Friday, December 18, 2009

காந்தி

அச்சம்தவிர் துச்சம்உயிர் எச்சம்உடல் எனவே
அச்சங்கிலி வெட்டித்துயர் விட்டுப்படச் செய்தே
மெச்சும்படி உச்சந்தலை தோளில்உயர் நிறுத்தி
இச்சந்ததி வாழும்படி வைத்தார்அவர் காந்தி

----------------------------------------------------------------------
அச்சங்கிலி : அச்சம் + கிலி, அடிமைச் சங்கிலி 

Friday, December 11, 2009

பாரதி துதி

அன்னை உண்டெனில் பாரதி! இக்கவிதைக்குத்
தந்தை உண்டெனில் - பாரதி!
உன்னைப் புகழ்ந்திட பாரதி! ஓராயிரம்
ஏட்டிலும் இயலுமோ பாரதி?
விண்ணின் மதிதனைப் பாடிடப் புலவர்
கோடிபல கோடியாய்க் கூடிடத்
தண்மதி அழகினிற் குன்றிற்றோ? தேயாமதி
நின்போல் புகழ் கூடிற்றோ?

எல்லோரும் ஒன்றென்று உரைத்திட்டாய் அதைச்
சொல்லி எல்லோரினும்நீ உயர்ந்திட்டாய்!
மெல்லத் தமிழினிச் சாகுமென்றாய் , தமிழ்
கொல்லும் எமனைநீ ஏகுமென்றாய்!
வல்லஉன் விழியால் பார்த்திட்டாய் கதிர்
பல்யுகம் வாழஒளி சேர்த்திட்டாய்!
மெல்ல உன்மீசை முறுக்கிட்டாய் கோடி
பல்லாயிர வர்க்காண்மை பெருக்கிட்டாய்

நற்றமிழாலே உந்தன் பாடலாயிற்று இன்று
நற்றமிழே உன்னைப் பாடலாயிற்று
கற்றபாட்டில் உணர்வு ஊற்றாயிற்று தமிழர்
உயிரிலே உறுதியாயது ஊரலாயிற்று
பெற்றதகுதி மிகுதியேது? நான்பாரதி பற்றே
அதிமிகுந்து மிகுத்துஓதி பாரதிமேதை
போற்றித் துதித்துச் சிந்தித்துப் புத்தியிற்
தித்தித்து உதித்ததே யிந்தத்துதி!