Monday, December 9, 2013

கண்ணனின் கனவு

படுத்தவுடன் தூங்கிவிடும் பாக்கியம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அப்படிப்பட்ட சில பாக்கியவான்களில் கண்ணனும் ஒருவன். “எடுத்தது கண்டார் இற்றது கேட்டார்” என்பது போல், கண்ணன் படுப்பதைப் காண்பவர்கள் உடனடியாக அவன் குறட்டைச் சத்தத்தைக் கேட்பார்கள். ஆனால் குறட்டைச் சத்தத்துடன் கிக் ஸ்டார்ட் ஆகும் கண்ணனின் உறக்க வாகனம் விரைவிலேயே அவனைக் கனவுலகத்தில் கொண்டு போய் விட்டுவிடுகிறது பெரும்பாலான நாட்களில்.

கனவுலகம் ஏனோ ஒரு விசித்திர உலகமாகவே இருக்கிறது கண்ணனுக்கு. இப்படிச் சொல்வதனால் இந்தக் கனவுகள் ஏதோ பேய்க்கனவுகள் என்றோ, எதிர்மறை நிகழ்வுகள் நிறைந்தவை என்றோ பொருளல்ல. தன் வாழ்வில் இதுவரை சஞ்சரித்தில்லாத புதிய ஊர், தெரு, வீடு, இதுவரை சந்தித்திராத புதிய மனிதர்கள், கேட்டிராத புதிய சம்பாஷணைகளென்று கனவில் வரும் எந்த ஒரு பரிச்சயமில்லாத விஷயமும் இவன் மனதைச் சம்ஹாரம் செய்துவிடுகின்றன. ஆச்சரியங்களை விரும்பாதவர்களும் இருப்பார்கள் என்பது ஆச்சரியமாய் இருக்கிறதல்லவா? என்ன செய்வது? ஆச்சரியங்களை விரும்பாததால் தான் கண்ணன் கனவுகளை வெறுக்கிறான்.

கண்ணனுக்கு மகிழ்ச்சி தரும் கனவுகள் என்று எதுவும் கிடையாதா? அவனுக்குக் கனவுக்கன்னி என்று யாரும் கிடையாதா? என்று கேள்விகள் எழுகின்றன அல்லவா? மகிழ்ச்சியான கனவுகளும் அவ்வப்போது அவனுக்கு வந்திருக்கின்றன என்றாலும் பெரும்பாலானவை தூக்கம் கொல்லிகளாகவே அமைந்துவிடுகின்றன. கண்ணனுக்கும் காதல் உண்டு. அழகிய காதலி உண்டு. ஆனால் பாருங்கள். கனவுக்கன்னியாக இருக்கவேண்டிய அவள் வெறும் நினைவுக் கன்னியாகவே இருக்கிறாள். ஓரிரு கனவுகளில் அவள் வந்திருக்கிறாள் என்றாலும் அக்கனவுகளில் எள்ளளவும் காதல் ரசம் இருந்ததில்லை. ஒரு கனவில் காதலியின் பாட்டி செத்துக் கிடக்கிறாள். அழுக்கு உடையணிந்து மூக்கைச் சிந்தும் கோலத்தில் காதலியைப் பார்க்கவே சகிக்காமல், பாட்டிக்கு மரியாதை செலுத்திவிட்டு சட்டென்று வெளியேறிவிடுகிறான் கண்ணன். இன்னொரு கனவிலோ ரொம்பவும் சின்ன வயசுப் பெண்ணாக வந்து தொலைக்கிறாள் காதலி. இத்தனைக்கும் இந்தக் கனவில் சின்னப் பெண்ணான அவளை இழுத்தணைத்து முத்தமிட்டும் விடுகிறான் கண்ணன். ஆனால் அதில் காதல் உணர்வு இருக்கமுடியுமா? நீங்களே சொல்லுங்கள்.

"கனவு காணுங்கள்", "கனவு மெய்ப்பட வேண்டும்" என்ற கலாம் மற்றும் பாரதியின் கூற்றுகளில் கண்ணனுக்குத் துளியும் உடன்பாடில்லை. வள்ளுவன் நல்ல எண்ணங்கள் வேண்டும் என்று சொல்கிறானே தவிர, நல்ல கனவுகள் வேண்டும் என்று எந்தக் குறளிலும் சொன்னதாய்க் கண்ணனுக்குத் தெரியவில்லை. இடையில் வந்த யாரோதான் எண்ணங்களுக்கு மாற்றாகக் கனவு என்ற வார்த்தையைப் புகுத்தியிருக்க வேண்டும். அப்துல் கலாம் அவர்களின் கனவுகளில் ஒருமுறையாவது ஏவுகணைச் சோதனை தோல்வியில் முடிந்திருக்கும், பாரதியின் கனவில் வெள்ளைக்காரன் அவரைத் தூக்கில் போட்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்பது கண்ணனின் வாதம். பாரதியை இனி கேட்க முடியாது. அப்துல் கலாமைச் சந்திக்கும் வாய்ப்பு உங்கள் யாருக்கேனும் கிடைத்தால் இந்தக் கேள்வியைக் கேட்டு அவரது பதில் என்னவென்று கண்ணனிடம் சொல்லிவிடுங்கள்.

இப்படியெல்லாம் கனவை வெறுக்கும், கனவைத் துளியும் நம்பாத கண்ணனுக்குள் இன்று அதிகாலை வந்த கனவு ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. சென்ற வருடம் இதே நாளில் இறந்துபோன தாத்தா அவன் கனவில் வந்தார். அவன் வாயைத் திறக்கச் சொன்ன தாத்தா அவனிடம் முகம் பார்க்கும் கண்ணாடியைக் கொடுத்து "கண்ணா உன் நாக்கைப் பாருடா" என்றார். "நாக்குல கருப்பா பெரிய மச்சம் இருக்கு.. தெரியுதா?" என்றார். "தாத்தா.. எனக்கு நாக்குல மச்சம் கிடையாது" என்ற கண்ணனைப் பொருட்படுத்தாத அவர், “கண்ணா இனி நீ சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் பலித்துவிடுமடா.. எதைச் சொன்னாலும் யோசித்துச் சொல்லு.." என்று சொல்லி விட்டு ஒரு பெரிய ஒளிவெள்ளத்தில் சட்டென்று மறைந்துவிட்டார். இதுபோன்றதொரு பிரகாசத்தைக் கண்ணன் என்றுமே கண்டதில்லை. கோடி சூர்யப் பிரகாசம் என்று இதைத்தான் சொல்வார்களோ? தாத்தாவின் வடிவில் தரிசனம் தந்தது எந்தத் தெய்வமாயிருக்கும் என்று யோசித்தான்.

தூக்கம் கலைந்ததால் எழுந்து குளியலறைக்குச் சென்றவன் முகத்தை அலம்பினான். நீரின் குளிர்ச்சியையும் மீறி கொட்டாவி வந்தது. கண்ணாடியைப் பார்த்தவன் அதிர்ந்துபோனான் .. தாத்தா சொன்னதுபோல் அவன் நாக்கில் பெரிய மச்சம் ஒரு ரூபாய் நாணய அளவில் இருந்தது. இது எப்படி சாத்தியம் என்று ஒரு நிமிடம் திகைத்துவிட்டான்.

நினைவுகளில் துழாவிப் பார்த்தவனுக்கு சட்டென்று புலப்பட்டது - நேற்று இரவு தான் சாப்பிட்ட பான் கறையாக இது இருக்கக்கூடும் என்று.
ஆனாலும் கண்ணன் மனம் தெளிவடையவில்லை. வெற்றிலைக் கறை என்பதோ மச்சம் என்பதோ தெய்வ அருளின் பூடகமான ஒரு குறியீடு மட்டுமே என்ற மாற்றுச் சிந்தனை தோன்றியது. தான் மிகவும் நம்பும், மதிக்கும் தாத்தா கனவில் சொன்ன வாக்கை அவனால் புறக்கணிக்க முடியவில்லை.

ஒரு சிறிய நிகழ்ச்சி ஒரு மனிதனின் எண்ண ஓட்டத்தை முற்றிலும் திசைமாற்றி விடமுடியுமா என்ற ஆச்சரியத்துடன் மீண்டும் முகத்தில் நீரை அறைந்தான்.

முகத்தைத் துண்டால் துடைத்து ஒரு நிமிடம் கண்களை மூடி யோசித்தவன், மெதுவாய் இமைகளைத் திறந்து கண்ணாடியில் தெரியும் தன் பிம்பத்தைப் பார்த்துத் தெளிவான குரலில் சொன்னான்:

"என் தம்பி இனிமேல் குடிப்பதை நிறுத்திவிடுவான்".

அடங்காத புரவி ஒன்றை அடக்கி அதன் மேலேறி நிதானமாய் அதைச் செலுத்திவரும் ஒரு வீரனின் பெருமிதமான அதே சமயம் சாந்தமான ஒரு உணர்வைக் கண்ணாடியில் அவன் பிம்பம் வெளிப்படுத்தியது.

3 comments:

Yaathoramani.blogspot.com said...

அடங்காத புரவி ஒன்றை அடக்கி அதன் மேலேறி நிதானமாய் அதைச் செலுத்திவரும் ஒரு வீரனின் பெருமிதமான அதே சமயம் சாந்தமான ஒரு உணர்வைக் கண்ணாடியில் அவன் பிம்பம் வெளிப்படுத்தியது./

/கதையின் கருவும் சொல்லிச் சென்றவிதமும்
முடித்த விதமும் மனம் கவர்ந்தது
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

நினைவோ ஒரு பறவை... வித்தியாசமான சிந்தனைக்கு பாராட்டுக்கள்...

மோ.சி. பாலன் said...

மிக்க நன்றி ரமணி, தனபாலன்.