Wednesday, December 23, 2015

கேளுங்கள் தரப்படும்

விவித்பாரதி வானொலி நிலையத்தில் காலை நேரத்தில் தெய்வீகப் பாடல்களை எனது பள்ளிப்பருவத்தில் தினமும் கேட்கும் வழக்கம் உண்டு. மத நல்லிணக்கம் கருதி மும்மதப்பாடல்களையும் ஒலிபரப்புவார்கள். பிற மதங்களின் மீதான எனது இணக்கத்திற்கு இளம்வயதில் இந்தப்பாடல்களைக் கேட்டது முக்கிய காரணம்.
கிருஸ்துமஸ் நன்னாளை முன்னிட்டு 'கேளுங்கள் தரப்படும்' என்ற பாடல் என்னில் ஏற்படுத்திய தாக்கத்தை ஒரு சிறு பதிவாய் இங்கு பகிர்கிறேன்.

'கேளுங்கள் தரப்படும்' 'இறைவனிடம் கையேந்துங்கள்' 'கேட்டால் கேட்ட வரம் தரும் தாயே' என்று மும்மதப்பாடல்கள் பலவும் இறைவனிடம் கேளுங்கள் என்று உரைக்கின்றன. இறைவனிடம் மட்டுமல்ல, செய்ய இயன்றவர்களிடம் அவசியமான உதவி கேட்பதில் தவறில்லை. தேவை என்று வந்தபின் தேவையில்லாத கௌரவம் கருதத் தேவையில்லை என்கின்ற புரிதல் ஏற்பட்டது.
கேளுங்கள் தரப்படும் பாடலில் அடுத்து வரும் சொற்றொடர் 'தட்டுங்கள் திறக்கப்படும்' என்பது முயற்சியை விடாதே என்றும் 'தேடுங்கள் கிடைக்கும்' என்ற சொற்றொடர் தேடலை நிறுத்தாதே என்றும் இன்றுவரை என்னை ஊக்கப்படுத்தி வருகின்றன.

?? வயதிலேயே ..ஆகமங்கள் 56-னையும் ஐயம் தீர உணர்ந்தார்' என்கிற வரி - இளைமையில் கல் என்பதையும் கற்க கசடற என்பதையும் சிறுவயதில் எனக்கு புரியவைத்தன.

'முப்பது காசுக்காகவே காட்டிகொடுத்தாரே' என்கிற வரிதான் இந்தப்பாடலிலேயே என்னை மிகவும் பாதித்தது. இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களே என்கிற கோபம் அப்போதெல்லாம் வரும். ஆனால் இப்படியும் மனிதர்கள் இருப்பார்கள் என்கிற புரிந்துணர்வுடன் எப்போதும் நடந்துகொள்ளவேண்டும். அதற்கான தற்காப்பையும் இயன்றவரை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் எனும் கருத்தை வளர வளரப் புரிந்து கொண்டேன்.

நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

2 comments:

Thenammai Lakshmanan said...

அருமை. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

மோ.சி. பாலன் said...

மிக்க நன்றி சகோதரி