Friday, January 3, 2014

பொய்யாமொழி

கண்மணிக்குக் கோபம் கோபமாக வந்தது. தேன்மொழியின் பேச்சைக் கேட்டுப் பொய்யாமொழி ஐயாவை நேற்று சந்தித்தது எவ்வளவு தவறு என்று தன்னைத் தானே திட்டிக்கொண்டாள்.

கண்மணியும் தேன்மொழியும் ஒரு கணினி நிறுவனத்தில் ஒன்றாகப் பணிபுரிபவர்கள். கண்மணிக்குத் திருமணமாகிவிட்டது. கண்ணன் ஒரு வங்கியில் பணியாற்றுகிறான். கண்ணன் கண்மணி என்று பெயர் பொருத்தம் ஜோராக உள்ளதே தவிர உண்மையில் இவர்களின் பெயர் கீரி, பாம்பு என்று வைத்திருக்கலாம். இதற்குத்தான் சண்டை போடுவதென்று ஒரு வரைமுறையில்லாமல் எப்போதும் வாயும் வசவுமாகத் திரிபவர்கள் இவர்கள். திருமணம் ஆகி இரண்டு வருடம் ஆகியும் இன்னும் அடங்கவில்லை இவர்கள்.

தேன்மொழிக்கு அவள் ஜாதகத்தில் உள்ள ஏதோ ஒரு கட்டத்தில் சொட்டை இருக்கிறதென்று அவள் அப்பா அம்மா கஷ்டப்பட்டு வரன் தேடிக் கொண்டிருக்க, அவளோ திருமணம் பற்றிய எந்த கவலையும் இன்றித் தனிமையின் இனிமையையும் சுதந்திரத்தையும் குறையின்றி அனுபவித்து வருகிறாள். வார இறுதிகளில் அன்னை இல்லம் சென்று அங்கிருக்கும் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது, பொய்யாமொழி அய்யா நடத்தும் யோகா மற்றும் தியான வகுப்புகளுக்குச் செல்வது என்று மனதை அமைதியுடனும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருப்பாள் தேன்மொழி.

தெரியாதத்தனமாய் தேன்மொழியுடன் தியான வகுப்புக்கு நேற்று மாலை சென்றதுதான் கண்மணிக்கு இன்று மன உளைச்சல் ஏற்படக் காரணமாகிவிட்டது. அதுகூட தியான வகுப்பில் சேருவதற்காக அவள் செல்லவில்லை. வண்டியில் ஏறும்போது தேன்மொழிதான் ஓடி வந்து வழியில் இறக்கிவிட்டுவிட்டுச் செல்லுமாறு கூறினாள். இறக்கிவிட்டவளை, "உள்ளே தான் வாயேன் பொய்யாமொழி ஐயாவை நான் அறிமுகப்படுத்தி வைக்கிறேன். நீ கிளாஸ்ல எல்லாம் சேர வேணாம். ஐயா கிட்ட ரெண்டு நிமிஷம் பேசினாலே மனசு லேசாயிடும். தீராத பிரச்சினைக்கெல்லாம் தீர்வு கிடைக்கும்" என்றாள்.

"ஐயா, இவள் என் தோழி கண்மணி" என்று அறிமுகப் படுத்திவிட்டு வகுப்புக்குச் சென்றுவிட்டாள். கண்மணிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை, வயதானவராய் இருக்கிறார் காலில் விழலாமா என்று யோசித்தவள், எதோ ஒன்று தடுக்கவே வேண்டாம் என்று கைகூப்பி ஒரு வணக்கம் வைத்துவிட்டு அவர்முன் அமர்ந்தாள். மௌனத்தைக் கலைக்கும் வகையில் பொய்யாமொழி ஐயாதான் பேசினார்.. அதுவும் ஒரே ஒரு வாக்கியம்... இல்லை... அரை வாக்கியம். கண்மணிக்குப் பகீரென ஆகிவிட்டது. வயதானவர், எல்லோரும் மதிப்பவர் என்று நினைத்தால் இப்படியா பேசுவார் இவர்? என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. பொய்யாமொழி ஐயாவே அவளுக்கு வணக்கம் சொல்லிப் போய் வாருங்கள் என்பதுபோல் வாசலைக் காட்டி சைகை செய்தார். எழுந்தவள் தேன்மொழி எங்கு இருக்கிறாள் என்று கூடப் பார்க்காமல் சரசரவென வண்டியிலேறிச் சென்றுவிட்டாள்…

வீட்டுக்கு வந்தவள் கண்ணனிடம் எதுவும் பேசாமல் தூங்கிவிட்டாள். காலையில் எழுந்து வழக்கம்போல் அலுவலகம் கிளம்பினாள்.

அலுவலகப் பேருந்து சாலை மண்ணைக் கிளப்பிவிட்டு ஓரமாய் ஒதுங்கி நின்றது. எப்போதும் ஓட்டுனரைப் பார்த்து ஒரு சிறு புன்னகை செய்துவிட்டு உள்ளே ஏறுபவள் இன்று அவரைப் பார்க்காமல் நேராகச் சென்று இருக்கையில் அமர்ந்தாள். பொய்யாமொழி ஐயா சொன்னதின் உறுத்தலில் யாரைப் பார்த்துச் சிரிக்கும் நிலையிலும் கண்மணி இல்லை.

மாலையில் வேறு கசின் ரிசப்சன் இருக்கிறது. கண்ணனுடன் எந்த சண்டையும் போடாமல் இருக்க வேண்டும். நம்ம வீட்டு பங்க்ஷன் என்றால்தான் கண்ணனுக்கு மாப்பிள்ளை முறுக்கைக் காட்டத் தோன்றும். ரெண்டு வருஷம் ஆச்சு இன்னும் புது மாப்பிள்ளைன்னு நினைப்பு.

அலுவலகத்தில் பேருந்து நின்றதும் இறங்கினாள். வழக்கமாய் இவள் இறங்கும்போது திரும்பிப் பார்த்துப் புன்னகைக்கும் ஓட்டுனர் இன்று திரும்பியே பார்க்கவில்லை. இவள் ஏறும்போது சிரிக்கவில்லை என்ற கோபம் போலும். "போய்க்கோடா.." என்று எண்ணியபடி தனது இடத்துக்கு விரைந்தாள்.

"சொல்லாமலேயே போயிட்டயே கண்மணி. பொய்யாமொழி ஐயா என்ன சொன்னார்? அவரைச் சந்தித்ததில் மகிழ்ச்சிதானே..மனதில் ஒரு அமைதி பிறந்திருக்குமே.." என்ற தேன்மொழியிடம், "ஆமாம் அவரைப் பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி" என்று சொல்லிவிட்டு தனது வேலையைத் தொடர்ந்தாள் - தன் தனிப்பட்ட அனுபவத்தை வைத்து தோழியின் நம்பிக்கையையோ மகிழ்ச்சியையோ கெடுக்கவேண்டாம் என்ற எண்ணத்தில்.

11 ஓ கிளாக் மீட்டிங்கில் புகழேந்தி கூட கேட்டார். "என்ன தேன்மொழி உங்கள் வழக்கமான புன்னகையைக் காணோம்? ஏன் இப்படி இருக்கீங்க? கண்ணனோட ஏதாவது பிரச்சனையா?".. "அதெல்லாம் இல்ல சார்.. கொஞ்சம் தலைவலி... வேலையைச் சீக்கிரம் முடிக்கணும்னு டென்ஷன். சாயந்திரம் என் கசின் ரிசப்சன் இருக்கு" என்றாள்.

மதியம் ஒன்றாகச் சாப்பிடச் செல்லும் நக்கீரனை பிங் செய்து "யூ கோ அஹட் பார் லஞ்ச் .. ஐ ஹேவ் எ மீட்டிங்" என்றவளுக்கு "ஷல் ஐ வெயிட்" என்று நேக்ஸ் பதில் போடுவதற்குள் "டூ நாட் டிஸ்டர்ப்" என்று ஸ்டேடசை மாற்றிவிட்டாள்.

மாலையில் திரும்பும்போதும் உம்மென்ற முகத்துடனேயே வீடு சென்று அடைந்தாள். வாட்ச்மேனைப் பார்த்துக் கூடச் சிரிக்கவில்லை. வீடு திறந்திருந்தது. வங்கியிலிருந்து கண்ணன் சீக்கிரமே திரும்பிவிட்டிருந்தான். குளித்துவிட்டு இவள் அனுமதிக்கும் ஓரிரு சட்டைகளில் ஒன்றை அணிந்திருந்தான். ஆனால் வழக்கப்படி மேல் பட்டனைப் போடவில்லை. இதற்காகவே பல சண்டைகள் நடந்திருக்கின்றன. "யார் பாக்கணும்னு இப்படி சட்டையைத் திறந்து விடுறீங்க" என்று இவளும், "நீ லோ ஹிப் கட்டுறீயே நான் கேட்கிறேனா?" என்று அவனும் முட்டிக்கொள்வார்கள். இன்று எதுவும் ஆரம்பிக்கவேண்டாம் என்று அமைதியாக உள்ளே சென்றாள். அயன்காரரிடம் கொடுத்துவிட்டுச் சென்ற பட்டுப் புடவையைக் கண்ணன் பொறுப்பாக வாங்கி வைத்திருந்தது கொஞ்சம் நிம்மதி தந்தது.

தனக்கு கிரீன் டீ போட கிச்சனுக்குச் சென்றவள் பில்டரில் டிக்காஷன் இறங்கியிருப்பதைப் பார்த்து கண்ணனுக்கும் காபி கலக்கிக் கொண்டுவந்தாள். "இந்தாங்க ரிசப்சனில் பில்டர் காபி கிடைக்காது.." வழக்கத்துக்கு மாறான இந்த அமைதியும் உபசரிப்பும் கண்ணனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. என்ன ரியாக்ஷன் கொடுப்பது என்று புரியாமல் சற்றே வழிவதுபோல் முழித்தான். அதைப் பார்த்ததும் கண்மணிக்கு சிரிப்பு வந்துவிட்டது.. பொய்யாமொழி எபக்டால் காலையிலிருந்து எல்லோரிடமும் உம்மென்று அடக்கி வைத்திருந்த அவள் சிரிப்பு குக்கர் விசில் திறந்ததுபோல் பொங்கிப் பொங்கி வெளி வந்தது. கண்மணியின் திடீர் மாற்றம் புரியாத கண்ணன், அவனும் சிரித்து வைத்தான்.

கோப்பைகளைச் சமையலறையில் வைத்துவிட்டுப் பட்டுப்புடவை கட்ட உள்ளே சென்றாள். நட்பான சூழ்நிலையைப் பயன்படுத்தி கண்ணனும் உள்ளே சென்றான். "பின் போட்டுவிடவா.." என்றான். சட்டையின் மேல் பட்டன் போடப் பட்டிருப்பதைக் கவனித்த கண்மணி, புன்னகையுடன் பின்னை அவனிடம் கொடுத்தாள்.

புடவை கட்டிக் கிளம்புகையில் அலமாரியில் தேடி உதட்டுச் சாயம் எடுத்து லேசாகத் தடவிக் கொண்டாள். இந்த லிப் ஸ்டிக்கும் கண்ணனும் கண்மணியும் அடிக்கடி முட்டிக்கொள்ளும் ஒரு விஷயமாகும். கண்ணனின் பரம்பரையில் யாருமே லிப் ஸ்டிக் போட்டதில்லை. எனவே கண்ணன் வீட்டு விழாக்களில் லிப் ஸ்டிக் போடுவதில்லை என்றும் கண்மணி வீட்டு விழாக்களில் மட்டும் போடுவது என்றும் ஒரு உடன்படிக்கை போட்டிருந்தார்கள். உதடுகளைத் தேய்த்துச் சாயத்தை சமன் செய்தவள் சிரித்தவாறே கேட்டாள்..."நல்லாருக்கா...?" சிரித்தவாறே கண்ணன் சொன்னான் "லிப் ஸ்டிக்கை விட இந்த சிரிப்பு உன் உதடுகளுக்கு அழகாக இருக்கிறது"

ஒரு நாள் முழுதும் மன இறுக்கத்தில் இருந்த கண்மணிக்கு இப்போதுதான் புரிந்தது "பொம்பள சிரிச்சா போச்சு" என்று பொய்யாமொழி ஐயா சொன்னதின் உட்பொருள்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

பொய்யாமொழி ஐயா சொன்ன உட்பொருளை கண்மணி புரிந்து கொண்டார்களே...!

வாழ்த்துக்கள்...