Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Friday, May 15, 2020

பஞ்சபூதக் காதல்


 
காதல் என்றொரு காற்று - அது
பூமி முழுதும் நிறைந்ததடி(டா)
கண்ணில் மறைந்தே போனாலும் - அது
நம்மை விட்டுப் பிரிவதில்லை
 
காதல் என்றொரு பூமி -  அதன்
ஈர்க்கும் வலிமை குறைவதில்லை
திசைகள் மாறிப் போனாலும் - அதன்
விசைகள் என்றும் அழிவதில்லை

காதல் என்றொரு வானம் - அது
உள்ளம் முழுதும் விரிந்ததடி(டா)
தூரம் தாண்டிப் போனாலும் - அது
எல்லைக் கோட்டில் முடிவதில்லை
 
காதல் என்றொரு வெப்பம் - அது
உயிரின் உள்ளே கலந்ததடி(டா)
கூடும்போது கொதிக்குதடி - அது
குறையும் போது நடுங்குதடி
 
காதல் என்றொரு நீரில் - நம்
இருவர் உயிரும் மீன்களடி(டா)
அலைகள் என்றும் ஓய்வதில்லை - நம்
காதல் என்றும் அழிவதில்லை

பாலா சிவசங்கரன்
15 05 2020
=====-----=====-----=====

Thursday, August 30, 2018

உனக்கென்று ஒரு மழைச்செய்தி


பறவைகளைப் போல் உதறிவிடமுடியாமல்
மழையில் ஊறிக்கிடக்கிறது மனது..
கண்ணாடி மூடிய பேருந்தில்
எனக்கு என் ஆடைகளும்
என் ஆடைகளுக்கு நானும்
கதகதப்பு அளித்துக்கொண்டு செல்கிறோம்..
குளித்து மகிழும் கொழுந்துகளுக்கு வேண்டுமென
மேலும் கொஞ்சம் நீருறிஞ்சிக் கொள்கின்றன செடிகள்-
பாலூட்டும் அன்னை ஒரு கவளம்
அதிகம் உண்பது போல்.

வர்ணனைக்கே வார்த்தையெல்லாம்
வழி நெடுகே தீர்ந்துவிட
உனக்கென்று ஒரு மழைச்செய்தி
மறைத்தனுப்பத் தேடுகிறேன்
காலைவணக்க வாழ்த்துமடல்களை.

Thursday, January 11, 2018

அடிக்கரும்பு

மங்கி கேப்பை மாட்டிக்கிட்டு
மங்கலிலே கோலமிட்டு
பொங்கி வச்ச பொங்கலைப் போல்
பல்லைக் காட்டி இளிக்குறேனே
மச்சான்,
கல்லுளி மங்கனைப் போல்
கண்டுக்காம நிக்குறியே..

அடியே,
உறங்கி நான் நிக்கவில்லை
கெறங்கிப் போய் கவுந்துப் புட்டேன்....
அரும்புபோல பல்ல வச்சி
இரும்புபோல கரும்புக் கழி
எப்படி நீ கடிப்பேன்னு
ரோசனை நான் செய்யுறேன்டி

அடிக்கரும்பு வேரெல்லாம்
ஆசை மச்சான் மீசையின்னு
கடி கடின்னு கடிச்சிடுவேன்
கலங்காதே ராசாவே

சால்சாப்பு சொல்லாதே
சட்டுபுட்டுனு உரிச்சுத் தாரேன்
சாறெல்லாம் உறிஞ்சிப்புட்டு
சக்கரையா சுத்தி வாடி

Wednesday, June 7, 2017

ஏண்டியம்மா இதயத்துல மூடியிருக்கு கதவு?

ஏண்டியம்மா இதயத்துல மூடியிருக்கு கதவு?
எப்பொழுதும் நானும் வர திறந்து நீயும் உதவு

சத்திரமா இதயம் உனக்கு? போய்விடு நீ தொலைவு
சத்தியமா பிடிக்கவில்லை ஒழிஞ்சி நீயும் உதவு

பத்தியம்தான் இருந்து பார்த்தேன் தெளியவில்லை பித்து
கட்டிப்பிடி நானும் தாரேன் கன்னத்தில முத்து

முத்து தர நீயும் வந்தா நான் விடுவேன் குத்து
குத்து மதிப்பாக உனக்கு எவ்வளவிருக்கு சொத்து?

சோத்துக்கொரு குறையுமில்லை வளந்துநிக்குது நாத்து
போத்திக்கிட்டுப் படுத்து உறங்க கூரை மேல கீத்து

தின்னுவிட்டு தூங்குவதில் பெருமை என்ன இருக்கு?
சொல்லிக்கொள்ள பெருமையாக வேறு என்ன இருக்கு?

அள்ளி அள்ளி சரம் சரமா நான் படிப்பேன் பாட்டு
துள்ளித் துள்ளி குதிக்கப் போற நீயும் அதைக் கேட்டு

பாட்டுக்காரன் வாய் திறந்தா புறப்படுமே பொய்யி
வீட்டுக்காரனாக வந்தா கரையுமே என் மையி

தாலாட்டு நான் படிச்சா சொக்கிப் போகும் கண்ணு
தூங்குகிற கண்ணுல மையி கரையுமாடி கண்ணு?

நல்லாத்தான் விளக்கம் தாரே நடு வீதியில நின்னு
அத்தையைத்தான் கூட்டி வந்து வீட்டுல கேளு பொண்ணு

(...... வெட்கத்துடன் ஓடிப்போகிறாள் )

Thursday, March 30, 2017

செவ்வந்தி மாலை இதோ

சாய்ந்த உன் முகம் பார்த்து
சட்டென்று தலை கவிழும்...
பாய்ந்த உன் நகை பார்த்து
பட்டென்று சிரிப்பு வரும்...

காற்றினில் பூ கட்டும்
கைவிரல் அசைவினுடன்
நீ பேசிய கதைகளெல்லாம்
நெஞ்சத்தில் கோத்துவைத்தேன்

சில பல நாட்களாக
செய்தி ஒன்றும் காணவில்லை..

செவ்வந்தி மாலை இதோ...
சீக்கிரமாய் அழைத்திடடி - உன்
செஞ்சேலைப் படம் ஒன்றை
செல்போனில் திறந்து வைத்தேன்...
கன்னத்தில் முத்தமிட்டு நீ பேச

Wednesday, January 11, 2017

பழைய பாய்லர்

பொங்கலுக்கு வீட்டை சுத்தம் செய்கையில்
பரணில் பழைய பாய்லர் இருந்தது.
கரி போட்டு வெந்நீர் வைத்த
சிறுவயது நினைவுகள்
நெஞ்சினுள் புகையெழுப்பிக் கிளம்பின
போட்டுவிடலாமா என்று வீட்டில் கேட்டதற்கு
வேண்டாம் இருக்கட்டும் என்றேன்.

சிறுவயது நினைவுகளுடன்
எப்படி நம் காதல் நினைவுகள்
கலந்தன என்று தெரியவில்லை
பாய்லரைத் தொட்டு சூடு பார்த்த நினைவில்
உன் கன்னம் தொட்ட நினைவு வந்தது
குளித்துத் துடைத்த நினைப்பில்
உன் கண்ணீர் துடைத்த நினைவு வந்தது
துடைத்து பத்திரமாய்க் கட்டிவைத்தேன்.

உன் வீட்டுப் பரணிலும்
ஏதோ ஒரு பொருளில்
நம் காதல் ஒளிந்திருக்கக் கூடும்.
அதைப் போடாமல் வைத்திரு
அது இருப்பதால் ஒரு பயனும் இல்லாமல் இருக்கலாம்
அது இருக்கிறது என்ற பயனைத் தவிர

Wednesday, May 4, 2016

செய்வோமடி காதல்

என்னோடு நீ சேர்ந்து
உன்னோடு நான் சேர்ந்து
ஒன்றாக நாம் சேர்ந்து
செய்வோமடி காதல்

இன்றைக்கா நாளைக்கா
யாருக்கும் தெரியாது
என்றைக்கும் நாம் சேர்ந்து
செய்வோமடி காதல்

மெய்யென்று பொய்யென்று
ஆராய்ச்சி செய்யாமல்
கையோடு கை சேர்த்து
செய்வோமடி காதல்

போதையா பாதையா
மேதைகள் சொல்லட்டும்
பேதைபோல் நாம்சேர்ந்து
செய்வோமடி காதல்

பிசாசோ பூதமோ
மந்திரிச்சி விட்டாலும்
தந்திரமாய் நாம் சேர்ந்து
செய்வோமடி காதல்

விசாவோ மிசாவோ
தடையாக வந்தாலும்
உசாராய் நாம் சேர்ந்து
செய்வோமடி காதல்

சாமிக்கும் சாதிக்கும்
பலியாகிப் போகாமல்
பூமிக்குப் பரிசாக
செய்வோமடி காதல்

Friday, February 19, 2016

தோற்றுப்போகிறேன்

"ஏய்" என்றவனிடம்
"ஏய்" என்று வீரம் காட்டிவிடுகிறேன்
சிறு குழந்தையின் முன்
மண்டியிட்டு மழலையாகிறேன்-
லுல்லு லுல்லு பேசி.
இறைவனிடம் கூட
படைப்பதிலும் காப்பதிலும்
நானும் நீயும் ஒன்றென்று
சொல்லிவிடமுடிகிறது.
ஆனால்
எதைச்செய்தும்
உனது மென்காதலின்
முன்நிற்க முடியாமல்
தோற்றுப்போகிறேன்
செஞ்சாந்தாய்க் குழைந்தும்
சிறு கீற்று நிலவிடம்
தோற்றொளியும்
அந்திச் சூரியனைப்போல்
‪#‎காதல்_மாதம்‬

Friday, February 12, 2016

சிரிப்பதுபோல் ஒரு செல்ஃபி

பார்க்கவேண்டும் போலிருக்கு
படம் ஒன்று அனுப்பி வையேன்...
அம்மா அப்பாவுடன் நிற்கும் அந்த
அமைதிப்படம் வேண்டாம்.
தோழிகளுடன் அரட்டைக்கச்சேரி?
அம்மா, தாயே, அவர்கள் எனக்கு அலர்ஜி!
அண்ணனின் பிள்ளைகளுடன்
அவர்களைப் போல் நீயும்
வண்டுக்கண் காட்டும்
வண்ணப்படம் அழகுதான்.
ஆனாலும் அது வேண்டாம்.
ம்ம்ம்...
இவைகளை நான் தள்ளியதால்
உனது தனிப்படம் கேட்பதாய் எண்ணி அந்த
ஹால்டிக்கட் போட்டோவை அனுப்பிவிடாதே!
தேர்வு பயம் தொற்றிக்கொள்ளும் எனக்கும்!
சிரிப்பதுபோல் ஒரு செல்ஃபி எடுத்தனுப்பு.
நான் உன்னைப் பார்க்கும்போது
நீ என்னைப் பார்ப்பாயே
அந்த முகபாவம் முக்கியம்!

பேரமைதி

பள்ளியறையில் உன் நினைப்பைப்
பித்தமென்று தள்ளினேன்
பூசையறையிலும் தொடர்ந்த
உன் நினைப்பைப்
பக்தியென்று புரிந்துகொண்டேன்
நீ விலகிச் சென்ற நாள்முதல்
எனக்குப்
பாலைவன தாகமடி....
துயர் அழுத்தும் மூச்சடைப்பில்
உன் நினைப்பே
என் உயிர்ப்பிடிப்பு...
அருகில் நீ வரும் நாளில்
துடிப்புகள் அடங்கி
சவமென நான் உணர்வழிப்பேன்
அன்று நான் கொள்வேன்
பேரமைதி

Wednesday, June 17, 2015

இன்னும் குமரன்னு நெனப்பு

கண்ணாடி போட்டு உன்னைப் பார்ப்பது
கஷ்டமாக இருக்கிறது
கண்ணாடி போடாவிட்டால் உன்னைப் பார்ப்பது
கஷ்டமாக இருக்கிறது

தட்டாமாலை சுற்றவா? என்றால்
‘முடியாது’ என்கிறாய்..
வேண்டாம்னு சொல்லலாமில்ல?

வளையோசை கலகலவெனப்
பேருந்து படிக்கட்டில் பாடினால்
பதறி-
மேலே வா என்கிறாய்

இன்னும் குமரன்னு நெனப்பு
என்று சிலநேரங்களில் நீ சொல்வது
பாராட்டா பழிப்பா என்று
புரியமாட்டேன் என்கிறது

நீ மட்டும் எனக்கு என்றும் மாறா
இளமையுடன் தோன்றுவது எதனாலோ?

Tuesday, March 17, 2015

அழகோவியம்

கொண்டை குலுங்கிடக் குதித்துக் குளம்பொலி
        செண்டை அடித்திடும் புரவிகள் பூட்டி
கெண்டை சிலம்பெனச் சிலும்பிட அலைஎழும்
        பொன்னி நதிக்கரைப் புழுதியை மாற்றி
அண்டம் நிறைத்து அழகோவியம் தீட்டிடும்
        பெண்ணின் விழிச்சுடர் சோதியும் போற்றி
கண்டு வியந்தனர் அரண்மனை நான்வர
        என்னெழில் ரதிமகள் ரதத்தில் ஏற்றி

Saturday, March 14, 2015

வலக்கையின் விருப்பம்


மூன்று முடிச்சு போட்டு
பின்புறமாய்ச் சுற்றி
எட்டி உனது நெற்றியில்
பொட்டுவைக்க விருப்பமடி
என் வலக்கரத்திற்கு…
இன்னும் கூடி வரவில்லை
அதற்கான நேரம்

துப்பட்டாவைப் போல்
உன் தோள்மீது மெதுவாய்த்
தொட்டுப் படரவும்
காலம் வரவில்லை
என் கரத்திற்கு…

இப்போது அதன் சிறுவிருப்பம்
என்னவென்றால்
உனது இடக்கையின்
இடைவெளியில் இழுத்து
மடிமீது அழுத்தி நீ பிடித்திருக்கும்
புடவை முந்தானையைப்போல்
உன் கரம் பற்றியிருப்பதே..

Thursday, March 5, 2015

சீக்கிரமா வந்துவிடு

இங்கிட்டு நான் இருக்க
அங்கிட்டு நீ இருக்க
பொங்கிட்டு வரும் ஆசையைத்தான்
எங்கிட்டு நான் பங்கு வைக்க?

குளத்தங்கரைப் படிக்கட்டில்
சிலையாட்டம் குந்திவிட்டேன்
சில வார்த்தை உன்கிட்ட
சிரிச்சி நான் பேசினாத்தான்
உசுரு இருக்குதுன்னு என்
உடம்புகூட நம்பும்
உடனடியா வந்துவிடு

உன் நெத்தியிலே வச்சி விட
பொத்திவச்ச திருநீறு
உள்ளங்கையில் ஊறிப்
பசையாட்டம் ஒட்டிடிச்சி.
அசையாம வச்ச கையி
வெளங்காமப் போயிடும்னு
வெசனமா இருக்குதய்யா
வெரசா நீ வந்துவிடு

சாயங்காலம் ஆயிடிச்சி
சொர்ணக்கிளி காணமின்னு
சிறுக்கி ஆத்தா
சித்தப்பனை ஏவுமுன்னே
சீக்கிரமா வந்துவிடு
சிரிச்ச முகம் காட்டுறேன்.

Friday, February 27, 2015

காதலினால் நீளும் வாழ்வு

காதலினால் நீளும் வாழ்வு-
ஈருயிர் தரும்.
காதலினால் நீளும் வாழ்வு-
இரவில் தூங்கவிடாது;
காலையில் எழுப்பிவிடும்.

Saturday, February 14, 2015

காதலின் வெற்றி

மலைப்பாதையோரத்தில்
பாறைகளில் எழுதியிருக்கலாம்
நம் காதலை-

மரங்களை ரணமாக்கி
வடுக்களாய் விட்டிருக்கலாம்
நம் பெயர்களை-

கடற்கரையோரத்திலன்றோ
எழுதிவைத்தோம் நம்காதலை-
சுடுமணல் தாக்காமல்
உன் பஞ்சுப் பாதங்களை
நொடிக்கொருதரம் குளிர்வித்த
அதே அலைகள் அழித்தொழிக்க....?

தொலைந்துபோன தடத்தில்
நான் இன்று சிந்தும்
கண்ணீர்த்துளிகள் மட்டும்
காதலில் வென்று கலக்கின்றன
உப்புக் கடலில்.

Thursday, February 12, 2015

காதல் செய்யும் பெண்ணே

காதல் செய்யும் பெண்ணே
கவனமாகப் பண்ணு.
மோகத்தில் செய்யும் முடிவு நம்மை
ஆபத்தில் கொண்டு சேர்க்கும்.
எம்மதமும் சம்மதம் என்றவன்
என்மதத்திற்கு மாறிடு என்றால்
அவன்மேல் எச்சில் உமிழ்ந்துவிடு.
பெற்றவர்களை விட்டு வா
பிள்ளை பெற்றெடுப்போம் என்பானை
பைத்தியம் என்று விலகு.
புருஷனை விட்டு வா என்பானை
போலீசில் பிடித்துக் கொடு.
பிள்ளையை விட்டு வா என்பவனை
போட்டுத் தள்ளிவிடு.
கௌரவக் கொலைக்கு வாய்ப்பிருந்தால்
காதலை கருணைக் கொலை புரிந்துவிடு.
ஆணுக்குக் கழிவென்றும்
பெண்ணுக்குக் கருவென்றும் விதித்த
இயற்கையின் சதி உணர்.
காதல் செய்யும் பெண்ணே
கவனமாகப் பண்ணு.

Friday, December 5, 2014

காத்திருந்த கிளி


மாமனுக்குக் காத்திருக்கும் மான்விழியாள் பாடுவது:


நீள விழி பூத்திருக்கேன்
நித்திரையைத் தோத்திருக்கேன்
சேர்த்து வச்சிப் பார்த்திருக்கேன்
சித்திரைக்குக் காத்திருக்கேன்
மாமன் நெனப்பு பாவி மனசில்
குந்திவிட்டதே
காமனும் விட்ட அம்பு இவளக்
குத்திவிட்டதே ( நீள விழி பூத்திருக்கேன்)

மாமா என் மாமா
மீசை வெச்ச மாமா
ஆசையைத்தான் காட்டிவிட்டு
மோசம் செய்யலாமா?
அல்லும் பகல் உன்னை நெனச்சி
ஏங்க வைக்கலாமா?
என்னை நீயும் தவிக்கவிட்டு
இப்டி பண்ணலாமா? (நீள விழி பூத்திருக்கேன்)

வீராதி வீரா
ஊருக்குள்ள தேரா?
வீட்டுக்குள்ள அத்தையைச் சுத்தும்
ஆட்டுக்குட்டி நீரா?
பின்னியும்தான் பூமுடிச்சேன்
என்னைச் சுத்தி வாய்யா
பின்னாளில் சாய்ஞ்சுகொள்ள
என்னைத் தாரேன் வாய்யா (நீள விழி பூத்திருக்கேன்)

Sunday, August 3, 2014

அத்தே.. அத்தே..

ஞாயிற்றுக் கிழமை மதியம்....

ஆடிமாதம் புதுமனைவியை அம்மா வீட்டுக்கு அனுப்பிவிட்டு வார இறுதியில்கூட மாமியார் வீட்டு விருந்து சாப்பிட முடியாமல் தனிமையில் தவிக்கும் நம் கதாநாயகன் பாடும் பாடல் வரிகள் இவை...

அத்தே அத்தே அத்தே சோறாச்சோ...?
அத்தே அத்தே அத்தே கொழம்பாச்சோ...?
மீன் சட்டிக்குள்ளாற
மீன் நீந்தித்தான் போச்சோ..?
அத்தே பிரியாணி புலவும்தான் செஞ்சீங்களா?
அந்தத் தொடகறியும் தொக்காட்டம் பண்ணீங்களா?
அதப் பல நாளாப் பாக்காம
பல்தேச்சும் பலனில்ல
பசியோடு கெடக்கேனே நானே.. நானே...


GV தம்பி இந்தப் பல்லவியை OK பண்ணுவாருன்னு தான் நெனக்கிறேன்.

அப்படியே டைரக்டருக்கும் ஒரு scene suggestion சொல்லிடணும்...
"ஹீரோ இந்தப் பாட்டைப் பாடிக்கிட்டே பாய் கடை பிரியாணியாவது பார்சல் வாங்கிவரலாம்னு தெருவில் நடந்து போறாரு.. பாட்டு முடியும்போது அங்காளம்மன் கோயில் வருது.. அங்கு ஒரு அக்கா ஆடி மாசம் கூழு ஊத்துறாங்க.. 'தம்பி இந்தாப்பா'ன்னு கொடுக்கவே மறுக்க முடியாம ஒரு டம்ளர் குடிக்கிறாரு. உடம்புக்குக் "குளிர்ச்சிப்பா"ன்னு சொல்லவே மேலும் இரண்டு மூன்று டம்ளர் வாங்கிக் குடித்துவிட்டு ஏப்பம் விடுகிறார்.. இதோடு லஞ்ச் போதும்னு மீசையில் ஒட்டிய கூழை நாவால் ஹீரோ வழிக்கும்போது அப்படியே காமிரா ஜூம் ஆகிறது.."

Saturday, May 10, 2014

மல்லி வைத்து வந்துவிடு

செடியில் கிள்ளித்தான் வைத்தாயோ?
என் அத்தை
சொல்லித்தான் வைத்தாயோ?
என்னத்தைச் சொல்வது..
நீ அள்ளிவைத்த கூந்தலில்
ஆடிவரும் மல்லிகையை?

பள்ளிக்கூட பெஞ்சின் மேல்
நீ பஞ்சு போல் உட்கார
கட்டடத்துள் வட்டமிட்டு
பட்டம்போல பறக்குதடி
நீ கட்டி வந்த மல்லி வாசம்.

பள்ளிச் சீருடையா இல்லை
மல்லிக்கு மேட்சிங்கா
இந்த வெள்ளை சட்டை?
என்னைக் கட்டி வெச்சாலும்
கண்ணக் கட்ட முடியலையே..
திகட்டத் திகட்டப் பார்க்கிறேன்
தின்னாமலே தித்திக்கும்
வெல்லக் கட்டி உன்னையே...

நல்ல நாளைப் பார்த்துவிட்டேன்
நானும் உன்னைக் கட்டிவிட…
கடைசி பரீட்சை முடியும் அந்த
மாலையில் தான் ரிசப்சன்.
மண்டபத்துக்கு மறக்காமல்
மல்லி வைத்து வந்துவிடு.