Sunday, October 31, 2010

கனவு வேலை


ஒரே கருத்து  -  இரண்டு வடிவங்களில் : 

கனவு வேலை (லிமரிக்)


மதிய இடைவேளையில் அடிப்பது அரட்டை
மற்ற இடைவெளிகளில் படிப்பது இன்டர்நெட்டை
தேடியதோ கனவு வேலை
செய்வதோ தூங்கும் வேலை
அலாரமாய் வைப்பதோ தன்னுடைய குறட்டை !!

இரு(க்)கைச் சயனம் (வெண்பா)

கயல்போல் விழிகள் இரவில் உறங்கி
அயராது மீண்டும் துயில்வதும் ஏனோ?
சயனம் செயவோ பணியில் இரு(க்)கை?
வியப்புன் குறட்டை விழிப்பு!


பயணம் புரிவதில் பாதையும் தேயப்
புயலாய்ப் புகையும் புழுதியும் மேவ
முயலென முந்தியே வந்துமேன் தூக்கம்?
உயரும் கரிகால் பதிவு! (carbon footprint)

Thursday, October 14, 2010

அன்னைப் பறவை

முடக்குவதற்கல்ல முட்டையில் இட்டது
அடைப்பதற்கல்ல அடைகாத்து  வந்தது
உடைத்து வா வெளியே
நீ பறக்கப் பிறந்தாய்-

உன்னால் நான் பெற்றேன் -
பருந்தை விரட்டும் வீரம்;
உன்னால் நான் பெற்றேன் -
அதிகம் பறக்கும் தூரம்.

அலகு நிறைத்து வருவேன்.
வாய் திற.
வள்ளுவன் பாடட்டும்-
அமிழ்தினும் ஆற்ற இனிதே அன்னையின்
அலகு அளாவிய  அரிசி.

இருளில் தான் வாழ்ந்து வந்தேன்-
இருக்கட்டும் நீ வைத்துக்கொள் இதோ
மின்மினி விளக்கு...
தூரத்து மாமரத்தின் குயிலிசை கேட்கிறதா?
இன்று உறங்கிவிடு-

நாளை ஒன்று செய் -
பெற்ற பொழுதிற் பெரிதுவப்பேன்
கூடுவிட்டு எழும் உன் முதல் சிறகசைப்பில்-

பிறகு என் இறகுகள் உதிர்ந்தால் என்ன?
மனிதன் உதிர்த்தால் என்ன?

Monday, October 11, 2010

மலையேறும் மீன்கள்

என் எழுத்துக்கள்:

தெருப்பக்கத்தில்
குழந்தை போட்ட கோலங்கள்;
அருவி நீரில் மலையேறும் மீன்கள்;
இருட்டில் தொலைத்த நாணயம் தேட
நான் பற்ற வைக்கும் தீக் குச்சிகள் ;
மரத்திலிருந்து காற்றில் உதிர்ந்தவை;
மலர்கள் பொறுக்கி மாலையாக்கிக் கொள்கிறேன்
சருகுகள்? - அடுப்பெரித்துக் கொள்கிறேன்

உங்களுக்கு எப்படி?
படித்து விட்டதால் உங்கள் வாழ்வின் பகுதியானவை;
பிடிக்காவிட்டால் ?
படித்த நேரம்  உங்கள் ஆயுள் தின்ற எமன்கள்!

Friday, October 1, 2010

இலையுதிர் காலம்


















ஓவியம்: திரு. ரமேஷ்பாபு
"எங்கள்" ப்ளாக்-இல் http://engalblog.blogspot.com/2010/09/blog-post_09.html  இந்தப் படம் போட்டு இதைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது என்று கேட்க, எனக்குத் தோன்றிய வெவ்வேறு எண்ணங்கள் இதோ:

புயலில் தோன்றுமா புன்னகை?
இது இலையுதிர் காலம்:
உடை உதிர்த்த மரங்கள்.
நாணத்தால் தரையிறங்கிய பறவைகள்.
இயற்கையின் சுழற்சியைக் காண
இவர்களும் சுற்றுகின்றனர்.....
தோளில் தொங்குவது என்ன?
புகைப்படத்தில் அடங்கியதோ புகைப்படக் கருவி?
_____________________________________________________

இலைகளால் மெத்தை இடுகிறேன்.
உன் பிள்ளையின் பாதங்களும்,
என் கிளைகளின் நிழலும்
சுடு நிலத்தில் படவேண்டாம்.
_____________________________________________________

வெறும் சிலுவையாய் இருந்துவிட்டுப் போகிறேன்.
இயேசுவை விட்டு விடுங்கள்...
காகங்களே என் மீது அமராதீர்கள்.
இந்த ஆள் ஆணி வைத்திருக்கக் கூடும்.
____________________________________________________

நேற்று தர கனி இருந்தது
இன்று தர இலை இருந்தது
நாளையும் காற்று தரும் மரம்.
மகளே,
இன்று என் கரம் தந்தேன்.
நாளை என்பது உன் கரங்களில்.