(உண்மைச் சம்பவத்தைத் தழுவியது)
ராதாகிருஷ்ணன் தீடீரென்று மாரடைப்பில் இறந்துபோவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. பிள்ளைகள் இருவருக்கும் கல்யாணம் செய்துவிட்டு, பேரன் பேத்திகள் எடுத்து அறுபத்தைந்து வயதில்தான் இறந்துபோனார் என்றாலும், எந்த அறிகுறியும் இல்லாத அவரின் திடீர் மரணம்தான் உறவினர்களுக்குப் பெரும் வருத்தமாக இருந்தது. தவிர 65 வயது என்பது இந்தக் காலத்தில் சின்ன வயதுதானே.
ராதாகிருஷ்ணனின் தம்பி சுந்தரம்தான் இறுதிக்காரியங்களை முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார். பத்து வயது வித்தியாசம் இருந்தாலும் சுந்தரமும் ராதாவும் மிகவும் நெருக்கமாக வளர்ந்தவர்கள். இதைச் செய்; அதைச் செய்; என்று அண்ணனின் இரண்டு மகன்களான ரமேசையும், சங்கரையும் விரட்டிக்கொண்டிருந்தார் சுந்தரம்.
எல்லா உறவினர்களும் வந்துவிட்டார்கள் என்பது உறுதியானதும் சவத்தை எடுக்க ஆயத்தமானார்கள். "டேய் ரமேசு தேர் ஜோடனை இன்னுமா நடக்குது..? மணியாவுது பாரு" என்று ராதாகிருஷ்ணனின் பெரிய மகனைக் கேட்டவர், "இரு நானே பார்க்கிறேன்" என்று போனார்.
அங்கே அலங்காரம் செய்பவர்களைக் கடிந்துகொண்டார்... "ஏம்பா ஏதோ ஒப்புக்கு ஜோடனை பண்றீங்க.. சரங்களைச் சேரக் குத்துங்க.. இன்னா பூக்காரரே... ராதா அண்ணன் கிட்ட வாங்குன கடனைத்தான் தள்ளித் தள்ளிக் குடுப்பீங்க...இப்ப உங்க ஆளுங்க சரத்தை தள்ளித் தள்ளிக் குத்துறானுங்க.. எதுவும் கேக்கமாட்டீங்களா..?"
"டேய் பசங்களா கேக்குதா..?" என்ற பூக்காரர், சுந்தரம் நகர்ந்ததும் "ஆமாம்.. இவர் குடுக்குற காசுக்கு இதுக்கு மேல அடர்த்தியா யார் பூ ஜோடிப்பாங்க..?" என்று முணுமுணுத்தார்.
சவத்தைக் குளிப்பாட்டி சாங்கியம் செய்துகொண்டிருந்தவரையும் இது சரியில்லை, அது சரியில்லை என்று கடிந்து கொண்டார் சுந்தரம்.
அடுத்து, நெய்ப்பந்தம் பிடிக்க வந்த பேரன் பேத்திகளில் சங்கரின் மகன் இல்லாததைக் கண்டதும் வெகுண்டார் சுந்தரம். "டேய் சங்கரு எங்கடா என் சின்னப்பேரன்..? ஆத்தாக்காரி முத்தானையிலேயே முடிஞ்சி வச்சிருக்காளா...? அவளுக்குத் தெரியலானாலும் உனக்குத் தெரிய வேணாம்?... பேரப்பசங்க நெய்ப்பந்தம் காட்டுலன்னா எங்க அண்ணனுக்கு சொர்க்கத்துக்கு எப்படிடா வழி தெரியும்?"
சங்கர் ஓடிப்போய் மகனைத்தூக்கிக்கொண்டு வந்தான். குழத்தைக்கு டயப்பர் அணிவித்திருப்பதைக் கண்டு அதற்கும் வெகுண்டார் சுந்தரம் "வெள்ளைக்காரனைப் பார்த்து நம்ம ஆளுங்களும் இதைக் கட்டிவிட்டுடறாங்க .. ஆம்பளப் புள்ளைக்கு இந்த வயசுலியே வெம்பிப்போச்சுன்னா அப்புறம் கொழந்த பொறக்கலன்னு ஆஸ்பிடலுக்கு அலையவேண்டியதுதான்.. "
சங்கரின் மனைவி கோபமாகக் கணவனைத் திருகினாள் "உங்க சித்தப்பா ரொம்ப பேசுறாரு.. நல்லதுக்கில்ல..." சங்கர் "அவரைப் பத்தி புதுசாவா தெரிஞ்சுக்கிற..? ஒருத்தர் கிட்டவாவது அவருக்கு நல்ல பேரு இருக்கா பாரு.." என்று மனைவியைச் சமாதானப்படுத்தினான்.
சுந்தரம், ராதாகிருஷ்ணன் இருவருக்கும் மூத்தவரான அவர்களின் அக்கா தம்பியிடம் பரிவாக "இப்ப என்னாத்துக்கு இப்படிக் கூச்சல் போடுற..? பக்குவமா சொல்லலாமில்ல? கத்திக் கத்தி தொண்டை காஞ்சிப்போச்சி.. ஒரு வாய் தண்ணிகூட குடிக்காம இருக்குற.. இந்தா காபி குடி... கிட்டயா இருக்கு சுடுகாடு? நடந்து போய் வரணுமில்ல..?"
"எனுக்கு எதுவும் வேணாம்க்கா.. அண்ணனை அடக்கம் பண்ணிட்டுத்தான் எதுவும் சாப்பிடுவேன்.. " என்று அடுத்த காரியங்களில் இறங்கினார்.
ஒருவழியாய் சவ ஊர்வலம் புறப்பட்டு இடுகாட்டை அடைந்தது. ராதாகிருஷ்ணனுக்கு மூத்தவராக அக்கா இருந்ததால் அவர்கள் வழக்கப்படி அவரைப் புதைக்கவேண்டும். குடும்பத்தில் மூத்த மகனோ மகளோ மட்டுமே எரியூட்டப்படவேண்டும்.
சவக்குழி தோண்டப்பட்டிருந்தது. அதைத் தோண்டுபவரிடம் காலையிலேயே சுந்தரம் அடையாளம் சொல்லி அனுப்பியிருந்தார். "புங்க மரத்துக்கு மேற்கே அண்ணியைப் புதைச்ச இடம் தெரியுமில்ல. அதும் பக்கத்திலேயே குழியை வெட்டு..." ராதாகிருஷ்ணனின் மனைவி இளவயதிலேயே இறந்துவிட்டார். அவர் நோய்வாய்ப்பட்டிருந்தபோது சுந்தரத்திடம் "இனி நான் பொழைப்பேன்னு தோணல.. என்னை அடக்கம் பண்ணுற இடத்துக்குப் பக்கத்திலேயே.. உங்க அண்ணனைக் கொண்டு வந்து சேத்திருப்பா...." என்று சொன்னதை எண்ணிக் கண்ணீர் உகுத்தார்.
ஆனால் இப்போது வெட்டப்பட்ட குழி புங்கை மரத்தைவிட்டுத் தள்ளியிருந்தது. மரத்தைச்சுற்றி ஒரு மதில் சுவர் எழுப்பப்பட்டிருந்தது.. அண்ணியைப் புதைத்த இடம் மதிலுக்குள் இருந்தது. "அடப்பாவிங்களா ஆறு கொளத்த ஆக்கிரமிச்சீங்க.. மனுஷனுக்கு ஆறடி நிலம் சொந்தம்.. அதையும் அபகரிச்சிட்டீங்களேடா" என்று அரற்றினார். "இந்த மதிலை ஒடச்சி புதுசா ஒரு குழி வெட்டித்தான் அண்ணனை அடக்கம் பண்ணுவேன்..." என்று வீரம் காட்டினார். ஊர்ப்பெரியவர்கள் கூடி "ஏம்பா சுந்தரம், நடக்காத கதையைப் பேசாதே…ஆகுற வேலையைப் பாரு. இப்பவே பொழுது சாய்ஞ்சிருச்சு" என்று வெட்டப்பட்டிருந்த குழியிலேயே ராதாகிருஷ்ணனைப் புதைக்க ஏற்பாடு செய்தார்கள். மற்ற சாங்கியங்களைப் பார்த்துப் பார்த்து செய்த சுந்தரம் இப்போது எதிலும் ஈடுபடாது புலம்பிக்கொண்டே இருந்தார். அண்ணனின் முகத்தில் மண்ணை அள்ளிப் போட்டதும் கதறி அழுது மயங்கினார். தண்ணீர் தெளித்து எழுப்பினார்கள்.
மண்ணைக்கொட்டத் தொடங்கிய உடனே பெரும்பாலோனோர் வீடு திரும்பிவிட்டார்கள். இடுகாட்டில் வேலை செய்பவர்கள் ரமேசிடமும் சங்கரிடமும் " சித்தப்பாவுக்கு ஒடம்பு முடியல பாரு... அவரை அழைச்சிக்கிட்டுப் போங்கப்பா.. நாங்க குழியை மூடிடுறோம். காலையில் பால் வைக்க வாங்க" என்றனர். சற்று தெளிந்திருந்த சுந்தரம் "ரமேசு குழியை முழுசா மூடுற வரைக்கும் இருந்துட்டுப் போகணும்.. இவங்க சரியா மூடலன்னா அண்ணனை நாய் நரி வந்து கொதறிவிடும்.. ஏற்கனவே குழி ஆழம் கம்மியா இருந்தது.. ஊராளுங்க என் வாய அடைச்சிட்டாங்க..” என்றவர், “இதோ ஒண்ணுக்குப் போய்விட்டு வரேன்" என்று மதில் பக்கம் போனார்.
சற்று நேரத்தில் தடாலென்று சத்தம் கேட்டது. இப்படி ஒரு அசம்பாவிதத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. மதிலருகில் சுந்தரம் சரிந்து கிடந்தார். தலையிலிருந்து ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. அண்ணனும் தம்பியும் தலையில் அடித்துக்கொண்டு அழுதார்கள். "அப்பாவைத் தொலைச்சிட்டு இப்ப சித்தப்பாவையும் தொலைச்சுட்டோமே..." தேர் ஜோடித்து பிணத்தை ஏற்றிவந்த வண்டிக்காரருக்கு ரமேஷ் போன் செய்தான். "சீக்கிரமா வண்டியைத் திருப்பிக்கிட்டு வாங்க...."
"எதுக்குப்பா...?"
“வாங்க சொல்றேன்” என்று இணைப்பைத் துண்டித்தான்.
சிறுநீர் கழிக்கச் சென்ற சுந்தரம் மதிலருகில் சென்றதும் ஓவென்று அழுதார். "அண்ணி உங்களுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாத்த முடியலையே... பக்கத்துலதான் அடக்கம் செய்யமுடியல... உங்க ரெண்டு பேர் நடுவில் இருக்கும் சுவரை உடைக்காம விடமாட்டேன்" என்று படார் படார் என்று தலையால் முட்டினார். அப்படியே கீழே விழுந்தவர் தான். ரமேசும் சங்கரும் ஓடிவருவதற்குள் உயிர் பிரிந்துவிட்டது. தலையில் பட்ட அடியினாலா, சாப்பிடாமல் இருந்ததாலா என்று தெரியவில்லை. ரமேஷ் பார்த்த போது மூச்சும் இல்லை நாடியும் இல்லை. அண்ணனுக்கும் அண்ணிக்கும் தடையாய் இருந்த மதில்மேல் அவர் ஆவி நின்று விட்டது. ஆவி உடைத்து உடையுமா மனிதன் கட்டிய மதில்?
8 comments:
எதை எதையோ நினைக்க வைக்கிறது...!
வேறு எதையும் மனதில் வைத்து எழுதவில்லை தனபாலன்
அடடா... இப்படியுமா ஒருவர்..
இப்படி ஒரு பாசமா.நெகிழ வைத்தது.
ஆம் வெங்கட்.
நன்றி வல்லிசிம்ஹன்
கதை மனதை மனதை நெகிழ வைத்தது. அருமை
நன்றி இமா
Post a Comment