Wednesday, June 11, 2014

தாரை தப்பட்டை

இசைஞானி இளையராஜா அவர்களின் 1000-ஆவது படமான "தாரை தப்பட்டை" படத்திற்கு நான் எழுதிய Title Song-ஐ (கற்பனை தாங்க!) உங்கள் பார்வைக்குச் சமர்ப்பிக்கிறேன்
---------------------------------------------------------

தாரை தப்பட்டை ஆதியில் தமிழனின் நாதமடா
தாரை தப்பட்டை ஜாதிகள் மீறிய வேதமடா
தாரையும் இழுத்திடும் மூச்சானதோ
பறைதான் இதயத்தின் பேச்சானதோ - அட
ஊர்விட்டுப் போனாலும்
உடல் கொண்டு போகின்ற
உயிரான இசைஎன்றும்
உயர்வான இசையன்றோ? கேளு – ( தாரை தப்பட்டை )

பரமாடும் நட ராஜன் ராஜன் - அழகு
அரவாடும் முடி சூடும் ராஜன் - அவனின்
சிரமீது நுரை பொங்கி
கரை மீறி நதி ஆட ஆட- அதனில்
படகாக பிறையாட ஆட - இடது
பதம் தூக்கி நடராஜன் ஆட
அட ஆடட்டும் ஆடட்டும் எல்லாம்
என ஆடிடும் அரைபாகம் மாதன்
அந்த விடைபாகன் தடக்கையில்
அடிக்கின்ற உடுக்கையொலி
தடக் என்று தடக் என்று கேட்கும்
அந்த இசை இந்தப் பறையினிலும் கேட்கும்….. கேளு – ( தாரை தப்பட்டை )

மக்கள் பிரதிநிதி

மக்கள் பிரதிநிதி நான்.
ஏழைப் பங்காளன்; பங்காளி அல்ல.
கௌரவம் காப்பேன்.
கௌரவர்களில் ஒருவனல்ல.

என்னது.. லஞ்சமா? என்னது.. கொஞ்சமா?
ஏன்.. எனக்கென்ன பஞ்சமா?
நீரோடி மீனோடிய வயலினில் ஏரோட்டி,
வீதியெலாம் தேரோட்டிய
வீர மண்ணின் மைந்தன் நான்;
ஈர மண்ணின் இளவல் நான்.
பல தலைமுறைக்குச் சோறிட நெல்லுண்டு
சில தலை நிழல் சாய்ந்திட வீடுண்டு
அடுத்தவன் இலையில் கைவைக்க
நான் என்ன பிச்சைக்காரனா?

என்னது? பொண்டாட்டி கேட்பாளா?
பாசமாய்ப் புல்லறுத்துப் பாட்டி வளர்த்த பசுவின்
பேத்தி ஈன்ற பசு, பத்து குடம் பால் கறக்க
என் மனைவியின் பட்டு விரல் படுமா
அவள் சுட்டுவிரல் தொடுமா,
ஊரான் வீட்டு நெய்?

என்னது? பிள்ளைக்குச் சேர்க்கவா?
ஏன்.. என் சிங்கத்துக்குக்
கையில்லையா? காலில்லையா?
தினவெடுத்த தோளில்லையா?
அவன் ஒரு ஆளில்லையா?
அப்பனுக்குப் பிள்ளையிடுவதா-
பிள்ளைக்கு அப்பனிடுவதா வாய்க்கரிசி?

Thursday, May 15, 2014

பெண் பார்க்கும் படலம்

முதல் பார்வையிலேயே
ஒரு பொறி தோன்றியது.
பற்றிக்கொண்ட பார்வைகள்
அடுத்தடுத்துப் பார்க்கையில்
ஆர்க் வெல்டிங் அடித்து
ஒட்டிக்கொண்டன இரும்புத் துண்டுகள்.
வாய்மொழிக்கு முன்பாக
உடல்மொழியில் திருமண உறுதி செய்துவிட்டு
இழுத்துவிட்ட இருவரின் மூச்சிலும்
நாதஸ்வர ஆலாபனை ஆரம்பித்துவிட்டது.
மணநாள் நினைவுகளில்
மேளதாளம் கொட்டி தாலி கட்டுமுன்னே
கோலம்போட்ட உன் கால்விரலில்
கண்களால் மெட்டியணிவித்துவிட்டுக்
காத்திருந்தேன்.
நீ காபி கொண்டுவருகையில்
கண்டேன் உன் கையில் பால்செம்பு.

Saturday, May 10, 2014

மல்லி வைத்து வந்துவிடு

செடியில் கிள்ளித்தான் வைத்தாயோ?
என் அத்தை
சொல்லித்தான் வைத்தாயோ?
என்னத்தைச் சொல்வது..
நீ அள்ளிவைத்த கூந்தலில்
ஆடிவரும் மல்லிகையை?

பள்ளிக்கூட பெஞ்சின் மேல்
நீ பஞ்சு போல் உட்கார
கட்டடத்துள் வட்டமிட்டு
பட்டம்போல பறக்குதடி
நீ கட்டி வந்த மல்லி வாசம்.

பள்ளிச் சீருடையா இல்லை
மல்லிக்கு மேட்சிங்கா
இந்த வெள்ளை சட்டை?
என்னைக் கட்டி வெச்சாலும்
கண்ணக் கட்ட முடியலையே..
திகட்டத் திகட்டப் பார்க்கிறேன்
தின்னாமலே தித்திக்கும்
வெல்லக் கட்டி உன்னையே...

நல்ல நாளைப் பார்த்துவிட்டேன்
நானும் உன்னைக் கட்டிவிட…
கடைசி பரீட்சை முடியும் அந்த
மாலையில் தான் ரிசப்சன்.
மண்டபத்துக்கு மறக்காமல்
மல்லி வைத்து வந்துவிடு.

அம்மா...

உயரத்தைப் பொருட்படுத்தாது
உவப்புடன் கழுத்தை நீட்டி
குடும்பம் எனும் இரட்டை மாட்டு வண்டியில்
அப்பாவின் இழுப்புக்கு மூச்சிரைக்க ஓடி
சில நேரம் முரண்டுபிடித்து
வண்டியைச் சரியான பாதையில் திருப்பி
உன் பிள்ளைகள் நாங்களும்
ஏதேனும் ஒருவிதமாய் உருப்பட
ஓடி ஓடி இன்னும் ஓயாத அன்னையே...
வயதான காலத்திலும்
சுமையான உந்தன் கழுத்து பாரத்தைப்
புனிதமென்று போற்றிப் பொட்டிட்டுக்
கண்களில் ஒற்றிக்கொள்ள
பாட்டனிடம் பாடாய்ப் பட்ட
பாட்டியிடமா கற்றாய்?
பைத்தியம் நீ.

Tuesday, April 8, 2014

இராம நவமி

மாமுனி சொல் கேட்டு வில் முறித்தாய்
தசரதன் சொல் கேட்டு முடி துறந்தாய்
வைதேகி சொல் கேட்டு மான் தொடர்ந்தாய்
சுக்ரீவன் சொல் கேட்டு வாலி வதைத்தாய்
கொடியதோர் குடி சொல் கேட்டு
துணைவியைத் தீ விதைத்தாய்
சொல்வார் சொல் கேட்பவன் ராமனென்று
யானும் உன்னை நிந்திக்கவோ?
நீ வந்துதித்த இந்நாளில்
நீ வந்துதித்த என் நெஞ்சில்
நாட்டம் வேறொன்றும் இல்லை
நின் நாமம் பகர்தலன்றி
ராமா ராமா ராமா

Saturday, March 29, 2014

பலகுரல் கண்ணன்

மகனின் பள்ளியில் இன்று பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு. "சீக்கிரம் கிளம்புங்கள்" என்று கண்ணனை விரட்டினாள் கண்மணி. முதல் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கெல்லாம் இது தேவையா என்ற ஒரு அலட்சிய எண்ணம் கண்ணனுக்கு. கண்மணிக்கோ தன் கல்லூரி பட்டமளிப்பு விழாவுக்குச் செல்வது போன்ற ஒரு பதட்டம்.

வழக்கப்படி தன் பலகுரல் பேசும் திறமையினால் கண்மணியை இலகுவாக்க முயற்சித்தான் கண்ணன். நடிகர் சூர்யாவின் குரலில் "அட.. ஏன் கண்மணி இப்படி பதட்டப்படுற..." என்றவனிடம்.."குரல் எல்லாம் பரவாயில்லை.. ஆனால் கண்ணாடி பார்த்தால் இது மாதிரி உங்களுக்குப் பேசத் தோன்றாது.. மனசாட்சி உறுத்துமில்ல.." என்று கிண்டல் செய்தாள் கண்மணி.

அது சரி. ‘/மனைவியைச் சமாதானப் படுத்த முயற்சிக்கும் எந்தக் கணவனுக்கும் சமாதானம் உண்டானதில்லை/’ என்ற உலக நீதி தனக்கு மட்டும் பொய்த்துவிடுமா என்ன? - என்று பெருமூச்சு விட்டபடி மகிழ்வுந்தைக் கிளப்பினான்.

"இல்லைங்க.. இந்த தேன்மொழி ஆசிரியை இருக்காங்களே.. அவங்க கொஞ்சம் மோசம்.. போன சந்திப்பில் இலக்கியா அம்மா கிட்ட என்ன சொன்னாங்க தெரியுமா..?" "இலக்கியா அம்மா .. நீங்க தொலைக்காட்சியில் நெடுந்தொடர் தவறாமா பாக்குற அளவுக்கு உங்க மகளோட வீட்டுக் குறிப்பைப் பாக்குறதில்லை.." அப்படின்னு சொன்னாங்களாம். இதெல்லாம் அதிகப் பிரசங்கித்தனம் இல்லையா...?"

'இருக்குறதத்தானச் சொல்றாங்க' என்று லியோனி குரலில் எண்ணினாலும் "அவங்களச் சொன்னாங்க என்பதற்காக நீ பதட்டப்படாத கண்மணி... உன்னைப் பார்த்தா நெடுந்தொடர் பார்த்து வீணாய்ப் பொழுது போக்கும் வேடிக்கை மனிதி போலவா இருக்கு? ஒரு பெரிய அதிகாரி மாதிரி இல்ல இருக்க நீ...." என்று பனி பொழிந்தான்! 'அட உள்ளே ஒரு குரல்ல பேசிக்கிட்டு வெளியில ஒரு குரல்ல பேசுறோமே.. உண்மையிலேயே நாம ஒரு பல குரல் மன்னன்தான்' என்று தன்னைத்தானே பாராட்டிக் கொண்டான்.

எதிர்பார்த்ததுபோல் எந்தச் சிக்கலுமின்றி ஆசிரியை சந்திப்பு நன்றாகவே அமைந்தது. புலிக்குப் பிறந்த புலிக்குட்டி நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தான். கையொப்பம் போட்டுவிட்டு எழும் தருணத்தில் கண்மணி கேட்டாள் "மற்றபடி…. பையன் ஒழுங்காகத் தானே இருக்கிறான்.. மற்ற குழந்தைகளுடன் சண்டை போடுவதெல்லாம் கிடையாதல்லவா..?" "சண்டையெல்லாம் போடுவதில்லை….. ஆனால்…… பேச்சுதான்…. கொஞ்சம்….. அதிகம்...." என்று இழுத்தார் தேன்மொழி. ஆசிரியை தயங்குவதைப் பார்த்த கண்மணி "குழந்தையைக் கூட்டிட்டுக் கொஞ்சம் போங்க. நான் பேசிட்டு வரேன்.." எனவும் மெதுவாய் வெளியேறினான் கண்ணன்.

குழந்தைகளின் கூச்சலுக்கு நடுவிலும் மனைவியிடம் பேசும் தேன்மொழியின் குரல் தெளிவாகக் கேட்டது... "உங்கப் பையன் என்கிட்டே,,,நீங்க அழகா இருக்கீங்க…. நான் பெருசா ஆனதும் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேக்குறாங்க..." " அடப்பாவி… அப்படியா சொன்னான்..? தொலைகாட்சி பார்த்து இப்படியெல்லாம் பேசுகிறான் போல.. நான் அவனைக் கண்டிக்கிறேன்" என்று எழுந்த கண்மணி முந்தியை இழுத்து விட்டபடி வெளியே வந்தாள்..

எதுவும் தெரியாதவன்போல்.. "என்ன சொன்னாங்க கண்மணி…?” என்ற கண்ணன் "இதோ இரு..வண்டியைத் திருப்பிட்டு வரேன்..போயிட்டே பேசலாம்….." என்றான். புலிக்குட்டியின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்ட பலகுரல் கண்ணனின் இன்னொரு குரல் மனதுக்குள் பேசியது "புலிக்குட்டி சொல்லிடிச்சு... புலியால சொல்ல முடியலையே.."

மலர்

மலர் கொய்து கூடையில்
நிரப்பியவள் சூடிவந்தாள்
மலர்ச்சியை

Monday, March 17, 2014

ஹோலி

நீ கண்ணுக்கிட்ட மையொன்றே போதுமடி
நான் கருப்பு வெள்ளையில்
ஹோலிப் பண்டிகை கொண்டாட....
இருந்தாலும்......
"இந்தா வைத்துக்கொள் வண்ணங்கள்"
என்று தானோ
வானவில் காட்டினாய்
தலைதுவட்டி நீ உதறும்
வாசம் சுமந்த நீர்த்துளிகளில்?

Thursday, January 16, 2014

தாயே... நீ தான் எஞ்சாமி

பாலோடு உன் ரத்தம்
சேர்த்தே உறிஞ்சிப்புட்டேன்
பால் வத்திப் போனதென்று
பரிதவிக்க விடாம
அடுப்பனலில் காய்ஞ்சாலும்
அல்லலுன்னு பாராம
அன்றாடம் நான் தின்ன
எதையாவது ஆக்கிப்போட்ட
தாயே... நீ தான் எஞ்சாமி
பாலோடு உன் ரத்தம்
சேர்த்தே உறிஞ்சிப்புட்டோம்
பால் வத்திப் போனதென்று
பரிதவிக்க விடாம
அடுப்பனலில் காய்ஞ்சாலும்
அல்லலுன்னு பாராம
அன்றாடம் நாங்க தின்ன
எதையாவது ஆக்கிப்போடு
பூமித்தாயே... நீ தான் எங்க சாமி