Monday, September 28, 2009

அலைமகள்

சிப்பிக்கு முத்தையும் நெல்லுக்கு வித்தையும்

இப்புவி மாந்தர்க்கு வித்தையும் சொத்தென்று

அளித்த திருமகளே நீயெனக்குப் பாற்கடல்

ஒளித்த அருமருந்து அள்ளியள்ளி இன்றே

அருளி இரைப்பை பெருத்து இதயம்

சுருங்கா வரத்தையும் தா 


மலைமகள்

சமரிட வந்தசூறைக் காற்றினுக் கஞ்சாது
அமரிடத்தே ஆடி அடிக்கும் மரத்திற்கு
வீரமான வேர்தந்தாய் வீரிதிரி சூலிஎன்னில்
வேராக நெஞ்சில் ஒளிந்தோடும் வாய்மைக்கு
நேராய் நிமிர்ந்து மறத்துடன் வெளிப்பட
வாயிலொன்று காட்டிடு வாய்

கலைமகள்

வீணை நரம்பிலும் மீட்டும் விரல்களிலும்
தூணைத் திருத்திச் சிலைசெய் உளியிலும்
மானை வரைகின்ற தூரிகைத் துள்ளலிலும்
பானை வனையும் விரலிடைச் சேற்றிலும்
ஓடியாடும் வாணியே வந்தெனது மூளையில்
ஓய்வாக வேணும்உட் கார்

Sunday, September 20, 2009

காற்று

நான் ஊருக்குச் சென்றேன்

ஈச்ச மரத்திலும் கரண்ட்டு கம்பியிலும்

கூடு கட்டியிருந்த தூக்கணாங் குருவிகளைக்

குசலம் விசாரித்துக் கொண்டிருந்த

என் காற்று நண்பன் என்னைக் கண்டு

தென்னை மரங்களையும் புன்னை இலைகளையும்

அசைத்து ஆரவாரம் எழுப்பி ஓடி வந்தான்

வரும் வழியில்

சேற்று வயலில் நாற்று நட்டுக்கொண்டிருந்த

என் அத்தை மகளின்

'எப்ப வந்த மாமா?' ( என்ன ஒரு மரியாதை!)

எனும் கிள்ளைமொழியையும்

கேட்டு வந்து சொன்னான்

செல்லமாய் என் காதிலும் மூக்கிலும்

கிச்சு கிச்சு மூட்டினான்

என்னை வாழ வைக்கும் உயிர் நண்பன்



மெட்ராஸ் வா என்றேன். வந்தான்.

இங்கிருந்த என் நெருங்கிய நண்பனை

அறிமுகப் படுத்தினேன்

இவன் பெயரும் காற்று; மெத்தப் படித்தவன்

இரசாயண ஆலைகள் என்னென்ன

தயாரிக்கின்றன,

எஞ்சின் எப்படி மூச்சு விடுகிறது

வண்டிகள் ஓடும்போது டயரும் தார் ரோடும்

என்ன செய்கின்றன

என்றெல்லாம் எப்போதும்

ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பவன்.


இது கண்ட ஊர்க்காற்று

'இதெல்லாம் நமக்கு ஒத்து வராது

நான் வேணும்னா நீ வேணா ஊருக்கு வா '

என்று கூறி ஓடியே போய்விட்டான்


இவனைக் காண்பதற்காகவே

நான் அடிக்கடி ஊருக்குச் செல்கிறேன்



பாரதியார்

பாரதத்தில் பா-ரதம் ஒட்டிய

பாரதி-யார் என்றால் பாரதியார் என்பேன்

பாரதியின் பாமகள்கள் பா-ரதிகள்

பாரதியின் பாமகளுடன் பழக்கம் கொண்ட

பாரதன் எனக்கு

பாரதியின் மா-ப்பிள்ளையாக மிகவிருப்பம்.

கைக்கிளை

வண்டதின் அமுதும் அமுதக்கலயமும் நல்வண்டல்

மண்ணிற்குமழை நீரும்காய்ந்த ஒரிலையுமாம்

கண்ணிற் கொன்றாய்க் கருத்து மாறுலகில் கண்மணியுன்

எண்ணம்காண் திறனிலாக் குருடன்நான்

பெண்ணரசாம் நினைவென்றிலேன் நினைவன்றி இலேன்

நின்கிளை கைக்கிலைஎனினும் கைக்கிளை

கொண்டனன் நெஞ்சிலென்றும் பூட்டி என்கவியால்

பிரமன்படைத்த பூத்தலைப்பூப் போற்றுவன்


Friday, September 18, 2009

கேளாச் செவி

ஈன்றோர்சொல் ஆன்றோர்சொல் அன்பின் கிளைச்சொல்

தேன்சொட்டும் தேள்கொட்டும் அன்பில் விளைச்சொல்

என்றோசொல் முன்னோர்சொல் கேட்டாலும் என்செவிக்கு

என்றெட்டும் உள்எழும்என் சொல் ?



தூங்கும் குழவியைத் தாலாட்டி அன்புடன்

தாங்கும் அழகிய தூளிக்குக் கேட்பதில்லை

ஏங்கிஅழும் மழலை ஓசை - மனதினுள்

ஓங்குசொல் கேட்டதா செவிக்கு ?

புகையிலை எதிர்ப்பு நாள் ( 31 மே )

வெள்ளம் புகையுயிர் கொல்லும் பகையுன
துள்ளம் கவர்ந்துனை வெல்லும் புதைகுழி
தள்ளும் சுருளெனச் செல்லும் உனதுடல்
உள்ளும் அரவிலாப் புற்று

Thursday, September 17, 2009

லிமரிக்

சுஜாதா எழுதச் சொன்னார் ஒரு லிமரிக்கு

சுவையா நான் எழுதி வந்தேன் ஒரு குமரிக்கு

அவ வாயெல்லாம் இங்கிலீசு பேச்சு

அவ முகமெல்லாம் பவுடரு பூச்சு

சும்மா யாருன்னு பார்த்தா அட! நம்ம - ருக்கு !



குமுதத்தில் திரு சுஜாதா அவர்கள் நடத்திய லிமரிக் போட்டியில் தேர்வாகி வெளிவந்த கவிதை

கவிஞன்

இருவாழையும், தேக்கும்,

சிறுகொடியும், கனிகளும்,

அரசிலையும், மாவிலைகளும்,

நறுந்தேனும், கோவையும்,

விரிமயிலும், மீன்களும்,

கரும்பாம்பும், வண்டுகளும்,

ஒருசங்கும், முல்லைமலர்களும்,

பிறவும்

ஒருங்கிணைந்ததே பெண்ணெனக் கூறி

அருஞ்சுவர்க்கபுரியை

அடர்க்காடாக்கிய

பித்தன்.


மூக்குக் கண்ணாடி

கண்ணுக்குப் பயன்படும்

கண்ணாடிக்குப் பெயர் மூக்குக் கண்ணாடி


கடமை உணர்வுடன்

கண்ணாடியைத் தாங்கியும்

முகத்தின் அமைப்பில்

மூக்கின் பின்னுள்ளதால்

காதுகளுக்குக் கடுகேனும் புகழில்லை.

இறை தேடல்

புவிச் சட்டியில் சிறிது சூரியக் குழம்பூற்றிக்

காற்றுக் குழாயில் எப்பொழுதாவது வரும்

மழைக் குடிநீர் பிடித்து,

வயற் பாத்தி(ரங்)களில்

நெற்சோறு சமைத்து,

போற்றுவோர் பலரைப் புறக்கணித்து

மாற்றவர்க்கும் மாபெரும் விருந்து படைக்கும்

அகிலச் சமையற்காரர் யார்?

அப்படியொருவர் இருந்தால்

அவரைச் சமைத்தவர் யார்?

?

இரை தேடலுடன்
இறைதேடல் தொடர்கிறது..

Wednesday, September 2, 2009

நீரே

அலைக்கடல்தனில் நீலமாகி,
பனிமலைதனில் வெண்மையாகி,
படர்மேகத்தில் கறுப்பாகி
வயற்சேற்றினில் பழுப்பாகி
பயிர்ப் பரப்பினைப் பசுமையாக்கி,

கதிர்க் கரங்களை ஏழ் வண்ண
வில்லாய் வளைக்கும் நீர்
நிறமற்ற நீரே!

நீர் எலாம் ஒன்றே
என நில மாந்தர்க்கு
நீரே சாற்றுவீரே!

நன்னயம்

பரிகசித்தாலும் பானைக்குப்  

பசியாற்றும் பழையசோறு...


அலை அடித்தாலும் அரித்தாலும்

கடலை அணைக்கும் கரை...


வெட்டிச் சாய்த்தவன் 

படுத்துறங்கும் கட்டிலாகும் மரம்...  


மனிதா

உனக்கு மட்டும் ஏன்?

கண்ணுக்குக் கண்.

பல்லுக்குப் பல்?


யாரையும் பழிவாங்க நானிதை எழுதவில்லை!



அழுக்கு

உள்ளேயே உற்பத்தி ஆவது

வெளியிலும் தெரிந்து விடுகிறது.

வெளியிலிருந்து வந்தது

உள்ளேயும் ஒளிந்துகொள்கிறது.



உள்ளிருப்பதை உணராதவர்கள்

"ஆஹா என்ன சுத்தம்?" என்று வியக்கிறார்கள்

இவர்கள் எண்ணத்தைக் காப்பாற்றுவதற்காகவே

என்னைச் சுத்திகரித்துக் கொள்கிறேன்

இவர்களுக்கு நன்றி.



வெளியிருப்பதையோ பலரும்

பூதக்கண்ணாடி கொண்டே பார்க்கின்றனர்

எனக்கே புலப்படாதவற்றை புலப்பட வைப்பதால்

இவர்களுக்கும் நன்றி



உள்ள அழுக்கு நீங்கும் வரை

சுத்திகரித்துக் கொண்டே இருப்பேன்

சுத்தமாக..

உலகைவிட்டு நீங்கும்வரை.




ஹைக்கூ : கொசு

பின்னிய அழகிய ஊஞ்சலில்

ஆடியது கொசு

சிலந்தி வலை

ஹைக்கூ: வாஞ்சை

செம்மறி ஆட்டை வாஞ்சையுடன்

வருடிக் கொடுத்தவன்

தலையில் பனிக்குல்லா

ஹைக்கூ: உயர்வு

தெய்வத்திற்கும் மேலாய்

என்னை உயர்த்தி......

சிதறு தேங்காய்

ஹைக்கூ: குமிழிகள்

கலக்கிய நீரில் தோன்றின குமிழிகள்

ஐயோ வேண்டாம்

நீரில் கொப்புளங்கள்

ஹைக்கூ: விமர்சனம்

என்ன பானை செய்தான் இவன்?

உடைத்தால்

கோணல் மாணலாய்த் துண்டுகள்

எழுதுகோல்

வல்லவனது வளையாத கோல்
வள்ளுவனதோ அழியாத கோல்

வேண்டுகோல், தாண்டுகோல்
தூண்டுகோல், ஊன்றுகோல்
என்று பலவகையாய் எழுதுகோல்கள்

மைவகைகள்:
பொறுமை பற்றாமை பொறாமை
வறுமை தீராமை கொடுமை
வேண்டுமை கைம்மை கலங்காமை

தருமை பெருமை
பெறுமை சிறுமை
ஒருமை தீமை
நன்மை பன்மை
புரியாமை பெண்மை
மற்றும்...
உண்மை ஊமை.

உன் மை விட்டு விட்டு எழுதினாலும்
உண்மை விட்டு விடாமல் எழுதட்டும்

நீ வைக்கோல் தராசுக்கோல் ஆதல் நலம்.