Thursday, December 9, 2021

REMIX இது. ORIGINAL எது? #14

என் விருப்பம் தான்

உலகம் மொத்தம் தான்

சொந்தமாய்... இருக்க... நினைத்தேனே,

அதை, நிலத்தை வெச்சு,

நிறத்தை வெச்சு,

இனத்தை வெச்சுத்தான்,

பிரித்து விட்டுப் போனாரே.......  


(நாடுகள் எதற்கு? ராணுவம் எதற்கு? ஜெனரல் திரு பிபின் ராவத் அவர்களின் மறைவினால் மனம் வலிக்க எழுதியது)

Wednesday, November 24, 2021

REMIX இது. ORIGINAL எது? #13


விளிம்பு நிலை மனிதர் உயர வழி கேட்டார்

உழைப்பில் உயர்வு இல்லை

உயர்வில் நியாயம் இல்லை

Wednesday, October 20, 2021

விஷமுங்கோ

 மலைமலையாய் மாம்பழங்கோ

மருந்து வச்ச மாம்பழங்கோ


பளபளக்கும் பப்பாளிங்கோ

கல்லு வச்ச பப்பாளிங்கோ


குவிச்சு வெச்ச கொய்யாங்கோ

கெமிக்கல் வெச்ச கொய்யாவுங்கோ


குலை குலையா 

திராட்சைங்கோ

மருந்து தெளிச்ச

திராட்சைங்கோ


மழமழன்னு ஆப்பிளுங்கோ

மெழுகு போட்ட

ஆப்பிளுங்கோ


ஏழைக்கேத்த பழமுங்கோ

எங்க வாழைப்பழமுங்கோ

பாழும் வயிற்றைக்

கெடுக்கவே ஸ்ப்ரே

அடிச்ச பழமுங்கோ


நல்ல உணவு நாமும் தின்னு

நாப்பது வருசம் ஆச்சுங்கோ


சோத்துலயும் விஷமுங்கோ

கொழம்புலயும்

விஷமுங்கோ

கறியும்மீனும்

விஷமுங்கோ

காய்கறியும்

விஷமுங்கோ

கடைசியிலே

பாக்கப் போனா

கனிஞ்ச பழமும்

விஷமுங்கோ


விஷத்தைத் தின்னு

வாழும் மனுசன்

நல்லவனாவது

எப்படிங்கோ?

Sunday, October 17, 2021

காதோரம் நரையிருக்கு #REMIX

 Caution 60+  #REMIX

(காவேரிக் கரையிருக்கு மெட்டு)


காதோரம் நரையிருக்கு

கழுத்தோரம் திரையிருக்கு

நடையினிலே தளர்விருக்கு

நிமிர்ந்து நின்னா வலியிருக்கு

பஞ்சு போல முடியிருக்கு

அஞ்சு வயசு சிரிப்பிருக்கு

பல்லிரண்டு விழுந்திருக்கு

பிள்ளைகள் போலே மனசிருக்கு


என்னம்மோ போலிருக்கு

எப்படியோ உடம்பிருக்கு

காலையிலே தின்ற வடை

மாலை வரையில் நினைவிருக்கு

காபிக்கு சர்க்கரை இல்லை

சர்க்கரைப் பொங்கல் குக்கரில் இல்லை

ராத்திரியில் தூக்கமில்லை

கண் திறந்தும் ஆசையில்லை!


பஸ்ஸினிலே இடமிருக்கும்

ஏறுவதற்குள் நிரம்பிவிடும்

நிற்கும் நம்மைப் பார்த்தவுடன்

இளசுகள் எழுந்து இடம் கொடுக்கும்

ப்ரதர் என்ற வார்த்தை

பெரியவர் என்று மாறிவிடும்

அண்ணன் என்று சொன்னவரும்

அங்கிள் என்று சொல்ல வரும்


Thursday, October 14, 2021

கட்டுக்குள் அடங்காதவை

 செரிமானமாகாத அவமானங்களை 

அசைபோட்டுக் கொண்டிருக்கும்போதே

புதிதாய் ஒன்று நிகந்துவிட

தூரவரிசையில் மேலும் பல நிற்பதுபோல்

துணுக்குற்று ஒடுங்குகின்றது மனம்


பொறுமை எனும் ஆமை ஓடு

கவசமா இல்லை அவமானமா?

என்ற கேள்விக்கு

சுமை என்று வருகின்றது விடை


ஊர்-வதை அஞ்சி ஊர்வதை

வீழ்ச்சியென்றால் வருத்தம் வரக்கூடும்.

பதுங்குதலென்று கொள்வோம்...


மடித்து எழுதிய கட்டுக்குள் அடங்காத

காயங்களைக் காட்டவும் முடியாமல்

மறைக்கவும் முடியாமல்

தவிக்கின்றன வரிகள்

-பாலா சிவசங்கரன்

14 10 2020

Sunday, October 3, 2021

REMIX இது. ORIGINAL எது? #12

 பாலாற்றின் கரையிலே

வெகு நாளாக மரமொன்று

அதன் வேரும் புண்ணானது

சுடும் மண்ணில் திண்டாடுது


அங்கே ஒரு பாலம்

ஆற்றைத் தாண்டிப் போகும்

இங்கே இது பாவம்

நீருக்கெங்கே போகும்?

பூமிக்குள்ள இல்லாதத

வானத்திடம் மன்றாடுதோ?

காற்றுக்குள்ள இல்லாதத

கடலில் எடுக்க வாதாடுதோ?

வானம்‌ காயுது

அதுதானே பொழியுது?

மரமும் காயுது

அதுதானே காய்க்குது?

மரம் இன்றி நிழல் ஏது?

மணல் இன்றி நதி ஏது?

Saturday, September 25, 2021

புரட்டாசி புலம்பல்

(சிவகாமி நெனைப்பினிலே மெட்டு)

மனைவி: பிரியாணி நெனைப்பினிலே சாதம் தின்ன மறந்ததென்ன?

கணவன்: புரட்டாசி மாசத்திலே நான்வெஜ் செய்ய மறுப்பதென்ன?Drum-க்குள்ளே தட்டுவியே... மண்வெட்டிபோல் வெட்டுவியே...

மனைவி: கொஞ்சம் பொறுத்துக்கோ புலம்பலை நிறுத்திக்கோ.. மாசம் முடிஞ்சதும் மாமிசம் எடுத்துக்கோ..

சரணம்-

கணவன்: மாலை முடிஞ்சாலே பாலைத் தயிராகத் தோய்க்கிற... உறை ஊத்துற... காலை விடிஞ்சாலே காயைக் கறியாக ஆக்குற கடுப்பேத்துற...

மனைவி: சான்ட்விச் கொடுத்தாலே ஆம்லெட் தரச்சொல்லிக் கேக்குற... என்ன பாக்குற...? காயை நறுக்காமல் டீயை வடிக்காமல் ஏய்க்குற... டபாய்க்குற....

கணவன்: போதும் இது போதும் எந்தன் வேதனை உனக்கிங்கு புரியாதா? மாதம் ஒரு மாதம் அதன் பெயரினை மாற்றிட முடியாதா?

மனைவி: தம்ம் கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ... தம்ம் ஆனதும் வெட்டிக்கோ வெட்டிக்கோ !!



Saturday, September 18, 2021

REMIX இது. ORIGINAL எது? #11

தாய் மடியில் கன்னுக்குட்டி கன்னுக்குட்டி கன்னுக்குட்டி

அடடா முட்டுது மல்லுக்கட்டி மல்லுக்கட்டி மல்லுக்கட்டி

நாளெல்லாம்.... 

பசு மேய்ந்தாலும்....

பாலெல்லாம்.... 

மடி சேர்ந்தாலும்...

அடி அம்மா மொத்தமும் தான் 

தினம் சந்தைக்குச் சென்றதம்மா

பசியில்---

தாய் மடியில் கன்னுக்குட்டி கன்னுக்குட்டி கன்னுக்குட்டி

அடடா முட்டுது மல்லுக்கட்டி மல்லுக்கட்டி மல்லுக்கட்டி


#VeganSong

Friday, August 27, 2021

REMIX இது. ORIGINAL எது? #10

 அன்னையென்று வந்தவளே

ஆருயிரைத் தந்தவளே

ஆதரிக்க யாருமின்றி

தன்னந்தனி ஆனவளே

கொஞ்சிக் கொஞ்சி வளர்த்தவர்கள்

உன் நெஞ்சைப் பிளந்ததும் ஏன்?

அன்னை அஞ்சிக் கிடக்கணுமோ?

உயிர் எஞ்சிப் பிழைக்கணுமோ?

இந்த பூலோகம் பாழாகிப் போனதோ?

அந்த மேலோகம் மேலாகத் தோணுதோ?

Saturday, August 21, 2021

ஒரு வெங்கலப் பானைக்குள்ளே!

 

https://youtu.be/MW9eSckmiA4

ஒரு வெங்கலப்  பானைக்குள்ளே
வெண்பொங்கலும் வேகையிலே....!
அந்த சந்தடிச் சாக்கினிலே
இங்கு முந்திரி காணலையே
கடைக்குச் சென்று முந்திரியை வாங்கிடும் வேளையிலே
பருப்பும் வெந்து பொங்கலும் தான் குழையுது பானையிலே
சொந்த பந்தம் வாரீரோ
சுடும் பொங்கல் உண்ண வாரீரோ..?!
நாட்டுப் பசு நான் கறந்து
பாலைக் காய்ச்சித் தானே நெய் எடுத்தேன்; நெய் எடுத்தேன்
நானெடுத்த நெய்யினிலே நாலு அஞ்சு ஸ்பூனை நானும் விட்டேன்
நானும் விட்டேன்
அம்மாடி தாளிப்பின் வாசம் இங்கே நாசியை விட்டு நீங்கிடுமோ?
அஞ்சாறு மணிநேரம்  நெய்யின் வாசம் நாவினை விட்டு நீங்கிடுமோ?
கொதிக்கின்ற பொங்கல் விரைவில் ஆறாதோ?
ருசிக்கின்ற பெண்கள் விரலும் நோகாதோ?
மகிழம் பூவே எந்தன் மணிமுத்தே
நிழலைப்போலே உள்ள மிளகை மென்று பாரு காரத்தெ காரத்தெ!

Friday, August 20, 2021

REMIX இது. ORIGINAL எது? #9

இயற்கையும் மீளுமோ...?செயற்கையும் ஓயுமோ...?இதுவரை அழித்தது அது மட்டும் போதும் இருக்கட்டும் மீதம்

கல்லாகும் குறிஞ்சி

முள்ளாகும் முல்லை

மண்ணாகும் மருதம்

நஞ்சாகும் நெய்தல்

வளமான பூமி

அதுவாகும் பாலை

நலமாக நாளை

விடியாதோ காலை?

போனது போகட்டும்

ஏனிந்தத் துன்பம்?

மீண்டும் வேண்டும் இன்பம்.

Thursday, August 19, 2021

REMIX இது. ORIGINAL எது? #8

 

மரகத வானம்

மகரந்த மேகம்

மரங்களின் தாகம்

மண்மீது தீர்க்கும்


தகுந்த காலத்தில் தருகின்ற தானம்

தயை நீ புரிந்தால் தழைத்திடும் யாவும்

மழையெனும் அமுதமும் கரும்பினில் சேரும்

எந்திர லோகத்தில் சர்க்கரை ஆகும்!

Monday, August 9, 2021

மனிதன் ஏமாந்தான்

(கம்பன் ஏமாந்தான் பாடலைத் தழுவி. நன்றி: கவியரசர்)


மனிதன் ஏமாந்தான் இந்த உலகத்தையே அவன் தனதென்றானே கற்பனை செய்தானே... மனிதன் ஏமாந்தான்.


கம்பு கழி என்று ஏன் கொண்டான்? பிற உயிர்களை வதைத்தானே... அவன்

ரம்பங்கள் கோடரி ஏன் செய்தான்? தினம் மரங்களை அறுத்தானே


தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்

தீபத்தின் பெருமையன்றோ? அந்த

தீபத்தினால் ஒரு கானகம் எரித்தால்

தீபமும் பாபமன்றோ?


வேடர்கள் உழவர் பல தொழில் செய்வோர் சமநிலை சிதைத்தாரே அந்த வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட நானும் சேர்ந்தேனே...


ஆத்திரமென்பது மனிதனுக்கென்றும் அடங்கவே அடங்காதோ?

அவன் ஆதிக்கத்தால் மண்ணில் பாதிப்பு வந்தால் அடங்குதல் முறைதானே?

-பாலா சிவசங்கரன்

 10 ஆகத்து 2021



Tuesday, August 3, 2021

மொச்சை விழி!

பெண்: பச்சைத் தமிழா, பச்சைத் தமிழா,
பசைபோல் உனை நான் ஒட்டிக்கொள்ளவா?
ஆண்: மொச்சை விழியே, மொச்சை விழியே,
மசிபோல் உன்னை நான் தொட்டுக் கொள்ளவா?

பெண்: உச்சிக் கிளையே,  உச்சிக் கிளையே 
கனிபோல் உன்னில் நான் ஒட்டிக் கொள்ளவா?
ஆண்: இச்சைக் கனியே, இச்சைக் கனியே 
கிளிபோல் உன்னை நான் கொத்திச் செல்லவா?

ஆண்: செப்புச்சிலையே, செப்புச்சிலையே
செப்ப ஒரு செய்யுள் நான் சொல்லித் தரவா?
பெண்: மெச்சும் கவியே, மெச்சும் கவியே,
கச்சையென உன்னை நான் கட்டிக் கொள்ளவா?! 

Friday, July 23, 2021

REMIX இது. ORIGINAL எது? #7

 REMIX இது. ORIGINAL எது? #7


ஆயிரம் கிளிகளே அமருங்கள்

விழுதில் ஊஞ்சல் ஆடுங்கள்; பாடுங்கள்

கனிகள் நூறு காணுங்கள்

இலைகளும் இறகைப்போல்

பசுமை வண்ணம் பாருங்கள் பாருங்கள்


Found the following video to be a good fit for above lines. Thanks to the video creator.

https://youtu.be/alvuVpb8Ydk


Tuesday, July 20, 2021

REMIX இது. ORIGINAL எது? #6

REMIX இது. ORIGINAL எது? #6

மண் பாடும் பாடல்:

பல்லவி, இந்த ரீமிக்ஸ் பாடலின் கருத்துக்கும் பொருந்துவதால் அப்படியே வைத்துக் கொள்ளலாம்.

(சரணம்)

பருவம் பொய்த்துப் போகும் போது

பயிரும் அழுகின்றது

பருவம் தவறிப் பொழியும் போது

பயிரும் அழிகின்றது

என்ன நினைத்து என்னைக் கெடுத்தான்

மனிதன் என்பவனே

மண்ணைக் கெடுத்து தன்னை வளர்த்த

மனிதன் கொடியவனே


Monday, July 12, 2021

REMIX இது. ORIGINAL எது? #5

 REMIX இது. ORIGINAL எது? #5


இதில் கண்டு பிடிக்க ஒன்றும் இல்லைங்க. எல்லோருக்கும் தெரிந்த பாடல் தான். மீளாற்றலூற்றுகளைப் (renewable sources of energy) போற்றும் எண்ணத்தில் எழுதியுள்ளேன்.

*****

ஆத்தாடி காற்றால(லை) காத்தாட ...

காற்றால இறகெல்லாம் கூத்தாட ....

காத்தாட அது கூத்தாட...

கொதிக்குது பூமி வேர்த்து... ஏ...

அதக் கொஞ்சம் ஆத்து ஆத்து...


கொடி மலர் மேவும் குளிர்க் காற்றும் விலகாதோ? 

அது காற்றாலை இறகோடு சுழலாதோ?

விலகாதோ... வந்து சுழலாதோ?

கரியமில வாய்வாலே பல தோஷம் தான்

அதனாலே பாழாச்சு பல தேசம் தான்

இந்த பூலோகமே...எஎஎஏ ஏஏஏ...

துருவங்கள் உருகாமல்

கடல்மட்டம் உயராமல்

நகரங்கள் முழுகாமல் காப்பாற்றுவோம்..

Sunday, July 11, 2021

REMIX இது. ORIGINAL எது? #3,4


3.

நீரில்லாமல் நாடில்லை

தானே பயிர்கள் வளர்வதில்லை

நதிகளை யார் தடுக்கின்றார்?

அடுத்தவர் வயிற்றில் அடிக்கின்றார்..


4.

ஆறிருக்கும் அணையிருக்கும்

கடந்து வராது

குடகினிலே நதி பிறக்கும்

குடந்தை வராது

நாலு வகைப் பயிர் வளர்க்கும்

ஆசை விடாது 

நஞ்சை நிலம் தஞ்சையிலே தழைக்க விடாது



Saturday, July 10, 2021

REMIX இது. ORIGINAL எது? #2

 REMIX இது. ORIGINAL எது? #2


நட்டால் மரம் வளரும்

நடாமல் நாம் மறந்தோம்

விட்டால் நீர் சுரக்கும்

விடாமல் நாம் அகழ்ந்தோம்

மனிதன் தொடாமல் உலகில் எந்நாளும் இயற்கை கெடுவதில்லைவ

ளங்கள் கெடாமல் வளர்ச்சி உண்டானால் உயிர்கள் அழிவதில்லை

REMIX இது. ORIGINAL எது? #1

REMIX இது. ORIGINAL எது? #1 

ரீமிக்ஸ் கவிஞர்களின் அவஸ்தைகள் பற்றி சில நாட்களுக்கு முன்பு எழுதியிருந்தேன். எந்த வரியைப் படித்தாலும் கேட்டாலும் அதை ஒரு பாடலின் ட்யூனில் பொருத்திப் பார்ப்பது என்பதுதான் அந்த அவஸ்தை. 

அதே போல் எந்த ஒரு நல்ல பாடலைக் கேட்டாலும் இந்த ட்யூனுக்கு இன்னும் சிறப்பாக நான் எழுதுவேனாக்கும் என்று வரிந்து கட்டுவது இவர்களின் இன்னொரு அவஸ்தை. இதில் பெரும்பாலும் கிடைப்பது தோல்வியே! வாலிக்கும் வைரமுத்துவுக்கும்  tough கொடுக்க நினைப்பது எவ்வளவு சிறுபிள்ளைத்தனமான செயல் என்பதை இவர்கள் சிறிதும் சிந்திப்பதில்லை. உதாரணமாக கவிச்சிற்பி கங்கை அமரன் (நான் கொடுத்த பட்டம் தானுங்க. நல்லா இருக்கா?) அவர்கள் எழுதிய "மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ?" என்ற அற்புதமான பாடலைக் கெடுத்து "கண்ணில் இந்தப் பார்வையின்றி யாரும் பார்த்தல் கூடுமோ?" என்று அற்பமாக எழுத ஆரம்பிப்பார்கள்! இதில் ஒரு ஆறுதல் என்னவென்றால் இவர்கள் இந்த அற்ப முயற்சிகளை அற்பம் என்று புரிந்து கொண்டு கமுக்கமாக trash  செய்து விடுவதுதான்!

Recycling the waste என்ற உயரிய நோக்கில்  எனது trash folder-லிருந்து சில remix முயற்சிகளை இங்கு எழுதி, original பாடலை உங்களால் கண்டு பிடிக்க முடிகிறதா என்று விளையாடலாம் என்று தோன்றியது. விளையாட்டு பிடித்திருந்தால் தொடரலாம்.

கீழ்க்கண்ட remix-ன் original பாடல் எது?

"கண்டதும் கொன்றானடி பாவி

புல்லட்டையே எடுத்து...

Gun-க்குள்ளே தொடுத்து...

கண்டதும் கொன்றானடி"

முதல் போட்டி என்பதால் எளிமையாக ஆரம்பிப்போம்!

Wednesday, July 7, 2021

REMIX அவஸ்தைகள்

என்னைப் போன்ற ரீமிக்ஸ் கவிஞர்களுக்கு ஒரு பெரிய பிரச்சினை உண்டு. எங்காவது, ஏதாவது ஒரு வரியைப் படித்துவிட்டாலோ கேட்டுவிட்டாலோ, உடனே ஒரு திரைப்படப் பாடல் மெட்டு flash ஆகிவிடும்! அதை வைத்து ஒரு ரீமிக்ஸ் எழுத ஆரம்பித்து விடுவோம்!

அப்படித்தான் இன்று ஒரு பழ வண்டியில் "ஏசுவின் ரத்தம் ஜெயம்" என்ற வாசகத்தைப் படித்ததும் மனதில் ஒரு பழைய பாடல் flash ஆனது. 

உங்களுக்கு இந்த வாசகத்தைப் படித்தால் ஏதாவது பாடலின் மெட்டு  flash ஆகிறதா? 

எனக்குத் தோன்றிய பாடலைக் கமெண்ட்டில் பின்னர் எழுதுகிறேன்.

Saturday, May 1, 2021

ஊழல் விலகுக

நாளை இதைச் சொன்னால் வெற்றி பெற்றவர்களைச் சுட்டிக் காட்டுவது போலாகலாம். ஆகையால் இரு கட்சிகளுக்கும் பொதுவாக இன்றே சொல்லி விடுகிறேன். 

ஔவையார் ஆட்சியாளரை "வரப்புயர" என்று வாழ்த்தினார். வரப்புயர்ந்தால், நீர் உயரும், நெல் உயரும், குடிமக்கள் உயர்வார்கள். எனவே வரப்பை மட்டும் உயர்த்துங்கள் என்றார். All other things will automatically happen.

வெற்றி பெறும் ஆட்சியாளர்கள் (மந்திரிகள், MLA-க்கள்) மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கப் போகும் அரசு அதிகாரிகள் அனைவருக்கும் எனது முன்கூட்டிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு நான் வேண்டும் ஒரே ஒரு விண்ணப்பம் "ஊழல் விலகுக" என்பதே. 

All other things will automatically happen.

ஊழலை ஒழித்து விட்டாலே/குறைத்து விட்டாலே அனைத்து நலத்திட்டங்களையும் குறைந்த செலவில் நிறைவேற்ற முடியும். மிச்சமுள்ள பணத்தில் மேலும் பல புதிய நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியும்.

ஊழலைக் குறைத்து செலவைக் குறைந்துவிட்டால் சாராயக் கடைகளையும் மூடிவிடலாம்.

கட்டமைப்புகளை மேம்படுத்த முடியும். (தவறு செய்யும் ஒப்பந்ததாரர்களைத் தட்டிக் கேட்க முடியும்) வேலை வாய்ப்புகள் பெருகும். வறுமை ஒழியும். 

ஊழல்களைத் திட்டமிடத் தேவையில்லை என்கிற பட்சத்தில் ஆட்சியாளர்களின் கவனம் தானாகவே மக்கள் நலத் திட்டங்களில் திரும்பிவிடும். "ஊழலுக்கு நேரமில்லாத போது மனம் நன்மைக்கும் ஈயப்படும்" என்று புதிய குறள் ஒன்று எழுதலாம்!

மேலும் முக்கியமாக, எதிர்க்கட்சிகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் சமூகவலைப் போர்களும் குறைந்து விடும்!

திமுக வென்றால் இப்படிப் பாடுவோம்:

 "ஸ்டாலின் தான் வாராரு ஊழல் ஒழிக்கப் போராரு"

அதிமுக வென்றால் இப்படிப் பாடுவோம்:

"நேர்மை நடைபோடும் தமிழகமே" 

இப்படிக்கு, ஔவையின் பேரன் பாலா சிவசங்கரன்

Tuesday, March 9, 2021

ஆதா கேஜீ தீஜிய

கண்ணனும் கண்மணியும் உறவினர் வீட்டுக்கு ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தனர். 

புதிய இடம் என்பதால் google maps பார்த்து ஓட்டுனருக்கு வழி சொல்லிக்கொண்டு வந்தான் கண்ணன். 
ஓரிடத்தில் ஓட்டுனரிடம் "இடதுபக்கம் திரும்புங்கள்" என்றான். 
அவர்"லெப்டா சார்?" என்று தயங்கவே "ஆமாம்" என்றான். 
"லெப்ட் ரைட்டுனே சொல்லிப் பழகிடவே சட்டுனு இடது வலது குழப்பமாகிடுச்சி சார்" என்றார். 

கண்மணி சிரித்தாள். ஓட்டுனருக்குக் கேட்கவேண்டாம் என்று சன்னமான குரலில் கண்ணனிடம் 
"ஒரு ஜோக் வீடியோ ஞாபகம் வந்திடுச்சு" 
"எந்த வீடியோ?" 
"அசட்டுப் பெண் ஒருத்தி கணவனுடன் வண்டியில் போவாளே... அது..."
"தெரியல..." 
" வெயிலா இருக்கு என் glass கொண்டுவா என்று சொன்னதுக்கு டம்ளர் கொண்டு வருவாளே..." 
"ஹூஹூம் பார்க்கல..." 
"வண்டியில் திரும்பும்போது 'கையைப்போடு'ன்னு சொல்லுவான். அவ அவன் தோள் மேல கையைப் போடுவாள். பின்னாடி வரும் வண்டி இடித்துவிடும்..."
"ம்...." 
"அது போல நீங்க வலதுன்னு சொல்லி டிரைவர் லெப்ட்ல திரும்பப்போறாரு.. எவனாவது பின்னாடி வந்து இடிக்கப்போறான்.." 
சிரித்தாள்.. 
"உனக்கு சிரிப்பு வருது...?" கண்ணனுக்குக் கோபம் வந்தது. 
"கண்மணி நான் ஒண்ணும் செந்தமிழில் பேசணும்னு சொல்லல. இழந்துவிட்ட எளிய சொற்களை கொஞ்சம் கொஞ்சமாக மீட்க நினைப்பதில் என்ன தவறு?" 
 
அந்த நேரம் வழியில் ஒரு பிரபல இனிப்பு கடை வரவே ஓட்டுனரிடம் "நிறுத்துங்க.." என்ற கண்ணன் கண்மணியிடம் "குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கிக்கொண்டு போகலாம்" என்றான். 

ஓட்டுநர் "இதோ இங்கே லெப்டில்... ம்.. இடது பக்கம் வண்டியை நிறுத்தி வைக்கிறேன்.. நீங்க பொறுமையா வாங்கிட்டு வாங்க.."எனவே இருவரும் புன்னகைத்தனர். 

 கடையில் ஒரு இனிப்பைக் காட்டி "இதில் ஒரு அரை கிலோ கொடுங்கள்" என்று கேட்டான் கண்ணன். கடை ஊழியரோ புதிதாக வந்தஒரு வடவிந்தியர் போலிருந்தது. குழப்பமாகப் பார்க்கவே கண்மணி அனிச்சையாக "ஆதா கேஜீ தீஜியே..." என்றாள். 

ஐயையோ மாட்டிக்கொண்டோமே.... "நம் ஊரில் நாம் இனிப்பு வாங்க இந்தியில் பேசவேண்டுமா? தமிழனெல்லாம் தண்ணியடிச்சிட்டு சோம்பேறியா இருந்தா இந்த அற்ப வேலைகளுக்குக் கூட நாம் வெளியூரிலிருந்து ஆட்களை வரவழைக்க வேண்டியிருக்கிறது பார்" என்று மொழிப்பற்றும் சமூகவியலும் கலந்து ஒரு விரிவுரை ஆற்றப் போகிறானே என்று எண்ணியபடி கண்ணனைத் திரும்பிப் பார்த்தாள். 

அவன் புன்னகைத்தான் "கேஜீ தீஜியே... சந்தம் நல்லா இருக்கில்ல?"

Wednesday, January 6, 2021

உறவுகள் தொடர்கதை; வார்த்தைகள் சிறுகதை

வார்த்தைகளால் காயமுற்ற உள்ளங்களுக்கு மருந்தாக, கவியரசர் கண்ணதாசன் அவர்களின் "உறவுகள் தொடர்கதை" பாடல் வரிகளைச் சில மாற்றங்கள் செய்து எழுதியுள்ளேன்.. 
 
***** 

உறவுகள் தொடர்கதை 
வார்த்தைகள் சிறுகதை 
கொடிய சொல் இன்று முடியட்டும் 
இனிய சொல் என்றும் தொடரட்டும் 
இனியெல்லாம் நலமே 

நாள் ஒன்றிலும் சோகம் 
வளர்கின்றதோ வாதம் 
வாழ்வெங்கிலும் ஆதங்கம் 
நீ கண்டதோ துன்பம் 
இனி காணலாம் இன்பம் 
சுக ராகமே ஆரம்பம் 
நதியிலே புதுப் புனல் 
நாவிலே புது மொழி 
நம் சொந்தமோ இன்று கனிந்தது 
துன்பம் மறைந்தது 

உன் நெஞ்சிலே பாரம் 
உனக்காகவே நானும் 
ஒரு ஆறுதல் கூறுவேன் 
உன் கண்களின் ஓரம் 
எதற்காகவோ ஈரம் ? 
நல்வார்த்தை நான் கூறுவேன் 
வேதனை தீரலாம் 
வரும் பகை விலகலாம் 
எந்நாளுமே நீயென் 
தமிழெனும் தேனில் நனையலாம் 

இந்தப் பாடல் Smule-ல் 
https://www.youtube.com/watch?v=0bvTADuRJp0