Wednesday, September 30, 2015

பயன்பாட்டில் வைத்திருப்போம் பண்பாடு

மின்னணுக் கருவிகளின் உச்சங்கள்  
நுண்ணலைக் கதிர்களின் எச்சங்கள்
தலைமிராது நடக்கும் ஏஞ்சல்கள்   
தலைகுனிந்து பார்ப்பது மின்னஞ்சல்கள்;  
குறுஞ்செய்திக் கொஞ்சல்கள் 
காதடைத்த குமிழிக்குள் பாடல்கள் 
பாழடைந்த கிணற்றினுள் ஓலங்கள்
கருவிலிருந்து வந்தனவா இக்கருவிகள்?
உருவிழந்து போயினவோ இங்கு பிற உயிர்கள்?
யாகங்கள் வளர்புகையாய் வாகனங்கள்
வேகத்தில் உயிர்பறிக்கும் எமவாகனங்கள் 
நடைபாதை இல்லாத நெடுஞ்சாலைகளா 
வளநாட்டின் முன்னேற்ற அறிகுறிகள்?
தனிமமாய்ப் போவதா மனிதம்?

கண்களைப் பார்த்து நாம் பேசிடுவோம் 
காதுகள் கொடுத்து நாம் கேட்டிடுவோம்  
கால்களும் இடறி விழுந்தவரை 
கைகளைக் கொடுத்து நாம் தூக்கிடுவோம் 
உதவிகளுக்கு ரிப்ளை செய்திடுவோம்
சகிப்புத்தன்மையை பார்வர்ட் செய்திடுவோம்
வெறுப்புணர்வை டெலீட் செய்திடுவோம் 
மனிதர்களை  லைக் செய்திடுவோம்  
மனிதநேயம்   ஷேர் செய்திடுவோம் 
செல்போனில் வைத்திருப்போம் சிம்கார்டு 
பயன்பாட்டில் வைத்திருப்போம்  பண்பாடு

-----------------------------------------------------------------------------

இந்தக் கவிதை 'வலைப்பதிவர் திருவிழா-2015' மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் 'மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் 2015' - புதுக்கவிதைப் போட்டிகாகவே எழுதப்பட்டது.

இது என்னுடைய சொந்தப் படைப்பு என்றும் இதற்கு முன் வேறெங்கும் வெளியானதல்ல என்றும் முடிவு வெளியாகும்வரை வேறெங்கும் வெளியிடமாட்டேன் என்றும் உறுதியளிக்கிறேன்.

Monday, September 21, 2015

உழுதவன் பசியும் உழைப்பவன் வறுமையும்

உழுதவன் பசியும்
உழைப்பவன் வறுமையும்
இந்த நாட்டிலே விந்தையடா
ஆள்பவனுக்கும் ஆண்டவனுக்கும்
ஆடம்பரத்தில் சிந்தையடா

வியர்வையும் சிந்தி
கண்ணீரும் சிந்துதல்
எந்த ஊரிலே தர்மமடா?

செலவினை மீறிய வரவென்பதிங்கு
செல்வந்தருக்கு மட்டும் ஏனடா?
உழுதவன் விளைவித்த பொருளுக்கு
விலை வைக்கும் உரிமை
வியாபாரிக்கு ஏனடா?

ஓய்வுக்கும் ஊதியம்
வாய்த்தவனுக்குக்
கடமையில் கவனம் ஏதடா?
லஞ்சம் வாங்கித் தின்பவனுக்குக்
கொஞ்சமும் இரக்கம் ஏதடா?
அரசியல் என்பது இந்த நாட்டிலே
ஏழை அரிசியில் கலந்த கல்லடா

பாரியும் ஓரியும்
வள்ளலென்று வாழ்ந்த
பாரத நாடும் இது தானடா
வெள்ளையரின் பின்
கொள்ளையரெனில் இனி
மக்களின் சகாயம் யாரடா?