Wednesday, January 11, 2017

பழைய பாய்லர்

பொங்கலுக்கு வீட்டை சுத்தம் செய்கையில்
பரணில் பழைய பாய்லர் இருந்தது.
கரி போட்டு வெந்நீர் வைத்த
சிறுவயது நினைவுகள்
நெஞ்சினுள் புகையெழுப்பிக் கிளம்பின
போட்டுவிடலாமா என்று வீட்டில் கேட்டதற்கு
வேண்டாம் இருக்கட்டும் என்றேன்.

சிறுவயது நினைவுகளுடன்
எப்படி நம் காதல் நினைவுகள்
கலந்தன என்று தெரியவில்லை
பாய்லரைத் தொட்டு சூடு பார்த்த நினைவில்
உன் கன்னம் தொட்ட நினைவு வந்தது
குளித்துத் துடைத்த நினைப்பில்
உன் கண்ணீர் துடைத்த நினைவு வந்தது
துடைத்து பத்திரமாய்க் கட்டிவைத்தேன்.

உன் வீட்டுப் பரணிலும்
ஏதோ ஒரு பொருளில்
நம் காதல் ஒளிந்திருக்கக் கூடும்.
அதைப் போடாமல் வைத்திரு
அது இருப்பதால் ஒரு பயனும் இல்லாமல் இருக்கலாம்
அது இருக்கிறது என்ற பயனைத் தவிர

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மனம் எனும் பரணியில் நிறைய உள்ளன...!

வெங்கட் நாகராஜ் said...

பாய்லர் நினைவுகள்.....

இனிய கவிதை. பாராட்டுகள்.

இராய செல்லப்பா said...

கடந்த ஆறுமாதங்களில் தமிழில் வெளிவந்த சிறந்த கவிதை இதுதான் என்று கூறுவேன். வாழ்த்துக்கள்!

-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.
https://chellappatamildiary.blogspot.com/2017/01/blog-post_18.html

மோ.சி. பாலன் said...

மிக்க நன்றி திருவாளர்கள் தனபாலன் மற்றும் வெங்கட் அவர்களே

மிக்க நன்றி திரு செல்லப்பா அவர்களே. உங்கள் பாராட்டு பெரும்பரிசு