Thursday, March 8, 2012

தத்துவமும் பித்துவமும்

 தத்துவம் பிறந்த காலம் முதலே பித்துவமும் உலகில் உலவிவருகிறது என்பது என் கருத்து. தத்துவத்தை மதிக்கும் நாம் பித்துவத்தை அவ்வளவாக மதிப்பதில்லை. திருக்குறளைப் போற்றும் நாம் தெருக்குறளையும் போற்ற வேண்டும் என்கிற மேலான கருத்தை வலியுறுத்தி இந்தப் பதிவு.  

'யாகவாராயினும் நாகாக்க காவாக்கால் யாராவார் யாகவா முனிவர்?" பெரிய ஞானிகளும் முனிகளுமே தத்துவத்துடன் பித்துவம் கலந்து தருவதை நாம் காலம் காலமாகக் கண்டுவருகிறோம். "மேனியைக் கொல்வாய்.. மேனியைக் கொல்வாய்.." என்ற கீதா உபதேசம் முதற்கொண்டு இதற்கு உதாரணங்கள் பல சொல்லலாம். ஆனால் 'அச்சம் என்பது தமிழர் உடமையடா' ( திராவிடர் என்று சொன்னாலும் வம்பு) என்கிற காரணத்தால் கிருஷ்ண பக்தர்களின் உதைகளிலிருந்து தப்பித்து வேறு உதாரணங்களுக்கு மாறிவிடுவோம்.


உதாரணங்களுக்கு முன்பாகப் பித்துவம் என்றால் என்னவென்று பார்ப்போம். தொல்'copy'யனின் விதிகள் சில:
1. பித்துவம் என்பது தத்துவத்தின் தழுவலாய் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.
2. தத்துவ ஞானிகள் ஒதுக்கிவிடும் தத்துவங்களும் பித்துவமாகலாம்.
3. பித்துப் பிடித்தவர்தான் பித்துவம் சொல்லவேண்டும் என்றில்லை. ஆனால் பித்துவத்தில் கொஞ்சம் பித்துத்தனம் இருக்க வேண்டும்.
4. யாரையும் குத்தும் தனம் கூடவே கூடாது.
5. பாசம் காட்டலாம் ஆபாசம் கூடாது.
ஆகமொத்தத்தில் பித்துவம் என்பது ஒரு பின் நவீனத் தத்துவமாக இருக்க வேண்டும்!


கல்வி என்பது அழியாதது என்ற கருத்தைப் பித்துவமாய் இப்படிக் கூறலாம். 'ஒருவனின் பல் சொத்தை பிடுங்கலாம், பல சொத்தையும் பிடுங்கலாம் ஆனால் அவன் வித்த சொத்தை யாரும் பிடுங்கமுடியாது.'
(இங்கு 'வித்த' என்பதை வித்தை என்று எடுத்தாலும் விற்ற என்று எடுத்தாலும் - இந்தப் பித்துவம் பிழையாகாது.)


தேர்வுகளின் தொல்லையால் தூக்கம் தொலைக்கும் மாணவர்கள் முதல்மரியாதை படப் பாடலான "மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கல" பாடலைப் பாடினால் அது தத்துவம். இந்தப் பாடலை வைத்தே சில பித்துவங்களும் பாடலாம். செமஸ்டர் தேர்வில் மார்க் குறைந்துவிட்டால் "book-ஐ வாங்கினேன் mark ஏதும் வாங்கல" என்று பாடலாம். அதுவே கப்(அரியர்) வாங்கிவிட்டால் "கப் வாங்கினேன் மெடலு வாங்கல" என்று சைக்கிள் பெடல் சுத்தலாம்.  அடடா நான் பாடுவது என்பாட்டிக்குக் கேட்டுவிட்டது. அவரும் பாட ஆரம்பித்து விட்டார், "பிளாஸ்கு வாங்கினேன் காபியைக் காணல.."  இப்போது என் மனைவி பாடுகிறார்.."பர்ஸ் வாங்கினேன்..காசொன்னும் காணல..." பித்துவ மழையில் நனைந்துவிட்டேன்.


"காதல் ஒன்றும் சுத்த பத்தம் பார்ப்பதில்லையே எச்சில் கூடப் புனிதமாகுமே" என்றார் உதித் நாராயணன்.( கவிப்பேரரசிடம் வாதிட முடியுமா? அதான் உதித்...ஹி ஹி!) அதுபோல் பித்துவத்துக்கும் இடம் பொருள் ஏவல் கிடையாது. பெரும்பாலான பித்துவங்கள் குளியலறையின் ஷவரில் இருந்துதான் கொட்டும். மேலைக் கலாச்சாரத்தில் ஊறிஇருந்தாலும் பாத்ரூமில் பேப்பர் படிப்பதை சாமி குத்தமாகக் கருதவதால் எனது பாத்ரூம் நிமிடங்கள் பொதுவாய் அமைதியாகவே கழி-யும். இந்த அமைதியில் பிறக்கும் பித்துவங்கள் பல உண்டு. ஒரு நாள் யோசித்தேன் பாத்ரூம் டைல்ஸ் எல்லாம் மாற்றியிருக்கிறோம் ஒரு அழகான படம் மாட்டினால் என்ன? கதவில் ஏதாவது வாசகம் எழுதலாமா என்றும் யோசித்த போது ஒரு பாடல் நினைவுக்கு வந்தது ..... "போனால் போகட்டும் போடா.."!  இன்னொரு பாடல் கூட நினைவுக்கு வருகிறது. விதி எண் 5 -ஐ மீற விருப்பமில்லை!


தத்துவத்தின் தழுவலே பித்துவம் என்பதற்கு ஒரு உதாரணம் பார்ப்போம். "அட மீன் செத்தாக் கருவாடு நீ செத்தா வெறுங்கூடு - கண்ணதாசன் சொன்னதுங்க" என்று பாதி சரணத்தில் கண்ணதாசனை மேற்கோள் காட்டி "பசு இருந்தாலும் பாலாகும் செத்தாலும் தோலாகும்" என்று மீதி சரணத்தை வைரமுத்து எழுதியிருப்பார். இதே உத்தியைப் பயன்படுத்தி நாமும் பித்துவம் பாடலாம். "பசு இருந்தாலும் புல்-ஆகும்* செத்தாலும் புல்லாகும்"(*ஆகும் - தீர்ந்துவிடும்) ..... புல்லரிக்கிறதா இல்லையா சொல்லுங்கள்? 

வெறும் நகைச்சுவைக்கு மட்டுமா பித்துவம்? தீய வழியில் செல்லும் இளைஞர்களையும் பன்ச் சொல்லித் திருத்தலாம். "கண்ணா நீ இன்னைக்கு தம் கட்டி தம் கட்டி தம் அடிச்சா..நாளைக்கு தம்-கட்டி தம்-கட்டி உன்னை அடிச்சிடும்" (தம்-கட்டி = lung cancer).

"பார்ல ஏறிட்டு கார்ல ஏறாதே..பிளாட் ஆகி பிளாட் வெளியில் படுக்காதே.." இப்படி எவ்வளவோ விஷயங்கள் சொல்லலாம்.

பித்தார்க்குப் பித்தான பித்தாக்கிப் பித்தார்க்குப் பத்தாகும் பிழை.. ! 
 
அன்பு நண்பர்களே, தத்துவ ஞானிகளிடமிருந்து தப்பித்து நமக்கு நாமே பித்துவம் வகுத்துக்கொண்டு வளமுடன் வாழ்வோம்  என உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
 
உங்கள் பித்துவ ஞானத்தை வைத்து எனக்கு உதவ முடியுமா? அடம் பிடிக்கும் குழந்தைகளை அடக்குவது எப்படி? ("மடப் பசுவாய் அடங்குமா அடம் பிடிக்கும் சிசு?" )

4 comments:

ஸ்ரீராம். said...

தத்துவம் பித்துவம்னு தனித் தனியாத் தெரியாது....! தத்துபித்துவம்னுதான் தெரியும்!!! எங்கள் 'உள்பெட்டி'யில் கூட யூஸ் செய்வோம்!!!! ஆனால் நீங்கள் கெட்ட கேள்விக்கு எதாவது அடிச்சி விடணுமே...

"இடம் கொடுத்து வளர்த்ததால் குழந்தை அடம் பிடிக்காம என்ன செய்யும் மட மனிதரே....!!"

ஹி...ஹி...இதை நீங்க பித்துவத்துல சேர்த்துக்க மாட்டீங்கன்னு தெரியும்....!

மட மனிதரேன்னு சொன்னா மனம் புண்படும்னா முதல் வரியாக "அட மானிடா" என்று மாற்றி விடலாம்!

ஸ்ரீராம். said...

சே....பார்த்துப் பார்த்து 'டைப்பி'யும் கேட்ட கேள்வி கெட்ட கேள்வியாயிடிச்சி....மன்னிக்கவும்!

கௌதமன் said...

பித்துவம்? நாளைக் காலையில், பாத் ரூமில் ஆற 'அமர' யோசித்துச் சொல்கிறேன்.

மோ.சி. பாலன் said...

ஸ்ரீராம் - நீங்கள் கேட்கும் கேள்வி மிகவும் நியாயமானதே. வருத்தம் வேண்டாம்!
கௌதமன் - போதி மரத்தின் கீழ் அமர்ந்து புத்தரானது இப்படித்தானோ?