Friday, August 27, 2021

REMIX இது. ORIGINAL எது? #10

 அன்னையென்று வந்தவளே

ஆருயிரைத் தந்தவளே

ஆதரிக்க யாருமின்றி

தன்னந்தனி ஆனவளே

கொஞ்சிக் கொஞ்சி வளர்த்தவர்கள்

உன் நெஞ்சைப் பிளந்ததும் ஏன்?

அன்னை அஞ்சிக் கிடக்கணுமோ?

உயிர் எஞ்சிப் பிழைக்கணுமோ?

இந்த பூலோகம் பாழாகிப் போனதோ?

அந்த மேலோகம் மேலாகத் தோணுதோ?

Saturday, August 21, 2021

ஒரு வெங்கலப் பானைக்குள்ளே!

 

https://youtu.be/MW9eSckmiA4

ஒரு வெங்கலப்  பானைக்குள்ளே
வெண்பொங்கலும் வேகையிலே....!
அந்த சந்தடிச் சாக்கினிலே
இங்கு முந்திரி காணலையே
கடைக்குச் சென்று முந்திரியை வாங்கிடும் வேளையிலே
பருப்பும் வெந்து பொங்கலும் தான் குழையுது பானையிலே
சொந்த பந்தம் வாரீரோ
சுடும் பொங்கல் உண்ண வாரீரோ..?!
நாட்டுப் பசு நான் கறந்து
பாலைக் காய்ச்சித் தானே நெய் எடுத்தேன்; நெய் எடுத்தேன்
நானெடுத்த நெய்யினிலே நாலு அஞ்சு ஸ்பூனை நானும் விட்டேன்
நானும் விட்டேன்
அம்மாடி தாளிப்பின் வாசம் இங்கே நாசியை விட்டு நீங்கிடுமோ?
அஞ்சாறு மணிநேரம்  நெய்யின் வாசம் நாவினை விட்டு நீங்கிடுமோ?
கொதிக்கின்ற பொங்கல் விரைவில் ஆறாதோ?
ருசிக்கின்ற பெண்கள் விரலும் நோகாதோ?
மகிழம் பூவே எந்தன் மணிமுத்தே
நிழலைப்போலே உள்ள மிளகை மென்று பாரு காரத்தெ காரத்தெ!

Friday, August 20, 2021

REMIX இது. ORIGINAL எது? #9

இயற்கையும் மீளுமோ...?செயற்கையும் ஓயுமோ...?இதுவரை அழித்தது அது மட்டும் போதும் இருக்கட்டும் மீதம்

கல்லாகும் குறிஞ்சி

முள்ளாகும் முல்லை

மண்ணாகும் மருதம்

நஞ்சாகும் நெய்தல்

வளமான பூமி

அதுவாகும் பாலை

நலமாக நாளை

விடியாதோ காலை?

போனது போகட்டும்

ஏனிந்தத் துன்பம்?

மீண்டும் வேண்டும் இன்பம்.

Thursday, August 19, 2021

REMIX இது. ORIGINAL எது? #8

 

மரகத வானம்

மகரந்த மேகம்

மரங்களின் தாகம்

மண்மீது தீர்க்கும்


தகுந்த காலத்தில் தருகின்ற தானம்

தயை நீ புரிந்தால் தழைத்திடும் யாவும்

மழையெனும் அமுதமும் கரும்பினில் சேரும்

எந்திர லோகத்தில் சர்க்கரை ஆகும்!

Monday, August 9, 2021

மனிதன் ஏமாந்தான்

(கம்பன் ஏமாந்தான் பாடலைத் தழுவி. நன்றி: கவியரசர்)


மனிதன் ஏமாந்தான் இந்த உலகத்தையே அவன் தனதென்றானே கற்பனை செய்தானே... மனிதன் ஏமாந்தான்.


கம்பு கழி என்று ஏன் கொண்டான்? பிற உயிர்களை வதைத்தானே... அவன்

ரம்பங்கள் கோடரி ஏன் செய்தான்? தினம் மரங்களை அறுத்தானே


தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்

தீபத்தின் பெருமையன்றோ? அந்த

தீபத்தினால் ஒரு கானகம் எரித்தால்

தீபமும் பாபமன்றோ?


வேடர்கள் உழவர் பல தொழில் செய்வோர் சமநிலை சிதைத்தாரே அந்த வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட நானும் சேர்ந்தேனே...


ஆத்திரமென்பது மனிதனுக்கென்றும் அடங்கவே அடங்காதோ?

அவன் ஆதிக்கத்தால் மண்ணில் பாதிப்பு வந்தால் அடங்குதல் முறைதானே?

-பாலா சிவசங்கரன்

 10 ஆகத்து 2021



Tuesday, August 3, 2021

மொச்சை விழி!

பெண்: பச்சைத் தமிழா, பச்சைத் தமிழா,
பசைபோல் உனை நான் ஒட்டிக்கொள்ளவா?
ஆண்: மொச்சை விழியே, மொச்சை விழியே,
மசிபோல் உன்னை நான் தொட்டுக் கொள்ளவா?

பெண்: உச்சிக் கிளையே,  உச்சிக் கிளையே 
கனிபோல் உன்னில் நான் ஒட்டிக் கொள்ளவா?
ஆண்: இச்சைக் கனியே, இச்சைக் கனியே 
கிளிபோல் உன்னை நான் கொத்திச் செல்லவா?

ஆண்: செப்புச்சிலையே, செப்புச்சிலையே
செப்ப ஒரு செய்யுள் நான் சொல்லித் தரவா?
பெண்: மெச்சும் கவியே, மெச்சும் கவியே,
கச்சையென உன்னை நான் கட்டிக் கொள்ளவா?!