Tuesday, December 24, 2013

தனிமை

என் கெடும் முறை பற்றி உனக்கென்ன கவலை
உன் விடுமுறை தான் உனக்கு முக்கியம்
போய் வா.

அடித்த இரையை இழுத்துச் செல்வதுபோல்
என் இதயத்தை நீ இழுத்துச் செல்வது புரிகிறதா?
நீ ஊர் ஊராய்ச் செல்கையில்
ஏதோ தரையில் புரளும் புடவை முந்தானை என்று
தவறாய் நினைத்துவிடாதே.

ஆவி பறக்கும் ஆரத்தித் தட்டைப்போல்
இருவருக்கும் தேநீர் ஏந்தி வந்த நினைப்பில்
தனியொரு காபியை தூக்கிச் சென்றால்
உணவகத்தில் ஊரென்னைக் கேவலமாய்ப் பேசாதா?

பக்கத்தில் திரும்பி திரும்பி பேசி நடந்த வழக்கொழித்து
நேராய்ப் பார்த்து நடக்கையில் எனக்கு கழுத்து வலிக்குதடி.
என் தோளில் தொங்கும் கணினிப்பை
நீ கைவைத்து இழுப்பதுபோல் அழுத்தத்தைக் கொடுக்குதடி

எதிலும் சேராமல் என்னை ஒரு தனிமமாய்
ஆக்கிவிட்டது இந்தத் தனிமை

உன்போல் மையிட்ட கண்களிருந்தால்
என் தனிமையை அழுது அழுது எழுதியிருப்பேன்
என் தனிமையை எழுத தனி மை வேண்டுமடி

என் கெடும் முறை பற்றி உனக்கென்ன கவலை
உன் விடுமுறை தான் உனக்கு முக்கியம்
போய் வா.

3 comments:

Yaathoramani.blogspot.com said...

பிரிவின் ஆற்றாமையை வெளிப்படுத்தும்
கவிதை மிக மிக அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல் வாழ்த்துக்கள்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 1

மோ.சி. பாலன் said...

மிக்க நன்றி ரமணி