Saturday, May 1, 2021

ஊழல் விலகுக

நாளை இதைச் சொன்னால் வெற்றி பெற்றவர்களைச் சுட்டிக் காட்டுவது போலாகலாம். ஆகையால் இரு கட்சிகளுக்கும் பொதுவாக இன்றே சொல்லி விடுகிறேன். 

ஔவையார் ஆட்சியாளரை "வரப்புயர" என்று வாழ்த்தினார். வரப்புயர்ந்தால், நீர் உயரும், நெல் உயரும், குடிமக்கள் உயர்வார்கள். எனவே வரப்பை மட்டும் உயர்த்துங்கள் என்றார். All other things will automatically happen.

வெற்றி பெறும் ஆட்சியாளர்கள் (மந்திரிகள், MLA-க்கள்) மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கப் போகும் அரசு அதிகாரிகள் அனைவருக்கும் எனது முன்கூட்டிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு நான் வேண்டும் ஒரே ஒரு விண்ணப்பம் "ஊழல் விலகுக" என்பதே. 

All other things will automatically happen.

ஊழலை ஒழித்து விட்டாலே/குறைத்து விட்டாலே அனைத்து நலத்திட்டங்களையும் குறைந்த செலவில் நிறைவேற்ற முடியும். மிச்சமுள்ள பணத்தில் மேலும் பல புதிய நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியும்.

ஊழலைக் குறைத்து செலவைக் குறைந்துவிட்டால் சாராயக் கடைகளையும் மூடிவிடலாம்.

கட்டமைப்புகளை மேம்படுத்த முடியும். (தவறு செய்யும் ஒப்பந்ததாரர்களைத் தட்டிக் கேட்க முடியும்) வேலை வாய்ப்புகள் பெருகும். வறுமை ஒழியும். 

ஊழல்களைத் திட்டமிடத் தேவையில்லை என்கிற பட்சத்தில் ஆட்சியாளர்களின் கவனம் தானாகவே மக்கள் நலத் திட்டங்களில் திரும்பிவிடும். "ஊழலுக்கு நேரமில்லாத போது மனம் நன்மைக்கும் ஈயப்படும்" என்று புதிய குறள் ஒன்று எழுதலாம்!

மேலும் முக்கியமாக, எதிர்க்கட்சிகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் சமூகவலைப் போர்களும் குறைந்து விடும்!

திமுக வென்றால் இப்படிப் பாடுவோம்:

 "ஸ்டாலின் தான் வாராரு ஊழல் ஒழிக்கப் போராரு"

அதிமுக வென்றால் இப்படிப் பாடுவோம்:

"நேர்மை நடைபோடும் தமிழகமே" 

இப்படிக்கு, ஔவையின் பேரன் பாலா சிவசங்கரன்

Tuesday, March 9, 2021

ஆதா கேஜீ தீஜிய

கண்ணனும் கண்மணியும் உறவினர் வீட்டுக்கு ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தனர். 

புதிய இடம் என்பதால் google maps பார்த்து ஓட்டுனருக்கு வழி சொல்லிக்கொண்டு வந்தான் கண்ணன். 
ஓரிடத்தில் ஓட்டுனரிடம் "இடதுபக்கம் திரும்புங்கள்" என்றான். 
அவர்"லெப்டா சார்?" என்று தயங்கவே "ஆமாம்" என்றான். 
"லெப்ட் ரைட்டுனே சொல்லிப் பழகிடவே சட்டுனு இடது வலது குழப்பமாகிடுச்சி சார்" என்றார். 

கண்மணி சிரித்தாள். ஓட்டுனருக்குக் கேட்கவேண்டாம் என்று சன்னமான குரலில் கண்ணனிடம் 
"ஒரு ஜோக் வீடியோ ஞாபகம் வந்திடுச்சு" 
"எந்த வீடியோ?" 
"அசட்டுப் பெண் ஒருத்தி கணவனுடன் வண்டியில் போவாளே... அது..."
"தெரியல..." 
" வெயிலா இருக்கு என் glass கொண்டுவா என்று சொன்னதுக்கு டம்ளர் கொண்டு வருவாளே..." 
"ஹூஹூம் பார்க்கல..." 
"வண்டியில் திரும்பும்போது 'கையைப்போடு'ன்னு சொல்லுவான். அவ அவன் தோள் மேல கையைப் போடுவாள். பின்னாடி வரும் வண்டி இடித்துவிடும்..."
"ம்...." 
"அது போல நீங்க வலதுன்னு சொல்லி டிரைவர் லெப்ட்ல திரும்பப்போறாரு.. எவனாவது பின்னாடி வந்து இடிக்கப்போறான்.." 
சிரித்தாள்.. 
"உனக்கு சிரிப்பு வருது...?" கண்ணனுக்குக் கோபம் வந்தது. 
"கண்மணி நான் ஒண்ணும் செந்தமிழில் பேசணும்னு சொல்லல. இழந்துவிட்ட எளிய சொற்களை கொஞ்சம் கொஞ்சமாக மீட்க நினைப்பதில் என்ன தவறு?" 
 
அந்த நேரம் வழியில் ஒரு பிரபல இனிப்பு கடை வரவே ஓட்டுனரிடம் "நிறுத்துங்க.." என்ற கண்ணன் கண்மணியிடம் "குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கிக்கொண்டு போகலாம்" என்றான். 

ஓட்டுநர் "இதோ இங்கே லெப்டில்... ம்.. இடது பக்கம் வண்டியை நிறுத்தி வைக்கிறேன்.. நீங்க பொறுமையா வாங்கிட்டு வாங்க.."எனவே இருவரும் புன்னகைத்தனர். 

 கடையில் ஒரு இனிப்பைக் காட்டி "இதில் ஒரு அரை கிலோ கொடுங்கள்" என்று கேட்டான் கண்ணன். கடை ஊழியரோ புதிதாக வந்தஒரு வடவிந்தியர் போலிருந்தது. குழப்பமாகப் பார்க்கவே கண்மணி அனிச்சையாக "ஆதா கேஜீ தீஜியே..." என்றாள். 

ஐயையோ மாட்டிக்கொண்டோமே.... "நம் ஊரில் நாம் இனிப்பு வாங்க இந்தியில் பேசவேண்டுமா? தமிழனெல்லாம் தண்ணியடிச்சிட்டு சோம்பேறியா இருந்தா இந்த அற்ப வேலைகளுக்குக் கூட நாம் வெளியூரிலிருந்து ஆட்களை வரவழைக்க வேண்டியிருக்கிறது பார்" என்று மொழிப்பற்றும் சமூகவியலும் கலந்து ஒரு விரிவுரை ஆற்றப் போகிறானே என்று எண்ணியபடி கண்ணனைத் திரும்பிப் பார்த்தாள். 

அவன் புன்னகைத்தான் "கேஜீ தீஜியே... சந்தம் நல்லா இருக்கில்ல?"

Wednesday, January 6, 2021

உறவுகள் தொடர்கதை; வார்த்தைகள் சிறுகதை

வார்த்தைகளால் காயமுற்ற உள்ளங்களுக்கு மருந்தாக, கவியரசர் கண்ணதாசன் அவர்களின் "உறவுகள் தொடர்கதை" பாடல் வரிகளைச் சில மாற்றங்கள் செய்து எழுதியுள்ளேன்.. 
 
***** 

உறவுகள் தொடர்கதை 
வார்த்தைகள் சிறுகதை 
கொடிய சொல் இன்று முடியட்டும் 
இனிய சொல் என்றும் தொடரட்டும் 
இனியெல்லாம் நலமே 

நாள் ஒன்றிலும் சோகம் 
வளர்கின்றதோ வாதம் 
வாழ்வெங்கிலும் ஆதங்கம் 
நீ கண்டதோ துன்பம் 
இனி காணலாம் இன்பம் 
சுக ராகமே ஆரம்பம் 
நதியிலே புதுப் புனல் 
நாவிலே புது மொழி 
நம் சொந்தமோ இன்று கனிந்தது 
துன்பம் மறைந்தது 

உன் நெஞ்சிலே பாரம் 
உனக்காகவே நானும் 
ஒரு ஆறுதல் கூறுவேன் 
உன் கண்களின் ஓரம் 
எதற்காகவோ ஈரம் ? 
நல்வார்த்தை நான் கூறுவேன் 
வேதனை தீரலாம் 
வரும் பகை விலகலாம் 
எந்நாளுமே நீயென் 
தமிழெனும் தேனில் நனையலாம் 

இந்தப் பாடல் Smule-ல் 
https://www.youtube.com/watch?v=0bvTADuRJp0

Tuesday, June 2, 2020

HAPPY BIRTHDAY RAJA SIR

(முத்தைத்தரு - திருப்புகழ் பாடல் மெட்டில் )
 
வித்தை பல கற்றுக் கலைமகள் மெச்சத்தகு புத்திக்கு அதிபதி
தித்தித்திடும் மெட்டுத் தரவல்ல இசைஞானி
எட்டுத் திசை பட்டத் தமிழரின் இட்டத்தினில் நித்தம் நிலவிடும் 
மட்டத்துயர் தட்டில் திரவியம் இசைஞானி
 
பட்டிக்கொரு கட்டிக்கரும்பென சிட்டிக்கொரு சீனிக்கழியென
எட்டுத்திசை எங்கும் இனித்திடும் இசைஞானி
பட்டப் பகல் முட்டும் குளிர்ந்திட கொட்டும் பனி மெட்டில் மகிழ்ந்திட
எட்டும் இருள் மட்டும் துணைவரும் இசைஞானி
 
கெட்டும் மனம் முற்றும் நலம்பெற ஒட்டும் உயிர் ஊனில் நிலைபெற 
கொட்டும் உயிர் மெட்டில் குருதியில் இசைஞானி 
பட்டத் துயர் எட்டிச் சிதறிட பக்தர்க்கருள் கொட்டித் தருகிற
கிட்டத்தினில் கிட்டும் இறைவனும் இசைஞானி 
 
இசைஞானிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
 
பாலா சிவசங்கரன்
02 ஜூன் 2020
=====-----=====-----=====


Thursday, May 21, 2020

பெட்டி உடுப்பெடுத்து

தண்டவாளத்தில் நடந்து உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்தப் பாடல் சமர்ப்பணம்

(உச்சி வகுந்தெடுத்து பாடல் மெட்டு)

பெட்டி உடுப்பெடுத்து
புள்ளைங்கள தோளில் வெச்சி
தண்டவாளம் மேல்நடந்து
சொந்த ஊரு போனாங்க
சொந்த ஊரு போனவங்க
போன கதி என்னாத்தா?
(பெட்டி உடுப்பெடுத்து)

உண்டி சுருங்க வெச்சு
உண்டியலில் சேத்து வெச்சு
வண்டிக்குத்தான் சீட்டெடுக்கப் போனாங்க - அட
போகும் வழி யாருக்குமே தெரியலையே - ஐயோ
போற வழி ஆபத்துன்னு புரியலையே
(பெட்டி உடுப்பெடுத்து)

துபாயி சிங்கப்பூரு
துட்டு உள்ள தூர ஊரு
ஏரோபிளேன் போனதுன்னு சொன்னாங்க - அட
இங்கருக்கு இவங்க ஊரு தெரியலையே - அட
ஏத்திச் செல்ல வண்டி ஏதும் வரவில்லையே
(பெட்டி உடுப்பெடுத்து)

பங்குச் சந்த மூடவில்ல
வங்கி வட்டி கொறையவில்ல
கூலி வேலை செய்ய மட்டும் வழியில்லை - அட
ஏழை சனம் எண்ணிக்கையில் கொறையலையே - எவர்
எண்ணத்திலும் இவங்களுக்கு எடமில்லையே

(பெட்டி உடுப்பெடுத்து)

Friday, May 15, 2020

பஞ்சபூதக் காதல்


 
காதல் என்றொரு காற்று - அது
பூமி முழுதும் நிறைந்ததடி(டா)
கண்ணில் மறைந்தே போனாலும் - அது
நம்மை விட்டுப் பிரிவதில்லை
 
காதல் என்றொரு பூமி -  அதன்
ஈர்க்கும் வலிமை குறைவதில்லை
திசைகள் மாறிப் போனாலும் - அதன்
விசைகள் என்றும் அழிவதில்லை

காதல் என்றொரு வானம் - அது
உள்ளம் முழுதும் விரிந்ததடி(டா)
தூரம் தாண்டிப் போனாலும் - அது
எல்லைக் கோட்டில் முடிவதில்லை
 
காதல் என்றொரு வெப்பம் - அது
உயிரின் உள்ளே கலந்ததடி(டா)
கூடும்போது கொதிக்குதடி - அது
குறையும் போது நடுங்குதடி
 
காதல் என்றொரு நீரில் - நம்
இருவர் உயிரும் மீன்களடி(டா)
அலைகள் என்றும் ஓய்வதில்லை - நம்
காதல் என்றும் அழிவதில்லை

பாலா சிவசங்கரன்
15 05 2020
=====-----=====-----=====

Sunday, April 26, 2020

துளி நீர்


நீர்த்துளியாக விடுபட்ட
துளி நீர்,
நீர்த்துளிக்குள் சிறைப்பட்டதாகவே தவித்துப் போகின்றது

நிலையற்ற துளிகளையே
நாம் காண்கிறோம்-
தாமரை இலை மேலும்
மழையின் ஒழுக்கிலும்
விழிகளின் ஓரத்திலும்.

சந்தர்ப்ப சாதுர்ய சதிகளின்
நிகழ்தகவில்
சங்கமித்து சுயமிழக்கின்றன துளிகள் -
சமூகத்தின் தனி மனிதர்களைப் போலவே.

பாலா சிவசங்கரன்
26 04 2020


Wednesday, March 18, 2020

நாவல் கரோனா - REMIX

நாவல் கரோனா - REMIX
(காதல் பிசாசே பாடல் மெட்டு)

நாவல் கரோனா
நாவல் கரோனா
வேணாம் வராதே பரவாயில்லை
நாவல் கரோனா
நாவல் கரோனா
போதும் அவஸ்தைகள் பரவாயில்லை
சீனாவும் சுகமாயில்லை
ஈரானும் நலமாயில்லை
இந்தியாவை விட்டுவிட்டால் பரவாயில்லை
அமெரிக்கா பரவாயில்லை
ஐரோப்பா சரியாயில்லை
எங்களை நீ விட்டுவைத்தால் பரவாயில்லை

கொஞ்சம் ஒதுங்கல் கொஞ்சம் பதுங்கல்
கற்றுக் கொடுத்தாய் நீ நீ நீ
கைகள் கழுவல் தூய்மை பழகல்
சொல்லிக் கொடுத்தாய் நீநீநீ
ஐயோ அம்மம்மா நான் யாரோடும்
பேசாத வெட்கத்தை நீயே தந்தாய்
அப்பா அப்பப்பா நான் யார் மீதும் மோதாத சங்கோஜம் நீயே தந்தாய்
இது போதும் விட்டுச் செல்லு
தாங்காது சொன்னா கேளு
மருந்தொன்று கண்டுபிடித்தால் பரவாயில்லை

Thursday, December 12, 2019

இனிய புத்தாண்டு 2020 -:இளமை அதோ அதோ

என் வயதிற்கு இந்தப் புத்தாண்டில் "இளமை இதோ இதோ" பாடலை அப்படியே பாட முடியாது. அதனால் கீழ்க்'கண்டபடி' மாற்றியுள்ளேன்! சக வயது சகலைகள் சந்தோஷமாக இதைப் பாடலாம்!

*****
ஹாய் எவ்ரி படி
விஷ் யூ ஹேப்பி நியு இயர்

இளமை அதோ அதோ
இனிமை அதோ அதோ
காலேஜு டீன் ஏஜு் பெண்கள்
எல்லாம் என் பெண்ணோட friend-கள்
இளமை அதோ அதோ
இனிமை அதோ அதோ

ராஜா சாரின் ரசிகன்
பாலு ஜானு நேசகன்
கமல் படங்கள் பார்ப்பவன்
ரஜினி ஸ்டைலால் ஈர்ப்பவன்
நான் ஆடும் ஆட்டம் பாருங்கள்
பெல்பாட்டக்(bell bottom) காலங்கள்
நான் பாடும் பாட்டைக் கேளுங்கள்
SPB சாயல்கள்
ஊர் போற்றவே பேர் வாங்குவேன்
நான் தான் சகலைக்கெல்லாம் நல்லவன்!

இளமை அதோ அதோ
இனிமை அதோ அதோ

தமிழில் மட்டும் பாடுவேன்
இந்திப் பாட்டும் கேட்டுப்பேன்
மை முஜே கே லீயே
இதிலென்ன கேலியே?
தாய் பேசும் மொழியில் பேசம்மா
களத்தூரின் கண்ணம்மா
உனக்காகப் பாடும் நானும் தான்
கல்யாண ராமன் தான்
நாள் தோறுமே Smule பாடுவேன்
நான் தான் சகலைக்கெல்லாம் நல்லவன்!

இளமை அதோ அதோ
இனிமை அதோ அதோ

பைக் எடுத்து ஓட்டுவேன்
மைக் பிடித்துப் பாடுவேன்
சுற்றுவதில் சூரன் நான்
கத்துவதில் வீரன் நான்
புது ஆண்டில் சோகம் கிடையாது
மகிழ்ச்சிக்கு அளவேது?
நமை வெல்ல யாரும் கிடையாது
பகையென்று யார் கூறு?
நாள்தோறுமே கொண்டாட்டம் தான்
வா வா புது வருடம் போகலாம்!

இளமை அதோ அதோ
இனிமை அதோ அதோ

Tuesday, December 10, 2019

"குடி மற" பாடல்


"சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்" பாடல் மெட்டு
---------

குடித்துக் குடித்து குடல் கெடுத்துக் கொண்டாய்
உடல் மிடுக்கும் துடிப்பும் இன்று இழந்து நின்றாய்
படித்த படிப்பும் அதை மறந்து விட்டாய்
சபை நடந்து நடந்து வரும் தரம் இழந்தாய்

எழிலும் இழந்தாய் மொழியும் இழந்தாய்
தொழிலில் வரவும் இழந்தாய்
புழுவின் பெருமை எளிதில் அடைந்தாய்
தெருவில் தனியே நடந்தாய்

இளமை இழந்தாய் இனிமை இழந்தாய் புகழும் பணமும் இழந்தாய்
குடும்பம் இழந்தாய் குழந்தை இழந்தாய் குலத்தின் பெயரும் இழந்தாய்

#குடிமற