Monday, August 26, 2019

தமிழ் சொல்லாத நன்னெறியா?


(பனியில்லாத மார்கழியா பாடல் மெட்டு)

தமிழ் சொல்லாத நன்னெறியா?
தமிழில் இல்லாத தேன்சுவையா?
மழலையும் பேசத் தயங்கிடுமா?
மறந்துவிட்டால் அது தாய்மொழியா?

முயற்சியில்லாமல் முடிந்திடுமா?
பயிற்சியில்லாமல் தொடர்ந்திடுமா?
முயற்சியில்லாமல் முடிந்திடுமா?
பயிற்சியில்லாமல் தொடர்ந்திடுமா?
தமிழ் சொல்லாத பள்ளிகளா?
மழலைக்கு ஊட்டும் கள்ளிகளா?
மழலைக்கு ஊட்டும் கள்ளிகளா?
(தமிழ் சொல்லாத நன்னெறியா?)

இஷ் இல்லாமல் பெயரில்லையா?
இஷ்டம் இல்லாமல் தமிழ்ப்பெயரா?
இஷ் இல்லாமல் பெயரில்லையா?
இஷ்டம் இல்லாமல் தமிழ்ப்பெயரா?
கஷ்டமில்லாமல் புகுத்திவிட்டார்
நஷ்டமென்றால் அது நமக்கல்லவா?
நஷ்டமென்றால் அது நமக்கல்லவா?
(தமிழ் சொல்லாத நன்னெறியா?)

குலத்தினைக் காக்கும் தெய்வங்களும்
மொழியினைக் காக்க மறந்திடுமா?
குலத்தினைக் காக்கும் தெய்வங்களும்
மொழியினைக் காக்க மறந்திடுமா?
நிலத்தினை ஆளப் பிற இனமா?
நாவினை ஆளப் பிறன் மொழியா?
நாவினை ஆளப் பிறன் மொழியா?
(தமிழ் சொல்லாத நன்னெறியா?)

(கூடுதலாக இன்னொரு சரணம்)
படகில்லாத பாய்மரமா?
பார்வையில்லாமல் ஓவியமா?
படகில்லாத பாய்மரமா?
பார்வையில்லாமல் ஓவியமா?
நுகர்வில்லாத பூமணமா?
உணர்வில்லாத தமிழினமா?
உணர்வில்லாத தமிழினமா?
(தமிழ் சொல்லாத நன்னெறியா?)

பாலா சிவசங்கரன்
26 ஆக 2019


ஒரே ஒரு காரணம்
------------------

மேற்படி எனது பாடலைப் படித்த நண்பர்கள் சிலர், தம் மழலையருக்கு வடமொழிப் பெயர் வைத்துள்ளது குறித்தும் தமிழை விடுத்து இந்தி அல்லது பிற மொழியை இரண்டாவது மொழிப்பாடமாக வைத்துள்ளது குறித்தும் பேசினர் / வருந்தினர்.

குற்றம் சாற்றுவதும் குற்ற உணர்ச்சி கொள்வதும் எனது நோக்கமல்ல. எனது பாடல் இன்றைய நிலையை எடுத்துரைக்கிறது. இன்றைய நிலையின் புரிதலுடன் மேல் நகர்வோம். இது வரை செய்த தவறுகளை அடுத்த ஒரு தலைமுறைக்குள் சரி செய்ய முயல்வோம் முனைப்பாக.

25 ஆண்டுகளுக்கு முன் "உங்கள் பிள்ளையை தமிழ் வழியில் கற்பிப்பீர்களா ஆங்கில வழியிலா?" என்ற விவாதம் இருந்தது. இப்போது "தமிழ் மொழியை உங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிப்பீர்களா? மொழிப்பாடம் அவசியமா என்ன?" என்று கேட்கும் அளவிற்கு மொழித் தேய்வு நிகழ்ந்துள்ளது. இதுதான் ஒரு தலைமுறையில் நாம் கண்டுள்ள மாற்றம்.

பெயரில் தமிழில்லை என்ற கருத்து இரண்டாம் பட்சமே. அது ஒரு அவா என்ற அளவில் எடுத்துக்கொண்டு முதன்மையான பிரச்சினைக்கு நகர்வோம். தமிழகப் பள்ளிகளில் தமிழ் என்பது ஒரு மொழிப்பாடமாகக் கூடக் கற்பிக்கப்படுவது மறுக்கப்படுகிறது (அல்லது தமிழ் மொழியைப் பயிலாமலேயே ஒரு மழலையின் கல்வித்தேர்ச்சி சாத்தியமாகிறது) என்பதே நாம் முதலில் சரி செய்ய வேண்டியது.

தமிழ் மொழியைக் கற்பதால் பிள்ளைகளின் வருங்காலத்துக்கு என்ன பயன் என்று கேட்பவர்கள் சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பிள்ளைகள் படிக்கும் கணிதம் அறிவியல் அவர்கள் அன்றாட வாழ்வில் பயன்படுவது போலவே தமிழ் மொழியும் நிச்சயம் பயன்படும் என்பதை சிறியதொரு அக ஆய்வில் நாம் அனைவருமே உணரலாம். வாழ்வின் எத்தகைய ஒரு சூழலுக்கும் ஒரு குறள் விடையாக அமைகிறது. ஒப்புக்கொள்கிறீர்களா? பாரதியின் பாடல்கள், பண்டைய தமிழ் நூல்கள் அனைத்திலும் எத்தனையோ அறிவார்ந்த சிந்தனைகள் அழகின் வெளிப்பாடுகள் பொற்குவியல்களாகக் குவிந்துள்ளன. ஒப்புக்கொள்கிறீர்களா? இச்செல்வங்களைத் துறப்பதென்பது சொந்த நாட்டிலேயே அகதியாவதற்கு ஒப்பாகும். பாடுபட்டு நம் முன்னோர் தேடிச் சேர்த்த மொழிச்செல்வங்கள் அனைத்தையும் புதைத்துவிட்டு ஏழைச் செல்வந்தராய் இறப்பது அறிவுடையோர் செயலா?

இச்செல்வங்களைத் தொடர்ந்து உரிமை பாராட்டுவதையும், துய்த்து மகிழ்வதையும் நமது வருங்கால சந்ததிகள் இழந்துவிடக் கூடாது என்ற ஒரு காரணம் போதாதா நம் பிள்ளைகளுக்கு நாம் தமிழ் பயிற்றுவிக்க?

5 comments:

KILLERGEE Devakottai said...

பாடலின் வரிகள் மட்டுமல்ல பதிவில் சொல்லியவைகளும் தமிழின் நன்னெறியோடு இருக்கிறது நண்பரே

திண்டுக்கல் தனபாலன் said...

பாடல் அருமை... காரணம் சிறப்பு...

மோ.சி. பாலன் said...

மிக்க நன்றி தோழர் கில்லர்ஜி

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான பாடல் வரிகள். பதிவில் சொன்ன விஷயங்களும் சிறப்பு.

மோ.சி. பாலன் said...

மிக்க நன்றி வெங்கட்