Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Tuesday, March 9, 2021

ஆதா கேஜீ தீஜிய

கண்ணனும் கண்மணியும் உறவினர் வீட்டுக்கு ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தனர். 

புதிய இடம் என்பதால் google maps பார்த்து ஓட்டுனருக்கு வழி சொல்லிக்கொண்டு வந்தான் கண்ணன். 
ஓரிடத்தில் ஓட்டுனரிடம் "இடதுபக்கம் திரும்புங்கள்" என்றான். 
அவர்"லெப்டா சார்?" என்று தயங்கவே "ஆமாம்" என்றான். 
"லெப்ட் ரைட்டுனே சொல்லிப் பழகிடவே சட்டுனு இடது வலது குழப்பமாகிடுச்சி சார்" என்றார். 

கண்மணி சிரித்தாள். ஓட்டுனருக்குக் கேட்கவேண்டாம் என்று சன்னமான குரலில் கண்ணனிடம் 
"ஒரு ஜோக் வீடியோ ஞாபகம் வந்திடுச்சு" 
"எந்த வீடியோ?" 
"அசட்டுப் பெண் ஒருத்தி கணவனுடன் வண்டியில் போவாளே... அது..."
"தெரியல..." 
" வெயிலா இருக்கு என் glass கொண்டுவா என்று சொன்னதுக்கு டம்ளர் கொண்டு வருவாளே..." 
"ஹூஹூம் பார்க்கல..." 
"வண்டியில் திரும்பும்போது 'கையைப்போடு'ன்னு சொல்லுவான். அவ அவன் தோள் மேல கையைப் போடுவாள். பின்னாடி வரும் வண்டி இடித்துவிடும்..."
"ம்...." 
"அது போல நீங்க வலதுன்னு சொல்லி டிரைவர் லெப்ட்ல திரும்பப்போறாரு.. எவனாவது பின்னாடி வந்து இடிக்கப்போறான்.." 
சிரித்தாள்.. 
"உனக்கு சிரிப்பு வருது...?" கண்ணனுக்குக் கோபம் வந்தது. 
"கண்மணி நான் ஒண்ணும் செந்தமிழில் பேசணும்னு சொல்லல. இழந்துவிட்ட எளிய சொற்களை கொஞ்சம் கொஞ்சமாக மீட்க நினைப்பதில் என்ன தவறு?" 
 
அந்த நேரம் வழியில் ஒரு பிரபல இனிப்பு கடை வரவே ஓட்டுனரிடம் "நிறுத்துங்க.." என்ற கண்ணன் கண்மணியிடம் "குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கிக்கொண்டு போகலாம்" என்றான். 

ஓட்டுநர் "இதோ இங்கே லெப்டில்... ம்.. இடது பக்கம் வண்டியை நிறுத்தி வைக்கிறேன்.. நீங்க பொறுமையா வாங்கிட்டு வாங்க.."எனவே இருவரும் புன்னகைத்தனர். 

 கடையில் ஒரு இனிப்பைக் காட்டி "இதில் ஒரு அரை கிலோ கொடுங்கள்" என்று கேட்டான் கண்ணன். கடை ஊழியரோ புதிதாக வந்தஒரு வடவிந்தியர் போலிருந்தது. குழப்பமாகப் பார்க்கவே கண்மணி அனிச்சையாக "ஆதா கேஜீ தீஜியே..." என்றாள். 

ஐயையோ மாட்டிக்கொண்டோமே.... "நம் ஊரில் நாம் இனிப்பு வாங்க இந்தியில் பேசவேண்டுமா? தமிழனெல்லாம் தண்ணியடிச்சிட்டு சோம்பேறியா இருந்தா இந்த அற்ப வேலைகளுக்குக் கூட நாம் வெளியூரிலிருந்து ஆட்களை வரவழைக்க வேண்டியிருக்கிறது பார்" என்று மொழிப்பற்றும் சமூகவியலும் கலந்து ஒரு விரிவுரை ஆற்றப் போகிறானே என்று எண்ணியபடி கண்ணனைத் திரும்பிப் பார்த்தாள். 

அவன் புன்னகைத்தான் "கேஜீ தீஜியே... சந்தம் நல்லா இருக்கில்ல?"

Thursday, April 11, 2019

மதில்மேல் ஆவி - சிறுகதை


(உண்மைச் சம்பவத்தைத் தழுவியது)

ராதாகிருஷ்ணன் தீடீரென்று மாரடைப்பில் இறந்துபோவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. பிள்ளைகள் இருவருக்கும் கல்யாணம் செய்துவிட்டு, பேரன் பேத்திகள் எடுத்து அறுபத்தைந்து வயதில்தான் இறந்துபோனார் என்றாலும், எந்த அறிகுறியும் இல்லாத அவரின் திடீர் மரணம்தான் உறவினர்களுக்குப் பெரும் வருத்தமாக இருந்தது. தவிர 65 வயது என்பது இந்தக் காலத்தில் சின்ன வயதுதானே.

ராதாகிருஷ்ணனின் தம்பி சுந்தரம்தான் இறுதிக்காரியங்களை முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார். பத்து வயது வித்தியாசம் இருந்தாலும் சுந்தரமும் ராதாவும் மிகவும் நெருக்கமாக வளர்ந்தவர்கள். இதைச் செய்; அதைச் செய்; என்று அண்ணனின் இரண்டு மகன்களான ரமேசையும், சங்கரையும் விரட்டிக்கொண்டிருந்தார் சுந்தரம்.

எல்லா உறவினர்களும் வந்துவிட்டார்கள் என்பது உறுதியானதும் சவத்தை எடுக்க ஆயத்தமானார்கள். "டேய் ரமேசு தேர் ஜோடனை இன்னுமா நடக்குது..? மணியாவுது பாரு" என்று ராதாகிருஷ்ணனின் பெரிய மகனைக் கேட்டவர், "இரு நானே பார்க்கிறேன்" என்று போனார்.

அங்கே அலங்காரம் செய்பவர்களைக் கடிந்துகொண்டார்... "ஏம்பா ஏதோ ஒப்புக்கு ஜோடனை பண்றீங்க.. சரங்களைச் சேரக் குத்துங்க.. இன்னா பூக்காரரே... ராதா அண்ணன் கிட்ட வாங்குன கடனைத்தான் தள்ளித் தள்ளிக் குடுப்பீங்க...இப்ப உங்க ஆளுங்க சரத்தை தள்ளித் தள்ளிக் குத்துறானுங்க.. எதுவும் கேக்கமாட்டீங்களா..?"
"டேய் பசங்களா கேக்குதா..?" என்ற பூக்காரர், சுந்தரம் நகர்ந்ததும் "ஆமாம்.. இவர் குடுக்குற காசுக்கு இதுக்கு மேல அடர்த்தியா யார் பூ ஜோடிப்பாங்க..?" என்று முணுமுணுத்தார்.

சவத்தைக் குளிப்பாட்டி சாங்கியம் செய்துகொண்டிருந்தவரையும் இது சரியில்லை, அது சரியில்லை என்று கடிந்து கொண்டார் சுந்தரம்.

அடுத்து, நெய்ப்பந்தம் பிடிக்க வந்த பேரன் பேத்திகளில் சங்கரின் மகன் இல்லாததைக் கண்டதும் வெகுண்டார் சுந்தரம். "டேய் சங்கரு எங்கடா என் சின்னப்பேரன்..? ஆத்தாக்காரி முத்தானையிலேயே முடிஞ்சி வச்சிருக்காளா...? அவளுக்குத் தெரியலானாலும் உனக்குத் தெரிய வேணாம்?... பேரப்பசங்க நெய்ப்பந்தம் காட்டுலன்னா எங்க அண்ணனுக்கு சொர்க்கத்துக்கு எப்படிடா வழி தெரியும்?"

சங்கர் ஓடிப்போய் மகனைத்தூக்கிக்கொண்டு வந்தான். குழத்தைக்கு டயப்பர் அணிவித்திருப்பதைக் கண்டு அதற்கும் வெகுண்டார் சுந்தரம் "வெள்ளைக்காரனைப் பார்த்து நம்ம ஆளுங்களும் இதைக் கட்டிவிட்டுடறாங்க .. ஆம்பளப் புள்ளைக்கு இந்த வயசுலியே வெம்பிப்போச்சுன்னா அப்புறம் கொழந்த பொறக்கலன்னு ஆஸ்பிடலுக்கு அலையவேண்டியதுதான்.. "

சங்கரின் மனைவி கோபமாகக் கணவனைத் திருகினாள் "உங்க சித்தப்பா ரொம்ப பேசுறாரு.. நல்லதுக்கில்ல..." சங்கர் "அவரைப் பத்தி புதுசாவா தெரிஞ்சுக்கிற..? ஒருத்தர் கிட்டவாவது அவருக்கு நல்ல பேரு இருக்கா பாரு.." என்று மனைவியைச் சமாதானப்படுத்தினான்.

சுந்தரம், ராதாகிருஷ்ணன் இருவருக்கும் மூத்தவரான அவர்களின் அக்கா தம்பியிடம் பரிவாக "இப்ப என்னாத்துக்கு இப்படிக் கூச்சல் போடுற..? பக்குவமா சொல்லலாமில்ல? கத்திக் கத்தி தொண்டை காஞ்சிப்போச்சி.. ஒரு வாய் தண்ணிகூட குடிக்காம இருக்குற.. இந்தா காபி குடி... கிட்டயா இருக்கு சுடுகாடு? நடந்து போய் வரணுமில்ல..?"

"எனுக்கு எதுவும் வேணாம்க்கா.. அண்ணனை அடக்கம் பண்ணிட்டுத்தான் எதுவும் சாப்பிடுவேன்.. " என்று அடுத்த காரியங்களில் இறங்கினார்.

ஒருவழியாய் சவ ஊர்வலம் புறப்பட்டு இடுகாட்டை அடைந்தது. ராதாகிருஷ்ணனுக்கு மூத்தவராக அக்கா இருந்ததால் அவர்கள் வழக்கப்படி அவரைப் புதைக்கவேண்டும். குடும்பத்தில் மூத்த மகனோ மகளோ மட்டுமே எரியூட்டப்படவேண்டும்.

சவக்குழி தோண்டப்பட்டிருந்தது. அதைத் தோண்டுபவரிடம் காலையிலேயே சுந்தரம் அடையாளம் சொல்லி அனுப்பியிருந்தார். "புங்க மரத்துக்கு மேற்கே அண்ணியைப் புதைச்ச இடம் தெரியுமில்ல. அதும் பக்கத்திலேயே குழியை வெட்டு..." ராதாகிருஷ்ணனின் மனைவி இளவயதிலேயே இறந்துவிட்டார். அவர் நோய்வாய்ப்பட்டிருந்தபோது சுந்தரத்திடம் "இனி நான் பொழைப்பேன்னு தோணல.. என்னை அடக்கம் பண்ணுற இடத்துக்குப் பக்கத்திலேயே.. உங்க அண்ணனைக் கொண்டு வந்து சேத்திருப்பா...." என்று சொன்னதை எண்ணிக் கண்ணீர் உகுத்தார்.

ஆனால் இப்போது வெட்டப்பட்ட குழி புங்கை மரத்தைவிட்டுத் தள்ளியிருந்தது. மரத்தைச்சுற்றி ஒரு மதில் சுவர் எழுப்பப்பட்டிருந்தது.. அண்ணியைப் புதைத்த இடம் மதிலுக்குள் இருந்தது. "அடப்பாவிங்களா ஆறு கொளத்த ஆக்கிரமிச்சீங்க.. மனுஷனுக்கு ஆறடி நிலம் சொந்தம்.. அதையும் அபகரிச்சிட்டீங்களேடா" என்று அரற்றினார். "இந்த மதிலை ஒடச்சி புதுசா ஒரு குழி வெட்டித்தான் அண்ணனை அடக்கம் பண்ணுவேன்..." என்று வீரம் காட்டினார். ஊர்ப்பெரியவர்கள் கூடி "ஏம்பா சுந்தரம், நடக்காத கதையைப் பேசாதே…ஆகுற வேலையைப் பாரு. இப்பவே பொழுது சாய்ஞ்சிருச்சு" என்று வெட்டப்பட்டிருந்த குழியிலேயே ராதாகிருஷ்ணனைப் புதைக்க ஏற்பாடு செய்தார்கள். மற்ற சாங்கியங்களைப் பார்த்துப் பார்த்து செய்த சுந்தரம் இப்போது எதிலும் ஈடுபடாது புலம்பிக்கொண்டே இருந்தார். அண்ணனின் முகத்தில் மண்ணை அள்ளிப் போட்டதும் கதறி அழுது மயங்கினார். தண்ணீர் தெளித்து எழுப்பினார்கள்.

மண்ணைக்கொட்டத் தொடங்கிய உடனே பெரும்பாலோனோர் வீடு திரும்பிவிட்டார்கள். இடுகாட்டில் வேலை செய்பவர்கள் ரமேசிடமும் சங்கரிடமும் " சித்தப்பாவுக்கு ஒடம்பு முடியல பாரு... அவரை அழைச்சிக்கிட்டுப் போங்கப்பா.. நாங்க குழியை மூடிடுறோம். காலையில் பால் வைக்க வாங்க" என்றனர். சற்று தெளிந்திருந்த சுந்தரம் "ரமேசு குழியை முழுசா மூடுற வரைக்கும் இருந்துட்டுப் போகணும்.. இவங்க சரியா மூடலன்னா அண்ணனை நாய் நரி வந்து கொதறிவிடும்.. ஏற்கனவே குழி ஆழம் கம்மியா இருந்தது.. ஊராளுங்க என் வாய அடைச்சிட்டாங்க..” என்றவர், “இதோ ஒண்ணுக்குப் போய்விட்டு வரேன்" என்று மதில் பக்கம் போனார்.

சற்று நேரத்தில் தடாலென்று சத்தம் கேட்டது. இப்படி ஒரு அசம்பாவிதத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. மதிலருகில் சுந்தரம் சரிந்து கிடந்தார். தலையிலிருந்து ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. அண்ணனும் தம்பியும் தலையில் அடித்துக்கொண்டு அழுதார்கள். "அப்பாவைத் தொலைச்சிட்டு இப்ப சித்தப்பாவையும் தொலைச்சுட்டோமே..." தேர் ஜோடித்து பிணத்தை ஏற்றிவந்த வண்டிக்காரருக்கு ரமேஷ் போன் செய்தான். "சீக்கிரமா வண்டியைத் திருப்பிக்கிட்டு வாங்க...."
"எதுக்குப்பா...?"
“வாங்க சொல்றேன்” என்று இணைப்பைத் துண்டித்தான்.

சிறுநீர் கழிக்கச் சென்ற சுந்தரம் மதிலருகில் சென்றதும் ஓவென்று அழுதார். "அண்ணி உங்களுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாத்த முடியலையே... பக்கத்துலதான் அடக்கம் செய்யமுடியல... உங்க ரெண்டு பேர் நடுவில் இருக்கும் சுவரை உடைக்காம விடமாட்டேன்" என்று படார் படார் என்று தலையால் முட்டினார். அப்படியே கீழே விழுந்தவர் தான். ரமேசும் சங்கரும் ஓடிவருவதற்குள் உயிர் பிரிந்துவிட்டது. தலையில் பட்ட அடியினாலா, சாப்பிடாமல் இருந்ததாலா என்று தெரியவில்லை. ரமேஷ் பார்த்த போது மூச்சும் இல்லை நாடியும் இல்லை. அண்ணனுக்கும் அண்ணிக்கும் தடையாய் இருந்த மதில்மேல் அவர் ஆவி நின்று விட்டது. ஆவி உடைத்து உடையுமா மனிதன் கட்டிய மதில்?

Saturday, October 7, 2017

சபாபதி சார்!


அமரர் டி வி ஆர் நினைவு சிறுகதைப் போட்டி2017-ல் இரண்டாம் பரிசு வென்ற எனது சிறுகதை - இன்றைய
(08 10 2017) தினமலர் வாரமலரில் வெளியாகியுள்ளது.
http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=39466&ncat=2

--------------------------------------------------------------
ரிலிருந்து மாமனாரும், மாமியாரும் வந்தாலே, கண்மணிக்கு மனதில் பதற்றம் தொற்றிக் கொள்ளும். காரணம், பிரச்னை அவளுக்கும், அவர்களுக்கும் அல்ல; அவள் கணவன் கண்ணனுக்கும், மாமனார் சபாபதிக்கும் தான். அப்பாவும், பிள்ளையும் ஏதாவது வாக்குவாதம் செய்வதும், மாமியாரும், மருமகளும் அவர்களைச் சமாதானப்படுத்துவதும், அவர்கள் இங்கு வரும் போதெல்லாம் நடப்பது, வாடிக்கை.
வழக்கமான, மருத்துவ சோதனைக்காக, ஊரிலிருந்து அவர்கள் வந்து இறங்கியதுமே, ஒரு வாக்குவாதம் ஆரம்பித்துவிட்டது; அது முடிந்து, மருத்துவமனைக்குச் சென்று வந்த பின், இப்போது, மாலையில் தான், ஒருவாறு வீட்டில் அமைதியான சூழல் நிலவுகிறது.

ந்த நேரம் பார்த்து, வீட்டுக்கு வந்த பழம் விற்பவரை, உட்கார வைத்து பேசிக் கொண்டிருந்தார், மாமனார்...
''உன் பெயர் என்னப்பா?''
''ஏழுமலை சார்...''
''ஊர்...''
''திருப்பத்தூர் பக்கம்...'' என்று ஒரு கிராமத்தின் பெயரைச் சொன்னார்.
''அட நம்ம ஊர் பக்கம் தான்... நான், உங்க பக்கத்து ஊர்ல தான் ஹையர் செகண்டரி ஸ்கூல்ல, கணக்கு வாத்தியாரா இருந்தேன்; சபாபதி வாத்தியார்ன்னா எல்லாருக்கும் நல்லா தெரியும்...'' என்றார்.
அவர்கள் பேசுவதை பார்த்து, கடுப்பானான், கண்ணன். மீண்டும் ஏதாவது பிரச்னை வெடிக்குமோ என்று பயந்த கண்மணி, கண்ணனை, உள் அறைக்கு அழைத்து, ''அவங்க ஏதாவது பேசிக்கிறாங்க; நீங்க இங்கேயே இருங்க...'' என்றாள்.
''பழம் விற்பவர உட்கார வைச்சு, குசலம் விசாரிக்கணுமா...''
''பெரியவங்க அப்படித்தான் இருப்பாங்க... இத்தனை நாள் பழம் வாங்குறோமே... என்னைக்காவது அவரோட பேரை கேட்கணும்ன்னு நமக்கு தோணிச்சா...'' என்றதும், ''அது சரி...'' என்று பம்மினான்.
''கண்மணி... எனக்கும், ஏழுமலைக்கும் டீ கொண்டாம்மா...'' என்று குரல் கொடுத்த சபாபதி, ஏழுமலையிடம், ''என் மருமக போடும் டீ அருமையா இருக்கும்...'' என்றார்.
''சரி மாமா...'' என்று எழுந்தவளின் பின், கண்ணனும் அடுக்களைக்குள் நுழைந்தான். வழியில், அப்பாவிடம், ''ஏம்பா, அம்மா கோவிலுக்குப் போகணும்ன்னு சொன்னாங்களே... கிளம்பலயா...'' என்றான், அப்போதாவது பேச்சை முடித்து, பழம் விற்பவரை வெளியே அனுப்பட்டுமே என்று!
''அம்மா அசதியா தூங்குறாளேடா... அவ எழுந்துக்கட்டும்,'' என்றவர், ஏழுமலையிடம் பேச்சை தொடர்ந்தார்.
டீ போடுகையில், காதில் விழுந்த மாமனாரின் பேச்சு, மீண்டும் கண்மணிக்கு பயத்தைக் கிளப்பியது.
''பையனோட காலேஜ் பீஸ் கட்டுறதுக்கு ஏம்பா தண்டல்காரன் கிட்ட கடன் வாங்குற.. வட்டியக் கணக்குப் போட்டுப் பார்த்தால், மாதம் ஐயாயிரம் ரூபாய் வருமே... நீ, சம்பாதிக்கிறதுல பாதிக்கு மேல் வட்டி கட்டினா, குடும்பத்தை எப்படி சமாளிப்பே, அசலை எப்படி கட்டுவே...'' என்றார்.
''என்ன செய்றது சார்... அவசரத்துக்குப் பணம் வேணும்ன்னா, நாம இருக்கிற இடத்துக்கு வந்தே குடுத்துட்டுப் போறாங்க; தினம் அவங்களே வந்து தண்டல் வசூல் செய்துக்குறாங்க. அதனால, வட்டி கணக்கெல்லாம் பாக்குறதில்ல...'' என்றார்.
''கணக்கு பாத்து தான் கடன் வாங்கணும்; பேங்குல குறைவான வட்டிக்கு கடன் தராங்க; பேங்குல வாங்கலாமில்ல...''
''நான், பழம் வாங்க போறதா, வியாபாரத்துக்கு போறதா... இல்ல பேங்குல போயி நிக்கிறதா... பேங்குக்காரன், ஒத்த ரூபாய் கொடுக்கணும்ன்னா கூட, அதுக்கு, சொத்து மதிப்பு, அத்தாட்சின்னு கேட்பான். ஆனா, எந்த அத்தாட்சியும் இல்லாம, நம்ம இடத்துக்கு வந்து கடன் தரான், தண்டல்காரன். இது தான் சார் நமக்கு வசதி... இப்படியே பழகிப் போச்சு...'' என்றான்.
''யாராவது தெரிஞ்சவங்ககிட்ட கம்மி வட்டிக்கு வாங்கலாம் இல்லன்னா வட்டியில்லாம கடன் தர்ற நல்லவங்க இருப்பாங்க; அவங்ககிட்ட கேட்கலாமே...'' என்று இழுத்தார்.
அடுத்து, அவர் ஏதாவது பேசுவதற்குள், டீயைக் கொடுத்து, பேச்சை மாற்றினாள், கண்மணி.
டீயைக் குடித்து, கிளம்பினார், பழம் விற்பவர். தூங்கி எழுந்து, தயாராக வந்த மனைவியுடன் கோவிலுக்கு கிளம்பினார், சபாபதி!

நிம்மதி பெருமூச்சு விட்ட கண்ணனை பார்த்து, ''என்ன பெருமூச்சு விடுறீங்க... பழம் விற்பவருக்கு மாமா பணம் கொடுத்துடுவாருன்னு பயந்துட்டீங்களா...'' என்று சீண்டினாள், கண்மணி.
''கொடுப்பாரு...கொடுப்பாரு...'' என்று உறுமினான், கண்ணன். காலையில் நடந்த வாக்குவாதம் அவளுக்கு நினைவுக்கு வந்தது.

காரிலிருந்து இறங்கிய மாமியாரைப் பார்த்ததும், 'என்னங்க அத்தை... 'கவரிங்' வளையல போட்டிருக்கிறீங்க...' என்று கேட்டாள், கண்மணி.
'பேசாம இரு' என்பது போல், கண் ஜாடை காண்பித்த பின்தான், கேள்வியின் விபரீதம் புரிந்தது கண்மணிக்கு!
எதிர்பார்த்தது போலவே விசாரணையை ஆரம்பித்தான் கண்ணன்...
'ஏம்மா... உன் வளையல் என்ன ஆச்சு?'
'அது வந்துடா...' என்பதற்குள், 'டேய்... எல்லாத்துக்கும் உனக்கு விளக்கம் வேணுமா... எந்த வளையல் போட்டா என்னடா...' என்று எகிறினார், சபாபதி.
'சும்மா குதிக்காதீங்கப்பா... அம்மா வளையல் எங்க...' என்று பதிலுக்கு கோபமானான், கண்ணன்.
'பேங்கில அடகு வச்சுருக்கு...' என்றார்.
'அதுக்கு என்ன அவசியம் வந்தது... ஏன் என்கிட்ட சொல்லல...'
'எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லணுமா... போய் வேலையப் பாரு...'
இருவரையும் சமாதானப்படுத்த முயற்சித்த அம்மா, 'இல்லடா கண்ணா... நான் தான் குடுத்தேன்; பரசுராம மாமாவுக்கு வீட்டிற்கு தளம் போட அவசரமா பணம் தேவைப்பட்டது. அதிக வட்டிக்கு ஏன் வெளியில கடன் வாங்கணும்... பேங்குல வச்சு குடுக்கலாம்ன்னு கொடுத்தோம்...' என்றாள்.
'கொடுத்தோம்ன்னு சொல்லாத... சார் கொடுத்தார்ன்னு சொல்லு. மாமாவாம் மாமா... பால்காரர் எனக்கு மாமாவா... அக்கம் பக்கத்துல இருக்குறவங்கள எல்லாம் உறவு சொல்லி அழைச்சா, இப்படித்தான் பணம் கேட்பாங்க... உதவி செய்ய வேண்டியது தான் அதுக்குன்னு ஒரு அளவு இல்ல... யாரோ வீடு கட்ட, எங்க அம்மா, 'கவரிங்' வளையல் போடணுமா...'
'டேய்... அது என்ன நீ செஞ்சு போட்ட வளையலா... நான் சம்பாதிச்சு, என் பொண்டாட்டிக்கு வாங்கிப் போட்டது...' என்ற சபாபதி, மனைவியை பார்த்து, 'அப்பவே சொன்னேன்... ஊர்ல இருக்குற டாக்டரை பாத்தா போதும்ன்னு கேட்டியா... உசத்தியான டாக்டரை பார்த்து, எதுக்கு உயிரை புடிச்சு வைச்சுக்கிட்டு இருக்கணும்...' என்றார், கோபத்துடன்!
'டென்ஷன் ஆகாதீங்க... பிரஷர் ஜாஸ்தியா ஆகிடும்...' என்று, அவரைச் சமாதானப் படுத்த முயற்சித்தாள், அம்மா.
'உண்மைய சொன்னா கோபம் பொத்துக்கிட்டு வருதோ... நீங்க சம்பாதிச்ச நகையா இருந்தா கேள்வி கேட்க எனக்கு உரிமை இல்லயா... போறவன் வர்றவனுக்கு எல்லாம் எங்க அம்மா நகையில உரிமை இருக்கு; நான் கேட்கக்கூடாதா...' என்ற கண்ணனை, இழுத்துச் சென்றாள் கண்மணி.
சாதாரணமாய் தான் கேட்ட கேள்வி, இப்படி சண்டையை உருவாக்கி விட்டதே என்று வருத்தப்பட்டவள், 'என்னங்க... டாக்டர், 'செக் - அப்'க்கு நேரம் ஆகுது; நீங்க, ஏதோ ஆபீஸ் வேலை இருக்குன்னு சொன்னீங்களே... அதை, செய்யுங்க... நான், அத்தை, மாமாவை, 'செக் - அப்'க்கு கூட்டிப் போறேன்...' என்று கிளம்பிச் சென்றாள்.

கோவிலிலிருந்து திரும்பிய தன் பெற்றோரிடம், இப்போது, சமாதானமாக பேசினான், கண்ணன்.
''அப்பா... நான் பணம் தர்றேன்; முதல்ல அம்மாவோட வளையல மீட்டுப் போடுங்க,'' என்றான்.
சபாபதி, ''சரிடா...'' என்று சொல்லவும், ''எதுக்குடா, வேணாம்...'' என்று மகனிடம் சொல்லியபடியே, மருமகளை பார்த்தார், மாமியார்.
''பரவாயில்ல அத்தை...'' என்றாள் கண்மணி.
இப்படி, முதலில் முட்டிக் கொள்வதும், பின் ஒட்டிக் கொள்வதுமாக, ஒரு வாரத்திற்கு பின், ஊருக்கு திரும்பினர், சபாபதி தம்பதியர்.

லுவலகத்திலிருந்து வீடு திரும்பிய கண்ணன், ஷூவைக் கழற்றும் போது, ''சார்...'' என்றபடி உள்ளே நுழைந்தார், ஏழுமலை.
''வாங்க ஏழுமலை...'' என்று, பழம் விற்பவரை, கண்ணன் பேர் சொல்லி அழைத்தது, அவர்கள் இருவருக்குமே வித்தியாசமாக இருந்தது.
''இந்தாங்க சார் பேயன் பழம்; நீங்க ஆபீஸ் விட்டு வர்றத பாத்தேன்; அதுதான் உடனே கொடுத்துடலாம்... இல்லன்னா வேறு யாராவது கேட்டு வந்துருவாங்கன்னு கொண்டு வந்தேன்...'' என்றார்.
''நேத்து தானே வாழைப் பழம் கொடுத்தீங்க...'' என்றபடி ஹாலுக்கு வந்தாள், கண்மணி.
''இல்லீங்கம்மா... ரெண்டு நாளைக்கு முன், சாரோட அப்பா, பேயன் பழம் கிடைச்சா, உங்களுக்கு கொண்டு வந்து கொடுக்கச் சொன்னார். வெயிலுக்கு நல்லது; அம்மை வந்தவங்க கூட உடல் குளிர்ச்சிக்கு சாப்பிடுவாங்க; இப்பத் தான் கிடைச்சது... அதான் கொண்டு வந்தேன்,'' என்றார்.
''எவ்வளவு ரூபா...'' என்று கேட்டான், கண்ணன்.
''பணம் வேணாம் சார்... எப்பவும் என்கிட்டத்தான் பழம் வாங்குறீங்க... இது, உங்கப்பா சொன்ன மரியாதைக்காக,'' என்று சொல்லி, திருப்பியவரை, கூப்பிட்டு, ''அன்னைக்கு பையனோட காலேஜ் பீஸ் கட்டணும்ன்னு அப்பாகிட்ட பேசிட்டு இருந்தீங்களே... கட்டிட்டிங்களா...'' என்று கேட்டான்.
''இன்னும் இல்ல சார்... தண்டல்ல சொல்லியிருக்கேன்...''
ஒரு வினாடி யோசித்தவன், ''தண்டல் வேணாம்; வட்டியில்லாம நான் தர்றேன். அப்பப்போ உங்களால எவ்ளோ முடியுமோ, கொடுத்து அடைச்சிடுங்க,'' என்றான்.
''ரொம்ப நன்றி சார்... பையன வந்து உங்கள பாக்கச் சொல்றேன்,'' என்று கிளம்பினார், ஏழுமலை.
தன் செய்கையை தானே நம்ப முடியாமல், கண்மணியை எப்படி எதிர்கொள்வது என்று புரியாமல், கழற்றி வைத்த ஷூவையே பார்த்தான், கண்ணன்.
லேசாகத் தொண்டையை செருமினாள், கண்மணி. அவன் நிமிர்ந்து பார்க்க, அவனை குறுப்பாக பார்த்து சிரித்தாள், கண்மணி.

Wednesday, January 13, 2016

தொழில் தர்மம் - சிறுகதை

'பரமசிவம் அரிசிக்கடை'. அப்பாவின் பெயரில் கடை வைத்ததில் ரொம்பவே மகிழ்ச்சி முருகனுக்கு. அதுவும் சேட்டுக் கடைக்குப் பக்கத்தில் தனது கடை அமைந்ததில் மிகவும் பெருமிதம்.

இந்த சேட்டிடம்தான் அப்பா எவ்வளவு கடன் வாங்கியிருப்பார்? அசலைவிட பல மடங்கு அதிகமாய் எவ்வளவு வட்டி கட்டியிருப்பார்? பணம்போனது ஒரு பக்கம் இருக்க, அம்மாவின் தாமரைச் செயின் கடனைத் திருப்பமுடியாமல் மூழ்கிவிட்டதை ஒருபோதும் மறக்கமுடியாது அவனால். "எங்க அம்மாவுக்கு அவங்க அம்மா போட்ட செயின்..." என்று அம்மா அடிக்கடி புலம்புவதும், "ஏய்.. உங்க அம்மாவும் போயிட்டாங்க.. அவங்க அம்மாவும் போயிட்டாங்க.. செயின் போனா என்ன? போடீ.. " என்று அப்பா அடக்குவதும் முருகன் வீட்டில் வாடிக்கை.

பரமசிவமும் சேட்டிடம் கேட்டுப்பார்த்தார் "பணம் வேணா கூடப்போட்டுத் தாரேன்.. அந்த நகை கெடைக்குமா பாருங்க சேட்டு..." "பரமசிவம் உனக்குத் தெரியாதா எங்க தொழில்.?. மூழ்கின பொருள உடனே உருக்க அனுப்பிச்சிடுவோம்.. இருந்தா தரமாட்டானா?"

தாத்தா காலத்துலயும்தான் பயிர் வெச்சாங்க. வீட்டுலேயே விதை இருக்கும். மாட்டு ஏர். சாணி உரம். போதுமான மகசூல். நிம்மதியா வாழ்ந்தாங்க. இந்தக்காலத்துல பசுமைப் புரட்சி அதிக மகசூல் என்று சொன்னவங்க உரம் மருந்துன்னு அதிக செலவாகும்னு சொல்லலையே. சேட்டுகிட்ட கடன்வாங்கி வியாபாரிகிட்ட பணம்கொடுத்து விவசாயிக்கு மிஞ்சுவதுதான் என்ன?

முருகன் பெரியவனாகி அப்பாவுக்குத் தோள்கொடுத்து உழைத்தபிறகே குடும்பம் மீண்டும் தலைதூக்கியது. விவசாயத்தோடு வண்டி லோடு அடிப்பது அரிசி தயார்பண்ணி கடையில் போடுவது என்று கொஞ்சம் கொஞ்சமாய் கடன்களை அடைத்தான்.

ஒரு சமயம் அப்பாவுடன் கடைவீதியில் முருகன் சென்றபோது "என்னாப்பா பரமசிவம் கடைபக்கமே காண முடியல" என்று சேட்டு கேட்டபோதுதான் அவர் கடைபக்கத்திலேயே சொந்தமாய் கடைபோட வேண்டும் என்ற எண்ணம் முருகனுக்கு உதித்தது. உங்க கடைப்பக்கம் கடன்வாங்க வந்த காலம் போச்சு சேட்டு. இப்போ நெனச்சா சொந்தமா கடையே போடமுடியும் என்று நினைத்தவன் அதை நிறைவேற்றியும் விட்டான். அதுமட்டும் அல்ல. சேட்டு வீட்டுக்கு அவன்தான் இப்போது அரிசி சப்ளை செய்கிறான்.

கல்லாவில் அமர்ந்தபடி பழைய எண்ணங்களில் முருகன் மூழ்கியிருந்தபோது, தொப்பையைத் தூக்கிக்கொண்டு சேட்டு அவன் கடைக்குள் நுழைந்தார். வழக்கமாய் வேலைசெய்யும் பையனிடம் அரிசிக்குப் பணம் கொடுத்து அனுப்புபவர் இப்போது அவரே வந்திருந்தார்.

"என்னப்பா முருகா வழக்கமா ஒரு மூட்டை அரிசிக்கு சீட்டு அனுப்புவ. இப்ப ரெண்டு மூட்டைன்னு எழுதியிருக்க?"

"போன வாரம் உங்க வீட்ல அஞ்சி கிலோ அரிசி கேட்டிருந்தாங்க அனுப்பிவிட்டேன். அஞ்சி நாள் அதிகமாச்சுனா ஒரு மாசத்து வட்டி கேட்பீங்க இல்ல? அதேபோல அஞ்சி கிலோவுக்கு ஒரு மூட்டைன்னு எழுதினேன்"

"முருகா... அது எங்க தொழில் தர்மம். நீ அரிசி எடைக்கு ஏத்த காசு வாங்கிக்க.."

"ஹ ஹ ஹ.. இதச் சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தேன் சேட்டு. வெளையாட்டுக்குத்தான் அப்படி எழுதினேன். ஒரு மூட்டைக்கு காசு கொடுங்க! "

"அப்போ அந்த அஞ்சி கிலோ?"

"சேட்டு, நான் வியாபாரம் பண்ணாலும் விவசாயிதான். இதான் எங்க தர்மம். அஞ்சி கிலோவ தள்ளி விடுங்க"

Wednesday, November 26, 2014

நல்வரவு - சிறுகதை


"மாதவி போலாமா?" கார் சாவியைச் சுழற்றியபடி கண்ணன் கேட்டான்.

கணினியை அணைத்துவிட்டு மாதவி கிளம்பினாள். இன்று மாலை கண்ணன் வீட்டில் உணவருந்த அழைத்திருந்தான். வழக்கமான ஹாஸ்டல் உணவுக்கு ஒரு நாள் விடுதலை என்றால் எந்த ஒரு தனி-மனுஷி தான் வேண்டாம் என்பாள்? "தனி ஒரு மனுஷிக்கு உணவில்லை எனில் இஜ்ஜகத்தினை.............." சரி விட்டுவிடுவோம்..ஓவர் பில்ட் அப் வேண்டாம்.

கண்ணன் வீட்டைத் திறக்கவே மாதவி கேட்டாள் "கண்மணி இன்னும் அவங்க அலுவலகத்திலிருந்து வரவில்லையா?"

"இல்லை மாதவி. அவங்க அத்தைக்கு உடம்பு சரியில்லை என்று போன் வந்ததாம். அவள் நேரே அங்கே போய்விட்டாள். நீங்க மாதவி டின்னரை கேன்சல் பண்ணாதீங்க. மீன் குழம்பு பண்ணி வச்சிருக்கேன், இட்லி மட்டும் ஊத்திவச்சிடுங்கன்னு சொன்னா... உன்கிட்ட சொன்னா நீ வராம இருந்திடப்போறன்னு சொல்லல..."

"அடடா..." என்று உள்ளே வந்தவளைச் சுவரில் மாட்டியிருந்த 'நல்வரவு' என்ற எழுத்துகள் வரவேற்றன. "இந்த வரவேற்பு எம்ப்ராய்டரி ரொம்ப அழகா இருக்கு கண்ணன்" என்றாள். "இது கண்மணியே போட்டது. அவர்களின் பக்கத்து வீட்டு அத்தையிடம் கற்றுக்கொண்டாளாம்" என்றான் கண்ணன்.

“Welcome என்று ஆங்கிலத்தில் சொல்வதை 'நல்வரவு' என்று தமிழில் மாற்றும் போது பொருள் எவ்வளவு அழகாக மாறிவிடுகிறது? யாரேனும் தீய மனிதர்கள், ஏன் துஷ்ட தேவதைகள் வீட்டுக்குள் வந்தாலும் "நல்வரவு" என்பதைப் பார்த்துவிட்டு நல்லது மட்டும்தானே செய்யத்தோன்றும்?” என்று தமிழின் பெருமையைத் தனக்குள்ளாகவே சிலாகித்துக் கொண்டாள் மாதவி.

சோபாவில் அமர்ந்து கண்ணன்-கண்மணி திருமண ஆல்பத்தில் தனது முகம் எங்கெங்கு தெரிகிறது என்று தேடுகையில் கண்ணன் கொண்டு வந்த காபியைச் சுவைத்தாள். "காபி பிரமாதமாக இருக்கிறது.." என்றவளிடம் "நான் வெறுமனே பாலை மட்டும்தானே கலக்கினேன்.. கண்மணி போட்டுவைத்த பில்டர் டிகாக்ஷனின் சுவை இது" என்று சொல்ல நினைத்தவன் வெறுமனே "தேங்க் யூ" என்றான்.

"சரி நீ ஆல்பம் பார்த்திட்டிரு நான் உணவு தயார் பண்ணிவிடுகிறேன்..." என்று திரும்பிய கண்ணனை மாதவி நிறுத்தினாள். "கண்ணன், நான் இன்னொரு நாள் சாப்பிட வருகிறேன். நீங்க கண்மணிக்கு போன் பண்ணி அவங்க அத்தைக்கு எப்படி இருக்குன்னு பாருங்க.. நான் இப்பவே கிளம்புனா ஆட்டோல பத்து நிமிஷத்துல PVR போயிடலாம்"

“PVR ஆ?"
“ஆமாம். நீங்க சமையலறையில் இருக்கும்போது பிரண்ட் போன் பண்ணினா.. டிக்கட் எடுக்கச் சொல்லிட்டேன்"

“என்ன படம்?”
“நல்வரவு”

Saturday, March 29, 2014

பலகுரல் கண்ணன்

மகனின் பள்ளியில் இன்று பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு. "சீக்கிரம் கிளம்புங்கள்" என்று கண்ணனை விரட்டினாள் கண்மணி. முதல் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கெல்லாம் இது தேவையா என்ற ஒரு அலட்சிய எண்ணம் கண்ணனுக்கு. கண்மணிக்கோ தன் கல்லூரி பட்டமளிப்பு விழாவுக்குச் செல்வது போன்ற ஒரு பதட்டம்.

வழக்கப்படி தன் பலகுரல் பேசும் திறமையினால் கண்மணியை இலகுவாக்க முயற்சித்தான் கண்ணன். நடிகர் சூர்யாவின் குரலில் "அட.. ஏன் கண்மணி இப்படி பதட்டப்படுற..." என்றவனிடம்.."குரல் எல்லாம் பரவாயில்லை.. ஆனால் கண்ணாடி பார்த்தால் இது மாதிரி உங்களுக்குப் பேசத் தோன்றாது.. மனசாட்சி உறுத்துமில்ல.." என்று கிண்டல் செய்தாள் கண்மணி.

அது சரி. ‘/மனைவியைச் சமாதானப் படுத்த முயற்சிக்கும் எந்தக் கணவனுக்கும் சமாதானம் உண்டானதில்லை/’ என்ற உலக நீதி தனக்கு மட்டும் பொய்த்துவிடுமா என்ன? - என்று பெருமூச்சு விட்டபடி மகிழ்வுந்தைக் கிளப்பினான்.

"இல்லைங்க.. இந்த தேன்மொழி ஆசிரியை இருக்காங்களே.. அவங்க கொஞ்சம் மோசம்.. போன சந்திப்பில் இலக்கியா அம்மா கிட்ட என்ன சொன்னாங்க தெரியுமா..?" "இலக்கியா அம்மா .. நீங்க தொலைக்காட்சியில் நெடுந்தொடர் தவறாமா பாக்குற அளவுக்கு உங்க மகளோட வீட்டுக் குறிப்பைப் பாக்குறதில்லை.." அப்படின்னு சொன்னாங்களாம். இதெல்லாம் அதிகப் பிரசங்கித்தனம் இல்லையா...?"

'இருக்குறதத்தானச் சொல்றாங்க' என்று லியோனி குரலில் எண்ணினாலும் "அவங்களச் சொன்னாங்க என்பதற்காக நீ பதட்டப்படாத கண்மணி... உன்னைப் பார்த்தா நெடுந்தொடர் பார்த்து வீணாய்ப் பொழுது போக்கும் வேடிக்கை மனிதி போலவா இருக்கு? ஒரு பெரிய அதிகாரி மாதிரி இல்ல இருக்க நீ...." என்று பனி பொழிந்தான்! 'அட உள்ளே ஒரு குரல்ல பேசிக்கிட்டு வெளியில ஒரு குரல்ல பேசுறோமே.. உண்மையிலேயே நாம ஒரு பல குரல் மன்னன்தான்' என்று தன்னைத்தானே பாராட்டிக் கொண்டான்.

எதிர்பார்த்ததுபோல் எந்தச் சிக்கலுமின்றி ஆசிரியை சந்திப்பு நன்றாகவே அமைந்தது. புலிக்குப் பிறந்த புலிக்குட்டி நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தான். கையொப்பம் போட்டுவிட்டு எழும் தருணத்தில் கண்மணி கேட்டாள் "மற்றபடி…. பையன் ஒழுங்காகத் தானே இருக்கிறான்.. மற்ற குழந்தைகளுடன் சண்டை போடுவதெல்லாம் கிடையாதல்லவா..?" "சண்டையெல்லாம் போடுவதில்லை….. ஆனால்…… பேச்சுதான்…. கொஞ்சம்….. அதிகம்...." என்று இழுத்தார் தேன்மொழி. ஆசிரியை தயங்குவதைப் பார்த்த கண்மணி "குழந்தையைக் கூட்டிட்டுக் கொஞ்சம் போங்க. நான் பேசிட்டு வரேன்.." எனவும் மெதுவாய் வெளியேறினான் கண்ணன்.

குழந்தைகளின் கூச்சலுக்கு நடுவிலும் மனைவியிடம் பேசும் தேன்மொழியின் குரல் தெளிவாகக் கேட்டது... "உங்கப் பையன் என்கிட்டே,,,நீங்க அழகா இருக்கீங்க…. நான் பெருசா ஆனதும் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேக்குறாங்க..." " அடப்பாவி… அப்படியா சொன்னான்..? தொலைகாட்சி பார்த்து இப்படியெல்லாம் பேசுகிறான் போல.. நான் அவனைக் கண்டிக்கிறேன்" என்று எழுந்த கண்மணி முந்தியை இழுத்து விட்டபடி வெளியே வந்தாள்..

எதுவும் தெரியாதவன்போல்.. "என்ன சொன்னாங்க கண்மணி…?” என்ற கண்ணன் "இதோ இரு..வண்டியைத் திருப்பிட்டு வரேன்..போயிட்டே பேசலாம்….." என்றான். புலிக்குட்டியின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்ட பலகுரல் கண்ணனின் இன்னொரு குரல் மனதுக்குள் பேசியது "புலிக்குட்டி சொல்லிடிச்சு... புலியால சொல்ல முடியலையே.."

Friday, January 3, 2014

பொய்யாமொழி

கண்மணிக்குக் கோபம் கோபமாக வந்தது. தேன்மொழியின் பேச்சைக் கேட்டுப் பொய்யாமொழி ஐயாவை நேற்று சந்தித்தது எவ்வளவு தவறு என்று தன்னைத் தானே திட்டிக்கொண்டாள்.

கண்மணியும் தேன்மொழியும் ஒரு கணினி நிறுவனத்தில் ஒன்றாகப் பணிபுரிபவர்கள். கண்மணிக்குத் திருமணமாகிவிட்டது. கண்ணன் ஒரு வங்கியில் பணியாற்றுகிறான். கண்ணன் கண்மணி என்று பெயர் பொருத்தம் ஜோராக உள்ளதே தவிர உண்மையில் இவர்களின் பெயர் கீரி, பாம்பு என்று வைத்திருக்கலாம். இதற்குத்தான் சண்டை போடுவதென்று ஒரு வரைமுறையில்லாமல் எப்போதும் வாயும் வசவுமாகத் திரிபவர்கள் இவர்கள். திருமணம் ஆகி இரண்டு வருடம் ஆகியும் இன்னும் அடங்கவில்லை இவர்கள்.

தேன்மொழிக்கு அவள் ஜாதகத்தில் உள்ள ஏதோ ஒரு கட்டத்தில் சொட்டை இருக்கிறதென்று அவள் அப்பா அம்மா கஷ்டப்பட்டு வரன் தேடிக் கொண்டிருக்க, அவளோ திருமணம் பற்றிய எந்த கவலையும் இன்றித் தனிமையின் இனிமையையும் சுதந்திரத்தையும் குறையின்றி அனுபவித்து வருகிறாள். வார இறுதிகளில் அன்னை இல்லம் சென்று அங்கிருக்கும் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது, பொய்யாமொழி அய்யா நடத்தும் யோகா மற்றும் தியான வகுப்புகளுக்குச் செல்வது என்று மனதை அமைதியுடனும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருப்பாள் தேன்மொழி.

தெரியாதத்தனமாய் தேன்மொழியுடன் தியான வகுப்புக்கு நேற்று மாலை சென்றதுதான் கண்மணிக்கு இன்று மன உளைச்சல் ஏற்படக் காரணமாகிவிட்டது. அதுகூட தியான வகுப்பில் சேருவதற்காக அவள் செல்லவில்லை. வண்டியில் ஏறும்போது தேன்மொழிதான் ஓடி வந்து வழியில் இறக்கிவிட்டுவிட்டுச் செல்லுமாறு கூறினாள். இறக்கிவிட்டவளை, "உள்ளே தான் வாயேன் பொய்யாமொழி ஐயாவை நான் அறிமுகப்படுத்தி வைக்கிறேன். நீ கிளாஸ்ல எல்லாம் சேர வேணாம். ஐயா கிட்ட ரெண்டு நிமிஷம் பேசினாலே மனசு லேசாயிடும். தீராத பிரச்சினைக்கெல்லாம் தீர்வு கிடைக்கும்" என்றாள்.

"ஐயா, இவள் என் தோழி கண்மணி" என்று அறிமுகப் படுத்திவிட்டு வகுப்புக்குச் சென்றுவிட்டாள். கண்மணிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை, வயதானவராய் இருக்கிறார் காலில் விழலாமா என்று யோசித்தவள், எதோ ஒன்று தடுக்கவே வேண்டாம் என்று கைகூப்பி ஒரு வணக்கம் வைத்துவிட்டு அவர்முன் அமர்ந்தாள். மௌனத்தைக் கலைக்கும் வகையில் பொய்யாமொழி ஐயாதான் பேசினார்.. அதுவும் ஒரே ஒரு வாக்கியம்... இல்லை... அரை வாக்கியம். கண்மணிக்குப் பகீரென ஆகிவிட்டது. வயதானவர், எல்லோரும் மதிப்பவர் என்று நினைத்தால் இப்படியா பேசுவார் இவர்? என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. பொய்யாமொழி ஐயாவே அவளுக்கு வணக்கம் சொல்லிப் போய் வாருங்கள் என்பதுபோல் வாசலைக் காட்டி சைகை செய்தார். எழுந்தவள் தேன்மொழி எங்கு இருக்கிறாள் என்று கூடப் பார்க்காமல் சரசரவென வண்டியிலேறிச் சென்றுவிட்டாள்…

வீட்டுக்கு வந்தவள் கண்ணனிடம் எதுவும் பேசாமல் தூங்கிவிட்டாள். காலையில் எழுந்து வழக்கம்போல் அலுவலகம் கிளம்பினாள்.

அலுவலகப் பேருந்து சாலை மண்ணைக் கிளப்பிவிட்டு ஓரமாய் ஒதுங்கி நின்றது. எப்போதும் ஓட்டுனரைப் பார்த்து ஒரு சிறு புன்னகை செய்துவிட்டு உள்ளே ஏறுபவள் இன்று அவரைப் பார்க்காமல் நேராகச் சென்று இருக்கையில் அமர்ந்தாள். பொய்யாமொழி ஐயா சொன்னதின் உறுத்தலில் யாரைப் பார்த்துச் சிரிக்கும் நிலையிலும் கண்மணி இல்லை.

மாலையில் வேறு கசின் ரிசப்சன் இருக்கிறது. கண்ணனுடன் எந்த சண்டையும் போடாமல் இருக்க வேண்டும். நம்ம வீட்டு பங்க்ஷன் என்றால்தான் கண்ணனுக்கு மாப்பிள்ளை முறுக்கைக் காட்டத் தோன்றும். ரெண்டு வருஷம் ஆச்சு இன்னும் புது மாப்பிள்ளைன்னு நினைப்பு.

அலுவலகத்தில் பேருந்து நின்றதும் இறங்கினாள். வழக்கமாய் இவள் இறங்கும்போது திரும்பிப் பார்த்துப் புன்னகைக்கும் ஓட்டுனர் இன்று திரும்பியே பார்க்கவில்லை. இவள் ஏறும்போது சிரிக்கவில்லை என்ற கோபம் போலும். "போய்க்கோடா.." என்று எண்ணியபடி தனது இடத்துக்கு விரைந்தாள்.

"சொல்லாமலேயே போயிட்டயே கண்மணி. பொய்யாமொழி ஐயா என்ன சொன்னார்? அவரைச் சந்தித்ததில் மகிழ்ச்சிதானே..மனதில் ஒரு அமைதி பிறந்திருக்குமே.." என்ற தேன்மொழியிடம், "ஆமாம் அவரைப் பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி" என்று சொல்லிவிட்டு தனது வேலையைத் தொடர்ந்தாள் - தன் தனிப்பட்ட அனுபவத்தை வைத்து தோழியின் நம்பிக்கையையோ மகிழ்ச்சியையோ கெடுக்கவேண்டாம் என்ற எண்ணத்தில்.

11 ஓ கிளாக் மீட்டிங்கில் புகழேந்தி கூட கேட்டார். "என்ன தேன்மொழி உங்கள் வழக்கமான புன்னகையைக் காணோம்? ஏன் இப்படி இருக்கீங்க? கண்ணனோட ஏதாவது பிரச்சனையா?".. "அதெல்லாம் இல்ல சார்.. கொஞ்சம் தலைவலி... வேலையைச் சீக்கிரம் முடிக்கணும்னு டென்ஷன். சாயந்திரம் என் கசின் ரிசப்சன் இருக்கு" என்றாள்.

மதியம் ஒன்றாகச் சாப்பிடச் செல்லும் நக்கீரனை பிங் செய்து "யூ கோ அஹட் பார் லஞ்ச் .. ஐ ஹேவ் எ மீட்டிங்" என்றவளுக்கு "ஷல் ஐ வெயிட்" என்று நேக்ஸ் பதில் போடுவதற்குள் "டூ நாட் டிஸ்டர்ப்" என்று ஸ்டேடசை மாற்றிவிட்டாள்.

மாலையில் திரும்பும்போதும் உம்மென்ற முகத்துடனேயே வீடு சென்று அடைந்தாள். வாட்ச்மேனைப் பார்த்துக் கூடச் சிரிக்கவில்லை. வீடு திறந்திருந்தது. வங்கியிலிருந்து கண்ணன் சீக்கிரமே திரும்பிவிட்டிருந்தான். குளித்துவிட்டு இவள் அனுமதிக்கும் ஓரிரு சட்டைகளில் ஒன்றை அணிந்திருந்தான். ஆனால் வழக்கப்படி மேல் பட்டனைப் போடவில்லை. இதற்காகவே பல சண்டைகள் நடந்திருக்கின்றன. "யார் பாக்கணும்னு இப்படி சட்டையைத் திறந்து விடுறீங்க" என்று இவளும், "நீ லோ ஹிப் கட்டுறீயே நான் கேட்கிறேனா?" என்று அவனும் முட்டிக்கொள்வார்கள். இன்று எதுவும் ஆரம்பிக்கவேண்டாம் என்று அமைதியாக உள்ளே சென்றாள். அயன்காரரிடம் கொடுத்துவிட்டுச் சென்ற பட்டுப் புடவையைக் கண்ணன் பொறுப்பாக வாங்கி வைத்திருந்தது கொஞ்சம் நிம்மதி தந்தது.

தனக்கு கிரீன் டீ போட கிச்சனுக்குச் சென்றவள் பில்டரில் டிக்காஷன் இறங்கியிருப்பதைப் பார்த்து கண்ணனுக்கும் காபி கலக்கிக் கொண்டுவந்தாள். "இந்தாங்க ரிசப்சனில் பில்டர் காபி கிடைக்காது.." வழக்கத்துக்கு மாறான இந்த அமைதியும் உபசரிப்பும் கண்ணனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. என்ன ரியாக்ஷன் கொடுப்பது என்று புரியாமல் சற்றே வழிவதுபோல் முழித்தான். அதைப் பார்த்ததும் கண்மணிக்கு சிரிப்பு வந்துவிட்டது.. பொய்யாமொழி எபக்டால் காலையிலிருந்து எல்லோரிடமும் உம்மென்று அடக்கி வைத்திருந்த அவள் சிரிப்பு குக்கர் விசில் திறந்ததுபோல் பொங்கிப் பொங்கி வெளி வந்தது. கண்மணியின் திடீர் மாற்றம் புரியாத கண்ணன், அவனும் சிரித்து வைத்தான்.

கோப்பைகளைச் சமையலறையில் வைத்துவிட்டுப் பட்டுப்புடவை கட்ட உள்ளே சென்றாள். நட்பான சூழ்நிலையைப் பயன்படுத்தி கண்ணனும் உள்ளே சென்றான். "பின் போட்டுவிடவா.." என்றான். சட்டையின் மேல் பட்டன் போடப் பட்டிருப்பதைக் கவனித்த கண்மணி, புன்னகையுடன் பின்னை அவனிடம் கொடுத்தாள்.

புடவை கட்டிக் கிளம்புகையில் அலமாரியில் தேடி உதட்டுச் சாயம் எடுத்து லேசாகத் தடவிக் கொண்டாள். இந்த லிப் ஸ்டிக்கும் கண்ணனும் கண்மணியும் அடிக்கடி முட்டிக்கொள்ளும் ஒரு விஷயமாகும். கண்ணனின் பரம்பரையில் யாருமே லிப் ஸ்டிக் போட்டதில்லை. எனவே கண்ணன் வீட்டு விழாக்களில் லிப் ஸ்டிக் போடுவதில்லை என்றும் கண்மணி வீட்டு விழாக்களில் மட்டும் போடுவது என்றும் ஒரு உடன்படிக்கை போட்டிருந்தார்கள். உதடுகளைத் தேய்த்துச் சாயத்தை சமன் செய்தவள் சிரித்தவாறே கேட்டாள்..."நல்லாருக்கா...?" சிரித்தவாறே கண்ணன் சொன்னான் "லிப் ஸ்டிக்கை விட இந்த சிரிப்பு உன் உதடுகளுக்கு அழகாக இருக்கிறது"

ஒரு நாள் முழுதும் மன இறுக்கத்தில் இருந்த கண்மணிக்கு இப்போதுதான் புரிந்தது "பொம்பள சிரிச்சா போச்சு" என்று பொய்யாமொழி ஐயா சொன்னதின் உட்பொருள்.

Monday, December 9, 2013

கண்ணனின் கனவு

படுத்தவுடன் தூங்கிவிடும் பாக்கியம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அப்படிப்பட்ட சில பாக்கியவான்களில் கண்ணனும் ஒருவன். “எடுத்தது கண்டார் இற்றது கேட்டார்” என்பது போல், கண்ணன் படுப்பதைப் காண்பவர்கள் உடனடியாக அவன் குறட்டைச் சத்தத்தைக் கேட்பார்கள். ஆனால் குறட்டைச் சத்தத்துடன் கிக் ஸ்டார்ட் ஆகும் கண்ணனின் உறக்க வாகனம் விரைவிலேயே அவனைக் கனவுலகத்தில் கொண்டு போய் விட்டுவிடுகிறது பெரும்பாலான நாட்களில்.

கனவுலகம் ஏனோ ஒரு விசித்திர உலகமாகவே இருக்கிறது கண்ணனுக்கு. இப்படிச் சொல்வதனால் இந்தக் கனவுகள் ஏதோ பேய்க்கனவுகள் என்றோ, எதிர்மறை நிகழ்வுகள் நிறைந்தவை என்றோ பொருளல்ல. தன் வாழ்வில் இதுவரை சஞ்சரித்தில்லாத புதிய ஊர், தெரு, வீடு, இதுவரை சந்தித்திராத புதிய மனிதர்கள், கேட்டிராத புதிய சம்பாஷணைகளென்று கனவில் வரும் எந்த ஒரு பரிச்சயமில்லாத விஷயமும் இவன் மனதைச் சம்ஹாரம் செய்துவிடுகின்றன. ஆச்சரியங்களை விரும்பாதவர்களும் இருப்பார்கள் என்பது ஆச்சரியமாய் இருக்கிறதல்லவா? என்ன செய்வது? ஆச்சரியங்களை விரும்பாததால் தான் கண்ணன் கனவுகளை வெறுக்கிறான்.

கண்ணனுக்கு மகிழ்ச்சி தரும் கனவுகள் என்று எதுவும் கிடையாதா? அவனுக்குக் கனவுக்கன்னி என்று யாரும் கிடையாதா? என்று கேள்விகள் எழுகின்றன அல்லவா? மகிழ்ச்சியான கனவுகளும் அவ்வப்போது அவனுக்கு வந்திருக்கின்றன என்றாலும் பெரும்பாலானவை தூக்கம் கொல்லிகளாகவே அமைந்துவிடுகின்றன. கண்ணனுக்கும் காதல் உண்டு. அழகிய காதலி உண்டு. ஆனால் பாருங்கள். கனவுக்கன்னியாக இருக்கவேண்டிய அவள் வெறும் நினைவுக் கன்னியாகவே இருக்கிறாள். ஓரிரு கனவுகளில் அவள் வந்திருக்கிறாள் என்றாலும் அக்கனவுகளில் எள்ளளவும் காதல் ரசம் இருந்ததில்லை. ஒரு கனவில் காதலியின் பாட்டி செத்துக் கிடக்கிறாள். அழுக்கு உடையணிந்து மூக்கைச் சிந்தும் கோலத்தில் காதலியைப் பார்க்கவே சகிக்காமல், பாட்டிக்கு மரியாதை செலுத்திவிட்டு சட்டென்று வெளியேறிவிடுகிறான் கண்ணன். இன்னொரு கனவிலோ ரொம்பவும் சின்ன வயசுப் பெண்ணாக வந்து தொலைக்கிறாள் காதலி. இத்தனைக்கும் இந்தக் கனவில் சின்னப் பெண்ணான அவளை இழுத்தணைத்து முத்தமிட்டும் விடுகிறான் கண்ணன். ஆனால் அதில் காதல் உணர்வு இருக்கமுடியுமா? நீங்களே சொல்லுங்கள்.

"கனவு காணுங்கள்", "கனவு மெய்ப்பட வேண்டும்" என்ற கலாம் மற்றும் பாரதியின் கூற்றுகளில் கண்ணனுக்குத் துளியும் உடன்பாடில்லை. வள்ளுவன் நல்ல எண்ணங்கள் வேண்டும் என்று சொல்கிறானே தவிர, நல்ல கனவுகள் வேண்டும் என்று எந்தக் குறளிலும் சொன்னதாய்க் கண்ணனுக்குத் தெரியவில்லை. இடையில் வந்த யாரோதான் எண்ணங்களுக்கு மாற்றாகக் கனவு என்ற வார்த்தையைப் புகுத்தியிருக்க வேண்டும். அப்துல் கலாம் அவர்களின் கனவுகளில் ஒருமுறையாவது ஏவுகணைச் சோதனை தோல்வியில் முடிந்திருக்கும், பாரதியின் கனவில் வெள்ளைக்காரன் அவரைத் தூக்கில் போட்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்பது கண்ணனின் வாதம். பாரதியை இனி கேட்க முடியாது. அப்துல் கலாமைச் சந்திக்கும் வாய்ப்பு உங்கள் யாருக்கேனும் கிடைத்தால் இந்தக் கேள்வியைக் கேட்டு அவரது பதில் என்னவென்று கண்ணனிடம் சொல்லிவிடுங்கள்.

இப்படியெல்லாம் கனவை வெறுக்கும், கனவைத் துளியும் நம்பாத கண்ணனுக்குள் இன்று அதிகாலை வந்த கனவு ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. சென்ற வருடம் இதே நாளில் இறந்துபோன தாத்தா அவன் கனவில் வந்தார். அவன் வாயைத் திறக்கச் சொன்ன தாத்தா அவனிடம் முகம் பார்க்கும் கண்ணாடியைக் கொடுத்து "கண்ணா உன் நாக்கைப் பாருடா" என்றார். "நாக்குல கருப்பா பெரிய மச்சம் இருக்கு.. தெரியுதா?" என்றார். "தாத்தா.. எனக்கு நாக்குல மச்சம் கிடையாது" என்ற கண்ணனைப் பொருட்படுத்தாத அவர், “கண்ணா இனி நீ சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் பலித்துவிடுமடா.. எதைச் சொன்னாலும் யோசித்துச் சொல்லு.." என்று சொல்லி விட்டு ஒரு பெரிய ஒளிவெள்ளத்தில் சட்டென்று மறைந்துவிட்டார். இதுபோன்றதொரு பிரகாசத்தைக் கண்ணன் என்றுமே கண்டதில்லை. கோடி சூர்யப் பிரகாசம் என்று இதைத்தான் சொல்வார்களோ? தாத்தாவின் வடிவில் தரிசனம் தந்தது எந்தத் தெய்வமாயிருக்கும் என்று யோசித்தான்.

தூக்கம் கலைந்ததால் எழுந்து குளியலறைக்குச் சென்றவன் முகத்தை அலம்பினான். நீரின் குளிர்ச்சியையும் மீறி கொட்டாவி வந்தது. கண்ணாடியைப் பார்த்தவன் அதிர்ந்துபோனான் .. தாத்தா சொன்னதுபோல் அவன் நாக்கில் பெரிய மச்சம் ஒரு ரூபாய் நாணய அளவில் இருந்தது. இது எப்படி சாத்தியம் என்று ஒரு நிமிடம் திகைத்துவிட்டான்.

நினைவுகளில் துழாவிப் பார்த்தவனுக்கு சட்டென்று புலப்பட்டது - நேற்று இரவு தான் சாப்பிட்ட பான் கறையாக இது இருக்கக்கூடும் என்று.
ஆனாலும் கண்ணன் மனம் தெளிவடையவில்லை. வெற்றிலைக் கறை என்பதோ மச்சம் என்பதோ தெய்வ அருளின் பூடகமான ஒரு குறியீடு மட்டுமே என்ற மாற்றுச் சிந்தனை தோன்றியது. தான் மிகவும் நம்பும், மதிக்கும் தாத்தா கனவில் சொன்ன வாக்கை அவனால் புறக்கணிக்க முடியவில்லை.

ஒரு சிறிய நிகழ்ச்சி ஒரு மனிதனின் எண்ண ஓட்டத்தை முற்றிலும் திசைமாற்றி விடமுடியுமா என்ற ஆச்சரியத்துடன் மீண்டும் முகத்தில் நீரை அறைந்தான்.

முகத்தைத் துண்டால் துடைத்து ஒரு நிமிடம் கண்களை மூடி யோசித்தவன், மெதுவாய் இமைகளைத் திறந்து கண்ணாடியில் தெரியும் தன் பிம்பத்தைப் பார்த்துத் தெளிவான குரலில் சொன்னான்:

"என் தம்பி இனிமேல் குடிப்பதை நிறுத்திவிடுவான்".

அடங்காத புரவி ஒன்றை அடக்கி அதன் மேலேறி நிதானமாய் அதைச் செலுத்திவரும் ஒரு வீரனின் பெருமிதமான அதே சமயம் சாந்தமான ஒரு உணர்வைக் கண்ணாடியில் அவன் பிம்பம் வெளிப்படுத்தியது.