Thursday, May 21, 2020

பெட்டி உடுப்பெடுத்து

தண்டவாளத்தில் நடந்து உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்தப் பாடல் சமர்ப்பணம்

(உச்சி வகுந்தெடுத்து பாடல் மெட்டு)

பெட்டி உடுப்பெடுத்து
புள்ளைங்கள தோளில் வெச்சி
தண்டவாளம் மேல்நடந்து
சொந்த ஊரு போனாங்க
சொந்த ஊரு போனவங்க
போன கதி என்னாத்தா?
(பெட்டி உடுப்பெடுத்து)

உண்டி சுருங்க வெச்சு
உண்டியலில் சேத்து வெச்சு
வண்டிக்குத்தான் சீட்டெடுக்கப் போனாங்க - அட
போகும் வழி யாருக்குமே தெரியலையே - ஐயோ
போற வழி ஆபத்துன்னு புரியலையே
(பெட்டி உடுப்பெடுத்து)

துபாயி சிங்கப்பூரு
துட்டு உள்ள தூர ஊரு
ஏரோபிளேன் போனதுன்னு சொன்னாங்க - அட
இங்கருக்கு இவங்க ஊரு தெரியலையே - அட
ஏத்திச் செல்ல வண்டி ஏதும் வரவில்லையே
(பெட்டி உடுப்பெடுத்து)

பங்குச் சந்த மூடவில்ல
வங்கி வட்டி கொறையவில்ல
கூலி வேலை செய்ய மட்டும் வழியில்லை - அட
ஏழை சனம் எண்ணிக்கையில் கொறையலையே - எவர்
எண்ணத்திலும் இவங்களுக்கு எடமில்லையே

(பெட்டி உடுப்பெடுத்து)

Friday, May 15, 2020

பஞ்சபூதக் காதல்


 
காதல் என்றொரு காற்று - அது
பூமி முழுதும் நிறைந்ததடி(டா)
கண்ணில் மறைந்தே போனாலும் - அது
நம்மை விட்டுப் பிரிவதில்லை
 
காதல் என்றொரு பூமி -  அதன்
ஈர்க்கும் வலிமை குறைவதில்லை
திசைகள் மாறிப் போனாலும் - அதன்
விசைகள் என்றும் அழிவதில்லை

காதல் என்றொரு வானம் - அது
உள்ளம் முழுதும் விரிந்ததடி(டா)
தூரம் தாண்டிப் போனாலும் - அது
எல்லைக் கோட்டில் முடிவதில்லை
 
காதல் என்றொரு வெப்பம் - அது
உயிரின் உள்ளே கலந்ததடி(டா)
கூடும்போது கொதிக்குதடி - அது
குறையும் போது நடுங்குதடி
 
காதல் என்றொரு நீரில் - நம்
இருவர் உயிரும் மீன்களடி(டா)
அலைகள் என்றும் ஓய்வதில்லை - நம்
காதல் என்றும் அழிவதில்லை

பாலா சிவசங்கரன்
15 05 2020
=====-----=====-----=====