Saturday, June 9, 2012

ஒரு பையின் பயணக் குறிப்பு

முதலில் யுவான் சுவாங் என்று இந்தப் பதிவிற்குப் பெயர் வைத்திருந்தேன். 
சரி. இங்கிருக்கிற விசாகப் பட்டினம் சென்று வந்ததற்கு இந்த பில்ட் அப் 
எதற்கு என்று பெயரை மாற்றிவிட்டேன். 
இருவழி ரயில் பயணங்களையும் சேர்த்து மொத்தம் ஐந்து நாள் பயணம். மூன்று நாட்கள் சுற்றிப் பார்க்க. முதல் நாள் விசாகப்பட்டினத்தைச் சுற்றிப் பார்த்தோம். முதலில் சிம்மாசலம் கோயில் சென்றோம். வழக்கமாக சந்தனக் காப்பிட்டு முகம் மூடிய நிலையில் இருக்கும் பெருமாளை சிலநேரங்களில் தான் முழுதாய்ப் பார்க்கமுடியும். எங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.
அடுத்ததாக பாலச்சந்தர் படங்களில் வரும் அழகிய கடற்கரையில் கால் நனைத்ததில் மகிழ்ச்சி. சிறு பாறைகள் கடற்கரைக்கு அழகூட்டுகின்றன.
ramkrishna-beach-vizag
 கடற்கரையில் விளையாடி மகிழ்ந்த நண்டுக் கால்களையும் வாழைத்தண்டுக் கால்களையும் கண்டு மகிழ்ந்தோம் - வழக்கப்படி. டால்பின் மூக்கு வடிவ மலைமேல் கலங்கரை விளக்கம் நாங்கள் சென்றபோது மூடியிருந்தது. அருகிலேயே  தர்க்கா ஒன்று உள்ளது. தர்க்காவில் 11 சுற்று சுற்றி அல்லாவை வேண்டிக்கொண்டு அங்குள்ள அழகிய ஆலமரத்தடியில் இளைப்பாறினோம்.
கைலாஷ் கிரி பூங்கா அழகாக உள்ளது. பெரிய சிவன் பார்வதி சிலையைச் சுற்றி குட்டி ரயில் பயணம். மலையின் கீழிருந்து மேலே வர கேபிள் கார் வசதியும் உள்ளது. நாமும் சென்னையில் பரங்கிமலையை இப்படி ஒரு சுற்றுலாத் தலமாக ஏன் மாற்றக் கூடாது என்ற எண்ணம் தோன்றியது.
மறுநாள் அரக்கு/அருக்கு பள்ளத்தாக்கு பயணம். விசாகப்பட்டினத்திலிருந்து 120 கி. மீ. தொலைவில். மலைப்பயணம் மிகவும் ரம்மியமாக இருந்தது. பழங்குடிகள் அருங்காட்சியகம் கண்டோம். பழங்குடிப் பெண்களின் நடன நிகழ்ச்சியும் கண்டு மகிழ்ந்தோம். இந்தப் பயணத்தில் சிறப்பான விஷயம் போரா(Borra Caves) குகைகள் தான். பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாள் தோன்றிய இக்குகைகளுக்குள் படிக்கட்டுகள் அமைத்து விளக்குகள் அமைத்து பார்த்து வியப்புற அற்புதமாக வழி செய்துள்ளனர். விசாகப்பட்டினம் செல்பவர்கள் ஒரு நாள் ஒதுக்கி இக்குகைகளைக் கட்டாயம் பார்த்து விடவும்.
ஆன்மிகப் பயணத்தைக் கூட சிலர் உல்லாசப் பயணமாக மாற்றிவிடும் கதைகளை நீங்கள் அறிவீர்கள். நாங்களோ உல்லாசப் பயணத்தையும் ஆன்மிகப் பயணமாக மாற்றிவிட்டோம். முதல் நாள் சிம்மாசலம், கைலாஷ் கிரி மற்றும் தர்க்கா. இரண்டாம் நாள் போரா குகையிலும் இறை வழிபாடு. மூன்றாம் நாள் முழுக்க முழுக்க ஆன்மிகம் தான். விசாகப்பட்டினத்திலிருந்து 120? கி. மீ தொலைவில் உள்ளது ஸ்ரீகாகுளம். இதை மையமாய் வைத்து அமைந்துள்ள கோயில் தலங்களை தரிசித்தோம். முதலில் ஸ்ரீகாகுளம் சிவன் கோயில். அழகிய பெரிய நந்தியை உடையது. பலராமர் சிவ பூசை புரிய நீர் வேண்டி தனது ஏர் கொண்டு கீற உருவான நாகவலி நதிக்கரையில் அமைந்துள்ளது. அடுத்தது சூரிய நாராயணா  கோயில். கோனார்க் சூரியன் கோயில் போல் வடிவமைக்கப் பட்டுள்ளது இக்கோயில். மேலும் விவரங்கள் அறிய http://www.arasavallisungod.org/ பார்க்கவும். அடுத்தது ஸ்ரீ கூர்மம். கூர்ம வடிவில் மூலவர் அமைந்திருக்கும் கோயில் உலகிலேயே இது ஒன்று தான் என்று கூறினார்கள். ராமானுஜர் தரிசித்த தலம். புராதனக் கோயில்கள் தரிசிக்கும் போது ஏற்படும் பரிபூரண உணர்வு இவ்வாலய தரிசனத்திலும் கிட்டுகிறது. அடுத்தது ஸ்ரீமுகலிங்கம் கோயில். ஒரிய கட்டிட அமைப்பில் அமைந்துள்ள இக்கோயிலில் சிவலிங்கம் முக வடிவில் அமைந்துள்ளதே இதன் பெயர்க்காரணம்.


வெற்றிகரமாக சுற்றுப்பயணம் முடித்து சென்னை திரும்பினோம். வேறு எதுவும் சுவாரசியம் இல்லையா இப்பயணத்தில் என்று கேட்கலாம். பல உண்டு. உதாரணத்துக்கு ஒன்று. திரும்பிவர டாட்டா அல்லிபி எக்ஸ்பிரஸ் ரயிலில் பதிவு செய்திருந்தோம். எங்கள் டிக்கட்டில் இருந்த ரயில் எண் வேறு. நாங்கள் ஏறிய ரயில் எண் வேறு. ரயில் எண் தான் தகராறு என்றால் பெட்டி எண்ணிலும் குழப்பம். S2 பெட்டியில் தேடினால் எங்கள் பெயர்களைக் காணவில்லை. டிக்கட்டில் உற்று நோக்க பெட்டி எண் ST2 என்று இருந்தது. ரயில் கிளம்ப மூன்று நிமிடங்களே இருந்தது. அலறி அடித்து ரயிலின் மறு கோடியில் இருந்த பெட்டிக்கு ஓடி ஏறுவதற்குள் உயிர் போய்  உயிர் வந்தது. இக்குழப்பங்களுக்கு காரணம் எழுத தனி பதிவு வேண்டும். அல்லது விவரமறிந்த நண்பர்கள் பின்னூட்டத்தில் எழுதட்டும். S2-ல்  இருந்து ST2 க்கு ஓடும்போது ஒரு பொறுப்பான குடும்பத்தலைவன் என்ற வகையில் இருப்பதிலேயே பெரிய மற்றும் கனமான பையான எனது மாமியாரின் பையைத் தூக்கி ஓடிவந்தேன். பெட்டியில் ஏறியதும் என் மாமியார் சொன்னார்கள் - இந்தப் பையில் wheels இருக்கிறதே,.. இழுத்து வந்திருக்கலாம் என்று!

Monday, April 30, 2012

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்



எட்டாத உயரத்தில்
   எட்டான கால் கொண்டு
       பட்டான நூல் கொண்டு
           கட்டிய வலை வீட்டில் விழும்
              விட்டில் உண்டு மகிழும்
                 எட்டுக்கால் பூச்சி நான்
கட்டாந் தரையிலும் 
   நெட்டான சுவரிலும்
       கட்டாக நடந்து 
           கிட்டாமல் கிட்டியதை  
               கட்டாகக் கட்டி 
                  பொட்டாகச் சுமந்து
                      பெட்டியில் வைத்துண்ணும்
                         குட்டிக்கால் எறும்பு நான்
தட்டான கணினியை
   பட் பட் பட்டென்று
      தட்டித் தட்டித் தட்டி
         நெட்டெல்லாம் தேடி  
            நைட்டெல்லாம் கண் விழித்து
                கட்டுக் கட்டாய்  
                   நோட்டு எண்ணி
                       தட்டுத் தட்டாய்த் தின்று
செரிமானம் இல்லையென்றோ
    சரி மனம் இல்லையென்றோ
        மருத்துவரை நாடாமல்
           உண்ண உழைக்காமல் எம்போல்
              உழைத்து உண்க வென்று
                 உழைப்பாளர் தினத்தன்று 
                    வாழ்த்துரை கூறுகின்றோம்.
                         வாழ்க வளமுடன்.
                              


   
     

Wednesday, April 25, 2012

கோடை மழை - அரசு அதிகாரி

முரசாய் இடித்து மின்னலாய் வெட்டி
பரபரத் தாலும் துளிநனை யாமல்
வரவேற்பு நாடியே வேனில் வருவர்
அரசதி காரி மழை

Friday, April 20, 2012

பாதை

உப்பு மடச் சந்தியில் ( http://santhyilnaam.blogspot.com/2012/04/blog-post.html  )
ஹேமா அவர்கள் கீழ்க்கண்ட படத்தை வெளியிட்டு நமக்குத் தோன்றும்
எண்ணங்களை கவிதையாக எழுதச் சொன்னார்கள்.


அதற்கு அங்கு எழுதிய கவிதையை  இங்கும் வெளியிடுகிறேன்-
படத்திற்கும் எழுதத் தூண்டியதற்கும் ஹேமாவுக்கு நன்றிகள்.
______________________________________________________

வருவோர் போவோரை வேடிக்கைப் பார்க்க
நின்றுவிட்ட மரங்கள்..

யார்வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது கல்?

இப்படிப்பார்த்தால் பிரிகின்ற (உ)பாதை
அப்படிப்பார்த்தால் சேர்கின்ற பாதை
எப்படிப்பார்த்தாலும் இரு தூரப்புள்ளிககளை
எப்போதுமே இணைத்திருக்கும் பாதை.

Monday, April 16, 2012

பாடிப் பறக்கும் பறவைகள்

பகல் நேரத் தாரகைகளே;
மரங்களிலிருந்து வானில் தூவிய
மகரந்தம் பூசி மலர்ந்த மலர்களே;
இன்னிசையின் சிகரங்களே
இல்லை இல்லை...
இசையின் அகரங்களே

உம்மிடம் கற்றோம் - பாடிப் பறக்க.
மேலும் கற்றோம் மேலும் பலப் பல.

உம்போல்-
ஓருடையாக சீருடை அணிந்தோம்.
வண்ணக் கொண்டைகள், தொப்பிகள் அணிந்தோம்.
கூடிப் பறந்தோம் பிரிந்தும் பறந்தோம்
தேடிப் பகிர்ந்தோம்

காகத்தின் கூட்டில் வளரும் குயில் போல்
பாட்டி வீட்டில் பிள்ளை வளர்த்தோம்

மண்ணாசை மறந்து - தன்னினம் காக்க
ஆயிரம் மைல்கள் ஆண்டாண்டு பறக்கும்
உம்போல் எமக்கும்
யாதும் ஊரே யாவரும் கேளிர்

அலகுகள் ஒடிந்து சிறகுகள் ஓயும்வரை
உம்போல் யாமும்
பாடிப் பறப்போம்

Saturday, April 7, 2012

மனிதனும் பாம்பும் - சிலேடை

பண்ணிசை நாடும் படமெடுத்து ஆடிடும்
கொண்டவுடை மாற்றும் - புறமுதுகு பாராது
எண்ணிய தன்இணை இன்முகம் பார்த்துடல்
பின்னும் அரவாம் நரன்

Wednesday, March 28, 2012

நான் அறியாத நாள்

செல்லமே....

என் நினைவுச் சுவர் முழுதும்
ஆணிகளால் அறைந்து
உன் முதல் நிகழ்வுகள் அனைத்தையும்
மாட்டி வைத்திருக்கிறேன்.

உனது முதல் ஸ்பரிசம் கிடைத்தது-
என் உள் வயிற்றில் நீ உதைத்த நாள்.
முதன்முதலில் வாய் திறந்து
அம்மா என்றழைக்காமல் நீ
"அ.....ப்ப்பப்ப்ப்பா" என்றழைத்த
அந்த நாளை மறப்பேனா?

நீ கவிழ்ந்த நாள், தவழ்ந்த நாள்
தப்படிகள் வைத்துப் பத்தடி நடந்த நாள்
அத்தனை நாட்களும் என் விரல் நுனிகளில்-
விரல் நுனியில் ஒட்டிய தேங்காய்த் துருவலாய்
உனக்குப் பல் முளைத்த நாள் உட்பட.

சொல்ல வெட்கம்தான்......
சிறுகுழந்தை என்பதால் சொல்கிறேன்.
உன்னைச் சூல் கொண்ட அந்த அடைமழை நாளும்
அழியாமல் என் நினைவில்.

நான் அறியாத நாளென்றால், அது
உனக்கு வால் முளைத்த நாள்.

Saturday, March 24, 2012

பதவி

பதவி வரும்போது-
பணிவு வரவேண்டும்; துணிவு வரவேண்டும்.
நிறுத்தடா....
பதவி வரும்போது உதவி வரவேண்டும்.

வந்த வேலையை விட்டு சொந்த வேலையா?
பணத்தைப் பொட்டில்* வைத்துப்
பல்லக்கில் ஏறாதே...
பிணமே.

வணக்கமா? உனக்கா?
அடப்போடா...
எருதில் ஏறியவனெல்லாம் சிவனில்லை
எருமை ஏறியவன் எமனுமில்லை.
________________________________________________

* - பொட்டில்/நினைவில்/குறிக்கோள்

Friday, March 23, 2012

அத்தான்

வெட்டிங் டே கொண்டாடும் அழகு அத்தான்
வெட்டிங் டிரஸ் போடும் வழக்கம் வைத்தான்
         இழுக்கும் கை பலம் தான் குறைந்து போச்சோ
         இஸ்த்திரி போட்டதனால் நகர்ந்து போச்சோ
எட்டவில்லையே கோட்டு பொத்தான்.

கர்ணன் - படம் பார்த்த அனுபவம்

கர்ணன் கதை தெரியாதவர்கள் யாருமில்லை என்பதால் நானொன்றும் பெரிய விளக்கமோ விமர்சனமோ சொல்லப்போவதில்லை. இது அனுபவப் பகிர்தல் மட்டுமே.
முகம் தெரியாத காவிய நாயகர்கள் பலருக்கு முகம் கொடுத்தவர் சிவாஜி. கர்ணனும் அவர்களில் ஒருவன். பாரதத்தில் கர்ணனின் பாத்திரம் எத்தனை உணர்வுகளின் சங்கமமோ -  கொடை, நட்பு, நன்றி, வீரம், கர்வம், பாசம், ஏக்கம், அவமானம், பெருந்தன்மை - அத்தனையும் அருமையாய் வெளிப்படுத்துகிறார் நடிகர் திலகம்.

வள வளக்காமல் பள பளக்கின்றன சக்தி கிருஷ்ணசாமி அவர்களின் வசனங்கள்.

மெல்லிசை மன்னர்களின் இசையில் இனிய பாடல்கள். பாடல்களைப் பொதுவாக இடைவேளைகளாகக் கருதும் இக்கால ரசிகர்களையும் இருக்கையிலேயே அமர வைத்திருந்ததைக் கவனித்தேன்.

சிவாஜியின் அபரிமிதமான நடிப்புடன் போட்டி போடுகிறது ராமாராவ் அவர்களின் மிதமான நடிப்பு. அவரின் ஒவ்வொரு காட்சியிலும் இழைந்தோடும் நகைச்சுவை அருமையிலும் அருமை.

டிஜிடல் தொழில் நுட்பத்தில் மேருகேற்றியிருப்பதாய்ச் சொல்கிறார்கள். ஆனாலும் நான் அதிகமாய் எதிர்பார்த்துவிட்டேன் போலும். தேய்ந்த காட்சிகள் பலவற்றை ஓரளவுக்குமேல் சரிசெய்ய முடியவில்லை என்று தெரிகிறது.


வார நாட்களிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாய் ஓடுவது நம் மக்களின் திரை ஆர்வத்தைப் பறை சாற்றுகிறது.

அடுத்ததாக திருவிளையாடல் படத்தை வெளியிடுவார்களா பார்ப்போம்.

Bottomline: அனைவரும் அவசியம் பார்த்துவிடவும்.

படம் பார்க்கும் போது ஏதோ ஒரு நீளவசனம் முடிந்து சின்ன மௌனம் அமைந்தது.. அப்போது திரையரங்கில் ஒரு பையன் அவன் அப்பாவிடம் கேட்டது எல்லோருக்குமே கேட்டது... "ஏம்பா படத்துல எல்லோரும் தமிழிலேயே பேசுறாங்க?" இதற்கும் கரகோஷமிட்டனர் நம் மக்கள்!