Monday, February 29, 2016

கன்னி பேக்கும் காட்டன் பெட்டியும்

"செக்குருட்டி அண்ணா கன்னி பேக் ஏதாவது இருக்குதா பாருங்க...."
பல சரக்குக் கடை ஒன்றில் (super market) நடைவண்டியில் பொருட்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்தபோது கல்லாப்பெட்டியிலிருந்த பெண் இப்படிச் சத்தம் போடுவதைக் கவனித்தேன்.

வயதான தம்பதியினர் நிறைய பொருட்களை வாங்கிவிட்டு எடுத்துச் செல்லப் பைகள் இல்லாமல் காத்திருந்தனர். நெகிழிப் பைகள் பயன்பாட்டைக் குறைக்கவேண்டும் என்பதற்காக பைகளை காசுகொடுத்துத்தான் வாங்கவேண்டும் அந்தக் கடையில். ஆனால் அந்தத் தம்பதியினரோ அந்தப் பெண்ணிடம் "மற்ற கடைகளில் இலவசமா பைகள் தரும்போது நீங்கள் மட்டும் ஏன் காசு கேட்கிறீர்கள்?" என்று வாதிட்டுக்கொண்டிருந்தனர். இதுபோன்ற வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் சரக்குகளைப் பிரித்துப்போட்ட ஏதாவது சாக்குப்பைகளைக்(gunny bag) கொடுப்பார்கள் போலும்.
gunny bag-ஐ கன்னி பேக் என்று கன்னித்தமிழில் ஒரு கன்னிப்பெண் சொன்னதை உங்களிடம் பகிராமல் எப்படி இருப்பது? அதனால்தான் இந்தப் பதிவு. (Kerosene கிருஷ்ணாயில் ஆனது போலத்தானே இதுவும்? )

இதில் சிந்திக்க வேண்டியது என்னவென்றால் நமது தமிழ்மக்கள் ஆங்கிலம் சரியாகத் தெரியாதபோதும் கூச்சப்படாமல் இப்படி பேசிப்பேசி ஆங்கிலம் வளர்ப்பதுபோல் நாமும் தமிழில் பிறமொழி வார்த்தைகளுக்கு இணைச்சொற்களைக் கூச்சப்படாமல் பேசிப்பேசித் தமிழை ஏன் வளர்க்கக்கூடாது என்பது தான். இது பற்றிய உங்கள் கருத்தென்ன?

கதையின் இரண்டாம் பாதி மிகவும் சிறியது. கன்னி பேக் இல்லை என்பதால் அந்தப் பெண் காட்டன் பெட்டி இருக்கிறதா என்று கேட்டார். காட்டன் பெட்டி என்றால் carton என்று ஒருவாறு ஊகித்தேன். சரிதானே?

அதை செக்குருட்டி கொடுத்தாரா என்பது கதைக்குத் தேவையற்றது. இருங்கள் .. இருங்கள்.. செக்குருட்டி என்ற வார்த்தையும் கொஞ்சம் ஆராய்ந்துவிடுவோம். செக்குபோல் அங்கேயே சுற்றிச் சுற்றி வருவதால் செக்குருட்டி ஆகிவிட்டாரோ?!

Sunday, February 21, 2016

தாய்மொழிதினம்‬

தாய்மொழி தினம் பற்றி என் மகனிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

ஆங்கில வார்த்தைகளுக்கு இணைச்சொற்கள் தமிழில் உருவாக்காமல் இருப்பது, தமிழ்ச் சொற்களை விடுத்து ஆங்கில வார்த்தைகளை தமிழில் கலந்து பேசுவது இரண்டுமே நமது மொழிவளத்தை பாதிக்கின்றன என்று உணர்ந்தோம்.

சில நாட்களுக்கு முன் ஒரு குறும்பதிவில் ஷவர் என்பதற்கு "நீர்த்தூவி" என்ற சொல்லை நான் பயன்படுத்தினேன் என்று கூறி நீ இதற்கு வேறொரு இணைச்சொல் யோசித்துச் சொல் என்றேன்.. "அருவிகருவி" என்றான்!

‪#‎தாய்மொழிதினம்‬

Friday, February 19, 2016

தோற்றுப்போகிறேன்

"ஏய்" என்றவனிடம்
"ஏய்" என்று வீரம் காட்டிவிடுகிறேன்
சிறு குழந்தையின் முன்
மண்டியிட்டு மழலையாகிறேன்-
லுல்லு லுல்லு பேசி.
இறைவனிடம் கூட
படைப்பதிலும் காப்பதிலும்
நானும் நீயும் ஒன்றென்று
சொல்லிவிடமுடிகிறது.
ஆனால்
எதைச்செய்தும்
உனது மென்காதலின்
முன்நிற்க முடியாமல்
தோற்றுப்போகிறேன்
செஞ்சாந்தாய்க் குழைந்தும்
சிறு கீற்று நிலவிடம்
தோற்றொளியும்
அந்திச் சூரியனைப்போல்
‪#‎காதல்_மாதம்‬

Friday, February 12, 2016

சிரிப்பதுபோல் ஒரு செல்ஃபி

பார்க்கவேண்டும் போலிருக்கு
படம் ஒன்று அனுப்பி வையேன்...
அம்மா அப்பாவுடன் நிற்கும் அந்த
அமைதிப்படம் வேண்டாம்.
தோழிகளுடன் அரட்டைக்கச்சேரி?
அம்மா, தாயே, அவர்கள் எனக்கு அலர்ஜி!
அண்ணனின் பிள்ளைகளுடன்
அவர்களைப் போல் நீயும்
வண்டுக்கண் காட்டும்
வண்ணப்படம் அழகுதான்.
ஆனாலும் அது வேண்டாம்.
ம்ம்ம்...
இவைகளை நான் தள்ளியதால்
உனது தனிப்படம் கேட்பதாய் எண்ணி அந்த
ஹால்டிக்கட் போட்டோவை அனுப்பிவிடாதே!
தேர்வு பயம் தொற்றிக்கொள்ளும் எனக்கும்!
சிரிப்பதுபோல் ஒரு செல்ஃபி எடுத்தனுப்பு.
நான் உன்னைப் பார்க்கும்போது
நீ என்னைப் பார்ப்பாயே
அந்த முகபாவம் முக்கியம்!

பேரமைதி

பள்ளியறையில் உன் நினைப்பைப்
பித்தமென்று தள்ளினேன்
பூசையறையிலும் தொடர்ந்த
உன் நினைப்பைப்
பக்தியென்று புரிந்துகொண்டேன்
நீ விலகிச் சென்ற நாள்முதல்
எனக்குப்
பாலைவன தாகமடி....
துயர் அழுத்தும் மூச்சடைப்பில்
உன் நினைப்பே
என் உயிர்ப்பிடிப்பு...
அருகில் நீ வரும் நாளில்
துடிப்புகள் அடங்கி
சவமென நான் உணர்வழிப்பேன்
அன்று நான் கொள்வேன்
பேரமைதி