Sunday, September 20, 2009

காற்று

நான் ஊருக்குச் சென்றேன்

ஈச்ச மரத்திலும் கரண்ட்டு கம்பியிலும்

கூடு கட்டியிருந்த தூக்கணாங் குருவிகளைக்

குசலம் விசாரித்துக் கொண்டிருந்த

என் காற்று நண்பன் என்னைக் கண்டு

தென்னை மரங்களையும் புன்னை இலைகளையும்

அசைத்து ஆரவாரம் எழுப்பி ஓடி வந்தான்

வரும் வழியில்

சேற்று வயலில் நாற்று நட்டுக்கொண்டிருந்த

என் அத்தை மகளின்

'எப்ப வந்த மாமா?' ( என்ன ஒரு மரியாதை!)

எனும் கிள்ளைமொழியையும்

கேட்டு வந்து சொன்னான்

செல்லமாய் என் காதிலும் மூக்கிலும்

கிச்சு கிச்சு மூட்டினான்

என்னை வாழ வைக்கும் உயிர் நண்பன்



மெட்ராஸ் வா என்றேன். வந்தான்.

இங்கிருந்த என் நெருங்கிய நண்பனை

அறிமுகப் படுத்தினேன்

இவன் பெயரும் காற்று; மெத்தப் படித்தவன்

இரசாயண ஆலைகள் என்னென்ன

தயாரிக்கின்றன,

எஞ்சின் எப்படி மூச்சு விடுகிறது

வண்டிகள் ஓடும்போது டயரும் தார் ரோடும்

என்ன செய்கின்றன

என்றெல்லாம் எப்போதும்

ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பவன்.


இது கண்ட ஊர்க்காற்று

'இதெல்லாம் நமக்கு ஒத்து வராது

நான் வேணும்னா நீ வேணா ஊருக்கு வா '

என்று கூறி ஓடியே போய்விட்டான்


இவனைக் காண்பதற்காகவே

நான் அடிக்கடி ஊருக்குச் செல்கிறேன்



No comments: