் பேசுகிறது (அரங்கு எண்: 409)
3. புதுகைத் தென்றல் (அரங்கு எண் : 82)
4. தெய்வப்புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக்கூடம் (அரங்கு எண் : 214)
இந்த முறை புத்தகச் சந்தை கழிவு விலையுடன் நமது கூடுதல் சலுகையையும் சேர்த்து 20% கழிவு விலையில்(ரூ 120/-) கிடைக்கும்.

"நேர்மறை எண்ணங்கள்; தாய் மண்ணின் வண்ணங்கள்" நம் மழலைகளுக்கு ஊட்டவேண்டும் என்பதே இந்த வெளியீட்டின் நோக்கம்.

25 பாடல்கள் அடங்கிய இந்தத் தொகுதியின் சில பாடல் துளிகளை இங்கே கேட்கலாம்.