Monday, August 17, 2015

ப.பி: கரையெல்லாம் செண்பகப்பூ

சுஜாதாவின் கரையெல்லாம் செண்பகப்பூ நாவல் படித்தேன்.
அவரின் வழக்கமான விறுவிறு கிளுகிளு பாணியில் எழுதப்பட்ட நாவல். ஆனால் வித்தியாசமாய் கிராமத்துச் சூழலில் அமைந்த மர்மக் கதை. நாயகன் நாட்டுப்புறப் பாடல்கள் பற்றி ஆராய்ச்சி செய்ய ஒரு கிராமத்துக்கு வருகிறான் என்பதால் சுஜாதா தனது முன்னுரையில் வானமாமலை அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு அவர் புத்தகத்திலிருந்து பல நாட்டுப்புறப் பாடல்களை இந்த நாவலில் பயன்படுத்தியுள்ளார்.

அந்தப்பாடல்களில் இரண்டு எனக்கு இசைஞானி இளையராஜாவின் பாடல்களை நினைவுபடுத்தின. அதைப் பகிரவே இந்தப் பதிவு ..

1. மாமரத்துக் கீழே நின்னு
மங்கை குறை சொல்லி அழுதா
மாமரத்து மேலிருக்கும்
மயிலும் இரை உண்ணாது.

பரிவு காட்ட ஏதோ ஒரு உயிர் மனிதனுக்குத் தேவைப்படுகிறது.. எல்லா காலத்திலும்.. அது நாய் பூனை என்ற வளர்ப்புப் பிராணி மட்டும் இல்லாமல் - மாமரத்து மயிலாகவும் இருக்கலாம் என்பதே இந்தப் பாடலின் சிறப்பு.

இந்த நாட்டுப்புறப் பாடல் நினைவு படுத்தும் இசைஞானியின் பாடல் "மாங்குயிலே பூங்குயிலே" என்று நான் சொல்லவும் வேண்டுமோ? " மாமரத்துக் கீழிருந்து மங்கை அவள் குளிக்க அந்த மாமரத்து மேலிருந்து புலம்புவது யாரு?"

2. திருச்செந்தூர் ஓரத்திலே
விரிச்சதலைப் பாலத்திலே
விரும்பிச்சொன்ன சத்தியங்கள்
வீணாகப் போகுதையா...

என்ற இன்னொரு நாட்டுப்புறப்பாடல் எனக்கு "ஆற்றங்கரை ஓரத்திலே யாருமற்ற நேரத்திலே வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி.." என்ற பாடலின் மெட்டை நினைவு படுத்தியது.

Monday, August 3, 2015

உயிர்த்துளி

மணித்துளி ஒவ்வொன்றும் உயிர்த்துளி
கவனித்து அதை நீ செலவழி
செ(ல்)லவழி பலவுண்டு கண்டபடி
அதில் நல்லவழி நீயும் கண்டுபிடி
கண்டுபிடி நல்லநல்ல வாய்ப்புகள்
கனியும் உன் தோட்டத்துக் காய்ப்புகள்
காய்ப்புளி வேண்டாம் கனி புகல்
புகழ் மற, மறவாதே புகழ
இயல்கின்ற போதெல்லாம் சிரித்துவிடு
அயலவர் கண்ணீர் துடைத்துவிடு
விடுவதற்கில்லை வாழ்க்கை
கெடுவதற்கில்லை காலம்
மனதினைச் செதுக்கிடும் இழைப்புளி-
மணித்துளி ஒவ்வொன்றும் உயிர்த்துளி

Tuesday, July 28, 2015

அப்துல் கலாம்

கனவுகள் விதைக்கலாம்
விதைத்ததை அறுக்கலாம்
வழிபல வகுக்கலாம்
வறுமையைத் தொலைக்கலாம்
பொருளினைப் படைக்கலாம்
பகிர்ந்துநாம் கொடுக்கலாம்
அறிவியல் படிக்கலாம்
இருளினை விலக்கலாம்
படைக்கலம் வடிக்கலாம்
பகையினை ஒடுக்கலாம்
அமைதியை வளர்க்கலாம்
மகிழ்ச்சியில் திளைக்கலாம்
மழலைகள் வளர்க்கலாம்
மரங்களும் வளர்க்கலாம்
கவலைகள் மறக்கலாம்
காலம் வந்தால் உறங்கலாம்
விடைதந்த அப்துல்கலாம்
விடிவெள்ளி ஆகலாம்

Tuesday, July 21, 2015

அழகொழுகும் அருவி

என்ன சொல்லிப் பாடுவது
அழகொழுகும் அருவியை?

அடர் மரச் செறிவினில்
தொடர் மலைச்சரிவினில்
சுடர் மின்னல் அடிக்கின்ற
படர் வெள்ளிக் கொடியொன்று
வேர் காண வீழ்ந்ததுபோல்
அழகொழுகும் அருவியினை
என்ன சொல்லிப் பாடுவது?

வெள்ளிப்பனி மலையுருக்கிக்
கிள்ளிக் கொஞ்சம் தருகுதோ?
வான் மழைக்கு நிகராக
அள்ளி வந்து தருகுதோ?
உள்ளமெல்லாம் வெள்ளையென
சொல்லிக் கொள்ள வருகுதோ?
உள்ளுறைந்த மீன்களுக்குத்
துள்ளச் சொல்லித் தருகுதோ?
என்ன சொல்லிப் புகழ்வதிந்த
அருள்நிறைந்த அருவியை?

அன்னைபோல் தலைகோதி
அங்கமெல்லாம் நீவுகையில்
அயர்வும் வலிகளும்
வியர்வையும் கண்ணீரும்
கரைத்தெடுத்து-
கரைகளற்ற பெருவெளியில்
கருணை பொழியும் அருவியினை
என்ன சொல்லி வாழ்த்துவது?

Friday, June 19, 2015

பட்டி, தொட்டி மற்றும் சிட்டி

வட்டியோடு சேருதையா வட்டி-
இஷ்டத்துக்கும் போடுதையா குட்டி.

உரத்தோடு மருந்தெல்லாம் கொட்டி
பயிர் செய்த கடனுக்கு வட்டி
வெள்ளாமையைத் தின்னுது வயிறுமுட்டி
விவசாயி நிக்குறான் கையைக் கட்டி.

புதுவீட்டில் குடி வரும்
கடன் வட்டி-
வீட்டைக் காலி பண்ணுமா
இந்த ஜோடி?

பிள்ளைகளைக் கட்டிக்கொடுத்தால்
தாத்தா பாட்டி-
கடனும் வட்டியும்தான்
பேரன் பேத்தி

செத்தவனை வைக்கவேணும்
ஐஸ் பெட்டி -
அதுக்கும் கட்டுறான்
கந்து வட்டி

ஐயகோ, இந்த தேசத்தில்
ஆறு முதல்;
அறுபது வட்டி.

கட்டிக் கட்டி வட்டி ஆறாத கட்டி.

“ஆண்டவரே...”, “இறைவா...”, “சாமி....”
ஆதரிக்க வேணும் இந்த பூமி.
முடிஞ்சா செஞ்சி நீயும் காமி
வட்டியில் மூழ்காத
பட்டி, தொட்டி மற்றும் சிட்டி

Wednesday, June 17, 2015

இன்னும் குமரன்னு நெனப்பு

கண்ணாடி போட்டு உன்னைப் பார்ப்பது
கஷ்டமாக இருக்கிறது
கண்ணாடி போடாவிட்டால் உன்னைப் பார்ப்பது
கஷ்டமாக இருக்கிறது

தட்டாமாலை சுற்றவா? என்றால்
‘முடியாது’ என்கிறாய்..
வேண்டாம்னு சொல்லலாமில்ல?

வளையோசை கலகலவெனப்
பேருந்து படிக்கட்டில் பாடினால்
பதறி-
மேலே வா என்கிறாய்

இன்னும் குமரன்னு நெனப்பு
என்று சிலநேரங்களில் நீ சொல்வது
பாராட்டா பழிப்பா என்று
புரியமாட்டேன் என்கிறது

நீ மட்டும் எனக்கு என்றும் மாறா
இளமையுடன் தோன்றுவது எதனாலோ?

Wednesday, June 3, 2015

இதைச் செய்யாவிட்டால் என்ன?


மசானபு ஃபுகோகா அவர்களின் 'ஒற்றை வைக்கோல் புரட்சி' புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தை அப்படியே இங்கு பகிர்ந்துள்ளேன். (pg 137-138). அதீத வளர்ச்சியை நோக்கி இந்த உலகம் ஓடுவது தேவையற்றது என்ற கருத்தை இயற்கை விவசாயத்தின் ஊடே வலியுறுத்தியுள்ளார்.

வளர்ச்சியோ விஞ்ஞானமோ வீண் என்பதை நான் ஆதரிக்கவில்லை எனினும் பூமிமீதான மனிதத்தின் அளவற்ற அதிகாரத்தையும் உரிமை கோரலையும் விரும்பாதவன் என்கிறவகையில் இதைப் பகிர்கிறேன்.

-------------------------------------------------------------------------------------------------------------

"நீங்கள் எதையுமே செய்யாவிட்டால், உலகம் இயங்கிக் கொண்டிராது? வளர்ச்சியற்ற உலகம் எப்படி இருக்கும்?"
"நாம் எதற்காக வளர்ச்சி பெற வேண்டும்? பொருளாதார வளர்ச்சி 5-10 சதவீதமாக உயரும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறதா? வளர்ச்சி விகிதம் 0 சதவீதமாக இருந்தால் என்ன தவறு? இது ஒரு நிலையான பொருளாதாரத்தின் அடையாளம் இல்லையா? மிகவும் சாதாரணமாகவும், இயல்பாகவும் வாழ்வது எல்லாவற்றையும் விட சிறந்ததல்லவா?"

மக்கள் எதையாவது கண்டுபிடித்து, அது எவ்வாறு இயங்குகிறது என்று ஆராய்ந்து, இயற்கையைப் பயன்படுத்துகின்றனர். அது மனித இன உய்விற்கான ஒன்று என்றும் நினைத்துக் கொள்கின்றனர். இவையனைத்தும் இது நாள் வரை விளைவித்தது என்ன தெரியுமா? இந்த கிரகம் மாசுபாடடைந்தது; மக்கள் குழப்பமானார்கள்; நவீன காலத்தின் பெருங்குழப்பத்திற்கு வரவேற்பு ராகம் வாசிக்கப்பட்டது.

** இந்தப் பண்ணையில் நாங்கள் 'ஒன்றுமே செய்யத் தேவையற்ற' வேளாண்மையைச் செய்து, முழுமையான, ருசியான தானியங்கள், காய்கறிகள், பழங்களை உண்கிறோம். பொருட்களின் ஆதாரத்திற்கு அருகே வாழ்வதில், பொருளும், ஒரு அடிப்படையான மன நிறைவும் இருக்கிறது. வாழ்க்கை ஒரு பாடல், வாழ்க்கை ஒரு கவிதை.

மக்கள் இந்த உலகை அலசி, ஆராய்ந்து, நாம் இதைச் செய்தால் நல்லது, அதைச் செய்தால் நல்லது என்று தீர்மானிக்கும்போது,.என் ஆராய்ச்சி எல்லாம் இதைச் செய்யாவிட்டால் என்ன? அதைச் செய்யாவிட்டால் என்ன என்ற திசையில் செல்கிறது. எதையுமே செய்யாவிட்டால் இந்த விவசாயிகள் இதைவிட நன்றாக இருப்பார்கள் என்பதை கடந்த முப்பது ஆண்டு அனுபவம் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளது.

மக்கள் அதிக வேலை செய்தால், சமுதாயம் அதிகமாக வளர்ச்சியுறும்; அதிகப் பிரச்சனைகள் ஏற்படும். வளங்கள் தீர்ந்து வருவது, இயற்கை அதிகமாக சீரழிக்கப் பட்டு வருவது, மனித ஆற்றல் நொறுங்கி வருவது ஆகிய அனைத்தும் மனித சமுதாயம் எதையாவது சாதிக்கவேண்டும் என்று வெறி கொண்டதன் விளைவுதான்.

முதலில் முன்னேற்றம் அடையவேண்டிய தேவையில்லாமல் இருந்தது. அதனால் எதுவும் செய்யப்படவில்லை.
எதையும் கொண்டுவரத்தேவையில்லை என்றொரு இயக்கத்தை உருவாக்க வேண்டிய இக்கட்டான நிலையில் நாம் இருக்கிறோம்!!!!!!!!!!
---------------------------------------------------------------------------------------------------------

** நிலத்தை உழுது பண்படுத்துவது கூடத் தேவையற்ற வெறுமனே விதைத்து, களைகள் பரவாதிருக்க வைக்கோலைப் பரப்பிப் பயிர் செய்யும் முறையை இவர் இவரது பண்ணையில் வெற்றிகரமாய் செய்ததையே "ஒன்றுமே செய்யத் தேவையற்ற வேளாண்மை' என்று இங்கு குறிப்பிடுகிறார்.

பி.கு
பூவுலகின் நண்பர்கள் செய்துள்ள தமிழாக்கம் எளிமையாகவே உள்ளது. எனினும் பல இடங்களில் நேரடி மொழிமாற்றம் தவிர்க்க இயலாதது என்கிற புரிதலுடன் இந்தப் புத்தகத்தைப் படிக்கவும்.

Sunday, April 12, 2015

கோட்டுக்குப் பதில் பூட்டு

வில்லுக்குள் ஜனகனும்
கண்ணுக்குள் ராமனும்
கோட்டுக்குள் இலக்குவணனும்
வனத்துக்குள் இராவணனும்
மனதுக்குள் அனுமனும்
தணலுக்குள் குடிமகனும்
தனக்குள் பூமகளும்
சிறைவைத்தனர் சீதையை

மாரீசன் செய்தது சதி
ராமன் சென்றது விதி
சீதை இழந்தது கதி
இலக்குவணன் இழந்தது மதி
இருந்தால் போட்டிருப்பான்
கோட்டுக்குப் பதில் பூட்டு

Sunday, April 5, 2015

'நெரிசலாயிட்டேன்' - ஒரு சாலையின் சோககீதம்

கொத்துக் கொத்தா வெட்டிப்புட்ட
எக்குத்தப்பா நீ மூடிவுட்ட
தாரும் தான் இல்லாம கொட்டிவெச்சியே
ஜல்லிக்கல்ல மேல..
நான் நெரிசலாயிட்டேன் நெரிசலாயிட்டேன் நெரிசலாயிட்டேன்

தோசைக்கு மேல தோசை சுட்டியே
ரோட்டு மேல ரோட்டப் போட்டு அடுக்கிவுட்டியே
கிரவுண்டு ப்ளோரத்தான் பேஸுமென்டுபோல்
ரோட்டவுட்டு பத்து அடி எறக்கிவுட்டியே
மழத்தண்ணி போவ ஒரு காவாயும் இல்ல
மனுஷங்க போவ ஒரு ப்ளாட்பார்மும் இல்ல
நான் நெரிசலாயிட்டேன் நெரிசலாயிட்டேன் நெரிசலாயிட்டேன்

Friday, March 20, 2015

சின்னச் சின்னச் சின்ன சிட்டு சிட்டு

சின்னச் சின்னச் சின்ன சிட்டு சிட்டு
சிறகை விரித்துத் தட்டு தட்டு
கிடைக்கும் புது மெட்டு மெட்டு
பாட்டுப் பாடு வட்டம் இட்டு

வீட்டின் உள்ளே சுற்று சுற்று
விசிறி இருக்கு பார்த்து பார்த்து
அரிசி இருக்கு கொத்து கொத்து
சாதம் இருக்கு பாப்பாவுக்கு

கண்ணாடி முன் நின்றுகொண்டு
சிங்காரமும் செய்துகொண்டு
உனக்கு நீயே முத்தமிட்டு
உல்லாசமாய் வாழ்ந்துவிடு

எதிரி எவரும் வீட்டில் இல்லை
குஞ்சைத் திருட யாரும் இல்லை
பல்கிப் பெருகி முன்பு போலே
கண்கள் நிறைய காட்சி கொடு

சின்னச் சின்னச் சின்ன சிட்டு சிட்டு
சிறகை விரித்துத் தட்டு தட்டு
கிடைக்கும் புது மெட்டு மெட்டு
பாட்டுப் பாடு வட்டம் இட்டு

#சிட்டுக்குருவிகள்தினம்