Tuesday, November 30, 2010

மண்புழு

தார்ச் சாலையில் மண்புழு
பிட்டுக்கு மண்சுமந்தான் முக்கண்ணன் - மூவடியில்
எட்டி உலகளந்தான் மால்வண்ணன் - பூவுலகில்
துட்டுக்கு மாந்தர் அலைந்து அளந்து-கை
விட்டமண் தேடும் புழு

Friday, November 19, 2010

கார்த்திகை தீபம்

திருவாய் திறந்து மணிகள் ஒலிக்கத்
திருநாள் அறிந்து திசைகள் சொலிக்கத்
திருமகள் சூடும் மணியாகும் - தீபத்
திருவிழா சூழும் சுடர் 

அருவாய்த் தகிக்கும் தணலில் லர்ந்து
உருவாய்த் திகைக்கும் ஒளியில் மிளிர்ந்து
தருவாய்த் தழைத்துத் தரணி நிறைக்கும்
இருளில் அகலால் பகல்

கருணை மழையைப் பொழிந்திட வானில்
வருணன் கடலை அழைத்திடத் தேரில்
அருணன் வரவழி காட்டும் விளக்கே
அருணை மலையில் மலர் 

அனைவருக்கும் கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்  

Thursday, November 18, 2010

பேரா நீ நல்ல பேரா எடுடா

பேரா நீ நல்ல பேரா எடுடா

என் அப்பனுக்கும் உன் அப்பனுக்கும்
இடையேன் சொல்வதைக் கேளடா
உன் விழைவிற்கும் உன் உயர்வுக்கும்
இடையில் வருவது வியர்வையடா
உன் உறுதிக்கும் உன் உயர்வுக்கும்
தடையாய் அயர்வதைத் தள்ளடா ... ( பேரா...)

என் சோற்றிலும் உன் சோற்றிலும்
விழாது பிழைத்த நெல்லடா
மண் சேற்றிலும் பின் நாற்றிலும்
கெடாது தழைத்த நெல்லடா
சிறிது சோறுமாய் நிறைய நெல்லுமாய்
நீ வாழும் நாட்களை மாற்றடா ... ( பேரா...)
____________________________________

தாமதமான மழலையர் தின வாழ்த்துக்கள்.
என் தந்தை என் மகனுக்குச் சொல்வதாய் நான் அமைத்த பாடல்
படத்தில்: என் தந்தையும் என் மகனும்