Showing posts with label மரபுக் கவிதைகள். Show all posts
Showing posts with label மரபுக் கவிதைகள். Show all posts

Thursday, October 1, 2015

களிகொண்டு நிறைவாக

வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் “தமிழ்நாடு அரசுதமிழ் இணையக் கல்விக் கழகம்“ ...இணைந்து நடத்தும்...உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டியில் வகை-(5) மரபுக்கவிதைப் போட்டி : இளைய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் வீறார்ந்த எளிய மரபுக் கவிதை எழுதி வெளியிட நேரம் நிறைவடைந்துவிட்டாலும் வருத்தமில்லாமல் விருத்தமொன்று எழுதினேன்.. நேரம் கிடைக்கையில் இதை விரித்தும் எழுத உத்தேசம்!

ஈரெட்டு வயதினில் இளமையின் திறனோடு 
     நீர்விட்டு வளர்த்திடும் பயிராக   
நேரென்று நிமிர்ந்திடு நிலைமைகள் மாற்றிடு    
     நேற்றோடு குனிந்திடும் குணம்நீங்க 
வேரென்று பரவிடும் வீரத்தை விளைத்திடு 
     யாருக்கும் எதிர்நிற்கும் துணிவாக  
பாரெட்டிப் பரவிடும் பாராட்டிப் புகழ்வரும்  
     நீபெற்ற பெயர்மாறும் உயர்வாக 

ஏகட்டும் வீணது இணையட்டும் இனியது 
      நீயெட்டும் தொலைவின்று அருகாக 
பூகட்டும் நாரது பரமன்தோள் ஏறுது 
      நீசுற்றும் சுற்றங்கள் நனிதாக 
போகட்டும் போனது ஆகட்டும் ஆனது
      நீசெல்லும் வழியென்றும் புதிதாக  
 நீகட்டும் கொடியுயர் வான்முட்டிப் பறக்கட்டும்
      கைகொட்டி களிகொண்டு நிறைவாக  

Friday, September 17, 2010

இளையராஜா விருது பெற்றதற்கு வாழ்த்து

பழசிராஜாவுக்கு விருது பெற்றாலும் ராஜா என்றுமே இளையராஜா தான். அவருக்கு வாழ்த்து வெண்பா இதோ:

அசைபோடும் உள்ளம் மடைவிட்ட வெள்ளம்
திசையெட்டும் தன்மெட்டில் எட்டும் - இறைவன்
இசைத்தட்டில் வைத்த இனிப்புகள் என்றும்
இசைந்திட்டோர் நெஞ்சில் நிலை

நிழல்கள் படப்பாடல் தழுவி வேறொரு வாழ்த்து இதோ:

மடை திறந்து தாவும் நதியலைதான்
மனம் திறந்து கூவும் சிறுகுயில் தான்
இசைஞானி - அவர் பாடல்கள் ஆயிரம்
இசைத்தது நிலைத்தது

ராகம் பிறந்தது ரசிகர் கண் பனித்தது
ராஜா பிறந்ததால் நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே அவர் தான் இறைவனே
இசைக்கென இசைகின்ற ரசிகர்கள்  ராஜ்ஜியம்
அவர்க்கே தான் !

Wednesday, August 25, 2010

குளமேறி வந்த மலரே

உளபோதும் இலதாகி நிலவேந்தும் கொடியாகி 
                அசைகின்ற சின்ன இடையே 
        இடைமீது குடமாட படிமீது பதமாட 
                 குளமேறி வந்த மலரே 
இளந்தென்றல் உடலாக இருபாதம் இறகான
                நடைக்கிங்கு என்ன பெயரே? 
         பெயரேதும் தெரியாத புதுநோயில் மனம்வாடித் 
                துடிக்கின்ற தெந்தன் உயிரே
ஒளிபொங்கும் விழியாலும் உருகாத மெழுகாக 
               அழகாக நின்ற சிலையே
     சிலைகூட   உளிகொண்டு உயிர்தொட்டு வதைசெய்யும்
               கலையுந்தன் கண்ணின் கலையே
பளிங்கான குளிர்தேகம் மணிமார்பில் மகிழ்வோடு 
                பதிமுத்தம் கொண்டு தினமே
     இருங்கூந்தல் இடையென்று உடலெங்கும் அணியாமல் 
                 இதழ்மீதில் என்ன நகையே? 

அக் 2000 -இல் forumhub-ல் எழுதிய பாடல் இது.     

Saturday, January 16, 2010

தை

விதைத்து உழைத்து விளைத்த பயிர்கள்
       செழித்து தலைசாய்த் திருக்க
அறுத்து அடித்துப் புடைத்த மணிகள்
       அம்பாரம் நிறைத்து இருக்க
தைக்கத் தைக்கப் பைகள் நிரம்பிட
       நெஞ்சும் நிறைந்து இருக்க
தைதை தகிட தகிட எனத்
      தைமகள் ஆடி வந்தாள்

Friday, December 18, 2009

காந்தி

அச்சம்தவிர் துச்சம்உயிர் எச்சம்உடல் எனவே
அச்சங்கிலி வெட்டித்துயர் விட்டுப்படச் செய்தே
மெச்சும்படி உச்சந்தலை தோளில்உயர் நிறுத்தி
இச்சந்ததி வாழும்படி வைத்தார்அவர் காந்தி

----------------------------------------------------------------------
அச்சங்கிலி : அச்சம் + கிலி, அடிமைச் சங்கிலி 

Friday, December 11, 2009

பாரதி துதி

அன்னை உண்டெனில் பாரதி! இக்கவிதைக்குத்
தந்தை உண்டெனில் - பாரதி!
உன்னைப் புகழ்ந்திட பாரதி! ஓராயிரம்
ஏட்டிலும் இயலுமோ பாரதி?
விண்ணின் மதிதனைப் பாடிடப் புலவர்
கோடிபல கோடியாய்க் கூடிடத்
தண்மதி அழகினிற் குன்றிற்றோ? தேயாமதி
நின்போல் புகழ் கூடிற்றோ?

எல்லோரும் ஒன்றென்று உரைத்திட்டாய் அதைச்
சொல்லி எல்லோரினும்நீ உயர்ந்திட்டாய்!
மெல்லத் தமிழினிச் சாகுமென்றாய் , தமிழ்
கொல்லும் எமனைநீ ஏகுமென்றாய்!
வல்லஉன் விழியால் பார்த்திட்டாய் கதிர்
பல்யுகம் வாழஒளி சேர்த்திட்டாய்!
மெல்ல உன்மீசை முறுக்கிட்டாய் கோடி
பல்லாயிர வர்க்காண்மை பெருக்கிட்டாய்

நற்றமிழாலே உந்தன் பாடலாயிற்று இன்று
நற்றமிழே உன்னைப் பாடலாயிற்று
கற்றபாட்டில் உணர்வு ஊற்றாயிற்று தமிழர்
உயிரிலே உறுதியாயது ஊரலாயிற்று
பெற்றதகுதி மிகுதியேது? நான்பாரதி பற்றே
அதிமிகுந்து மிகுத்துஓதி பாரதிமேதை
போற்றித் துதித்துச் சிந்தித்துப் புத்தியிற்
தித்தித்து உதித்ததே யிந்தத்துதி!

Wednesday, November 11, 2009

காலை

எம்மைப் பாடுகபாடுக எனச்சோலை எல்லாம்
      புதுப்பூக்கள் சூட்டித்தம்மை அலங் கரிக்கும்
 பொருள் தேடுகதேடுக எனப்புள் ளினமும்            
      பொதுக்கூட்டம் கூட்டியங்கு தமர்க்கு உரைக்கும்
எம்மை விடுகவிடுக எனச்சேலை போர்த்தி
       தம்மைவாட்டும் துணைவனைத் தள்ளி வைக்கும்  
இருள் ஓடுகஓடுக எனஒளி எடுத்து
       திசைஎட்டும் கதிர் வழங்கும் காலையாகும்

Monday, September 28, 2009

அலைமகள்

சிப்பிக்கு முத்தையும் நெல்லுக்கு வித்தையும்

இப்புவி மாந்தர்க்கு வித்தையும் சொத்தென்று

அளித்த திருமகளே நீயெனக்குப் பாற்கடல்

ஒளித்த அருமருந்து அள்ளியள்ளி இன்றே

அருளி இரைப்பை பெருத்து இதயம்

சுருங்கா வரத்தையும் தா 


மலைமகள்

சமரிட வந்தசூறைக் காற்றினுக் கஞ்சாது
அமரிடத்தே ஆடி அடிக்கும் மரத்திற்கு
வீரமான வேர்தந்தாய் வீரிதிரி சூலிஎன்னில்
வேராக நெஞ்சில் ஒளிந்தோடும் வாய்மைக்கு
நேராய் நிமிர்ந்து மறத்துடன் வெளிப்பட
வாயிலொன்று காட்டிடு வாய்

கலைமகள்

வீணை நரம்பிலும் மீட்டும் விரல்களிலும்
தூணைத் திருத்திச் சிலைசெய் உளியிலும்
மானை வரைகின்ற தூரிகைத் துள்ளலிலும்
பானை வனையும் விரலிடைச் சேற்றிலும்
ஓடியாடும் வாணியே வந்தெனது மூளையில்
ஓய்வாக வேணும்உட் கார்

Sunday, September 20, 2009

கைக்கிளை

வண்டதின் அமுதும் அமுதக்கலயமும் நல்வண்டல்

மண்ணிற்குமழை நீரும்காய்ந்த ஒரிலையுமாம்

கண்ணிற் கொன்றாய்க் கருத்து மாறுலகில் கண்மணியுன்

எண்ணம்காண் திறனிலாக் குருடன்நான்

பெண்ணரசாம் நினைவென்றிலேன் நினைவன்றி இலேன்

நின்கிளை கைக்கிலைஎனினும் கைக்கிளை

கொண்டனன் நெஞ்சிலென்றும் பூட்டி என்கவியால்

பிரமன்படைத்த பூத்தலைப்பூப் போற்றுவன்


Friday, September 18, 2009

கேளாச் செவி

ஈன்றோர்சொல் ஆன்றோர்சொல் அன்பின் கிளைச்சொல்

தேன்சொட்டும் தேள்கொட்டும் அன்பில் விளைச்சொல்

என்றோசொல் முன்னோர்சொல் கேட்டாலும் என்செவிக்கு

என்றெட்டும் உள்எழும்என் சொல் ?



தூங்கும் குழவியைத் தாலாட்டி அன்புடன்

தாங்கும் அழகிய தூளிக்குக் கேட்பதில்லை

ஏங்கிஅழும் மழலை ஓசை - மனதினுள்

ஓங்குசொல் கேட்டதா செவிக்கு ?

புகையிலை எதிர்ப்பு நாள் ( 31 மே )

வெள்ளம் புகையுயிர் கொல்லும் பகையுன
துள்ளம் கவர்ந்துனை வெல்லும் புதைகுழி
தள்ளும் சுருளெனச் செல்லும் உனதுடல்
உள்ளும் அரவிலாப் புற்று

Sunday, August 30, 2009

பிள்ளையார் பாட்டு

ஆதியந்தம் ஏதுமில்லா அரும்பெரும

ஆனைமுகா நின்துதியே காப்பெனக்கு

தீதிதென்று ஓதொருவர் கேட்டிடின்

தீயரென்று தானவரைத் தள்ளாமல்

நீதிஎனில் நெஞ்சமிது திருந்த

நீயுமருள் நேர்மாறாய் ஆங்கதனில்

சூதிருந்தால் அதைமறந்து மன்னிக்கும்

சீர்பொறையும் சேர்ப்பாய் இங்கு



நாளைஎன்றே நாளும் கூறியிங்கு

நாட்கடத்தி நலிந்து நம்போதா

வேளையென்றே வீணிற் புலம்பாமல்

வேழமுகா காலம்கருதக் கற்பி

ஆளையழி அவநம்பிக்கை அழித்து

ஆகுமிது நம்மால் என்றிக்

காளை மனதில்திட நம்பிக்கைக்

கூட்டியருள் தும்பிக்கைக் கணேசா



சிற்றெறும்பிற்கற்பித்தாய் நெறிகள்பல

சீரியவாய் - உறைவிடத் திருந்தே

நற்பலன் நல்குமிடம் நனிதாய்

நுகர்ந் தறிந்து ஆங்கடையக்

கற்றோர்தம் வழிபற்றி வரிசையில்

கட்டுப்பட்டுக் கடிது ஊர்ந்து

மற்றோர் தடைவரின் மாற்றறிந்து

மடைகடந்து தூக்கிச் சுமக்கும்



எடையளந்து வழிமீண்டு சேர்த்த

எவற்றிற்கும் சேதாரம் இல்லாது

அடைகாக்கும் இடமறிந்து சேமித்து

அழகாய்ப் பாடுபட்டு ஆங்கொருநாள்

அடைமழை பெய்யுங்கால் ஆனந்தமாய்

அல்லலின்றி வாழ்கின்ற இவைபோல்

எடையாயிரம் எமக்குப் படைத்திட்டாய்

எலிவாகனா திறன்நூறேனும் கொடு








சிலேடை : சுண்ணத்தண்டு - புகைக்கோல்

வெள்ளை நிறத்துடன் கைவிரலாய் நீண்டிருக்கும்

பற்றி இழுக்க உடல்தேய்ந்து வண்ணமிடும்

உட்கொள்வார் தேகநலம் கேடுறவே செய்துவிடும்

சுண்ணத்தண்டும் புகைக் கோலாம்