Thursday, January 16, 2014

தாயே... நீ தான் எஞ்சாமி

பாலோடு உன் ரத்தம்
சேர்த்தே உறிஞ்சிப்புட்டேன்
பால் வத்திப் போனதென்று
பரிதவிக்க விடாம
அடுப்பனலில் காய்ஞ்சாலும்
அல்லலுன்னு பாராம
அன்றாடம் நான் தின்ன
எதையாவது ஆக்கிப்போட்ட
தாயே... நீ தான் எஞ்சாமி
பாலோடு உன் ரத்தம்
சேர்த்தே உறிஞ்சிப்புட்டோம்
பால் வத்திப் போனதென்று
பரிதவிக்க விடாம
அடுப்பனலில் காய்ஞ்சாலும்
அல்லலுன்னு பாராம
அன்றாடம் நாங்க தின்ன
எதையாவது ஆக்கிப்போடு
பூமித்தாயே... நீ தான் எங்க சாமி

Saturday, January 11, 2014

தமிழா நீ தமிழ் பேசு

தமிழா நீ தமிழ் பேசு
தமிழா நீ தமிழில் பேசு
தமிழா நீ தமிழ் இல் பேசு

உறவாடுது உயிர்மெய் எழுத்து
மறையாதது மெய் எழுத்து
மறைந்திருப்பது உயிர் எழுத்து
மறவாதே தமிழ் உன் தலை எழுத்து

காலங்கள் தாண்டி நீண்டது வேர்ச்சொல்
ஞாலம் முழுதும் பரந்தது கிளைச்சொல்
கிளை ஒவ்வொன்றிலும் கனியட்டும் தமிழ்ச்சொல்
கனி வேண்டின் வேண்டும் நீர் 'பாய்ச்சல்'

தமிழ் விழுகிறது எனும் மாக்களுக்'குரை'
"சரிதான் போய்யா... போம்மா...
நீ விட்டா தமிழ் விழுது?
நான் விட்டால் தமிழ் விழுது!"

Friday, January 3, 2014

பொய்யாமொழி

கண்மணிக்குக் கோபம் கோபமாக வந்தது. தேன்மொழியின் பேச்சைக் கேட்டுப் பொய்யாமொழி ஐயாவை நேற்று சந்தித்தது எவ்வளவு தவறு என்று தன்னைத் தானே திட்டிக்கொண்டாள்.

கண்மணியும் தேன்மொழியும் ஒரு கணினி நிறுவனத்தில் ஒன்றாகப் பணிபுரிபவர்கள். கண்மணிக்குத் திருமணமாகிவிட்டது. கண்ணன் ஒரு வங்கியில் பணியாற்றுகிறான். கண்ணன் கண்மணி என்று பெயர் பொருத்தம் ஜோராக உள்ளதே தவிர உண்மையில் இவர்களின் பெயர் கீரி, பாம்பு என்று வைத்திருக்கலாம். இதற்குத்தான் சண்டை போடுவதென்று ஒரு வரைமுறையில்லாமல் எப்போதும் வாயும் வசவுமாகத் திரிபவர்கள் இவர்கள். திருமணம் ஆகி இரண்டு வருடம் ஆகியும் இன்னும் அடங்கவில்லை இவர்கள்.

தேன்மொழிக்கு அவள் ஜாதகத்தில் உள்ள ஏதோ ஒரு கட்டத்தில் சொட்டை இருக்கிறதென்று அவள் அப்பா அம்மா கஷ்டப்பட்டு வரன் தேடிக் கொண்டிருக்க, அவளோ திருமணம் பற்றிய எந்த கவலையும் இன்றித் தனிமையின் இனிமையையும் சுதந்திரத்தையும் குறையின்றி அனுபவித்து வருகிறாள். வார இறுதிகளில் அன்னை இல்லம் சென்று அங்கிருக்கும் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது, பொய்யாமொழி அய்யா நடத்தும் யோகா மற்றும் தியான வகுப்புகளுக்குச் செல்வது என்று மனதை அமைதியுடனும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருப்பாள் தேன்மொழி.

தெரியாதத்தனமாய் தேன்மொழியுடன் தியான வகுப்புக்கு நேற்று மாலை சென்றதுதான் கண்மணிக்கு இன்று மன உளைச்சல் ஏற்படக் காரணமாகிவிட்டது. அதுகூட தியான வகுப்பில் சேருவதற்காக அவள் செல்லவில்லை. வண்டியில் ஏறும்போது தேன்மொழிதான் ஓடி வந்து வழியில் இறக்கிவிட்டுவிட்டுச் செல்லுமாறு கூறினாள். இறக்கிவிட்டவளை, "உள்ளே தான் வாயேன் பொய்யாமொழி ஐயாவை நான் அறிமுகப்படுத்தி வைக்கிறேன். நீ கிளாஸ்ல எல்லாம் சேர வேணாம். ஐயா கிட்ட ரெண்டு நிமிஷம் பேசினாலே மனசு லேசாயிடும். தீராத பிரச்சினைக்கெல்லாம் தீர்வு கிடைக்கும்" என்றாள்.

"ஐயா, இவள் என் தோழி கண்மணி" என்று அறிமுகப் படுத்திவிட்டு வகுப்புக்குச் சென்றுவிட்டாள். கண்மணிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை, வயதானவராய் இருக்கிறார் காலில் விழலாமா என்று யோசித்தவள், எதோ ஒன்று தடுக்கவே வேண்டாம் என்று கைகூப்பி ஒரு வணக்கம் வைத்துவிட்டு அவர்முன் அமர்ந்தாள். மௌனத்தைக் கலைக்கும் வகையில் பொய்யாமொழி ஐயாதான் பேசினார்.. அதுவும் ஒரே ஒரு வாக்கியம்... இல்லை... அரை வாக்கியம். கண்மணிக்குப் பகீரென ஆகிவிட்டது. வயதானவர், எல்லோரும் மதிப்பவர் என்று நினைத்தால் இப்படியா பேசுவார் இவர்? என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. பொய்யாமொழி ஐயாவே அவளுக்கு வணக்கம் சொல்லிப் போய் வாருங்கள் என்பதுபோல் வாசலைக் காட்டி சைகை செய்தார். எழுந்தவள் தேன்மொழி எங்கு இருக்கிறாள் என்று கூடப் பார்க்காமல் சரசரவென வண்டியிலேறிச் சென்றுவிட்டாள்…

வீட்டுக்கு வந்தவள் கண்ணனிடம் எதுவும் பேசாமல் தூங்கிவிட்டாள். காலையில் எழுந்து வழக்கம்போல் அலுவலகம் கிளம்பினாள்.

அலுவலகப் பேருந்து சாலை மண்ணைக் கிளப்பிவிட்டு ஓரமாய் ஒதுங்கி நின்றது. எப்போதும் ஓட்டுனரைப் பார்த்து ஒரு சிறு புன்னகை செய்துவிட்டு உள்ளே ஏறுபவள் இன்று அவரைப் பார்க்காமல் நேராகச் சென்று இருக்கையில் அமர்ந்தாள். பொய்யாமொழி ஐயா சொன்னதின் உறுத்தலில் யாரைப் பார்த்துச் சிரிக்கும் நிலையிலும் கண்மணி இல்லை.

மாலையில் வேறு கசின் ரிசப்சன் இருக்கிறது. கண்ணனுடன் எந்த சண்டையும் போடாமல் இருக்க வேண்டும். நம்ம வீட்டு பங்க்ஷன் என்றால்தான் கண்ணனுக்கு மாப்பிள்ளை முறுக்கைக் காட்டத் தோன்றும். ரெண்டு வருஷம் ஆச்சு இன்னும் புது மாப்பிள்ளைன்னு நினைப்பு.

அலுவலகத்தில் பேருந்து நின்றதும் இறங்கினாள். வழக்கமாய் இவள் இறங்கும்போது திரும்பிப் பார்த்துப் புன்னகைக்கும் ஓட்டுனர் இன்று திரும்பியே பார்க்கவில்லை. இவள் ஏறும்போது சிரிக்கவில்லை என்ற கோபம் போலும். "போய்க்கோடா.." என்று எண்ணியபடி தனது இடத்துக்கு விரைந்தாள்.

"சொல்லாமலேயே போயிட்டயே கண்மணி. பொய்யாமொழி ஐயா என்ன சொன்னார்? அவரைச் சந்தித்ததில் மகிழ்ச்சிதானே..மனதில் ஒரு அமைதி பிறந்திருக்குமே.." என்ற தேன்மொழியிடம், "ஆமாம் அவரைப் பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி" என்று சொல்லிவிட்டு தனது வேலையைத் தொடர்ந்தாள் - தன் தனிப்பட்ட அனுபவத்தை வைத்து தோழியின் நம்பிக்கையையோ மகிழ்ச்சியையோ கெடுக்கவேண்டாம் என்ற எண்ணத்தில்.

11 ஓ கிளாக் மீட்டிங்கில் புகழேந்தி கூட கேட்டார். "என்ன தேன்மொழி உங்கள் வழக்கமான புன்னகையைக் காணோம்? ஏன் இப்படி இருக்கீங்க? கண்ணனோட ஏதாவது பிரச்சனையா?".. "அதெல்லாம் இல்ல சார்.. கொஞ்சம் தலைவலி... வேலையைச் சீக்கிரம் முடிக்கணும்னு டென்ஷன். சாயந்திரம் என் கசின் ரிசப்சன் இருக்கு" என்றாள்.

மதியம் ஒன்றாகச் சாப்பிடச் செல்லும் நக்கீரனை பிங் செய்து "யூ கோ அஹட் பார் லஞ்ச் .. ஐ ஹேவ் எ மீட்டிங்" என்றவளுக்கு "ஷல் ஐ வெயிட்" என்று நேக்ஸ் பதில் போடுவதற்குள் "டூ நாட் டிஸ்டர்ப்" என்று ஸ்டேடசை மாற்றிவிட்டாள்.

மாலையில் திரும்பும்போதும் உம்மென்ற முகத்துடனேயே வீடு சென்று அடைந்தாள். வாட்ச்மேனைப் பார்த்துக் கூடச் சிரிக்கவில்லை. வீடு திறந்திருந்தது. வங்கியிலிருந்து கண்ணன் சீக்கிரமே திரும்பிவிட்டிருந்தான். குளித்துவிட்டு இவள் அனுமதிக்கும் ஓரிரு சட்டைகளில் ஒன்றை அணிந்திருந்தான். ஆனால் வழக்கப்படி மேல் பட்டனைப் போடவில்லை. இதற்காகவே பல சண்டைகள் நடந்திருக்கின்றன. "யார் பாக்கணும்னு இப்படி சட்டையைத் திறந்து விடுறீங்க" என்று இவளும், "நீ லோ ஹிப் கட்டுறீயே நான் கேட்கிறேனா?" என்று அவனும் முட்டிக்கொள்வார்கள். இன்று எதுவும் ஆரம்பிக்கவேண்டாம் என்று அமைதியாக உள்ளே சென்றாள். அயன்காரரிடம் கொடுத்துவிட்டுச் சென்ற பட்டுப் புடவையைக் கண்ணன் பொறுப்பாக வாங்கி வைத்திருந்தது கொஞ்சம் நிம்மதி தந்தது.

தனக்கு கிரீன் டீ போட கிச்சனுக்குச் சென்றவள் பில்டரில் டிக்காஷன் இறங்கியிருப்பதைப் பார்த்து கண்ணனுக்கும் காபி கலக்கிக் கொண்டுவந்தாள். "இந்தாங்க ரிசப்சனில் பில்டர் காபி கிடைக்காது.." வழக்கத்துக்கு மாறான இந்த அமைதியும் உபசரிப்பும் கண்ணனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. என்ன ரியாக்ஷன் கொடுப்பது என்று புரியாமல் சற்றே வழிவதுபோல் முழித்தான். அதைப் பார்த்ததும் கண்மணிக்கு சிரிப்பு வந்துவிட்டது.. பொய்யாமொழி எபக்டால் காலையிலிருந்து எல்லோரிடமும் உம்மென்று அடக்கி வைத்திருந்த அவள் சிரிப்பு குக்கர் விசில் திறந்ததுபோல் பொங்கிப் பொங்கி வெளி வந்தது. கண்மணியின் திடீர் மாற்றம் புரியாத கண்ணன், அவனும் சிரித்து வைத்தான்.

கோப்பைகளைச் சமையலறையில் வைத்துவிட்டுப் பட்டுப்புடவை கட்ட உள்ளே சென்றாள். நட்பான சூழ்நிலையைப் பயன்படுத்தி கண்ணனும் உள்ளே சென்றான். "பின் போட்டுவிடவா.." என்றான். சட்டையின் மேல் பட்டன் போடப் பட்டிருப்பதைக் கவனித்த கண்மணி, புன்னகையுடன் பின்னை அவனிடம் கொடுத்தாள்.

புடவை கட்டிக் கிளம்புகையில் அலமாரியில் தேடி உதட்டுச் சாயம் எடுத்து லேசாகத் தடவிக் கொண்டாள். இந்த லிப் ஸ்டிக்கும் கண்ணனும் கண்மணியும் அடிக்கடி முட்டிக்கொள்ளும் ஒரு விஷயமாகும். கண்ணனின் பரம்பரையில் யாருமே லிப் ஸ்டிக் போட்டதில்லை. எனவே கண்ணன் வீட்டு விழாக்களில் லிப் ஸ்டிக் போடுவதில்லை என்றும் கண்மணி வீட்டு விழாக்களில் மட்டும் போடுவது என்றும் ஒரு உடன்படிக்கை போட்டிருந்தார்கள். உதடுகளைத் தேய்த்துச் சாயத்தை சமன் செய்தவள் சிரித்தவாறே கேட்டாள்..."நல்லாருக்கா...?" சிரித்தவாறே கண்ணன் சொன்னான் "லிப் ஸ்டிக்கை விட இந்த சிரிப்பு உன் உதடுகளுக்கு அழகாக இருக்கிறது"

ஒரு நாள் முழுதும் மன இறுக்கத்தில் இருந்த கண்மணிக்கு இப்போதுதான் புரிந்தது "பொம்பள சிரிச்சா போச்சு" என்று பொய்யாமொழி ஐயா சொன்னதின் உட்பொருள்.

Tuesday, December 31, 2013

நம்மாழ்வார் ஐயா

நம்மாழ்வார் ஐயா...நீங்க
மண்ணெல்லாம் திரிஞ்சி
மண்ணுக்குள்ள போனதேனோ?

அப்பன் பாட்டன் பூட்டன்
சேத்து வச்ச சொத்தையெல்லாம்...
உசுரோடு - காத்து வந்த சொத்தையெல்லாம்
சர்க்காரு பேச்சக் கேட்டு சொத்தையா ஆக்கிப் புட்டோம்.
சக்கரையா இனிக்கிற எம் மண்ணை
சக்கையா ஆக்கிப் புட்டோம்
எதுக்கும் ஒதவாத மண்ணு எதுக்குன்னு நாங்க
பல்லைக்கூட பேஸ்டு வெச்சு வெளக்கிப்புட்டோம்

"பயிரைச் சோக்காளியாக்க
மண்ணைச் சீக்காளியாக்காதே"
ஐயா நீங்க அறிவுரையா சொன்னீரு..
ரெண்டு அறை விட்டுச் சொல்லலியே..
பெரியவங்க சொன்ன பேச்சு
அவுங்க போன பெறகுதான் கேக்குமோ?

பள பளன்னு ஜொலிக்கிற பலவித காய் வகைய
ஜிலு ஜிலுன்னு குளுர வெச்சி
செல நாளு போன பின்னே
சூடு பெட்டியில வெச்சிச் சுட வெச்சித் தின்னுறோம்.
ஐயா நீங்க கல்லெறிஞ்சி, கனி பறிச்சி, கடிச்சித் தின்னீரு..
நாங்க கப்பலுல வரவழச்சிக் கட் பண்ணித் தின்னுறோம்

"ஏம்பா ஒரு பூச்சி கூட தின்னாத
மருந்து போட்ட எல தழைய கீரையென்று தின்பாயா?"
ஐயா நீங்க பொட்டில் அடிக்கிறமாதிரி கேட்டாலும்
எங்க புத்தியில ஒறைக்கலியே..

எங்க பாட்டன் பூட்டனப்போல்
இந்த மண்ணுக்கு உரமாத்தான் போனீரோ?
மண்ணில் மக்கி ஒரு வேப்பமரமா வேகமா வாருமையா..
இன்னும் இங்க பல பேருக்குப் பேயோட்ட வேணும்.

Tuesday, December 24, 2013

தனிமை

என் கெடும் முறை பற்றி உனக்கென்ன கவலை
உன் விடுமுறை தான் உனக்கு முக்கியம்
போய் வா.

அடித்த இரையை இழுத்துச் செல்வதுபோல்
என் இதயத்தை நீ இழுத்துச் செல்வது புரிகிறதா?
நீ ஊர் ஊராய்ச் செல்கையில்
ஏதோ தரையில் புரளும் புடவை முந்தானை என்று
தவறாய் நினைத்துவிடாதே.

ஆவி பறக்கும் ஆரத்தித் தட்டைப்போல்
இருவருக்கும் தேநீர் ஏந்தி வந்த நினைப்பில்
தனியொரு காபியை தூக்கிச் சென்றால்
உணவகத்தில் ஊரென்னைக் கேவலமாய்ப் பேசாதா?

பக்கத்தில் திரும்பி திரும்பி பேசி நடந்த வழக்கொழித்து
நேராய்ப் பார்த்து நடக்கையில் எனக்கு கழுத்து வலிக்குதடி.
என் தோளில் தொங்கும் கணினிப்பை
நீ கைவைத்து இழுப்பதுபோல் அழுத்தத்தைக் கொடுக்குதடி

எதிலும் சேராமல் என்னை ஒரு தனிமமாய்
ஆக்கிவிட்டது இந்தத் தனிமை

உன்போல் மையிட்ட கண்களிருந்தால்
என் தனிமையை அழுது அழுது எழுதியிருப்பேன்
என் தனிமையை எழுத தனி மை வேண்டுமடி

என் கெடும் முறை பற்றி உனக்கென்ன கவலை
உன் விடுமுறை தான் உனக்கு முக்கியம்
போய் வா.

Monday, December 16, 2013

தனிமையில் கட்டுடைத்து

இதய வீட்டுக்குள் நுழைந்தது நீ...
உட்புறமாய்த் தாளிட்டதும் நீ....
வரவேற்பறையினில், விருந்தினரின் தோரணையில்,
அளவான புன்னகையுடன்,
அமர்ந்துவிட்டாய் அசைவின்றி.
நானோ, பண்பாட்டு விலங்கிட்டு
கைகட்டிக் கைதியாய் நிற்கின்றேன்.
நேரம் செல்லச் செல்ல
ஏதோ ஒரு அச்சம் பெருகுகிறது---
பூட்டிய இதய வீட்டின்
தனிமையில் கட்டுடைத்து
திடீரென......
அழுதுவிடுவார்களோ
இன்னும் முதிராத
நம் காதல் குழந்தைகள்?

Monday, December 9, 2013

கண்ணனின் கனவு

படுத்தவுடன் தூங்கிவிடும் பாக்கியம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அப்படிப்பட்ட சில பாக்கியவான்களில் கண்ணனும் ஒருவன். “எடுத்தது கண்டார் இற்றது கேட்டார்” என்பது போல், கண்ணன் படுப்பதைப் காண்பவர்கள் உடனடியாக அவன் குறட்டைச் சத்தத்தைக் கேட்பார்கள். ஆனால் குறட்டைச் சத்தத்துடன் கிக் ஸ்டார்ட் ஆகும் கண்ணனின் உறக்க வாகனம் விரைவிலேயே அவனைக் கனவுலகத்தில் கொண்டு போய் விட்டுவிடுகிறது பெரும்பாலான நாட்களில்.

கனவுலகம் ஏனோ ஒரு விசித்திர உலகமாகவே இருக்கிறது கண்ணனுக்கு. இப்படிச் சொல்வதனால் இந்தக் கனவுகள் ஏதோ பேய்க்கனவுகள் என்றோ, எதிர்மறை நிகழ்வுகள் நிறைந்தவை என்றோ பொருளல்ல. தன் வாழ்வில் இதுவரை சஞ்சரித்தில்லாத புதிய ஊர், தெரு, வீடு, இதுவரை சந்தித்திராத புதிய மனிதர்கள், கேட்டிராத புதிய சம்பாஷணைகளென்று கனவில் வரும் எந்த ஒரு பரிச்சயமில்லாத விஷயமும் இவன் மனதைச் சம்ஹாரம் செய்துவிடுகின்றன. ஆச்சரியங்களை விரும்பாதவர்களும் இருப்பார்கள் என்பது ஆச்சரியமாய் இருக்கிறதல்லவா? என்ன செய்வது? ஆச்சரியங்களை விரும்பாததால் தான் கண்ணன் கனவுகளை வெறுக்கிறான்.

கண்ணனுக்கு மகிழ்ச்சி தரும் கனவுகள் என்று எதுவும் கிடையாதா? அவனுக்குக் கனவுக்கன்னி என்று யாரும் கிடையாதா? என்று கேள்விகள் எழுகின்றன அல்லவா? மகிழ்ச்சியான கனவுகளும் அவ்வப்போது அவனுக்கு வந்திருக்கின்றன என்றாலும் பெரும்பாலானவை தூக்கம் கொல்லிகளாகவே அமைந்துவிடுகின்றன. கண்ணனுக்கும் காதல் உண்டு. அழகிய காதலி உண்டு. ஆனால் பாருங்கள். கனவுக்கன்னியாக இருக்கவேண்டிய அவள் வெறும் நினைவுக் கன்னியாகவே இருக்கிறாள். ஓரிரு கனவுகளில் அவள் வந்திருக்கிறாள் என்றாலும் அக்கனவுகளில் எள்ளளவும் காதல் ரசம் இருந்ததில்லை. ஒரு கனவில் காதலியின் பாட்டி செத்துக் கிடக்கிறாள். அழுக்கு உடையணிந்து மூக்கைச் சிந்தும் கோலத்தில் காதலியைப் பார்க்கவே சகிக்காமல், பாட்டிக்கு மரியாதை செலுத்திவிட்டு சட்டென்று வெளியேறிவிடுகிறான் கண்ணன். இன்னொரு கனவிலோ ரொம்பவும் சின்ன வயசுப் பெண்ணாக வந்து தொலைக்கிறாள் காதலி. இத்தனைக்கும் இந்தக் கனவில் சின்னப் பெண்ணான அவளை இழுத்தணைத்து முத்தமிட்டும் விடுகிறான் கண்ணன். ஆனால் அதில் காதல் உணர்வு இருக்கமுடியுமா? நீங்களே சொல்லுங்கள்.

"கனவு காணுங்கள்", "கனவு மெய்ப்பட வேண்டும்" என்ற கலாம் மற்றும் பாரதியின் கூற்றுகளில் கண்ணனுக்குத் துளியும் உடன்பாடில்லை. வள்ளுவன் நல்ல எண்ணங்கள் வேண்டும் என்று சொல்கிறானே தவிர, நல்ல கனவுகள் வேண்டும் என்று எந்தக் குறளிலும் சொன்னதாய்க் கண்ணனுக்குத் தெரியவில்லை. இடையில் வந்த யாரோதான் எண்ணங்களுக்கு மாற்றாகக் கனவு என்ற வார்த்தையைப் புகுத்தியிருக்க வேண்டும். அப்துல் கலாம் அவர்களின் கனவுகளில் ஒருமுறையாவது ஏவுகணைச் சோதனை தோல்வியில் முடிந்திருக்கும், பாரதியின் கனவில் வெள்ளைக்காரன் அவரைத் தூக்கில் போட்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்பது கண்ணனின் வாதம். பாரதியை இனி கேட்க முடியாது. அப்துல் கலாமைச் சந்திக்கும் வாய்ப்பு உங்கள் யாருக்கேனும் கிடைத்தால் இந்தக் கேள்வியைக் கேட்டு அவரது பதில் என்னவென்று கண்ணனிடம் சொல்லிவிடுங்கள்.

இப்படியெல்லாம் கனவை வெறுக்கும், கனவைத் துளியும் நம்பாத கண்ணனுக்குள் இன்று அதிகாலை வந்த கனவு ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. சென்ற வருடம் இதே நாளில் இறந்துபோன தாத்தா அவன் கனவில் வந்தார். அவன் வாயைத் திறக்கச் சொன்ன தாத்தா அவனிடம் முகம் பார்க்கும் கண்ணாடியைக் கொடுத்து "கண்ணா உன் நாக்கைப் பாருடா" என்றார். "நாக்குல கருப்பா பெரிய மச்சம் இருக்கு.. தெரியுதா?" என்றார். "தாத்தா.. எனக்கு நாக்குல மச்சம் கிடையாது" என்ற கண்ணனைப் பொருட்படுத்தாத அவர், “கண்ணா இனி நீ சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் பலித்துவிடுமடா.. எதைச் சொன்னாலும் யோசித்துச் சொல்லு.." என்று சொல்லி விட்டு ஒரு பெரிய ஒளிவெள்ளத்தில் சட்டென்று மறைந்துவிட்டார். இதுபோன்றதொரு பிரகாசத்தைக் கண்ணன் என்றுமே கண்டதில்லை. கோடி சூர்யப் பிரகாசம் என்று இதைத்தான் சொல்வார்களோ? தாத்தாவின் வடிவில் தரிசனம் தந்தது எந்தத் தெய்வமாயிருக்கும் என்று யோசித்தான்.

தூக்கம் கலைந்ததால் எழுந்து குளியலறைக்குச் சென்றவன் முகத்தை அலம்பினான். நீரின் குளிர்ச்சியையும் மீறி கொட்டாவி வந்தது. கண்ணாடியைப் பார்த்தவன் அதிர்ந்துபோனான் .. தாத்தா சொன்னதுபோல் அவன் நாக்கில் பெரிய மச்சம் ஒரு ரூபாய் நாணய அளவில் இருந்தது. இது எப்படி சாத்தியம் என்று ஒரு நிமிடம் திகைத்துவிட்டான்.

நினைவுகளில் துழாவிப் பார்த்தவனுக்கு சட்டென்று புலப்பட்டது - நேற்று இரவு தான் சாப்பிட்ட பான் கறையாக இது இருக்கக்கூடும் என்று.
ஆனாலும் கண்ணன் மனம் தெளிவடையவில்லை. வெற்றிலைக் கறை என்பதோ மச்சம் என்பதோ தெய்வ அருளின் பூடகமான ஒரு குறியீடு மட்டுமே என்ற மாற்றுச் சிந்தனை தோன்றியது. தான் மிகவும் நம்பும், மதிக்கும் தாத்தா கனவில் சொன்ன வாக்கை அவனால் புறக்கணிக்க முடியவில்லை.

ஒரு சிறிய நிகழ்ச்சி ஒரு மனிதனின் எண்ண ஓட்டத்தை முற்றிலும் திசைமாற்றி விடமுடியுமா என்ற ஆச்சரியத்துடன் மீண்டும் முகத்தில் நீரை அறைந்தான்.

முகத்தைத் துண்டால் துடைத்து ஒரு நிமிடம் கண்களை மூடி யோசித்தவன், மெதுவாய் இமைகளைத் திறந்து கண்ணாடியில் தெரியும் தன் பிம்பத்தைப் பார்த்துத் தெளிவான குரலில் சொன்னான்:

"என் தம்பி இனிமேல் குடிப்பதை நிறுத்திவிடுவான்".

அடங்காத புரவி ஒன்றை அடக்கி அதன் மேலேறி நிதானமாய் அதைச் செலுத்திவரும் ஒரு வீரனின் பெருமிதமான அதே சமயம் சாந்தமான ஒரு உணர்வைக் கண்ணாடியில் அவன் பிம்பம் வெளிப்படுத்தியது.

Saturday, November 16, 2013

எசப்பாட்டு

நேற்று தொலைக்காட்சி சேனல்களை மாற்றும் போது ஏதோ ஒரு சேனலில் கமல்ஹாசனின் பம்மல் கே சம்பந்தம் படம் ஓடிக்கொண்டிருந்தது .. "கந்தசாமி, மாடசாமி..." பாடலை கமல் பாடிக்கொண்டிருந்தார்.

பக்கத்தில் அமர்ந்திருந்த என் வால் பொண்ணு உடனே அந்தப் பாட்டுக்கு எசப்பாட்டு பாடத் தொடங்கினாள்.."கந்தசாமி, மாடசாமி, டேரன் சாமி...!"

வீடு

குழந்தைகளுக்குக் கூடு
மனைவிக்குக் கூண்டு
கணவனுக்கும் கூண்டு
அதாவது..
குற்றவாளிக் கூண்டு

Saturday, October 26, 2013

விநாயகா நின்னு வினா ப்ரோச்சுடகு

நானும் என் மகனும் தற்போது கற்றுக்கொண்டிருக்கும் மேற்படி கீர்த்தனையைப் பின்பற்றி கீழ்க்கண்ட பாடலை எழுதியுள்ளேன். இது நேரடி மொழிபெயர்ப்பன்று. கீர்த்தனையின் பொருளும் எனக்குத் தெரியாது. இந்தத் தமிழ் வடிவம் எவ்வாறு உள்ளது என்று உங்கள் கருத்துக்களை அறிய ஆவல்.

விநாயகா நின்னை
வினாடியும் மறவேன்
வீரம் அருள்வாய்
வெற்றி தருவாய்

அனாதை இல்லை நான்
நீயே காப்பாய்
ஆதரித்து என்னை
நல்லிடம் சேர்ப்பாய்

பரமேச நேச பார்வதி புதல்வா
பாலசுப்ரமண்யன் பாடலில் முதல்வா
கரி முக கண நாயகா
கரி முக கண நாயகா
கரி முக கண நாயக குண நாதா

காதலோடு என்னைக்
காவல் செய் வா வா

விநாயகா நின்னை
வினாடியும் மறவேன்
வீரம் அருள்வாய்
வெற்றி தருவாய்