Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Sunday, October 9, 2022

ஈ ஆரி எச மாரி - my take

 ஈ ஆரி எச மாரி 

*****

நேற்று காரில் சென்று கொண்டிருந்த போது மனைவி மற்றும் மகளிடம், "பொன்னி நதி பாக்கணுமே" பாடலில் வரும் "ஈ ஆரி எச மாரி" பற்றி நான் படித்த விளக்கத்தைச் சொல்லிக் கொண்டு வந்தேன்.

உடனே என் மகள், "நீங்களும் கவிஞர் தானே(patted myself on my back!), மாற்று வரி சொல்லுங்கள் பார்ப்போம்" என்றார். சற்று நேரம் வண்டி அமைதியாகப் போகவே "என்ன ஆச்சு மாற்று வரி?" என்றார். யோசிக்கணுமில்ல? என்றதற்கு, "வீட்டுக்குப் போய்ச் சேர்வதற்குள் சொல்லி விட வேண்டும்" என்று உத்தரவிட்டார். வந்தியத்தேவன் குதிரையில் செல்லும் காட்சி விளக்கங்களைச் சொல்ல ஆரம்பித்தேன். "இதையெல்லாம் நீங்கள் மனதுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். வரி தோன்றியவுடன் சொல்லுங்கள்" என்று கூறி விடவே வண்டி மீண்டும் அமைதியானது.

உடனடியாக சொல்ல வேண்டுமே என்று யோசித்த போது வீராணம் ஏரியின் காட்சி நினைவில் வரவே, "வீராணப் பேராழி" என்று சொன்னேன் - ஆழி என்றால் கடல்‌. கடல் போன்ற ஏரி.  இந்த வரி பரவாயில்லையா? என்று கேட்டேன். "OK..."  என்று இழுவையாகப் பதில் வந்தது. வீடும் வந்து சேர்ந்தது!

இதை இதோடு விடாமல், இரவு வீடு திரும்பிய மகனிடம் விவரித்தேன். அவரோ "வீராணம் பரவாயில்லை. பேராழி என்பது மீட்டரில் உட்கார்ந்தாலும் எச மாரி என்பது போல் ஒலிக்கவில்லையே..." என்றார். உண்மைதான்! என்று சொல்லி விட்டு உறங்கிவிட்டேன்!

இன்று பேருந்தில் ஊருக்குச் செல்லும் போது மீண்டும் யோசித்து "வீராணக் கடலோடி" என்று தீர்மானித்து வைத்திருக்கிறேன். பொன்னி நதி பாக்கணுமே - வீராணக் கடலோடி என்று link ஆகிறது. இரவு வீடு திரும்பியதும் மகனிடம் சொல்லவேண்டும்.

இதையும் பாருங்கள் இதோடு விடாமல் உங்களிடம் பகிர்ந்து விட்டேன்! 

நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்களோ??

அடடா....

இப்போது பார்த்தால் "வீழாது புலிக்கொடி" என்று மேலும் ஒரு எண்ணம் தோன்றுகிறதே.... (கொடியை கொஞ்சம் இழுத்துப் பாடாக்கூடாதா என்ன? சில இடங்களில் விட்டுக் கொடுக்காதா என்ன மெட்டு?) 

BTW, விடுதலைப் புலிகள் என்று எண்ணி விடுவார்களோ என்று கேட்பவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன் -

"சோழர் காலத்தில் ஏதய்யா விடுதலைப் புலி?!"

Saturday, May 1, 2021

ஊழல் விலகுக

நாளை இதைச் சொன்னால் வெற்றி பெற்றவர்களைச் சுட்டிக் காட்டுவது போலாகலாம். ஆகையால் இரு கட்சிகளுக்கும் பொதுவாக இன்றே சொல்லி விடுகிறேன். 

ஔவையார் ஆட்சியாளரை "வரப்புயர" என்று வாழ்த்தினார். வரப்புயர்ந்தால், நீர் உயரும், நெல் உயரும், குடிமக்கள் உயர்வார்கள். எனவே வரப்பை மட்டும் உயர்த்துங்கள் என்றார். All other things will automatically happen.

வெற்றி பெறும் ஆட்சியாளர்கள் (மந்திரிகள், MLA-க்கள்) மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கப் போகும் அரசு அதிகாரிகள் அனைவருக்கும் எனது முன்கூட்டிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு நான் வேண்டும் ஒரே ஒரு விண்ணப்பம் "ஊழல் விலகுக" என்பதே. 

All other things will automatically happen.

ஊழலை ஒழித்து விட்டாலே/குறைத்து விட்டாலே அனைத்து நலத்திட்டங்களையும் குறைந்த செலவில் நிறைவேற்ற முடியும். மிச்சமுள்ள பணத்தில் மேலும் பல புதிய நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியும்.

ஊழலைக் குறைத்து செலவைக் குறைந்துவிட்டால் சாராயக் கடைகளையும் மூடிவிடலாம்.

கட்டமைப்புகளை மேம்படுத்த முடியும். (தவறு செய்யும் ஒப்பந்ததாரர்களைத் தட்டிக் கேட்க முடியும்) வேலை வாய்ப்புகள் பெருகும். வறுமை ஒழியும். 

ஊழல்களைத் திட்டமிடத் தேவையில்லை என்கிற பட்சத்தில் ஆட்சியாளர்களின் கவனம் தானாகவே மக்கள் நலத் திட்டங்களில் திரும்பிவிடும். "ஊழலுக்கு நேரமில்லாத போது மனம் நன்மைக்கும் ஈயப்படும்" என்று புதிய குறள் ஒன்று எழுதலாம்!

மேலும் முக்கியமாக, எதிர்க்கட்சிகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் சமூகவலைப் போர்களும் குறைந்து விடும்!

திமுக வென்றால் இப்படிப் பாடுவோம்:

 "ஸ்டாலின் தான் வாராரு ஊழல் ஒழிக்கப் போராரு"

அதிமுக வென்றால் இப்படிப் பாடுவோம்:

"நேர்மை நடைபோடும் தமிழகமே" 

இப்படிக்கு, ஔவையின் பேரன் பாலா சிவசங்கரன்

Friday, March 22, 2019

குருவிகள் தினம் - மார்ச் 20


#ramblingthoughts

கம்பங்கதிரிலிருந்த முத்து ஒன்று "குருவி எங்கே? குருவி எங்கே?" என்று கத்திக்கொண்டே இருந்தது. குருவிதான் தன்னை உண்ண வேண்டும் என்று குறியாயிருந்தது அந்த முத்து. ஆனால் அதை நெகிழிப்பையில் போட்டு விற்பனைக்கு வைத்துவிட்டார்கள். அப்போதும் கத்திக்கொண்டே இருந்தது. அதன் ஓலம் தாங்காத மற்ற முத்துகள் அதை ஒரு ஓட்டை வழியே வெளியே தள்ளிவிட்டன.

'கம்பும் தன் வாயால் கெடும்' என்பதுபோல் கீழே விழுந்த முத்தின் "குருவி எங்கே?" ஓலம் கேட்டு எறும்புகள் வந்து அதைத் தூக்கிச் சென்றன. அதிர்ஷ்டவசமாய் வழியில் எறும்புகள் பாரம் இறக்கிவைத்த ஒரு நொடியில் உருண்டு தப்பித்தது அந்தக் கம்பு முத்து. குருவிக்குத்தான் உணவாவேன் என்று "குருவி எங்கே? குருவி எங்கே?" என்று கத்திக்கொண்டே இருந்தது. ஓலமிட்டு ஓலமிட்டு மயங்கிவிட்டது அந்த முத்து.

ஒருநாளா இரண்டு நாட்களா என்று தெரியவில்லை. மயக்கத்திலிருந்து கண் விழித்த கம்பு முத்து திகைத்தது. அதற்கு வேர்விட்டு சிறிய முளை கிளம்பியிருந்தது. அசையமுடியாமல் அழுதழுது மரித்துப்போனது அந்த முத்து. அதன் மறைவில் பிறந்தது புதிய செடி.

பிறிதொருநாள் இந்தச் செடி பெரிதான பிறகு அதில் பறித்த கம்பை மாவாக்கி உணவகம் ஒன்றில் பாஜ்ரா ரொட்டி சுட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த ரொட்டிக்காகக் காத்திருந்த ஒரு சிறுமி, அவள் மேசையில் வைத்திருந்த தாளில் புள்ளிகளை இணைத்துப் படம் வரைந்து கொண்டிருந்தாள். ரொட்டி வந்ததும் படத்தைத் தள்ளிவைத்துவிட்டு ரொட்டியை ரசித்துச் சாப்பிட்டாள் சிறுமி. அப்போது ரொட்டியின் சிறு விள்ளல் ஒன்று தாளில் வரைந்த குருவியின் அலகின்மேல் விழுந்தது.

Sunday, January 14, 2018

சர்க்கரைப் பொங்கல்

பொங்கலுக்கு விடுப்பு இல்லாததால் ஒரு நாள் பயணமாக அப்பா அம்மாவைப் பார்த்துவிட்டு வர அதிகாலையில் ஊருக்குக் கிளம்பினோம்.

வழியில், 108 திவ்விய தேசங்களில் ஒன்றான திருப்புட்குழியில் விஜயராகவப் பெருமானை தரிசிக்கலாம் என்று வண்டியை நிறுத்தினோம். வண்டிக்கு டோக்கன் போட்ட பெரியவரிடம் பக்கத்தில் ஏதாவது தேநீர்க்கடை உள்ளதா என்று கேட்டோம். இல்லை என்றதால் டோக்கன் போட்டுவிட்டு கோயிலுக்குச் சென்றோம். கோயிலில் பராமரிப்புப் பணி நடப்பதால் மூலவர் சன்னதி மூடப்பட்டிருந்தது. உற்சவரை தரிசித்துவிட்டு வரும்போதுதான் தாயார் சன்னதி திறந்திருப்பதைக் கண்டோம். தாயாரிடம் பெருமாளின் விண்ணப்பத்தைச் சேர்த்துவிட்டுப் புறப்பட்டோம்.

வண்டியை எடுக்கும்போது டோக்கன் போட்ட பெரியவர் ஓடி வந்தார். ஐயா முன்னாடியே பணம் கொடுத்திட்டேனே என்பதற்குள் "இந்தாங்க பிரசாதம். பார்த்து வண்டி ஓட்டுங்கள்" என்று ஒரு பையைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.

கிட்டத்தட்ட இரண்டு அல்லது மூன்று தொன்னைகளில் நிரம்பும் அளவிற்கு சூடான சர்க்கரைப் பொங்கல் அதில் இருந்தது. கோயில் பணியாளர் என்பதால் அவர் பங்காகப் பெற்ற காலைப் பிரசாதம்தான் அது என்று எண்ணுகிறேன். டீக்கடை இல்லை என்று சொல்லிவிட்டோமே இதையாவது சாப்பிடட்டும் என்ற மனித நேயத்தால் தன் பங்கைக் கொடுத்தாரோ என்று நெகிழ்ந்தோம்.

மனித நேயம் தவிர்த்து ஆன்மிக நோக்கில் இதைப் பார்த்தால் பசியோடு வந்து தம்மைத் தரிசித்த பிள்ளைகளுக்குத் தாயாரின் கருணையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. இல்லை தனது சன்னதி மூடியிருந்ததால் தரிசனம் கிடைக்காமல் வருந்தியிருப்போமோ என்று விஜயராகவப் பெருமாள் தான் ஆறுதல் செய்தாரோ? இல்லை நேற்று மார்கழி முடிகிறதே என்று அவசரமாய் திருப்பாவை முப்பது பாக்களையும் படித்ததற்கு ஆண்டாளின் பரிசுதானோ?

எப்படியோ, நெய் சொட்டச் சொட்டச் சூடான சர்க்கரைப் பொங்கல் அதிகாலை முதல் அன்னமாக இந்த பொங்கல் நன்னாளில் எங்களுக்கு வாய்த்ததில் மனம் நிறைந்தது.

அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

Friday, November 4, 2016

அம்மாவைப் பார்த்தீங்களா?

நம் முதல்வர் அவர்களின் உடல்நிலை குறித்த உண்மைகளை அறிய தமிழகமே காத்திருக்கிறது. அவர் நலம்பெற எத்தனையோ வேண்டுதல்கள்.

முதல்வரின் உடல்நிலை பற்றி எண்ணும் போதெல்லாம் "அம்மாவைப் பார்த்தீங்களா?" என்று அன்னக்கிளி பாடலின் மெட்டில் சில வரிகள் என் மனதினுள் ஓடும்.

"அம்மாவைப் பார்த்தீங்களா? அப்போலோ ஆஸ்பிடல்ல
நர்ஸக்கா நீயும் பார்த்தாக்கா சொல்லு - அம்மா
சாப்பிட்டாங்களா தெரியலியே - கண்ணு
முழிச்சாங்களா தெரியலியே

அஞ்சாறு வாரம் ஆனாக்கா என்ன?
அம்மா உடம்பு நல்லானா போதும்
அஞ்சாறு வாரம் ஆனாக்கா என்ன?
அம்மா உடம்பு நல்லானா போதும்
புது ரத்தத்தோடு புது வேகத்தோடு
அம்மாவும் வந்து
தமிழ்நாட்டை ஆள்க
தமிழ்நாட்டை ஆள்க "

தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் ஒரு நாள் பணியாற்ற இயவில்லை என்றாலும் அது எவ்வளவு பெரிய இழப்பு? எத்தனை நலத்திட்டங்கள் எத்தனை முடிவுகள் தேங்கி நிற்கும் என்று எண்ணினால் பெரும் வருத்தத்தைத் தருகிறது. முதல்வர் விரைவில் குணமடைய முருகப் பெருமானை வேண்டி வணங்குகிறேன்.

சில நாட்களுக்கு முன் ஒரு கடைமுன்னால் நின்று கொண்டிருந்தபோது ஒரு மூதாட்டி என்னிடம் ஐந்து ரூபாய் கேட்டார். நான் எடுத்துக் கொடுத்தேன். என் மனைவியும் அவர் பையிலிருந்து பணத்தை எடுக்க முற்படும்போது அந்த மூதாட்டி "ஐந்து ரூபாய் போதுமம்மா நான் அம்மா உணவகத்தில் சாப்பிட்டுக் கொள்வேன்" என்றார்.

தர்மம் தலை காக்கட்டும்.

Friday, September 9, 2016

பேருந்து பயணக்குறிப்பு


முந்தாநாள் மாலை அடித்து பிடித்து 5.45 பேருந்தைப் பிடித்துவிட்டேன். எட்டு மணிக்கு குழந்தையை வகுப்பொன்றுக்கு கூட்டிச் செல்லவேண்டும்.

ஏதாவது படித்துக்கொண்டோ பாடல் கேட்டுக்கொண்டோ பயணம் செய்வது என் வழக்கம். பல நேரங்களில் தூங்கிவிடுவதும் உண்டு. ஆனால் அன்று விழித்துக்கொண்டே சும்மா உட்கார்ந்து வர நேர்ந்துவிட்டது. சும்மா இருந்தாலும் நம் குரங்கு மனம் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்தது.

இடது பக்கம் முன் வரிசையில் ஒரு பெண் மொபைலில் படம் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் ஹெட் போன் மாட்டியிருக்கவில்லை. சப் டைட்டில்களைப் பார்ப்பதைப் புரிந்துகொண்டேன். இன்னும் கொஞ்சம் கவனித்த பிறகுதான் தெரிந்தது அது ஒரு கொரியன் படமென்று. புரியாத வசனங்களுடன் படம் பார்ப்பதை விட சப் டைட்டில்களுடன் ஊமைப் படம் பார்ப்பதே நன்றாக இருக்குமோ என்று ஒரு ஐடியா கிடைத்தது.

OMR-ல் எழுந்து கொண்டிருக்கும் கட்டடங்களை கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டு வந்தேன். கஷ்டப்பட்டு சம்பாதித்து இப்படி கட்டடங்களுக்காக கடன் வாங்கி அஞ்சி அஞ்சி வாழும் IT சமுதாயத்தின் மேல் கழிவிரக்கம் வந்தது.

அரை மணி நேரத்திலேயே இரண்டு ஆம்புலன்ஸ் வண்டிகள் கடந்து செல்வதைக் கவனித்தேன். உடம்புக்கு ஏதாவது வந்தால் இந்த மாதிரி ஆபீஸ் விடும் டிராஃபிக் சமயங்களிலோ அல்லது மருத்துவர்கள் இல்லாத நள்ளிரவுகளிலோ வரக்கூடாதடா சாமி.

பாவம் நாங்கள் எல்லாம் தூங்குவோம் என்ற எண்ணத்தில் வழக்கமாய் பஸ் டிரைவர் பாடல் எதுவும் போடாமல் அமைதியாய் ஓட்டி வருவார். கிண்டி தாண்டிய பிறகே பாடல்களை அலறவிட்டு எங்களை எழுப்புவார். அன்று என்னவோ OMR-லேயே பாட்டு போட ஆரம்பித்துவிட்டார். TMS பாடல்கள். 'நான் மலரோடு' 'லில்லி மலருக்கு கொண்டாட்டம்' 'பூவைத்த பூவைக்குப் பூக்கள் சொந்தமா' என்று பூ போட்ட பாடல்களை ரசித்து வந்தேன்.

ஆலந்தூர் வந்தவுடன் சோகப்பாடல்களாக ஓட ஆரம்பித்துவிட்டன. 'பச்சைக்கிளி முத்துச் சரம்' என்று பாடிவந்த TMS 'பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி' என்று கிளியை கிழி கிழி என்று பலவித மாடுலேஷன்களில் கிழித்துவிட்டார். 'போனால் போகட்டும் போடா' என்ற பாடுகையில் நல்லவேளை எந்த ஆம்புலன்ஸும் செல்லவில்லை. சென்றால் மனது வலிக்கும்.

ஈக்காட்டுத்தாங்கலில் ஒரு பெரிய பிள்ளையார் பந்தல் பார்த்தேன். பிள்ளையாருக்குப் பின்னால் அவரைவிடப் பெரிய விஷ்ணு சிலை இருந்தது. பிள்ளையாரின் இரு பக்கமும் பிரம்மா சிவன் இருவரின் சிலைகளும் சிறியதாய் இருந்தன. நாம் பார்த்த பல பிள்ளையார்களில் இது வித்தியாசமாய் இருந்தது. இன்று அந்தப்பக்கமாய் நீங்கள் செல்வதாய் இருந்தால் பார்க்கவும். நாளை கடலில் கரைந்து விடுவார். (ஹில்டன் ஹோட்டலுக்கும் பேருந்து நிறுத்தத்திற்கும் இடையில் உள்ளது இந்தப் பந்தல்.)

வண்டி நத்தை போல் ஊர்ந்து காசி தியேட்டரைக் கடந்து மெதுவாய் உதயம் பக்கம் திரும்பியது. மகளிடமிருந்து போன்.
'எங்கப்பா இருக்கீங்க?'
'அசோக் பில்லர்லமா ..'
'அசோக் பில்லர்ல எங்கப்பா?'
சில நேரங்களில் அசோக் பில்லரிலிருந்து வடபழனி வரவே அரை மணிநேரம் ஆகிவிடும் என்பதை அறிந்த மகளின் தவிப்பு அது.
'உதயம் தாண்டிட்டேன்மா..' என்றேன்.

வடபழனி சிக்னலில் 'வீடு வரை உறவு' பாடல் ஓடியது. நம் குறுக்கு புத்தி கவிஞர் ஏன் முதலில் 'கட்டிலுக்குக் கன்னி' என்று எழுதிவிட்டு 'பட்டினிக்குத் தீனி' என்று வரிசைப்படுத்தினார் என்று ஒரு கேள்வி கேட்டுவைத்தது.

இந்தப் பாடல் முடிவதற்குள் எனது நிறுத்தம் வந்துவிடும் என்று எழுந்தேன். அதற்குள் அடுத்த பாடல் வந்துவிட்டது 'உன்னைச் சொல்லிக் குற்றமில்லை .. என்னைச் சொல்லி குற்றமில்லை.....'. முன் வரிசைப் பெண் ஹெட் போன் இல்லாமல் இன்னமும் அந்த ஊமைப் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். 'காலம் செய்த கோலமம்மா.. கொரியன் செய்த குற்றமம்மா' என்று மனதுக்குள் பாடியபடி நிறுத்தத்தில் இறங்கினேன்.

Monday, February 29, 2016

கன்னி பேக்கும் காட்டன் பெட்டியும்

"செக்குருட்டி அண்ணா கன்னி பேக் ஏதாவது இருக்குதா பாருங்க...."
பல சரக்குக் கடை ஒன்றில் (super market) நடைவண்டியில் பொருட்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்தபோது கல்லாப்பெட்டியிலிருந்த பெண் இப்படிச் சத்தம் போடுவதைக் கவனித்தேன்.

வயதான தம்பதியினர் நிறைய பொருட்களை வாங்கிவிட்டு எடுத்துச் செல்லப் பைகள் இல்லாமல் காத்திருந்தனர். நெகிழிப் பைகள் பயன்பாட்டைக் குறைக்கவேண்டும் என்பதற்காக பைகளை காசுகொடுத்துத்தான் வாங்கவேண்டும் அந்தக் கடையில். ஆனால் அந்தத் தம்பதியினரோ அந்தப் பெண்ணிடம் "மற்ற கடைகளில் இலவசமா பைகள் தரும்போது நீங்கள் மட்டும் ஏன் காசு கேட்கிறீர்கள்?" என்று வாதிட்டுக்கொண்டிருந்தனர். இதுபோன்ற வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் சரக்குகளைப் பிரித்துப்போட்ட ஏதாவது சாக்குப்பைகளைக்(gunny bag) கொடுப்பார்கள் போலும்.
gunny bag-ஐ கன்னி பேக் என்று கன்னித்தமிழில் ஒரு கன்னிப்பெண் சொன்னதை உங்களிடம் பகிராமல் எப்படி இருப்பது? அதனால்தான் இந்தப் பதிவு. (Kerosene கிருஷ்ணாயில் ஆனது போலத்தானே இதுவும்? )

இதில் சிந்திக்க வேண்டியது என்னவென்றால் நமது தமிழ்மக்கள் ஆங்கிலம் சரியாகத் தெரியாதபோதும் கூச்சப்படாமல் இப்படி பேசிப்பேசி ஆங்கிலம் வளர்ப்பதுபோல் நாமும் தமிழில் பிறமொழி வார்த்தைகளுக்கு இணைச்சொற்களைக் கூச்சப்படாமல் பேசிப்பேசித் தமிழை ஏன் வளர்க்கக்கூடாது என்பது தான். இது பற்றிய உங்கள் கருத்தென்ன?

கதையின் இரண்டாம் பாதி மிகவும் சிறியது. கன்னி பேக் இல்லை என்பதால் அந்தப் பெண் காட்டன் பெட்டி இருக்கிறதா என்று கேட்டார். காட்டன் பெட்டி என்றால் carton என்று ஒருவாறு ஊகித்தேன். சரிதானே?

அதை செக்குருட்டி கொடுத்தாரா என்பது கதைக்குத் தேவையற்றது. இருங்கள் .. இருங்கள்.. செக்குருட்டி என்ற வார்த்தையும் கொஞ்சம் ஆராய்ந்துவிடுவோம். செக்குபோல் அங்கேயே சுற்றிச் சுற்றி வருவதால் செக்குருட்டி ஆகிவிட்டாரோ?!

Wednesday, November 11, 2015

தவிர்க்கமுடியாத தீபாவளி

சின்னதாய் ஒரு ஸ்மைலி முதற்கொண்டு அழகிய படங்களுடனான வாழ்த்து மடல்களும் அலாரத்துடன் சேர்ந்துகொண்டு அலைபேசியை அதிகாலையிலேயே உசுப்பிவிட, உற்சாகமாவே விடிந்தது எனது தீபாவளி. மழை என்கிற காரணத்தினாலோ, தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் ஊருக்குச் செல்லவில்லை என்கிற காரணத்தினாலோ, தீபாவளி கொண்டாடுவதைத் தவிர்க்கமுடியவில்லை.

உறவினருடன் சேர்ந்து சாப்பிடுகையில் தவிர்க்க முடியாத உணவுப் பதார்த்தங்களும், அதிரசம் மற்றும் இனிப்பு வகைகளும் எனது உணவுக் கட்டுப்பாட்டை 'இன்று ஒரு நாள் மட்டும்' என்று தளர்த்திவிட்டன.

தீபாவளியன்று சூழல் மாசுபடுத்தும் வாண வெடிகளைத் தவிர்ப்பது என்ற கொள்கையுடன் இருந்த எனது மகனையும், நண்பர் ஒருவர் கொடுத்த சிவகாசி பரிசுப் பெட்டி 'இந்த ஒரு முறை' என்று தளர்த்திவிட்டது.

கம்பி மத்தாப்புகளை ஈரமண்ணில் நட்டுவைத்துக்கொளுத்தி இவைதான் நான் விடும் ராக்கெட்டுகள் என்று மகள் செய்த குறும்பையும் இங்கு பதிவு செய்துவிடுகிறேன்.

தொலைக்காட்சியை வெகுவாகத் தவிர்த்துவிட்டோம் என்றாலும் வேலை எதுவும் இல்லாத மதிய வேளையில் வேலை இல்லாப் பட்டதாரி படம் பார்த்தோம் (முன்பே பலமுறை பார்த்திருந்தாலும்). அதில் வரும் ஒரு வசனம் சிந்திக்கவைத்தது " முன்பெல்லாம், இல்லாதவங்க இருக்கிறவங்ககிட்ட திருடினாங்க.. இப்போதோ, இருக்கிறவங்க இல்லாதவங்ககிட்ட திருடறாங்க.."

இதில் நமது பங்கு ஏதாவது இருக்கிறதா தவிர்ப்பதற்கு? 

Wednesday, June 3, 2015

இதைச் செய்யாவிட்டால் என்ன?


மசானபு ஃபுகோகா அவர்களின் 'ஒற்றை வைக்கோல் புரட்சி' புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தை அப்படியே இங்கு பகிர்ந்துள்ளேன். (pg 137-138). அதீத வளர்ச்சியை நோக்கி இந்த உலகம் ஓடுவது தேவையற்றது என்ற கருத்தை இயற்கை விவசாயத்தின் ஊடே வலியுறுத்தியுள்ளார்.

வளர்ச்சியோ விஞ்ஞானமோ வீண் என்பதை நான் ஆதரிக்கவில்லை எனினும் பூமிமீதான மனிதத்தின் அளவற்ற அதிகாரத்தையும் உரிமை கோரலையும் விரும்பாதவன் என்கிறவகையில் இதைப் பகிர்கிறேன்.

-------------------------------------------------------------------------------------------------------------

"நீங்கள் எதையுமே செய்யாவிட்டால், உலகம் இயங்கிக் கொண்டிராது? வளர்ச்சியற்ற உலகம் எப்படி இருக்கும்?"
"நாம் எதற்காக வளர்ச்சி பெற வேண்டும்? பொருளாதார வளர்ச்சி 5-10 சதவீதமாக உயரும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறதா? வளர்ச்சி விகிதம் 0 சதவீதமாக இருந்தால் என்ன தவறு? இது ஒரு நிலையான பொருளாதாரத்தின் அடையாளம் இல்லையா? மிகவும் சாதாரணமாகவும், இயல்பாகவும் வாழ்வது எல்லாவற்றையும் விட சிறந்ததல்லவா?"

மக்கள் எதையாவது கண்டுபிடித்து, அது எவ்வாறு இயங்குகிறது என்று ஆராய்ந்து, இயற்கையைப் பயன்படுத்துகின்றனர். அது மனித இன உய்விற்கான ஒன்று என்றும் நினைத்துக் கொள்கின்றனர். இவையனைத்தும் இது நாள் வரை விளைவித்தது என்ன தெரியுமா? இந்த கிரகம் மாசுபாடடைந்தது; மக்கள் குழப்பமானார்கள்; நவீன காலத்தின் பெருங்குழப்பத்திற்கு வரவேற்பு ராகம் வாசிக்கப்பட்டது.

** இந்தப் பண்ணையில் நாங்கள் 'ஒன்றுமே செய்யத் தேவையற்ற' வேளாண்மையைச் செய்து, முழுமையான, ருசியான தானியங்கள், காய்கறிகள், பழங்களை உண்கிறோம். பொருட்களின் ஆதாரத்திற்கு அருகே வாழ்வதில், பொருளும், ஒரு அடிப்படையான மன நிறைவும் இருக்கிறது. வாழ்க்கை ஒரு பாடல், வாழ்க்கை ஒரு கவிதை.

மக்கள் இந்த உலகை அலசி, ஆராய்ந்து, நாம் இதைச் செய்தால் நல்லது, அதைச் செய்தால் நல்லது என்று தீர்மானிக்கும்போது,.என் ஆராய்ச்சி எல்லாம் இதைச் செய்யாவிட்டால் என்ன? அதைச் செய்யாவிட்டால் என்ன என்ற திசையில் செல்கிறது. எதையுமே செய்யாவிட்டால் இந்த விவசாயிகள் இதைவிட நன்றாக இருப்பார்கள் என்பதை கடந்த முப்பது ஆண்டு அனுபவம் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளது.

மக்கள் அதிக வேலை செய்தால், சமுதாயம் அதிகமாக வளர்ச்சியுறும்; அதிகப் பிரச்சனைகள் ஏற்படும். வளங்கள் தீர்ந்து வருவது, இயற்கை அதிகமாக சீரழிக்கப் பட்டு வருவது, மனித ஆற்றல் நொறுங்கி வருவது ஆகிய அனைத்தும் மனித சமுதாயம் எதையாவது சாதிக்கவேண்டும் என்று வெறி கொண்டதன் விளைவுதான்.

முதலில் முன்னேற்றம் அடையவேண்டிய தேவையில்லாமல் இருந்தது. அதனால் எதுவும் செய்யப்படவில்லை.
எதையும் கொண்டுவரத்தேவையில்லை என்றொரு இயக்கத்தை உருவாக்க வேண்டிய இக்கட்டான நிலையில் நாம் இருக்கிறோம்!!!!!!!!!!
---------------------------------------------------------------------------------------------------------

** நிலத்தை உழுது பண்படுத்துவது கூடத் தேவையற்ற வெறுமனே விதைத்து, களைகள் பரவாதிருக்க வைக்கோலைப் பரப்பிப் பயிர் செய்யும் முறையை இவர் இவரது பண்ணையில் வெற்றிகரமாய் செய்ததையே "ஒன்றுமே செய்யத் தேவையற்ற வேளாண்மை' என்று இங்கு குறிப்பிடுகிறார்.

பி.கு
பூவுலகின் நண்பர்கள் செய்துள்ள தமிழாக்கம் எளிமையாகவே உள்ளது. எனினும் பல இடங்களில் நேரடி மொழிமாற்றம் தவிர்க்க இயலாதது என்கிற புரிதலுடன் இந்தப் புத்தகத்தைப் படிக்கவும்.

Thursday, December 4, 2014

பாரதியின் குயில்பாட்டு

பாரதியின் குயில்பாட்டில் குயிலானது தனது காதலனாகிய குரங்கினை மனிதனுடன் ஒப்பிட்டுப் புகழும் கீழ்க்கண்ட வரிகள் மிகவும் அழகு!

வானரர் தம் சாதிக்கு மாந்தர் நிகராவாரோ?
ஆன வரையும் அவர்முயன்று பார்த்தாலும்,
பட்டுமயிர் மூடப்படாத தமதுடலை
எட்டுடையால் மூடி எதிர் உமக்கு வந்தாலும்,
மீசையையும் தாடியையும் விந்தை செய்து வானரர்தம்
ஆசை முகத்தினைப் போலாக்க முயன்றிடினும்
ஆடிக் குதிக்கும் அழகிலுமை நேர்வதற்கே
கூடிக் குடித்துக் குதித்தாலும், கோபுரத்தில்
ஏறத் தெரியாமல் ஏணிவைத்துச் சென்றாலும்,
வேறெத்தைச் செய்தாலும், வேகமுறப் பாய்வதிலே
வானரர் போலாவரோ?
வாலுக்குப் போவதெங்கே?!!

பாரதியின் பாடல்களுக்கு விளக்கவுரை தேவையில்லை. பாரதி, வானரத்தை மனிதனுடன் ஒப்பிட்டு அதன் மேன்மைகளை இப்பாடலில் புகழ்ந்திருப்பதில் உள்ள நகைச்சுவையையும் உண்மையையும் நீங்களும் இரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். எனவே வெறும் விளக்க உரையாக இல்லாமல் இந்தப் பாடலை ஒருசில கண்ணோட்டங்களில் பொருத்தி என் கருத்துகளை இங்கு பகிர்கிறேன்.

விளையாட்டு / சாகசம்:
//கோபுரத்தில் ஏறத் தெரியாமல் ஏணிவைத்துச் சென்றாலும்//
நாம் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என்றெல்லாம் விளையாட்டு மற்றும் சாகசங்கள் செய்வதெல்லாம் வானரம் போன்ற விலங்குகளைப் பார்த்தெழும் உந்துதலால்தானே? குரங்கிலிருந்தான நம் பரிணாம வளர்ச்சியிலும் சாகச உணர்வு நமக்கு ஒட்டிவந்திருக்கவேண்டும். மாணவர் தேசியப் படையில்(NCC) இருந்தபோது மரங்களுக்கு இடையில் கட்டிய கயிற்றுப் பாலத்தில் நடந்து சென்றது, தொங்கும் கயிறைப் பிடித்து தண்ணீரைத் தாண்டியதெல்லாம் நினைவுக்கு வருகிறது. அப்படித் தாண்டும்போது தண்ணீர்த்தொட்டியில் முழங்காலைத் தட்டிக்கொண்டதும் தான் !! அம்மாடி…என்ன ஒரு வலி..?

காதல் / ஊக்கம் / ஆன்மிகம்:
இந்தப் பாடலைத் தத்துவரீதியாய்க் கொஞ்சம் பார்ப்போம்.
தலைவியானவள் தலைவனை இந்தக் குயிலினைப் போல் புகழ்ந்தால் எந்தத் தலைவன்தான் குரங்கினைப்போல் வாலைச் சுருட்டிக் கிடக்கமாட்டான்?! ஹ்ம்ம்..( புகழ்கிறார்களா என்று தெரியாது.. ஆனால் புகழ்ந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்!! நன்றி கமல்!!)
அனுமனுக்கு அவன் பலம் மற்றவர் சொல்லித்தான் புரிந்தது. வானர வழித்தோன்றல்களான நமக்கும் பிறர் சொல்லும் ஊக்கவார்த்தைகள் நம் பலத்தை நமக்குக் காட்டவும், வளர்க்கவும் உதவும் என்று கருதுகிறேன்.

புவியின் மீது மனிதனின் ஆதிக்கம்:
"காக்கை, குருவி எங்கள் ஜாதி" "உயிர்களிடத்து அன்பு வேணும்" என்றெலாம் எழுதிய பாரதி, வானரத்தைப் புகழ்ந்து எழுதியதில் வியப்பொன்றும் இல்லை. பிற உயிர்களின் மீதும், இயற்கையின் மீதும் நாம் பரிவு கொள்ள வேண்டும் என்பது ஒரு விழைவாக மட்டும் இன்று இல்லை. புவியில் மனித இனம் பிழைத்திருக்கவேண்டுமாயின் இயற்கையின் மீது மனிதன் கவனம் கொள்வதென்பது அவசியத் தேவையுமாகிவிட்டது. புவியை மனிதன் சொந்தம் கொண்டாடுவதையும் அவனின் ஆதிக்க உணர்வையும் தகர்த்துப் பரிகசிக்கிறது இந்தப் பாடல்.

"மூளை என்னும் ஊளைச்சதை கொஞ்சம் அதிகம் இருக்கிறது என்பதற்காக, மனிதா நீ அலட்டிக் கொள்ளாதே" என்று அழுத்தந்திருத்தமாய்ச் சொல்லிவிடுகிறான் பாரதி!!

Thursday, October 23, 2014

ராஜகீதம் - கீரவாணி

இன்று நான் கேட்டு ரசித்த பாடல் 'பாடும் பறவைகள்' படத்திலிருந்து 'கீரவாணி'

கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ...
இதயமே உருகுதே
அடி ஏனடி சோதனை
தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி
சங்கதி சொல்லடி வாணி கீரவாணி

க ரி ச ப ம க ப நி ....
ச ரி க ரி க ச நி ப ...
நீ பார்த்ததால் தானடி சூடானது மார்கழி
நீ சொன்னதால் தானடி பூப்பூத்தது பூங்கொடி....
தவம் புரியாமலே ஒரு வரம் கேட்கிறாய்
இவள் மடி மீதிலே ஒரு இடம் கேட்கிறாய்

1. முதல் interlude-ல் வரும் வயலின் இழைப்பு வேறு எந்தப்பாடலிலும் இல்லாத பிரமாதம்

2. அதே interlude-ல் ஸ்வரம் சொல்கையில் ச ரி க ரி க ச//// நி ப//// என்று சொல்லிவிட்டு ////நீ பா////ர்த்ததால் என்று சரணத்தைத் துவக்குவது அதி அற்புதம். ராஜா/வைரமுத்து சிந்தனை.

Tuesday, July 30, 2013

UKG பிரார்த்தனை

எனது நண்பரின் மகன் UKG படிக்கிறான். அவன் LKG படிக்கும்போது "குரு பிரம்மா .. குரு விஷ்ணு" என்ற பாடலைப் பள்ளியில் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். எந்தக் கோயிலுக்குப் போனாலும் சாமியின் முன் நிற்கும்போது இந்தப் பாடலை சத்தமாகப் பாடுவது அவன் வழக்கமாம். பலரும் குழந்தை பாடுவதைப் பாராட்டுவார்களாம். இந்த வார இறுதி நண்பர் குடும்பத்துடன் திருவண்ணாமலை சென்றிருக்கிறார். கடவுளின் முன் கை கூப்பிய சிறுவன் சத்தமாகப் பாடத் துவங்கினான்.. "அறம் செய விரும்பு ஆறுவது சினம் இயல்வது கரவேல் ஈவது விலக்கேல்..." எல்லோர் முன்னாலும் வெட்கமாகிவிட்டது நண்பருக்கு..இந்த நான்கு வரிகளுக்குள் அவன் பாடலை நிறுத்திய நண்பர், "கண்ணா இது சாமி பாட்டு இல்லப்பா" என்றாராம். "எங்க miss புதுசா சொல்லிக் குடுத்தாங்கப்பா.. நான் சாமி பாட்டுன்னு நெனச்சுட்டேன்.. இது என்ன பாட்டுப்பா?" என்றானாம் குழந்தை. எனக்கென்னவோ இந்த நான்கு வரிகளும் இறைவன் முன் வைக்க வேண்டிய சரியான வேண்டுதல்களாகவே தோன்றுகின்றன. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Friday, May 31, 2013

மேற்கத்திய சிந்தனையும் தமிழ்ச் சிந்தனையும்


ஏழாம் வகுப்பு தமிழ் வீட்டுப் பாடத்துக்கு ஏதோ PhD thesis-க்கு மூளையைக் கசக்குவதுபோல் நானும் என் மகனும் தமிழ்ப் பழமொழிகளைத் தேடிக் கொண்டிருந்தோம். "ஆங்கிலப் பழமொழிகள் தெரிஞ்சாலும் சொல்லுடா.. தமிழில் மொழி பெயர்த்துக் கொள்ளலாம்" என்றேன்.

"Two Birds in One Stone" என்ற பழமொழி நினைவுக்கு வந்தது. அதற்கு இணையான தமிழ்ப் பழமொழியை ஏற்கனவே எழுதிவிட்டிருந்தோம்...... "ஒரே கல்லில் இரண்டு மாங்காய்".... கல் ஒன்றுதான் ஆனால் தமிழன் மாங்காயை அடிக்கிறான். ஆனால் வெள்ளைக்காரன் பறவையை அடிக்கிறான் என்ற வித்தியாசத்தை உணர்ந்த உடனே இந்தப் பதிவுக்கான கரு பிறந்து விட்டது!!

தமிழன் எவ்வளவு நல்லவன்? பிற உயிர்களுக்கு தீங்கு செய்ய நினைக்காதவன். வெள்ளைக்காரனுக்கு மட்டும் ஏன் பிற உயிர்களைக் கொல்லும் எண்ணம்? தமிழன் என்ற கர்வத்தில் காலரை உயர்த்திக் கொண்டிருக்கும் போதே வழக்கப்படி நமது technical மூளையும் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. ஒரு பறவை மேல் படும் கல் இன்னொரு பறவை மேல் படுவதற்குள் அது உஷாராகி பறந்து விட வாய்ப்புள்ளது.(இந்தக் கதை நான் நமக்கு ஏற்கனவே தெரியுமே.. ஒரு மரத்தில் பத்து பறவைகள் இருந்தன.. வேடன் ஒரு பறவையை சுட்டான் ..மீதி எத்தனை பறவைகள் இருந்தன?.. விடை: எல்லாப் பறவைகளும் பறந்து விட்டன.) எனவே ஒரு கல்லில் இரு பறவைகளை அடிப்பதற்கான நிகழ்தகவு மிகவும் குறைவு. ஆனால் ஒரு மாங்காயை அடித்த கல் மேலும் ஒரு மாங்காயில் படுவதற்கு நிறைய வாய்ப்புள்ளது. விழுகின்ற மாங்காய் மேலும் ஒரு மாங்காயில் பட்டு அதுவும் விழ வாய்ப்புள்ளது. கல்லடியில் கிளையே குலுங்கி பல காய்கள் விழவும் வாய்ப்புள்ளது. தவிர மாங்காய்களுக்கு பறவைகள் போல உஷாராகத் தெரியாது. ( அதனால் தான் இவன் சரியான மாங்காய் என்கிறார்களோ?). இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது தமிழனின் சிந்தனையே சிறந்தது என்று ஒப்புக் கொள்கிறீர்களா மக்களே?

சரி இன்னும் ஒரு உதாரணம் பார்ப்போம். வெள்ளைக்காரன் சொல்கிறான் "make hay while the sun shines". தமிழன் என்ன சொல்லுகிறான்? "காற்றுள்ள போதே தூற்றிக் கொள்". இப்போது என்னை சில பேர் மடக்க நினைக்கலாம். தமிழன் சோற்றைப் பற்றியே நினைக்கிறான். நெல்லைத் தூற்றி சாதம் வடித்து சாப்பிடுவதே அவன் நினைப்பு. ஆனால் வெள்ளைக்காரன் மாட்டுக்கு வைக்கோல் காயவைக்க நினைக்கிறான் எனவே அவன் சிந்தனையே சிறந்ததென்று சிலர் வாதிடலாம். இங்கு தான் நீங்கள் நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்... வெள்ளைக்காரன் மாட்டுக்கு ஏன் அக்கறையாக வைக்கோல் போடுகிறான்? அது கொழு கொழு என்றானதும் அதை வெட்டுவதற்கையா... வெட்டுவதற்கு..!

பி.கு. இது இன உணர்வைத்தூண்டும் கட்டுரை அல்ல. மொழியியலும் மொழி பேசும் மக்களின் வாழ்வியலும் பற்றிய ஒரு நடுநிலைமையான ஆராய்ச்சிக் கட்டுரையே. மேலும் பல உதாரணங்கள் என் உள்ளத்தில் கொட்டிக்கிடக்கின்றன விரித்து எழுத நேரமில்லை.

A bird in the hand is worth two in the bush. ( மரத்தில் இருக்கும் பலாக்காயை விட கையிலிருக்கும் களாக்காயே மேல்) கறி உணவு vs காய் உணவு

God helps those who help themselves ( மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்). நாமே உதவி செய்து கொள்வதற்கு கடவுள் எதற்கு? நாம் மரம் போல் நின்றாலும் நமக்கு உதவி செய்வது கடவுளின் கடமையன்றோ? இதை சோம்பேறித்தனம் என்ற நோக்கில் பார்க்கக் கூடாது.. எது உண்மையான நம்பிக்கை - முழுமையான surrendering என்ற நோக்கில் பார்க்கவும்.

Birds of same feather flock together. (ஒரே குட்டையில் ஊறிய மட்டை). வெள்ளைகாரனின் நட்பு இனம் சார்ந்தது. நம் ஆட்களின் நட்பு இடம் சார்ந்தது. மட்டைகள் வெவ்வேறு இனமாக இருக்கலாம். ஆனால் அவற்றை இணைப்பது ஒரே குட்டை.

A friend in need is a friend in deed.(உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.).. வெள்ளைக்காரன் சொல்லும் நட்பு தேவையின் போது உதவுவது. நம் ஆட்களின் நட்பு அவிழும் ஆடையைப் பிடிக்கும் கைபோல் தேடி வந்து செய்யும் நட்பு....எது உயர்ந்ததென்று நீங்களே சொல்லுங்கள்..

Saturday, June 9, 2012

ஒரு பையின் பயணக் குறிப்பு

முதலில் யுவான் சுவாங் என்று இந்தப் பதிவிற்குப் பெயர் வைத்திருந்தேன். 
சரி. இங்கிருக்கிற விசாகப் பட்டினம் சென்று வந்ததற்கு இந்த பில்ட் அப் 
எதற்கு என்று பெயரை மாற்றிவிட்டேன். 
இருவழி ரயில் பயணங்களையும் சேர்த்து மொத்தம் ஐந்து நாள் பயணம். மூன்று நாட்கள் சுற்றிப் பார்க்க. முதல் நாள் விசாகப்பட்டினத்தைச் சுற்றிப் பார்த்தோம். முதலில் சிம்மாசலம் கோயில் சென்றோம். வழக்கமாக சந்தனக் காப்பிட்டு முகம் மூடிய நிலையில் இருக்கும் பெருமாளை சிலநேரங்களில் தான் முழுதாய்ப் பார்க்கமுடியும். எங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.
அடுத்ததாக பாலச்சந்தர் படங்களில் வரும் அழகிய கடற்கரையில் கால் நனைத்ததில் மகிழ்ச்சி. சிறு பாறைகள் கடற்கரைக்கு அழகூட்டுகின்றன.
ramkrishna-beach-vizag
 கடற்கரையில் விளையாடி மகிழ்ந்த நண்டுக் கால்களையும் வாழைத்தண்டுக் கால்களையும் கண்டு மகிழ்ந்தோம் - வழக்கப்படி. டால்பின் மூக்கு வடிவ மலைமேல் கலங்கரை விளக்கம் நாங்கள் சென்றபோது மூடியிருந்தது. அருகிலேயே  தர்க்கா ஒன்று உள்ளது. தர்க்காவில் 11 சுற்று சுற்றி அல்லாவை வேண்டிக்கொண்டு அங்குள்ள அழகிய ஆலமரத்தடியில் இளைப்பாறினோம்.
கைலாஷ் கிரி பூங்கா அழகாக உள்ளது. பெரிய சிவன் பார்வதி சிலையைச் சுற்றி குட்டி ரயில் பயணம். மலையின் கீழிருந்து மேலே வர கேபிள் கார் வசதியும் உள்ளது. நாமும் சென்னையில் பரங்கிமலையை இப்படி ஒரு சுற்றுலாத் தலமாக ஏன் மாற்றக் கூடாது என்ற எண்ணம் தோன்றியது.
மறுநாள் அரக்கு/அருக்கு பள்ளத்தாக்கு பயணம். விசாகப்பட்டினத்திலிருந்து 120 கி. மீ. தொலைவில். மலைப்பயணம் மிகவும் ரம்மியமாக இருந்தது. பழங்குடிகள் அருங்காட்சியகம் கண்டோம். பழங்குடிப் பெண்களின் நடன நிகழ்ச்சியும் கண்டு மகிழ்ந்தோம். இந்தப் பயணத்தில் சிறப்பான விஷயம் போரா(Borra Caves) குகைகள் தான். பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாள் தோன்றிய இக்குகைகளுக்குள் படிக்கட்டுகள் அமைத்து விளக்குகள் அமைத்து பார்த்து வியப்புற அற்புதமாக வழி செய்துள்ளனர். விசாகப்பட்டினம் செல்பவர்கள் ஒரு நாள் ஒதுக்கி இக்குகைகளைக் கட்டாயம் பார்த்து விடவும்.
ஆன்மிகப் பயணத்தைக் கூட சிலர் உல்லாசப் பயணமாக மாற்றிவிடும் கதைகளை நீங்கள் அறிவீர்கள். நாங்களோ உல்லாசப் பயணத்தையும் ஆன்மிகப் பயணமாக மாற்றிவிட்டோம். முதல் நாள் சிம்மாசலம், கைலாஷ் கிரி மற்றும் தர்க்கா. இரண்டாம் நாள் போரா குகையிலும் இறை வழிபாடு. மூன்றாம் நாள் முழுக்க முழுக்க ஆன்மிகம் தான். விசாகப்பட்டினத்திலிருந்து 120? கி. மீ தொலைவில் உள்ளது ஸ்ரீகாகுளம். இதை மையமாய் வைத்து அமைந்துள்ள கோயில் தலங்களை தரிசித்தோம். முதலில் ஸ்ரீகாகுளம் சிவன் கோயில். அழகிய பெரிய நந்தியை உடையது. பலராமர் சிவ பூசை புரிய நீர் வேண்டி தனது ஏர் கொண்டு கீற உருவான நாகவலி நதிக்கரையில் அமைந்துள்ளது. அடுத்தது சூரிய நாராயணா  கோயில். கோனார்க் சூரியன் கோயில் போல் வடிவமைக்கப் பட்டுள்ளது இக்கோயில். மேலும் விவரங்கள் அறிய http://www.arasavallisungod.org/ பார்க்கவும். அடுத்தது ஸ்ரீ கூர்மம். கூர்ம வடிவில் மூலவர் அமைந்திருக்கும் கோயில் உலகிலேயே இது ஒன்று தான் என்று கூறினார்கள். ராமானுஜர் தரிசித்த தலம். புராதனக் கோயில்கள் தரிசிக்கும் போது ஏற்படும் பரிபூரண உணர்வு இவ்வாலய தரிசனத்திலும் கிட்டுகிறது. அடுத்தது ஸ்ரீமுகலிங்கம் கோயில். ஒரிய கட்டிட அமைப்பில் அமைந்துள்ள இக்கோயிலில் சிவலிங்கம் முக வடிவில் அமைந்துள்ளதே இதன் பெயர்க்காரணம்.


வெற்றிகரமாக சுற்றுப்பயணம் முடித்து சென்னை திரும்பினோம். வேறு எதுவும் சுவாரசியம் இல்லையா இப்பயணத்தில் என்று கேட்கலாம். பல உண்டு. உதாரணத்துக்கு ஒன்று. திரும்பிவர டாட்டா அல்லிபி எக்ஸ்பிரஸ் ரயிலில் பதிவு செய்திருந்தோம். எங்கள் டிக்கட்டில் இருந்த ரயில் எண் வேறு. நாங்கள் ஏறிய ரயில் எண் வேறு. ரயில் எண் தான் தகராறு என்றால் பெட்டி எண்ணிலும் குழப்பம். S2 பெட்டியில் தேடினால் எங்கள் பெயர்களைக் காணவில்லை. டிக்கட்டில் உற்று நோக்க பெட்டி எண் ST2 என்று இருந்தது. ரயில் கிளம்ப மூன்று நிமிடங்களே இருந்தது. அலறி அடித்து ரயிலின் மறு கோடியில் இருந்த பெட்டிக்கு ஓடி ஏறுவதற்குள் உயிர் போய்  உயிர் வந்தது. இக்குழப்பங்களுக்கு காரணம் எழுத தனி பதிவு வேண்டும். அல்லது விவரமறிந்த நண்பர்கள் பின்னூட்டத்தில் எழுதட்டும். S2-ல்  இருந்து ST2 க்கு ஓடும்போது ஒரு பொறுப்பான குடும்பத்தலைவன் என்ற வகையில் இருப்பதிலேயே பெரிய மற்றும் கனமான பையான எனது மாமியாரின் பையைத் தூக்கி ஓடிவந்தேன். பெட்டியில் ஏறியதும் என் மாமியார் சொன்னார்கள் - இந்தப் பையில் wheels இருக்கிறதே,.. இழுத்து வந்திருக்கலாம் என்று!

Thursday, March 15, 2012

மண(&மன) உறுதி

ஒரு காலத்தில் கல்யாண நாள் வரை மணமக்கள் ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருந்ததாகப் பெரியவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்தக் காலத்தில் பிள்ளைகள் சொன்னால்தான் பெற்றோர்களுக்கு அவர்களின் திருமணம் பற்றித் தெரியவருகிறது என்று மிகைப்படுத்திச் சொன்னாலும் - இக்காலத்திலும் பெரும்பாலும் பெற்றோர்கள் பார்த்துத் திருமணம் செய்து வைக்கும் வழக்கம் தொடர்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை.

இன்று மதியம் நண்பர்கள் யாரும் உடன் வராததால் நான் மட்டும் தனியாக எங்கள் அலுவலக உணவகம் சென்றேன். நான் அமர்ந்த மேசையில் இன்னொரு ஓரத்தில் இரண்டு இளம்பெண்கள் வந்து அமர்ந்தனர். அமர்ந்த அடுத்த நிமிடமே பேச ஆரம்பித்துவிட்டனர். நானும் நாகரிகம் கருதி அவர்கள் பேசுவது எதுவும் கேட்காமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். காதைப் பொத்திவைத்தாலும் காதைப் பொத்துக்கொண்டு சில செய்திகள் நம் காதில் விழுமல்லவா, அது தான் நடந்தது. ஒரு பெண் தன் திருமணத்தைப் பற்றி வெட்கமும் குதூகலமும் கலந்து பேசும்போது அதைக் கேட்காமல் எப்படி இருப்பது...?

நிச்சயதார்த்தம் (மண உறுதி விழா) சமீபத்தில் தான் நடந்ததாம்.
இது உறவினர்கள் மட்டும் கலந்துகொண்ட சிறிய விழா என்பதால் நண்பர்களை அழைக்கமுடியவில்லை என்று வருந்தினாள் அந்தப் பெண். கல்யாணத்துக்கு இன்னும் ஆறு மாதம் இருக்கிறது.
அழைப்பிதழ் வைக்கிறேன் கட்டாயம் வந்துவிடவேண்டும் என்றாள். அவள் தோழி ஆமோதிக்க, நானும் சம்பந்தா சம்பந்தமின்றி தலையை ஆட்டிவைத்தேன். பேச்சு தொடர்ந்தது. அந்தப் பெண்ணின் வருங்காலக் கணவர் வேலை செய்யும் நிறுவனத்தில் அவர் வெளிநாடு செல்ல வாய்ப்புக்
கிடைத்திருப்பதாகவும் திருமணம் முடிந்தவுடன் செல்லவேண்டும் என்றும் கூறினாள்.

இதுவரை ஒரு வழக்கமான கதையாக ஓடிக்கொண்டிருந்த இந்த உரையாடலில் ஒரு சுவாரசியமான திருப்பம் இப்போது வந்தது. கல்யாணத்துக்கு ஆறு மாதம் இருந்தபோதும் -விசா எடுக்க நாளாகும்
என்பதாலும் கல்யாணம் ஆன உடனே புறப்படவேண்டும் என்பதாலும் - அடுத்த வாரம் அவள் கல்யாணத்தைப் பதிவு செய்துகொள்ளப்போவதாகக்
கூறினாள். இச்செய்தி அவள் தோழியைப் போலவே எனக்கும் ஆச்சரியம் அளித்தது. இருந்தாலும் தோழி சமாளித்துக் கொண்டு 'அப்போ ஆறு மாசம் ஜாலி தான்னு சொல்லு' என்று கிண்டல் செய்தாள். 'அடப் போப்பா - போன்ல மட்டும் தான் பேசிக்குவோம் அவ்வளவுதான்' என்றாள் வெட்கத்துடன்.

என் தட்டில் தயிர்சாதமும் காலியாகிவிட்டதால் -அத்துடன் நடையைக் கட்டினேன். உரையாடல் கேட்காவிட்டாலும் கற்பனை மட்டும் எனக்கு தொடர்ந்து கொண்டிருந்தது. திருமணப் பதிவு நாளன்று அவன் என்ன பரிசு கொடுப்பான்? அவனும் நம்மைப் போல் பாரதி பக்தனாக இருப்பானோ?
"ஆத்திரம் கொண்டவர்க்கு கண்ணம்மா சாத்திரம் உண்டோடி?
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடி இதுபார் - கைஎழுத்திட்டுவிடு" என்று card எழுதிக் கொடுப்பானோ? என்ன சார் இந்த மாதிரி situation கௌதம் மேனன் படத்தில் தான் வரும் இதற்குப் போய் பாரதியார் பாட்டு எழுதுகிறீர்களே என்று இளைஞர்களாகிய நீங்கள் கேட்கலாம். எனவே ஒரு re-mix பாடலும் எழுதி அதையும் உடனே வெளியிடுகிறேன். ஒரு வேளை இந்த பாடல் பொருத்தமாக இருந்தால் கௌதம் மேனன் அடுத்த படமான 'நீ தானே எந்தன் பொன் வசந்தம்' படத்தில் பயன்படுத்திக் கொள்ளட்டும். ( என்ன ஒரு பேராசை என்று கேட்கிறீர்களா? கேட்காதீர்கள். அதற்குப்பதில் உங்களுக்கு கெளதமையோ அல்லது இசைஞானியையோ தெரியுமென்றால் அவர்களுக்கு என் பாடலைக் காட்டி புண்ணியம் சேர்த்துக் கொள்ளுங்கள்!)

மீண்டும் கதைக்கு வருவோம்.

திருமணத்துக்கு முன்பாகவே இப்படிப் பதிவு செய்து கொண்டால் அதில் என்னென்ன பிரச்சினைகள் வரக் கூடும்? இது எந்த விதமான ஒரு நம்பிக்கை..? நம்பினார் கெடுவதில்லை. இது நான்கு மறைத் தீர்ப்பல்லவா?

சிறு வயதிலேயே - இவன் உனக்குத்தான் - இவள் உனக்குத்தான் என்று காட்டி-காதல் வளர்த்த நம் தமிழ்ப் பண்பாடு - இந்த இரு உள்ளங்களுக்கும் காதல் வளர்ப்பதன்றி நல்வழியும் காட்டி நலமுடன் வாழவைக்கட்டும் என வாழ்த்துவோம்.

Thursday, March 8, 2012

தத்துவமும் பித்துவமும்

 தத்துவம் பிறந்த காலம் முதலே பித்துவமும் உலகில் உலவிவருகிறது என்பது என் கருத்து. தத்துவத்தை மதிக்கும் நாம் பித்துவத்தை அவ்வளவாக மதிப்பதில்லை. திருக்குறளைப் போற்றும் நாம் தெருக்குறளையும் போற்ற வேண்டும் என்கிற மேலான கருத்தை வலியுறுத்தி இந்தப் பதிவு.  

'யாகவாராயினும் நாகாக்க காவாக்கால் யாராவார் யாகவா முனிவர்?" பெரிய ஞானிகளும் முனிகளுமே தத்துவத்துடன் பித்துவம் கலந்து தருவதை நாம் காலம் காலமாகக் கண்டுவருகிறோம். "மேனியைக் கொல்வாய்.. மேனியைக் கொல்வாய்.." என்ற கீதா உபதேசம் முதற்கொண்டு இதற்கு உதாரணங்கள் பல சொல்லலாம். ஆனால் 'அச்சம் என்பது தமிழர் உடமையடா' ( திராவிடர் என்று சொன்னாலும் வம்பு) என்கிற காரணத்தால் கிருஷ்ண பக்தர்களின் உதைகளிலிருந்து தப்பித்து வேறு உதாரணங்களுக்கு மாறிவிடுவோம்.


உதாரணங்களுக்கு முன்பாகப் பித்துவம் என்றால் என்னவென்று பார்ப்போம். தொல்'copy'யனின் விதிகள் சில:
1. பித்துவம் என்பது தத்துவத்தின் தழுவலாய் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.
2. தத்துவ ஞானிகள் ஒதுக்கிவிடும் தத்துவங்களும் பித்துவமாகலாம்.
3. பித்துப் பிடித்தவர்தான் பித்துவம் சொல்லவேண்டும் என்றில்லை. ஆனால் பித்துவத்தில் கொஞ்சம் பித்துத்தனம் இருக்க வேண்டும்.
4. யாரையும் குத்தும் தனம் கூடவே கூடாது.
5. பாசம் காட்டலாம் ஆபாசம் கூடாது.
ஆகமொத்தத்தில் பித்துவம் என்பது ஒரு பின் நவீனத் தத்துவமாக இருக்க வேண்டும்!


கல்வி என்பது அழியாதது என்ற கருத்தைப் பித்துவமாய் இப்படிக் கூறலாம். 'ஒருவனின் பல் சொத்தை பிடுங்கலாம், பல சொத்தையும் பிடுங்கலாம் ஆனால் அவன் வித்த சொத்தை யாரும் பிடுங்கமுடியாது.'
(இங்கு 'வித்த' என்பதை வித்தை என்று எடுத்தாலும் விற்ற என்று எடுத்தாலும் - இந்தப் பித்துவம் பிழையாகாது.)


தேர்வுகளின் தொல்லையால் தூக்கம் தொலைக்கும் மாணவர்கள் முதல்மரியாதை படப் பாடலான "மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கல" பாடலைப் பாடினால் அது தத்துவம். இந்தப் பாடலை வைத்தே சில பித்துவங்களும் பாடலாம். செமஸ்டர் தேர்வில் மார்க் குறைந்துவிட்டால் "book-ஐ வாங்கினேன் mark ஏதும் வாங்கல" என்று பாடலாம். அதுவே கப்(அரியர்) வாங்கிவிட்டால் "கப் வாங்கினேன் மெடலு வாங்கல" என்று சைக்கிள் பெடல் சுத்தலாம்.  அடடா நான் பாடுவது என்பாட்டிக்குக் கேட்டுவிட்டது. அவரும் பாட ஆரம்பித்து விட்டார், "பிளாஸ்கு வாங்கினேன் காபியைக் காணல.."  இப்போது என் மனைவி பாடுகிறார்.."பர்ஸ் வாங்கினேன்..காசொன்னும் காணல..." பித்துவ மழையில் நனைந்துவிட்டேன்.


"காதல் ஒன்றும் சுத்த பத்தம் பார்ப்பதில்லையே எச்சில் கூடப் புனிதமாகுமே" என்றார் உதித் நாராயணன்.( கவிப்பேரரசிடம் வாதிட முடியுமா? அதான் உதித்...ஹி ஹி!) அதுபோல் பித்துவத்துக்கும் இடம் பொருள் ஏவல் கிடையாது. பெரும்பாலான பித்துவங்கள் குளியலறையின் ஷவரில் இருந்துதான் கொட்டும். மேலைக் கலாச்சாரத்தில் ஊறிஇருந்தாலும் பாத்ரூமில் பேப்பர் படிப்பதை சாமி குத்தமாகக் கருதவதால் எனது பாத்ரூம் நிமிடங்கள் பொதுவாய் அமைதியாகவே கழி-யும். இந்த அமைதியில் பிறக்கும் பித்துவங்கள் பல உண்டு. ஒரு நாள் யோசித்தேன் பாத்ரூம் டைல்ஸ் எல்லாம் மாற்றியிருக்கிறோம் ஒரு அழகான படம் மாட்டினால் என்ன? கதவில் ஏதாவது வாசகம் எழுதலாமா என்றும் யோசித்த போது ஒரு பாடல் நினைவுக்கு வந்தது ..... "போனால் போகட்டும் போடா.."!  இன்னொரு பாடல் கூட நினைவுக்கு வருகிறது. விதி எண் 5 -ஐ மீற விருப்பமில்லை!


தத்துவத்தின் தழுவலே பித்துவம் என்பதற்கு ஒரு உதாரணம் பார்ப்போம். "அட மீன் செத்தாக் கருவாடு நீ செத்தா வெறுங்கூடு - கண்ணதாசன் சொன்னதுங்க" என்று பாதி சரணத்தில் கண்ணதாசனை மேற்கோள் காட்டி "பசு இருந்தாலும் பாலாகும் செத்தாலும் தோலாகும்" என்று மீதி சரணத்தை வைரமுத்து எழுதியிருப்பார். இதே உத்தியைப் பயன்படுத்தி நாமும் பித்துவம் பாடலாம். "பசு இருந்தாலும் புல்-ஆகும்* செத்தாலும் புல்லாகும்"(*ஆகும் - தீர்ந்துவிடும்) ..... புல்லரிக்கிறதா இல்லையா சொல்லுங்கள்? 

வெறும் நகைச்சுவைக்கு மட்டுமா பித்துவம்? தீய வழியில் செல்லும் இளைஞர்களையும் பன்ச் சொல்லித் திருத்தலாம். "கண்ணா நீ இன்னைக்கு தம் கட்டி தம் கட்டி தம் அடிச்சா..நாளைக்கு தம்-கட்டி தம்-கட்டி உன்னை அடிச்சிடும்" (தம்-கட்டி = lung cancer).

"பார்ல ஏறிட்டு கார்ல ஏறாதே..பிளாட் ஆகி பிளாட் வெளியில் படுக்காதே.." இப்படி எவ்வளவோ விஷயங்கள் சொல்லலாம்.

பித்தார்க்குப் பித்தான பித்தாக்கிப் பித்தார்க்குப் பத்தாகும் பிழை.. ! 
 
அன்பு நண்பர்களே, தத்துவ ஞானிகளிடமிருந்து தப்பித்து நமக்கு நாமே பித்துவம் வகுத்துக்கொண்டு வளமுடன் வாழ்வோம்  என உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
 
உங்கள் பித்துவ ஞானத்தை வைத்து எனக்கு உதவ முடியுமா? அடம் பிடிக்கும் குழந்தைகளை அடக்குவது எப்படி? ("மடப் பசுவாய் அடங்குமா அடம் பிடிக்கும் சிசு?" )

Monday, March 5, 2012

கண்ணால் காண்பது பொய்யா?

காதலில் சொதப்புவது எப்படி? படம் பார்த்து விட்டீர்களா? மற்றவர்கள் சொதப்புவதைப் பார்ப்பதில் நமக்கு ஒரு மகிழ்ச்சி என்றுமே உண்டு. ஆனால் நாம் சொதப்பிய விஷயங்களை நினைவுபடுத்திப் பார்ப்பது சிரமமான விஷயம்.

ஆபீஸில் பாஸுக்கு தவறான டேட்டா கொடுத்துவிட்டு அதைத் தானாகவே சொல்லிவிடுவது நல்லதா இல்லை அவராகக் கண்டுபிடிக்கட்டும் என்று விட்டுவிடலாமா என்று நண்பர்களிடம் அட்வைஸ் கேட்டுப் பட்டி மன்றம் நடத்தும் நண்பர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன். நண்பர்கள் என்றால் நானும் ஒரு நண்பன் என்பது நான் சொல்லியா உங்களுக்குப் புரிய வேண்டும்?!

ஒரு காலத்தில், அப்பா டியுஷன் எடுக்கும் போது, சின்ன கிளாஸ் பசங்களுக்கு சில நேரம் என்னைச் சொல்லிக்கொடுக்கச் சொல்வார். அப்படி சில சமயங்களில் எதையாவது தப்பாகச் சொல்லிவிட்டு டியுஷன் முடிந்ததும் அந்தத் தப்பை உணர்வதுண்டு. மறுநாள் அதைச் சரியாகச் சொல்லிப் பசங்களைத் திருத்தும் வரை ஒரு குற்ற உணர்வு வாட்டிக் கொண்டே இருக்கும். இந்த அனுபவத்தின் காரணமாக, இப்போதெல்லாம் என் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கும்போது மிகவும் கவனமாக இருப்பேன். இருந்தாலும் ஒருமுறை நான் சொல்லிக்கொடுத்ததால் ஒரு பதில் தவறாகி ஒரு மார்க்கில் 'ஓ' கிரேடு போய்விட்டது என்று என் மகன் என் மனைவியிடம் சொல்லிவிட்டான். 'உன்னால் தான் ஓ கிரேடு போய்விட்டது' என்ற பஞ்ச் டயலாக்கை என் மனைவியிடமிருந்து இப்போது அடிக்கடி கேட்க நேர்வது முற்காலத்தில் டியுஷன் பசங்களுக்கு நான் செய்த பாவத்தின் சம்பளம் தான் என்பதை முற்றிலும் உணர்கிறேன்.
 
இதுபோல் சமீபத்திலும் ஒன்று நிகழ்ந்தது.
 
செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரத்திற்குப் பேருந்தில் சென்றுகொண்டிருந்தேன். இரு சிறு குழந்தைகளுடன் ஒரு பெண் பஸ்ஸில் ஏறினார். பஸ்ஸில் உட்கார இடம் இல்லாததால் ஒரு பையனை மனித நேயத்தின் பொருட்டு(?) என் மடியில் உட்கார வைத்துக்கொண்டேன். உடனே 'அங்கிள், அங்கிள்' என்று பேச ஆரம்பித்து விட்டான். அவன் பெயர் மோகனகிருஷ்ணன் என்றும் அவன் ஒன்றாம் வகுப்பு படிப்பது முதல் அவன் மிஸ்களின் பெயர்கள் எல்லாம் கூட சொல்லிவிட்டான். அதானே, மிஸ் பெயர் எல்லாம் எதற்கு என்னிடம் சொல்லவேண்டும்? சரி அது கிடக்கட்டும். இந்த வழியாகச் சென்றவர்களுக்குத் தெரியும் - இந்தப் பாதை நெடுகப் பாலாற்றின் கரையிலேயே செல்லும் என்று. பாலாற்றின் கரையில் செல்வதாலேயே இந்தப் பாதையில் செல்வது ஒரு சுகானுபவம். ஒரு திருப்பத்தில் வண்டி திரும்பும்போது மோகனகிருஷ்ணன் பரந்து விரிந்து கிடந்த பாலாற்றைப் பார்த்து 'அங்கிள் இது என்ன பாலைவனமா?' என்று கேட்டான். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. இந்தக் குழந்தைக்கு எப்படிச் சொல்லி புரியவைப்பது - இது ஒரு காலத்தில் பால் போல் பொங்கி ஓடிய ஆறு என்று? 'பாலை வனம்' என்று தமிழில் சொன்னானே என்பதில் மகிழ்ச்சி ஒரு புறம். கொஞ்சம் யோசித்துவிட்டு அது ஒரு ஆறு தான் என்பதை ஒருவாறாக அவனுக்கு விளக்கிவிட்டேன். 

இது நடந்து பத்து நாட்கள் ஆன பிறகு என் மனம் என்னைக் கேட்கிறது டியுஷன் பசங்களுக்கு சொன்னதுபோல் இதுவும் தவறான பதிலோ என்று. தோற்றத்தில் இது பாலைவனம் என்று நிதர்சனமாக ஒரு குழந்தைக்குத் தெரிகிறது.  இதை ஆறு என்று நான் ஏன் கூறவேண்டும்? கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாய் ஓடாத பாலாறு இனி ஓட வாய்ப்புள்ளதா? அண்டை மாநிலங்களில் அணைகள் உடையுமா? இல்லை காஞ்சிபுரம் வேலூர் மாவட்டங்களின் கழிவு நீர் அனைத்தையும் இதில் செலுத்தி கூவம் நதிபோல் வற்றாத ஜீவநதியாக இதை மாற்ற முடியுமா?
உங்கள் மடியில் மோகனகிருஷ்ணன் அமர்ந்திருந்தால் நீங்கள் என்ன பதில் கூறியிருப்பீர்கள்?

பி.கு. இந்த அனுபத்தில் உருவானதே பாலாறு என்ற என் கவிதை. ஆனால் அது ஒரு பரிமாணத்தை மட்டுமே காட்டுவதால் - முழு அனுபவத்தினையும் கட்டுரையாக இங்கு பதிந்துள்ளேன்.