'பரமசிவம் அரிசிக்கடை'. அப்பாவின் பெயரில் கடை வைத்ததில் ரொம்பவே மகிழ்ச்சி முருகனுக்கு. அதுவும் சேட்டுக் கடைக்குப் பக்கத்தில் தனது கடை அமைந்ததில் மிகவும் பெருமிதம்.
இந்த சேட்டிடம்தான் அப்பா எவ்வளவு கடன் வாங்கியிருப்பார்? அசலைவிட பல மடங்கு அதிகமாய் எவ்வளவு வட்டி கட்டியிருப்பார்? பணம்போனது ஒரு பக்கம் இருக்க, அம்மாவின் தாமரைச் செயின் கடனைத் திருப்பமுடியாமல் மூழ்கிவிட்டதை ஒருபோதும் மறக்கமுடியாது அவனால். "எங்க அம்மாவுக்கு அவங்க அம்மா போட்ட செயின்..." என்று அம்மா அடிக்கடி புலம்புவதும், "ஏய்.. உங்க அம்மாவும் போயிட்டாங்க.. அவங்க அம்மாவும் போயிட்டாங்க.. செயின் போனா என்ன? போடீ.. " என்று அப்பா அடக்குவதும் முருகன் வீட்டில் வாடிக்கை.
பரமசிவமும் சேட்டிடம் கேட்டுப்பார்த்தார் "பணம் வேணா கூடப்போட்டுத் தாரேன்.. அந்த நகை கெடைக்குமா பாருங்க சேட்டு..." "பரமசிவம் உனக்குத் தெரியாதா எங்க தொழில்.?. மூழ்கின பொருள உடனே உருக்க அனுப்பிச்சிடுவோம்.. இருந்தா தரமாட்டானா?"
தாத்தா காலத்துலயும்தான் பயிர் வெச்சாங்க. வீட்டுலேயே விதை இருக்கும். மாட்டு ஏர். சாணி உரம். போதுமான மகசூல். நிம்மதியா வாழ்ந்தாங்க. இந்தக்காலத்துல பசுமைப் புரட்சி அதிக மகசூல் என்று சொன்னவங்க உரம் மருந்துன்னு அதிக செலவாகும்னு சொல்லலையே. சேட்டுகிட்ட கடன்வாங்கி வியாபாரிகிட்ட பணம்கொடுத்து விவசாயிக்கு மிஞ்சுவதுதான் என்ன?
முருகன் பெரியவனாகி அப்பாவுக்குத் தோள்கொடுத்து உழைத்தபிறகே குடும்பம் மீண்டும் தலைதூக்கியது. விவசாயத்தோடு வண்டி லோடு அடிப்பது அரிசி தயார்பண்ணி கடையில் போடுவது என்று கொஞ்சம் கொஞ்சமாய் கடன்களை அடைத்தான்.
ஒரு சமயம் அப்பாவுடன் கடைவீதியில் முருகன் சென்றபோது "என்னாப்பா பரமசிவம் கடைபக்கமே காண முடியல" என்று சேட்டு கேட்டபோதுதான் அவர் கடைபக்கத்திலேயே சொந்தமாய் கடைபோட வேண்டும் என்ற எண்ணம் முருகனுக்கு உதித்தது. உங்க கடைப்பக்கம் கடன்வாங்க வந்த காலம் போச்சு சேட்டு. இப்போ நெனச்சா சொந்தமா கடையே போடமுடியும் என்று நினைத்தவன் அதை நிறைவேற்றியும் விட்டான். அதுமட்டும் அல்ல. சேட்டு வீட்டுக்கு அவன்தான் இப்போது அரிசி சப்ளை செய்கிறான்.
கல்லாவில் அமர்ந்தபடி பழைய எண்ணங்களில் முருகன் மூழ்கியிருந்தபோது, தொப்பையைத் தூக்கிக்கொண்டு சேட்டு அவன் கடைக்குள் நுழைந்தார். வழக்கமாய் வேலைசெய்யும் பையனிடம் அரிசிக்குப் பணம் கொடுத்து அனுப்புபவர் இப்போது அவரே வந்திருந்தார்.
"என்னப்பா முருகா வழக்கமா ஒரு மூட்டை அரிசிக்கு சீட்டு அனுப்புவ. இப்ப ரெண்டு மூட்டைன்னு எழுதியிருக்க?"
"போன வாரம் உங்க வீட்ல அஞ்சி கிலோ அரிசி கேட்டிருந்தாங்க அனுப்பிவிட்டேன். அஞ்சி நாள் அதிகமாச்சுனா ஒரு மாசத்து வட்டி கேட்பீங்க இல்ல? அதேபோல அஞ்சி கிலோவுக்கு ஒரு மூட்டைன்னு எழுதினேன்"
"முருகா... அது எங்க தொழில் தர்மம். நீ அரிசி எடைக்கு ஏத்த காசு வாங்கிக்க.."
"ஹ ஹ ஹ.. இதச் சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தேன் சேட்டு. வெளையாட்டுக்குத்தான் அப்படி எழுதினேன். ஒரு மூட்டைக்கு காசு கொடுங்க! "
"அப்போ அந்த அஞ்சி கிலோ?"
"சேட்டு, நான் வியாபாரம் பண்ணாலும் விவசாயிதான். இதான் எங்க தர்மம். அஞ்சி கிலோவ தள்ளி விடுங்க"